![]()
குவிகம்-சிவசங்கரி ஜூலை மாத சிறுகதைத்தேர்வு.
ஜூலை மாத சிறப்பு சிறுகதையாக முதலிடம் பெறுவது
மரண ருசி. காலச்சுவடு பத்திரிக்கையில் கவி பித்தன் எழுதியது.
‘தெளிவுறவே அறிந்திடுதல் என்கின்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப ஒரு
படைப்பானது தெளிவாக அறியவைத்து, தெளிவாக மொழிந்து, சிந்திப்பவர்க்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி மனத்தில் ஆனந்தக்கனவுகளைக்காட்டி, கண்ணில் நீர்த்துளியை வரவழைத்து மனதை உருக்கவைக்கவேண்டும் என்கின்ற அனுபவம் நான் வாசித்த பலகதைகளில் கிடைத்தன.
எழுத்துக்கு என்றும் வீழ்ச்சி இல்லை. அது பலபுதிய பரிமாணங்களை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது என்பதை எழுத்தாளர்கள் பலர் நிருபிக்கிறார்கள்.
‘சிறுகதை என்பது வாழ்க்கையிலிருந்துதான் வருகிறது’ என்பார் லா ச ரா.
நம்மைச்சுற்றி நடக்கும் பலவிஷயங்களை எழுத்தாளரால் மட்டுமே எழுத்து என்கிற ஒப்பற்ற சக்தியால் கொண்டுவர முடியும். சமூகத்தின் மீதான் தார்மீகப்பொறுப்பு ஒவ்வொரு எழுத்தாளரிடமும் இருக்கவேண்டும் என என் தந்தையும் எழுத்தாளருமான அமரர் திரு ஏஎஸ்ராகவன் சொல்வார். அப்படிப்பட்டதான பல சிறுகதைகளை வாசிக்கும் பேறு கிடைத்தது. அதை அளித்த குவிகம் நிறுவனத்தாருக்கு நன்றி.
ஜூலை மாத சிறுகதைகள் பல மனதை ஆக்கிரமித்தன. கதைக்கரு, மொழியின் வளமை சொல்லாட்சி என்று ஒரு படைப்பிற்கான பல தகுதிகளைஆராய்ந்து பார்த்து சில கதைகளைத் தேர்ந்தெடுத்தேன்.
ஊரில் பெரியாண்டவன் திருவிழா இன்னும் மூன்றே நாள் தான் என இருக்கும்போது குப்பன்- மல்லிகாவின் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த, அதுவும் அந்த வீட்டின் மூன்றாவது உயிராக உலவிக் கொண்டிருந்த பன்றி என்கிற அந்த ஜீவன் இனி இருக்கப் போவதில்லை. அதை நினைத்தபடியே மண் தொட்டியில் நிறைந்திருந்த கூழையும் அதில் ஊறி கொழு கொழுத்த கடலை புண்ணாக்கையும் கைகளால் துழாவிக் கொண்டிருந்த குப்பனின் மனமும் அந்தத் தொட்டியை போலவே குழம்பிக் கொண்டிருந்தது என்ற கதையின் ஆரம்ப வரிகளே மனதை இழுக்கிறது.
அந்த வாயில்லா ஜீவனை வைத்துதான் கதை நகர்கிறது. பலிக்கு செல்ல இருக்கும் அந்தப் பன்றி, குப்பன்- மல்லிகாவின் வாழ்க்கையோடு ஒன்றி விடுகிறது. எவ்வளவு நாகரீகம் வளர்ந்தாலும் எவ்வளவு வசதியாக இருந்தாலும் பெரிய ஆண்டவன் திருவிழா என்றால் எல்லோருமே பிள்ளை குட்டிகளோடு அந்த ஊருக்கு ஆஜர் ஆகி விடுகிறார்கள் குழந்தைகளுக்கு அங்கேதான் முடி எடுத்து காது குத்த வேண்டும்.
குப்பனின் பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து சாமி பன்றி அவர்கள் வீட்டில் தான் வளரும். குப்பன் தலை எடுத்த பிறகு வளர்க்கும் பன்றி மேலும் இரண்டடி நீளம் ஆவது மிச்சமாக வளரும். கணவனும் மனைவியுமாக பார்த்து பார்த்து வளர்க்கிற ஜீவன் அது.
அந்த ஊரின் வட்டார மொழி பன்றியுடன் வாஞ்சையாக கதையில் வலம் வருகிறது. குப்பனும் மல்லிகாவும் அந்த ஜீவனை மிகவும் பாசமாக வளர்கிற விதத்தை எழுதி இருக்கும் எழுத்து நடை மனதிற்குள் பாய்ந்து ஒரு புரட்டு புரட்டுகிறது.
யானையைப் போன்ற மதர்த்த நடையும் புலியை போல பலமும் கொண்ட பன்றியாம். சின்னப் பிள்ளைகள் நெருங்கவே அச்சப்படும் தோற்றமும் கொண்ட பன்றி குப்பன் மல்லிகா தம்பதிகளிடம் மட்டும் ஒரு குழந்தையை போல குழைகிறது குப்பனுக்கு இருந்த ஒரே பையன் ஏரியில் குளிக்கப்போய் இறந்து விடுகிறான். மல்லிகாவுக்கு அந்த துயரம் தாங்க முடியவில்லை. அந்த வருத்தத்தில் அந்த வருடத்திருவிழாவிற்கு சாமி பன்றிய வளர்க்க மாட்டேன் என்று சொன்ன மல்லிகா மற்றவர் வளர்ப்பில் பன்றி சரியாக வளரவில்லை என்பதாலும் அதற்கு வளர்க்கக் கொடுத்த பணத்தை அவர்கள் தங்கள் வயிற்றில் போட்டுக் கொண்டு விடுவதாலும் குப்பனைக் கெஞ்சிக் கூத்தாடி வளர்க்கச் சொல்கிறார்கள்.
தட்ட முடியாமல் பன்றியை வளர்க்கிற கணவனும் மனைவியும் பன்றியோடு பேசுவதே மிக இயல்பாக இருக்கிறது. எல்லாரையும் போல சின்ன வயதில் குப்பனுக்கும் பன்றிக்கறி உயிராக இருந்தாலும் புத்தி தெரிந்து அவனே சாமி பன்றிய வளர்க்க தொடங்கிய பிறகு பன்றி கறி தின்பதை சுத்தமாக நிறுத்தி விடுகிறான். குழந்தை மாதிரி வளர்த்தது எப்படி நாமளே சாப்பிடுவது என்று மல்லிகாவும் கேட்பாள்.
இந்த பெரிய ஆண்டவனின் மண் சிலைக்கு முன்பு இந்த பன்றி பலிக்கு செல்ல இருப்பதைப்பற்றிய கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளும் வரிகள் மனதை அள்ளுகின்றன.
பூஜை நாள் அன்று பலிக்கு கிளம்ப வேண்டும். எவ்வளவோ முயன்றும் அந்தப்பன்றி படுத்தே கிடக்கிறது இவர்களால் அதை எழுப்பவே முடியவில்லை.
‘இப்ப புலி போட போறாங்கன்னு அதுக்கு தெரிஞ்சிருச்சா ?’ என்று கணவனும் மனைவியும் பயப்படுகிறார்கள். ’வேற வழி இல்லடா உன்னை விட மாட்டாங்க நீயே எழுந்து வா ‘என்கிறாள் மல்லிகா வேதனையுடன். பன்றி அசையவில்லி.
‘எங்க பேரை காப்பாத்து சாமி‘ என்று அதன் கால்களை தொட்டு மல்லிகா வணங்குகிறாள். கைகளைக் கூப்பிகண்கலங்குகிறாள்.
விலுக்கென அசைகிறது பன்றி. நிமிர்ந்து மல்லிகாவையும் குப்பனையும் பார்க்கிறது. அப்படியே அசையாமல் நிற்கிறது. ‘ஒய்ங் என்ற ஒரு ஈனமான சத்தம். அந்த ஜீவ மரத்தை நோக்கி பிறகு நடக்கத் தொடங்குகிறது.
அதையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள்மல்லிகா. அவளுக்கு எட்டு வயதில் வாரிக் கொடுத்த பிள்ளையின் முகம் கண்களில் வந்து நிற்க கண்களில் பெருக்கெடுக்கிறது கண்ணீர். ஆனால் மொத்த கூட்டமும் அவளை கடந்து போய்க்கொண்டிருந்தது என்பதாக கதையை முடிக்கிறார் கதாசிரியர். வாசிக்கையில் நம் மனமும் கனத்துப்போகிறது. அருமையான கதை. கதைக்கருவும், கதை மாந்தர்களின் பேச்சும் மிக இயல்பாகவும் மனதை தொடும் விதமாக இருப்பதால் இந்தக் கதையை ஜூலை மாதத்தில் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்கிறேன்.
மேலும் சில கதைகள் மனதைத்தொட்டன. அவற்றில் சில..
குமுதத்தில் வந்த’ தேநீர் இடைவேளை எனும் கதை. எழுதியவர் இயக்குனர் மணிபாரதி.
இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரியான கதைதான். ரேவதிக்கு பிளஸ் டூ படிக்கிற தன்மகன் அருண்அதே வயதில் இருக்கிற சௌமியா உடன் பழகுவதில் சந்தேகம் வருகிறது அதனால் இடைவிடாமல் மகனை கண்டிக்கிறாள். ஒருநாள் சௌமியாவும் அருணும் காணாமல் போகிறார்கள். அப்போது ரேவதியின் கணவர் ராகவன் சொல்லுகிறார்,’ பசங்க கிட்ட என்ன பேசலாம் என்ன பேசக்கூடாது என்று ஒரு வரைமுறை இருக்கு அருண் சௌம்யா ஃ பிரண்ட்சா பழகிட்டு இருந்ததுல சந்தேகம் வந்து கண்டித்ததுதப்பு. காலம் மாறிவிட்டது சாதாரண விஷயத்தை பெரிது பண்ணும் போது அது விபரீதத்தை தான் கொண்டுவிடும்’என்கிறார். போலீஸ்ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வருகிறது. அருணின் அப்பா ராகவனும் சௌமியா அப்பா சரவணனும் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அங்கே அருணும் சௌமியாவும் உட்கார்ந்து இருக்கிறார்கள். இருவரும் ஓடி வந்து தங்கள் தங்கள் தந்தைகளைக் கட்டிக் கொள்கிறார்கள் இன்ஸ்பெக்டர் சொல்கிறார்.’ இருவரும் ஏதோ ஓடிப்போக தான் வந்திருக்கிறார்கள் ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை இன்பாக்சுவேஷன் லவ். இந்த வயசுல இவங்கள கவனமா பார்த்து வளர்க்க வேண்டியது பெரியவங்க பொறுப்பு தான்’ என்கிறார். அப்போது ராகவன் இருவரிடமும், ‘நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் தான் எங்கேயாவது போகணும்னு நினைச்சா எங்க கிட்ட சொல்லிட்டு போங்க உங்களுக்கு எல்லா ஃப்ரீடம் இருக்கு படிக்கிற வயசு படிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்க அதுதான் உங்க ஃப்யூச்சர் க்கு நல்லது’ என்று இதமாக சொன்னதும் அவர்கள் பிறகு உணர்கிறார்கள். இந்த கால குழந்தைகளின் மனநிலையை மிக எளிமையான வார்த்தைகளில் சொல்லி இருப்பதால் இந்த கதை பிடித்திருக்கிறது.
தினமணி கதிர் இதில் இதழில் உஷா தீபன் எழுதிய கதை கருணை.
சாலையில் கூவிக்கொண்டுவரும் ஒரு பழைய பேப்பர்காரர். அவரிடம் பொய் கிடையாது. மனைவி பிரியா அவரைப்பற்றி பரிந்து சொன்னால் என்று அவரைக் கூப்பிட்டு பழைய பேப்பரை போடுகிறார் பேப்பரை போடும் பொழுது அவருடைய முகம் வாடி இருப்பதைக் கண்டு என்ன ஆச்சு?’ என்று கேட்ட போது ஊரில் மகன் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரி சேர்த்து விட்டதாக சொல்லுகிறார். வயதில் பெரியவரான அவரைப்பார்க்கும் இவருக்கு தன் அப்பாவின் நினைவு வருகிறது. உடனே திருநெல்வேலி போகத் தவித்தவருக்கு பணத்தை கொண்டு வந்து நீட்டுகிறார்,’ போதுமா? ’என்ற போது ’நாலு வீடு தள்ளி ஒரு அம்மா இருக்காங்க அவங்களும் கொடுத்தாங்க உங்க உதவிக்கு நன்றி ‘என்று கையெடுத்து கும்பிட்டு காலில் விழப் போனவரைத் தடுத்து , என் தகப்பனார் வயசு நீங்க போய் என் கால்ல விழலாமா?’ என்று அவரை வழி அனுப்பினார். இப்போதெல்லாம் அந்த பழைய பேப்பர் புஸ்தகம் நோட்டு இரும்பு பிளாஸ்டிக் என்ற அவருடைய பழகிப்போன பலவீன குரலைக் கேட்கவில்லை வேறு யாரோ வருகிறார்கள் ட்ரை சைக்கிளில் வழக்கம் போல பாடல்கள் அழுது கொண்டே செய்திகளில் சத்தமாய் விரிகின்றன. அவரது மறு வரவை எதிர்பார்த்து காத்து கிடக்க’ நெஞ்சம் வர்ற போது வரட்டும் அவர்கிட்ட தான் பழைய பேப்பரை போடணும் வேற யாருகிட்டயும் போட்டுடாதீங்க’ என்று அவர் மனைவி பிரியா சொல்லியிருந்தாள். அவளுக்கு நடுவில் அவர் ஊர்போனதும் கணவர் பணம் கொடுத்ததும் எதுவும் தெரியாது ஆனால் அவர்மீதான் மனைவியின் கருணையை இவரால் நன்கு உணர முடிந்தது இப்போது அவர்கள் இருவருமே காத்திருக்கிறார்கள் துயர் கலந்த கணத்தின் வருகைக்காக என்ற கதையை முடித்த விதம் அருமையாக இருக்கிறது.
வாசகசாலை இதழில் அஸ்தி சிறுகதை சின்னுசாமி சந்திரசேகரன் எழுதியது
ராமசாமி என்கிற பெரியவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைமையில் கடைசி காலகட்டத்தில் இருக்கிறார். பிரேமா என்கிற நர்ஸ் அனுதாபப் படுகிறாள். ராமசாமியின் கதையைக் கேட்டபோது அவருடைய இரண்டு மகள்களும் அவரைத்தவிக்கவிட்டு அலட்சியமாக இருப்பது தெரிய வருகிறது. மனைவியை இழந்தவர். பிரேமா நீங்க கவலைப்படாதீர்கள் நான் உங்களுக்கு மகள் போல இருக்கிறேன் என்று சொல்லுகிறாள். கடைசியில் அவர் இறந்து அந்த அஸ்தியை எடுத்துக்கொண்டு மூத்த மகள் வீட்டிற்கு பிரேமா போகிறாள் அவள் அதை லட்சியம்பண்ணவில்லை இரண்டாவது மகளுக்கு அப்பாவிடம் பாசம் இருக்கிறது ஆனால் கணவன் முரடனாக இருப்பதால் அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
அஸ்தி சொம்புடன் நர்ஸ் ப்ரேமா வெளியே வரும்போது ஒரு சிறுவன் வேகமாகசைக்கிளில் வந்து தன்னுடைய தாத்தாவின் அஸ்தி என்று சொல்கிறான். அவன் ராமசாமியின் இளைய மகளின் மகன் என்று தெரிகிறது
“தாத்தா ஞாபகமாக அஸ்தி அவர் நட்டு வச்ச எலுமிச்சை செடியில் அம்மா அஸ்தியைத் தூவச்சொன்னாங்க அப்பாவுக்கு தெரியாம வந்தேன்” என சொல்லிட்டு போகும்போது பிரேமாவை பார்த்து,” அக்கா நீங்க எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க” என்கிறான் சட்டென ப்ரேமவிற்கு ஒருநாள் ராமசாமி தன்னைத்தன் சின்ன மகள்போல் இருப்பதாக சொன்னது நினைவுக்குவர சிறுவனை நோக்கி அவள் கரம்குவிப்பதாய் கதையை முடித்திருக்கிறார் இது இதயத்தை தொட்ட ஒரு நல்ல கதையாக எனக்கு படுகிறது.
அடுத்து விகடனில் ஜி ஏ கௌதம் எழுதியது. ஒரு கடிகாரத்தின் கதை
கடிகாரம் கடைக்கு செல்வது முதல் அங்க அவன் பார்த்த காட்சிகள் எல்லாவற்றையும் எழுத்தாளர் வர்ணித்த விதம் நன்றாக இருக்கிறது. கைக்கடிகாரம் பழக்கமே குறைந்துவிட்ட இந்த நாளில் பழுதான கடிகார கடைக்காரர் சொல்வது அந்த கடைக்கு வருபவர்களுடன் கடைக்காரர் பேசுவது, கடிகார உபயோகங்கள் பற்றிய உரையாடல்கள் எதார்த்தமாக இருக்கிறது. கதாநாயகன் ஒரு கை கடிகாரத்தோடு அந்தக் கடைக்குள் நுழைந்தவன் மறுபடி வீட்டுக்குள் வருகிறான். அம்மாவின் கைகடிகாரத்தை ரிப்பேர் பார்க்கவில்லை என நினைக்கிறான். அலமாரியில் கிடந்த அம்மாவின் கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டு அதை கையில் கட்டிக் கொள்கிறான் சுவரில் பூ வைத்திருந்த புகைப்படத்தில் அம்மா சிரித்துக் கொண்டிருப்பதாக கதையை முடித்த விதம் அருமை.

மிக்க நன்றி.இந்தக் கதையை மிகச் சரியாக புரிந்துகொண்டு தேர்ந்தமைக்கு
அன்புடன்
பிறைநுதல்
LikeLike