ஆண்டாள் திருப்பாவை | Andal Tiruppavai Special Speech @gembhakthitv

பாயிரம்

கண்ணன் துதி

(நேரிசை வெண்பா)

மாலை அணிந்ததனை மாலுக்(கு) அணிவிக்கச்
சால விருப்புடன் தந்தவளின் – கோலத்
திருக்கதையைக் கூறுகின்றேன் செந்தமிழில், கண்ணா,
இருக்கநீ வாராயோ இங்கு

ஆண்டாள் துதி

(நேரிசை வெண்பா)

ஆண்டாளை, ஆருயிர்க்(கு) அன்னையை, அன்பருளத்
தூண்டா மணியின் சுடர்விளக்கை,- ஈண்டாரும்
ஒப்புரைக்க ஒண்ணா ஒளிர்தமிழின் ஒண்மலரைச்
செப்பி மகிழ்தல் சிறப்பு

அவையடக்கம்
(நேரிசை வெண்பா)

அறியேன் இலக்கணம், ஆன்றதமிழ் நூல்கள்
சிறியேன் சிறிதும் தெளியேன், – வெறிமேவும்
வான்மலரில் வண்ணத்தேன் வண்டுண்ண எண்ணுதல்போல்
நான்மொழிந்தேன் பாடல் நனி.

(வெறி மேவும் – மணம் வீசும்)
(வான்மலர்- தேவலோகத்து மலர்/ கற்பக மலர்)

கருத்து :

விண்ணுலகத்துக் கற்பக மலரின் தேனைப் பருக நினக்கும் ஒரு எளிய மண்ணுலக வண்டினைப் போல, இலக்கண, இலக்கிய அறிவில்லாத சிறியேன் நான் பெருமை மிகுந்த ஆண்டாளைப் பற்றிய பாடல்களைப் பாட எண்ணுகின்றேன்

##################################################

நூல்

வில்லிபுத்தார்

(அறுசீர் விருத்தம்)

படர்ந்த வயல்கள் மரகதப்பாய்
பார்க்கும் எங்கும் விரித்திருக்கும்
கிடக்கும் நெடிய கருங்குன்றம்
கீதம் இசைக்கும் சிற்றோடை
வடக்கில் வாழைத் தோட்டங்கள்
வாயில் தோறும் கோலங்கள்
மிடுக்காய் நிமிர்ந்து நிற்கின்ற
நெடுவான் தழுவும் மாடங்கள்

இல்லம் தோறும் இருதிண்ணை
இருகை நீட்டி வரவேற்கும்
அல்லும் பகலும் அழகிருக்கும்
அன்பு நிறைந்த மனமிருக்கும்
சொல்லில் பண்பு, பணிவிருக்கும்
தூய்மை எங்கும் கொலுவிருக்கும்
நல்ல வில்லி புத்தூராம்
நளிர்நீர்ப் பொழில்கள் சூழ்சிற்றூர்.

எளிய வாழ்க்கை நெறியிருக்கும்
இனிய அமைதிச் செறிவிருக்கும்
ஒளியும், மழையும் அளவாக
உகந்து கொடுக்கப் பொலிவிருக்கும்
வளியும் மலரின் மணம்சுமக்கும்
மலரும் தன்னுள் தேன்சுரக்கும்
அளியும் வழியும் தேன்குடிக்கும்
அதன்பின் கண்ணன் புகழ்படிக்கும்

(வளி – காற்று)
(அளி – வண்டு)

கோவில் மணியின் ஓசையுடன்
கூறும் மறையின் ஒலிகலக்கும்
காவில் கிளியின் ஓசையுடன்
கானக் குயிலின் இசைகலக்கும்
ஆவின் மணிநா ஓசையுடன்
அழகாய்க் கன்றின் விளிகலக்கும்
பாவின் பண்செய் ஒசையுடன்
பரவும் அடியார் குரல்கலக்கும்.

(தொடரும்)