அன்னக்கிளி உன்னைத் தேடுதே..
![]()
மலைகளின் ராணி என்று தமிழகம் கொண்டாடும் நீலகிரி, பல இடங்களில் தன் அழகை மறைத்து வைக்கும். சில இடங்களில் ‘என்னைப் பார், என் அழகைப் பார்!’ எனச் சிறகடிக்கும். அப்படிபட்ட ஒரு இடம்தான் கோத்தகிரி மலை பகுதியில் உள்ள கொடநாடு காட்சி முனை.
அங்கிருந்து பார்த்தால், பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பசுமை விரிப்பில், பளிச்சென்று மனத்தைக் கவர்வன, மூன்று இடங்கள்;
திம்மென்று ஸ்தூலமாக ஓங்கி உயர்ந்து நின்று பார்வையாளர்களை உற்றுநோக்கும் ரங்கசாமி பில்லர்,
மேகத்தைத் தொட்டு விளையாடும் ரங்கசாமி பீக் என்கிற மலை,
அதல பாதாளத்தில் வெள்ளி நாணயங்களைச் சிதற விட்டாற்போல் பளிச்சென்று தெரியும் தெங்குமரஹாடா கிராமம்.
ஒரு புறம் சத்தியமங்கலம் வனவிலங்குக் கோட்டம், மறுபுறம் முதுமலை சரணாலயம் கைகோத்து நிற்கும் அடர்ந்த வனப்பகுதிகளில் மேற்சொன்ன மூன்றும் உள்ளன.
கொடநாடு வியூ பாயிண்ட்..டிலிருந்து தெளிவாகத் தெரியும் இந்த இடங்களைக் காணும்பொழுது, இயற்கை என்னும் இளைய கன்னிக்கு சில சமயங்களில் வெட்கம் வந்து விடும். மஞ்சு (Mist) என்னும் வெண்ணிற ஆடையில் தன்னை மறைத்துக் கொள்வாள். எங்கும் வெண்பனி மேகம் சூழ தன் பொக்கிஷங்களை ஒளித்து விளையாடுவாள்.
சரி, அவ்வளவுதான் நமக்கு அதிர்ஷ்டமில்லையோ என நினைக்க, சில நிமிடங்களில், முற்றிலும் விலகிப் பளிச்சென்று, ஆதவன் துணை கொண்டு அத்தனையும் காண்பிப்பாள். மனித மனநிலைபோல, இங்கு வானிலை மாறிக்கொண்டே இருக்கும்.
**********
கொடநாடு காட்சி முனையிலிருந்து ரங்கசாமி பில்லர் என்னும் நீண்ட நெடிய பாறையைக் கண்டவுடன் அதன் மீது ஏறி விண்ணைச் சாடலாமா என்றுதான் தோன்றும். அடர்ந்த கானகங்களுக்கு நடுவே உள்ளது. ஆகவே, பார்க்கலாம், ரசிக்கலாம், அவ்வளவே. டிரோன் வியூவில் பார்த்தால் இன்னும் பரவசமாக இருக்கும். காற்றில் பறந்து விழுந்த வெள்ளை ரிப்பனை போல அதன் அடியில் ஒரு அழகான நீர்வீழ்ச்சியும் பாய்கிறது.
ரங்கஸ்வாமி பீக் மற்றும் தெங்குமரஹாடா – இந்த இரண்டு இடங்களுக்கும் சென்றுவர வனத்துறையின் அனுமதி பெறுவது அவசியம்.
**********
ரங்கசாமி பீக் உச்சியில் பெருமாள் கோயில் இருப்பதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் நிறைய பக்தர்கள் மலையேறித் தரிசனம் செய்கிறார்கள். கோத்தகிரியிலிருந்து, கீழ்கோத்தகிரி வழியாக, சூலூர்மட்டம் சென்று அங்கிருந்து மலை ஏற வேண்டும். யானைகள் நடமாடும் காட்டுப் பாதை இது. இந்த மலையேற்றத்துக்குப் பரிச்சியமான துணை தேவை. முனையை அடைய1948 சுமார் 1:30 மணி தியாலம் பிடிக்கும்.
உச்சியிலிருந்து பார்த்தால் 360 டிகிரி வியூவில், பவானி ஆறும் மாயாறு நதியும் சங்கமமாகும் பெரிய நீர்த்தேக்கமும், பவானிசாகர் அணைக்கட்டும் அதன் சுற்றுப்புறக் காட்சிகளும் கண்களில் விரியும். பவானிசாகர் அணை ஐந்து மைல் நீளம் கொண்டது. 16MW மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் மின்நிலையமும் உள்ளது. 1948ஆம் ஆண்டு ஆரம்பித்து, அவ்வளவாகத் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே ஏழே வருடத்தில் கட்டி முடித்துவிட்டார்களாம்.
ரங்கசாமி மலை உச்சியில் உள்ள கோயிலில், குழலூதும் கண்ணன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் ஏந்திய மற்றொரு பெருமாள் விக்கிரகமும், நான்கு நந்தி சிலைகளும் உள்ளன. வாசலில் நிறைய தீபச் சட்டிகள் மற்றும் வேல் கம்புகள் உள்ளன. கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.
**********

தெங்குமரஹாடா – இந்தக் கிராமத்தின் பெயரைக் கேட்டாலே அங்குப் படமாக்கப்பட்ட அன்னக்கிளியும், ரோசாப்பூ ரவிக்கைக்காரியும் நம் நினைவலைகளில் வந்து மோதும்.
கொடநாடு மலையிலிருந்து, வனப்பகுதி வழியே கீழே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தக் கிராமம். அடர்ந்த வனப்பகுதி என்பதால் மாற்று வழியாக சாலைமூலம் இந்த ஊரை அடைய, பவானிசாகர் சென்று, அங்கிருந்து வடமேற்காக 25 கிலோமீட்டர் காட்டுப்பகுதியில் கரடு முரடான வழியே பயணிக்க வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இந்தக் கிராமத்திற்கு செல்ல முறையான அனுமதி தேவை.
மேனாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் உணவு உற்பத்திக்கான மாதிரி கிராமங்களில் ஒன்றாகத் தெங்குமரஹாடா, உருவாக்கப்பட்டபோது 100 ஏக்கர் நிலம் அக்கம்பக்கம் பகுதிகளில் இருந்த விவசாய மக்களுக்கு ஒதுக்கப் பட்டது. அவர்களுடைய கடுமையான முயற்சியின் துணைகொண்டு நிலங்கள் பதப்படுத்தப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. இது பின்னாளில் 500 ஏக்கராக விரிவு செய்யப்பட்டது. 1952ஆம் ஆண்டு தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கம் உருவாக்கப்பட்டது. இப்படியாகக் குடியேறியவர்கள் இன்று 497 குடும்பங்கள் இங்கு வசிக்கிறார்கள்
கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து இரண்டு பஸ்கள் இயக்குகிறார்கள். இந்த இடத்தை அடைய, மாயார் நதியைக் கடக்க வேண்டும். முதலைகள் விளையாடும் நதி இது. பேருந்துமூலம் வரும் பயணிகள், ஆற்றின் மறுகரையில் இறங்கி, பரிசல் மூலம் நதியைக் கடந்து மறுகரையை அடைய வேண்டும். அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து, கிராமத்திற்குள் செல்ல வேண்டியிருக்கும்.


ரம்யமான மலைகளின் பின்னணியில், தேசிய புலிகள் காப்பகத்திற்கு உள்வரும் இந்தக் காட்டுப் பகுதிகளில், மான்கள், குரங்குகள், சிறுத்தை, கரடி, காட்டுக் கோழி, மலைப்பாம்பு எனப் பல உயிரினங்கள் உள்ளன. சமீபத்திய கணக்குப்படி 33 புலிகளும் இங்கு உள்ளனவாம்.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த நீலகிரியில், தெங்குமரஹாடா ‘நீலகிரியின் அரிசிக் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்க வாழை, கடலை, காய்கறிகள், பெருமளவில் பயிரப்படுகின்றன. அருகில் உள்ள இரண்டு கிராமங்கள் அல்லி மாயார் மற்றும் கல்லம்பாளையம்.
ஒரு அழகான மாரியம்மன் கோயில், பள்ளிக்கூடம் உள்ளது. மாயார் நதியுடன் அவர்கள் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. இங்கு அரை மணிக்கு ஒரு முறை வானிலை மாறுகிறது.
**********
1818ஆம் ஆண்டு கோயம்புத்தூர் கலெக்டரின் உதவியாளர்களான மிஸ்டர்.விஷ் மற்றும் கிண்டர்ஸ்லி ஆகியோர் தரைமட்டத்திலிருந்து ஏறி ரங்கசாமி மலை முடிச்சை அடைந்து பிறகு அங்கிருந்து கீழிறங்கி கோத்தகிரியில் காலடி பதித்தார்கள். பிறகு இந்தப் பிரதேசத்தின் அழகு இங்கிலாந்தின் அழகை ஒத்திருப்பதை அப்போதைய கோவை கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் ஜான் சுலிவனிடம் போய்ச் சொல்ல, அவர் முயற்சியால் நீலகிரி பகுதி உதயமானது. இவர்கள் வருவதற்கு முன்னரே பழங்குடியினர் இங்கு வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி பூக்கள், மலை முழுவதையும் நீல நிறமாக மாற்றுவதால் நீலகிரி எனப் பெயர் வந்தது என்பர். நீலகிரியின் வரலாற்றில் ரங்கசாமி பீக் முக்கியப்பங்கை வகிக்கிறது.
அறிந்த நீலகிரியைவிட அறியாத நீலகிரி அழகானது. அதைக் காண இயற்கை நம்மை அழைத்தால், மண்ணுலகிலேயே கிடைக்கும் சொர்க்கம்!!

பசுமை அழகின் பதிவு.
LikeLike