இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னாள் மூன்று வெவ்வேறு இதழ்களில் தொடராக வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான நாவல்கள் மூன்று.பிரபல எழுத்தாளர்கள் படைத்த இந்த புதினங்களின் நாயகிகள் வாசகர்களை மிரள வைத்தவர்கள்.இப்படியெல்லாமா பெண்கள்? என்று முகம் சுளித்தவர்களும் உண்டு.எழுதிய படைப்பாளிகள் கடும் கண்டனத்துக்கு உள்ளானார்கள். கொச்சைப்படுத்தப்பட்டனர்.ஆனாலும் அந்த நாவல்கள் காலத்தைக் கடந்து இன்றும் பேசவும் விவாதிக்கவும் படுகின்றன.
மரப்பசு
எழுபதுகளின் தொடக்கத்தில் ‘கணையாழி” இதழில் மரப்பசு நாவல் தொடராக வெளியானது. எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நாவல்களில் மிக நவீனமான படைப்பு. தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத கதா பாத்திரங்களில் ஒன்று அம்மணி.
கதை நாயகியான அவள் கல்யாண சடங்கில் நம்பிக்கை இல்லாதவள். ‘ஐநூறு ஆண்களுக்கு மேல் முத்தமிட்டிருக்கிறேன்,அதில் பாதிபேரோடாவது படுத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூச்சமோ அச்சமோ இல்லாது பிரகடனமும் செய்கிறாள். அதுதான் அவள் இயல்பான சுபாவம். ‘எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது’ என்ற முதல் வரியுடன் அவளே கதையைத் தொடங்குகிறாள்.பெற்றோர், பெரியப்பா, பெரியம்மா என சொந்தங்களை ஒரு கட்டத்தில் பிரிகிறாள். ஐம்பது வயது இசைமேதை கோபாலியின் ஆசைநாயகியாக அவர் அமர்த்திய வீட்டில் வசிக்கிறாள். அவள் ஆன்மா அன்பின் அரூபத்தை தேடி அலைகிறது. அது அவளுக்கு பெரியம்மா, பெரியப்பா, கோபாலி, பட்டாபி, வெளிநாட்டுக்காரன் ப்ரூஸ்,கோபாலியின் வேலைக்காரன் மனைவி மரகதம் என்று மாறிமாறி கிடைக்கிறது.இருப்பினும் போதாமை அவளைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.
அம்மணி காற்றைப் போல் சுதந்திரமானவள்.ஆனாலும் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தாலும் தனிமையானவள்.புவியிலுள்ள அனைத்து உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்புபவள். அம்மணி என்ற மரப்பசுவுக்குள் அவள் உயிர் மிக லாவகமாகத் தன்னை வியாபித்துக் கொண்டிருப்பதை, ‘மரப்பசுவை மேஜையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.மூப்பு வராது, முடி நரைக்காது, யார் கவனிப்பார்கள் என்ற பயமும் இராது’ என்று வாசகர்களுக்கு அவள் வரிகளிலேயே ஆசிரியர் விளக்கி இருப்பது சிறப்பு. இறுதியில் கோபாலி தந்த உடைமைகள் அனைத்தையும் துறந்து பட்டாபியின் வருகைக்காகக் காத்திருக்கும் அம்மணி, சிறிய வீட்டில் குடியேறவும் தயராகிறாள்.
நாவலில் மகிஷாசூரன்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் சம்ஹாரம் செய்யப்படவில்லை.வியக்க வைக்கும் பாத்திரமாக அம்மணியை படைத்த ஆசிரியர் ஏனோ அவளை வெகுண்டெழ வைக்காது விட்டுவிட்டார். பேசும் பொருளாக ஏன் சிந்திக்கும் பொருளாகக் கூட பெண்ணீயம் இல்லாத காலக்கட்டத்திலேயே அது பற்றிய விவாதத்தை இந்த நாவல் தொடங்கிவைத்து விட்டது. இலக்கிய உலகில் ஆதரவாகவும் எதிராகவும் தொடர்ந்து இப்படைப்பு விவாதிக்கப்பட்டு வருவது சிறப்பு.
சினிமாவுக்கு போன சித்தாளு
‘கண்ணதாசன்’ மாத இதழில் ஜெயகாந்தன் எழுதிய படைப்பு..சிறுகதையாக ஒரே இதழில் எழுத திட்டமிட்டிருந்த இந்த கதை ஐந்தாறு இதழ்களுக்கு மேல் தொடராக வெளிவந்தது. இப்போதும் இது ஒரு சிறுகதைதான் என்கிறார் நூலாசிரியர்.’கதை வெளிவந்தபோது பாராட்டிய பலரும் கதையின் நோக்கத்தை சந்தேகித்தார்கள். இந்தக் கதையை எழுதி யாரையோ நான் தரம் தாழ்த்திவிட்டதாகக் அவர்கள் குறைகூறினார்கள்.அதனால் புத்தகமாக வெளியிட மிகுதியும் தாமதித்தேன்’ என்று முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.அறியாமையும் பேதைமையும் கொண்ட மக்களின் மனமும், ரசனையும், ஒழுக்கமும் சிதைந்து போவதற்கு நமது சினிமாக்களும் அது சம்பந்தப்பட்ட நடிக, டைரக்டர், தயாரிப்பார்களும் பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள். அவர்களும் அதற்க்குப் பலியாகிவிட்டவர்களே என்கிறார்.கதையின் களமும் பாத்திரங்களின் பாஷையும் பிரச்னையின் தரமும் தாழ்ந்து கிடப்பதால் ஒரு படைப்பின் நோக்கம் தாழ்ந்து விடாது என்பது கதை குறித்து ஜெயகாந்தனின் வாதம்.
நகரத்து கூலிக்கார வர்க்கத்தை சேர்ந்த கம்சலை கதா நாயகி. கிராமவாசியான அவளை வாத்தியார் ரசிகனான சைக்கிள் ரிக்ஸா ஓட்டும் செல்லமுத்து திருமணம் செய்து கொண்டு பட்டணம் வருகிறான். கம்சலையின் கூச்சத்தைப் போக்க சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறான். சித்தாளு வேலைக்குச் செல்லவும் நாகரீக உடைகள் அணியவும் பழகிய அவள் வாத்தியார் தீவிர ரசிகையாகவும் மாறிவிடுகிறாள். கணவன் வாத்தியார் படம் போட்ட பனியன் அணிந்து நிமிர்ந்து படுத்து இருக்கிறான். காலையில் வேலைக்கு போகப் புறப்பட்ட கம்சலை அவன் மார்மேலே முகத்தை அழுத்தி முத்தம் குடுத்துகிட்டே இருக்கா. செல்லமுத்து அவளை வேலைக்கு விரட்டுகிறான். வாத்தியார் படம் மேலே எல்லாம் வெத்தலைப் பாக்கு கறை பட்ட கம்சலையோட உதட்டு முத்திரைகள். பனியனை கிழித்து எறிகிறான் செல்லமுத்து.குடிசை சுவற்றில் தொங்கிய வாத்தியார் பட காலண்டரையும் கிழித்துப் போடுகிறான். ‘நீ அவரெ நெனிச்சிக்காமே ஒரு தபா கூட எங்கிட்ட படுக்கலேம்மே’ என்று கம்சலையை ஏசுகிறான்.
இருவருக்கும் இடையில் விரிசல் விழுகிறது. கம்சலை வேலைக்குப் போகவில்லை. சினிமா பார்க்கவும் அவளை செல்லமுத்து விடவில்லை. வாத்தியார் புது படம் பார்க்கும் அவளது மோகத்தைப் பயன்படுத்தி செல்லமுத்துக்கு ரிக்ஸா வாடகைக்கு விடும் சிங்காரம் அவளை சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறான்.சிங்காரத்துடன் வந்ததை தவறு என்று உணர்கிறாள் கம்சலை. ‘ஆம்படையாங்காரனுக்குத் தெரியாம இவன் கூட சினிமா பார்க்க வந்தது தப்புதான். அந்த தாலிகட்ன பேமானி, இந்தாம்மே ஒரு ரூபா.உனக்கு புடிச்ச படம் வந்திருக்கே, போய்ப் பாருன்னு அனுப்பி இருந்தா இந்த கஸ்மாலத்தோட வந்திருப்பனா? அதுக்காக இவன் வந்து வாடி படுத்துக்கலாம்னு கூப்படறதா? ‘என குமறவும் செய்கிறாள்.
மனோமணி நடத்தும் விடுதிக்கு கம்சலையை தந்திரமாக அழைத்து செல்கிறான் சிங்காரம். மனோமணி அவளைக் குடிக்க வைத்து நாளை வாத்தியார் சூட்டிங்கிக்கு இட்டுக்கினு போவதாக ஆசை காட்டி இருவரையும் ரூமில் விட்டு கதவை மூடிக்கொண்டு வெளியே போகிறாள். செல்லமுத்து நேரில் வந்து அழைத்தும் கெட்டுப்போன தான் வீடு திரும்ப விரும்பவில்லை என்று மறுத்து விடுகிறாள் கம்சலை. மனோமணி நடத்தும் விடுதியிலேயே ஐக்கியமாகிறாள்.
சினிமா ஷூட்டிங் சென்று வாத்தியாரை நேரில் பார்க்கிறாள். ஜன்ம சாபல்யம் அடைந்தது போல் மகிழ்கிறாள். வில்லனிடம் நிஜமாலுமே கத்திக்குத்துக்கு ஆளாகிறார் வாத்தியார்.வாத்தியார் இறந்து விட்டதாக பரவிய புரளியை நம்பி தெருவில் பைத்தியமாய் அலைகிறாள்.கண்ணகி சிலை அருகில் சினிமா போஸ்டர்களை கிழித்து பொடவை மாதிரி சுத்திகிட்டு இருந்த கம்சலையை காண்கிறான் செல்லமுத்து. வாத்தியார் பிழைத்துக் கொண்டார் என்பதை பக்குவமாய் சொல்லி அவளை ரிக்ஸாவில் ஏற்றிக் கொண்டு குடிசைக்குச் செல்கிறான் என்று முடிகிறது கதை.
சினிமா வெறியில் சீர்குலைந்த ஓர் அபலைப் பெண்ணின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன். கூவாதேமே, ஊட்டாண்ட, இனனா இதுஅதிசியமா கீதே,பேமானி,பீடி ஆயிப்பூட்டுது, மொணவிக்கினா கம்சலை, கையெ வெச்சி அய்த்துனான்,மூஞ்சி அயவாத்தான் இருந்திச்சி, இன்னா பெரமாதம் என்று முற்றிலும் சென்னை பாஷையில் கதை எழுதப்பட்டுள்ளது. ‘தலையிலே மயிரில்லாதவனுக்கு டோப்பா, வாயிலே பல்லு இல்லாதவனுக்கு பொய்ப் பல்லு, கெயவனுக்கு மொமரன் வேஷம், பொம்பளைங்களுக்கு பஞ்சி வெச்சிக் கட்டிக்கிறது, . எல்லாம் மேக்கப்பும்மே மேக்கப்பு. அதாண்டி பொண்னே சினிமா! ‘என்று மனோமணி பாத்திரம் வழியாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
சர்ச்சைகளுக்குப் பெயர்போனது ஜெயகாந்தனின் சிறுகதைகளும் நாவல்களும். கடும் சர்ச்சைக்குள்ளானது இந்த படைப்பு. ‘சினிமா சம்பந்தப்பட்டவர்களும் மனிதர்களே. உன்னதமான நோக்கத்துடன் ஒரு வீழ்ச்சியைக் குறித்து நிதர்சனமான வாழ்க்கை ஆதாரத்துடன் நான் காட்டிய இக்கதையைப் பெருந்தன்மையோடாவது இவர்கள் பார்த்திருக்க வேண்டும்’ என்கிறார் ஜெயகாந்தன்.
இரண்டு பேர்
பிரபல இதயநோய் மருத்துவ நிபணர் நந்தகோபால் மனைவி மாயா. மழை பொழிவைப் பார்ப்பது, நல்ல சங்கீதத்தை கேட்பதில் ரசனை மிக்கவள். வேலை பளு மிகுதியான டாக்டரால் மனைவியின் சின்னச் சின்ன சந்தோஷங்களில் பங்கேற்க முடியவில்லை. மாயாவுக்கு அவளை விட வயது குறைவான இசைக் கலைஞனிடம் தொடர்பு ஏற்படுகிறது.மகளும் கல்லூரி மாணவியுமான மஞ்சு இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறாள். நாளுக்கு நாள் ப்ரஸன்னா மீதான மாயாவின் கிறக்கம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் இனி அவனுடன்தான் வாழ்வது என்று துணிச்சலுடன் ஒரு அதிகாலையில் அவனது இருப்பிடத்துக்கு டாக்ஸியில் செல்கிறாள். அங்கே முற்றிலும் மாறுபட்ட ப்ரஸன்னாவை சந்திக்கிறாள் ‘யுவர் அட்டாச்மெண்ட் டு யுவர் ஃபேமிலி ஈஸ் கிரேட். சின்னச் சின்ன ரசனைகளை உனது கணவர் பரிமாறிக்காத ஒரே காரணத்துக்காகத் தான் என்கிட்டே உனக்கு ஈடுபாடு என்பது புரிந்துவிட்டது. நீ ஒரு அழகான கவிதை.எனக்கு ஞானோதயம் வந்துவிட்டது. நாம் நல்ல நண்பர்களாய் பிரிவோம்’-விடைபெற்றான் பிரசன்னா.’உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருந்தா உன் சந்தோஷங்களை விருப்பங்களை மூட்டை கட்டி வெக்கணுமா’ என்று பேசியவன் தானா இவன் என்று உறைந்து போய் நின்றாள் மாயா.
மாயாவைப் பின் தொடர்ந்து காரில் வந்த நந்தகுமார் அவளுக்கு ஆறுதல் கூறி அரவணைத்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நாவல் இது என்றால் அது மிகையல்ல. இரு எழுத்தாளர்களும் தொய்வின்றி கதையை சுவராசியமாய் நகர்த்திச் சென்றனர். நீரோட்டம் போன்ற தெளிவான நடையை வாசித்தால் உணர முடியும். ‘ப்ரஸன்னா ஒவ்வொரு செடியாக, பூவாக பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்தான். அந்தத் தோட்டமும் பசுமையும் அவனுக்குப் பிடித்திருந்தன. அப்போதுதான் தோட்டக்காரன் எல்லாவற்றுக்கும் தண்ணீர் ஊற்றிவிட்டுப் போயிருக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் அந்தக் குளிர்ச்சியும் ஈரமும், குளித்துவிட்டு வந்த மாதிரி பளபளப்பும் தெரிந்தன’ என்ற வரிகள் நாவலின் நடை அழகுக்கு ஓர் உதாரணம்.
ஒரு முரட்டுக் கணவனையோ, குடிகார கணவனையோ விட்டுப் பிரியும் மனைவியைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நந்தகோபால் மாதிரி எல்லாம் நிறைந்த மனசாரத் தன்னை காதலிக்கும் கணவனை விட்டு மாயா ஏன் விலகினாள்? இத்தனைக்கும் காரணம் கண நேர சபலம்தான் என்று சிவசங்கரி பின்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தரத்தில் ஆபாச வார்த்தைகளால் சாடும் ஒரு வாசகர் எழுதிய கடிதத்தையும் அவர் தைரியமாக வெளியிட்டுள்ளார்.’எங்களைப் பற்றி இந்த வாசகருக்கு என்ன தெரியும்?எழுத்தைக் கவனியுங்கள். அதை தூற்றுங்கள்.பாராட்டுங்கள். அக்குவேறு ஆணி வேறாக பிரித்து அலசுங்கள். வரவேற்கிறோம். இதை விட்டுவிட்டு எழுதும் கை, உடம்பு, முகம், கணவன், குடும்பம் என்று நீளமாய் எல்லை தாண்டி போவது எதற்காக? வேண்டாமே !’ என்கிறார் சிவசங்கரி.நாவலில் வருவது போன்ற மாயாக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கவே செய்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘பெண் இனமே தலை குனியவேண்டிய நாவல்.எப்படித்தான் இரு பெண்கள் மனம் வந்து எழுதினார்களோ?’ என்று வாசகர் ஒருவர் எழுதிய கண்டன கடிதத்தை பின்னுரையில் வெளியிட்டுள்ளார் இந்துமதி. ‘இரண்டு ஆண் எழுத்தாளர்கள் எழுதினால் ஒப்புக் கொள்வார்கள் போல இருக்கிறதே’ என்பது அவரது ஆதங்கம்.
‘எத்தனை கசப்பாக இருந்தாலும் நிஜங்கள் நிஜங்கள்தான். மாயாவை நீங்கள் பார்த்ததில்லை அல்லது கேள்விப்பட்டதில்லை என்று மனப்பூர்வமாகச் சொல்லிவிடுங்கள் பார்க்கலாம்!’ என்பது வாசகர்களுக்கு இந்துமதியின் கேள்வி.

மூன்று கதைகளும் அன்றைய காலகட்டத்தில் பரபரப்பை ஊட்டியது. ஜெகாந்தனுடையது அரசியலில் பெரும் எதிர்ப்பை கண்டது.
LikeLike