எதிர்நீச்சல்
தலைப்பைப் பார்த்து, ஏதோ பெரிய தடைகளை எல்லாம் தாண்டி செயற்கரிய சாதனை செய்த வெற்றிப் பதிவு என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல. இது வாசகர்களுக்கு சாதாரண விஷயம். ஆனால் இளமையில் இது எனக்குப் பெரிய சாதனைதான்.
ஆம்! இளவயதில் பள்ளிப் பருவத்தில் நான் நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பினேன். அதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. அதற்கு சில பல காரணங்கள். அவற்றை எதிர்கொண்டு ,சமாளித்து எப்படி நீச்சல் கற்றுக் கொண்டேன் என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதைச் சுருக்கம் அல்லது கட்டுரைச் சுருக்கம். தலைப்பு இப்போது விளங்கியிருக்கும் என நம்புகிறேன்.
நானும் எனது இரட்டை கணேசனும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் நண்பர்களில் சிலர் YMCA “ ஸ்விம்மிங் பூல்’ சென்று முறையாக “கோச்” வழிகாட்டுதலில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தனர். அதற்கு தனியான சீருடை , மாதக் கட்டணம் என்றெல்லாம் உண்டு. ஓரிரு முறை நண்பர்களோடு சென்று பார்த்திருக்கிறேன். உறுப்பினர்களுக்கும், பயிற்சி எடுத்துக் கொள்வோருக்கும்தான் நீச்சல் குளத்துள் அனுமதி. பிறர் பார்வையாளராக உள்ளே வரலாம். அதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு.
எங்கள் நண்பன் இரகோத்துமன் அங்குள்ள மானேஜரிடம் “ சார் ! இவங்கெல்லாம் என் ஃபிரண்ட்ஸ் .. ஸ்விம்மிங் கத்துக்கணும்னு ஆசைப் படறாங்க என்ன ப்ரொசீஜர் அப்படின்னு பாக்க வந்திருக்காங்க .. கொஞ்சம் பெர்மிட் பண்ணுங்க “ என்றான்.
“ ஓ அப்படியா! வெல்கம் “ என்று சொல்லிவிட்டு நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சி பற்றிய விவரங்கள் அடங்கிய தாள்களையும், விண்ணப்பப் படிவங்களையும் கையில் கொடுத்துவிட்டு “ இன்று உள்ளே சென்று பாருங்கள். ஆனால் குளத்தில் இறங்கக் கூடாது. “ எனச் சொல்லிச்சென்றார்.
முதல் முறையாக அப்போதுதான் ஒரு ஸ்விம்மிங் பூலை உள்ளே சென்று பார்க்கிறேன். கிரிக்கெட் பிட்ச் மாதிரி நீளமான அமைப்பு. 120×40 அடிகள் இருக்கும். ஸ்படிகம் போல தண்ணீர் இருக்கிறது. இருபது முப்பது பேர் நீச்சல் அடித்துக் கொண்டு இருந்தார்கள். குளத்தின் நீளவாக்கில் , நடுவில் ஒரு சிறிய அரைவட்ட வடிவில் ஒரு மேடையும் அதன் அருகில் வளைந்து மேலேறும் ஏணியும் இருந்தது. பத்து அல்லது பன்னிரண்டு அடி உயரத்தில் அமைக்கப் பட்டிருக்கும் “டைவிங் போர்ட் “ செல்ல அந்த ஏணியில்தான் ஏறிச் செல்லவேண்டும். நான் பார்க்கும் போது, ஓரிருவர் மேலே இருந்து நீச்சல் குளத்தில் குதித்துக் கொண்டிருந்தனர்.
சில பேர் மேலிருந்து “தொபுகட்டீர்: என்று குதித்தார்கள். சிலபேர் டைவிங் போர்டில் மெல்ல நின்று கைகளை உயரே தூக்கிக் கொண்டு ,பலகையின் நுனியிலே நுனிக் கால்களைப் பதித்துக் குதித்து மேல் கிளம்பி பிறகு தலைகீழாக அம்பு போல நீருள் நுழைந்து வெளிவந்தனர். இவர்களெல்லாம் போட்டிக்குத் தயார் செய்கிறார்கள் என்றான் ரகு. இன்னும் சில பேர் விரைவாக நீந்திக் கொண்டு இருந்தனர். பார்க்கவே பரவசமாக இருந்தது. இரண்டு மணி நேரம் இருந்த பிறகு, நாங்களெல்லாம் வீடு திரும்பினோம்.
அடடா நல்ல வாயப்பென்று விண்ணப்பத்தாளையும் பிற விவரங்களையும் எடுத்துச் சென்று வீட்டில் காட்டினால்
“ அப்பா ஒத்துக்க மாட்டா” என்றாள் அம்மா. அதை நிரூபித்தார் அப்பா.
“இதெல்லாம் இப்ப வேண்டாம். படிக்கிற வழியைப் பாரு. ஒரு மாசத்துல ஸ்விம்மிங் கத்துக்க முடியாது. மாசா மாசம் இதுக்கு செலவழிக்க முடியாது. “ என்று, அப்பா ஒற்றை வரியில் மறுத்ததற்கு அம்மா ஒரு முழ நீளம் விளக்கம் சொன்னாள். ஸ்விம்மிங் டிரஸ் வாங்க வேண்டும் என்பதை நல்ல வேளை சொல்லவில்லை. ஆனால் அதுவும் அஜெண்டாவில் உண்டு.
ஒரு மாதம் சென்றது. தினம் வீட்டில் இது பற்றி கேட்பதும் அம்மா மறுப்பதுவும் ஆக இருந்தது. ஒருநாள் எங்கள் அருமைத் தமக்கை செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தியை எல்லோரோடும் பகிர்ந்து கொண்டிருந்தாள். மும்பை விடுதி ஒன்றிலுள்ள ஸ்விம்மிங் பூலில் கல்லூரி மாணவன் ஒருவன் இறந்த விபத்து பற்றிய செய்தி.
நானும் என் சகோதரனும் நீச்சல் கற்றுக் கொள்ளச் செல்வதற்கு எதிர்ப்பு இன்னும் பலமாகிவிட்டது.
“இதுங்க ரெண்டும் சொன்னா கேட்க மாட்டேங்கறது.. ஸ்விம்மிங் போணம்னு ஒரே அடம் .நீங்களே சொல்லுங்கோ “ என்று வரும் உறவினரிடமும் எதிர்ப்பு மனுத் தாக்கல் போடப்பட்டது.
எங்களுக்கு அட்வைஸ் பண்ண வந்த சில பெரியப்பாக்கள், மாமாக்கள் ஆகியோர் திரண்டெழுந்த எங்கள் குரோதமான முகங்களைப் பார்த்துவிட்டு “நமக்கெதற்கு வம்பு “என்று சென்றுவிட்டார்கள். சாதுவான எங்கள் அண்ணன் மட்டும் “ டேய் ! பேசாத போங்கடா ! நானும் இது மாதிரி ஒருமுறை அப்பாவிடம் கேட்டேன் மாட்டேன்ணுட்டார்.” என்று சொல்லி எங்கள் வயிற்று எரிச்சலைக் கட்டிக்கொண்டான்.
காப்பிப் பொடி கடன் வாங்க வரும் விசாலம் மாமி எங்க அம்மாவிடம் ,” மாமி ! தெரியுமோ .. இத மாதிரிதான் பஞ்சாபகேசன் ஆத்து பையன் ராம்கி ஸ்விம்மிங் போறேன்னு சொல்லி மெரினால இருக்கிற நீச்சல் குளத்துக்குப் போய்ட்டு வந்து மேலெல்லாம் ஏதோ அரிப்பு இருக்கறதா மருந்து வாங்கி சாப்டுண்டு இருக்கான்” என்று பற்ற வைத்துவிட்டு பத்து கிராம் காப்பிப் பொடி வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.
இதுக்கு நடுவிலே காலேஜுக்குப் போனா அங்கே ஸ்விம்மிங் குருப் பசங்க “என்னடா இன்னுமா ஜாயின் பண்ணல” என்று வெறுப்பேத்தினார்கள்.
மேற்கண்டவாறு மேலும் ஒரு மாதம் கழிந்தது. இனிப் பொறுக்க முடியாது பொங்கி எழ வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. நானும் என் சகோதரனும் ஓர்( ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். ( கூட்டம்னா நாங்க ரெண்டு பேர்தான்). போகிற போக்கில் கடன் வாங்கி மாமி உதிர்த்துவிட்ட ஒரு செய்தி எங்களை ஈர்த்தது. அதுதான் “மெரினா ஸ்விம்மிங் பூல்” . ஒய்.எம் சி. ஏ வீட்டுக்கு பக்கம். மெரினா என்றால் திருவல்லிக்கேணி வரை போக வேண்டும். அதைப் பற்றிய விவரங்கள் சேகரித்தோம்.
மெரினா ஸ்விம்மிங் பூல் மெட்ராஸ் யூனிவர்சிட்டி எதிரில் உள்ளது. 13 ஆம் நம்பர் பஸ்ஸில் போனால் போகவர ரெண்டு ரூபா செலவு. அங்கே உள்ளே போக ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா. சைக்கிளில் போனால் பஸ் காசு மிச்சம். திரும்பி வரும் போது பக்கத்தில் உள்ள புகாரி ஹோட்டலில் ஒரு பிளேட் ஸமூசாவும் டீயும் சாப்பிடலாம். அங்கே யாரும் உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்க மாட்டார்கள். நண்பர்கள் கூட வருவார்கள் அவர்களிடமே கற்றுக் கொண்டு விடலாம்.
இன்னொரு இனிய தகவல் கண்டு பிடித்தோம். நீச்சல் குளத்தின் ஒரு முனையில் மூன்று அடிகள்தான் ஆழம்; இன்னொரு முனையில்தான் ஏழு அடி ஆழம் இருக்குமாம். ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறம் வரை தளம் சாய்வாகச் செல்லும். நம்ம கழுத்துவரை ஆழம் உள்ள இடத்தில் நின்று கற்றுக் கொள்ளலாம். ஆபத்து என்றால் வந்து உதவி செய்வதற்காக எல்லாருக்கும் பொதுவா ஒரு கண்காணிப்பாளர் உண்டு.
ட்ரைனிங் , டெக்னிக் லாஜிஸ்டிக்ஸ் என்று எல்லாவற்றையும் அலசிவிட்டு ( இப்போதுதான் இந்த டெர்ம்ஸ் எல்லாம் தெரியும்.) மெரினா குளத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். இப்போதைக்கு வீட்டில் இது பற்றி யாரிடமும் சொல்லத் தேவையில்லை என்று தீர்மானித்தோம்.
நாங்கள் இரண்டு பேருமே சீனியர் டிவிஷன் என். சி. சி. யில் இருந்ததனால் மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஞாயிற்றுக் கிழமைகள் பரேடு இருக்கும். அப்படி இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலை பரேடு இருப்பதாகச் சொல்லிவிட்டு ஸ்விம்மிங் போகலாம் என்று முடிவு செய்தோம். முடிவை வெற்றிகரமாகச் செயல் படுத்தினோம். தொடர்ந்து இது போல வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வீட்டிற்குத் தெரியாமல் ஸ்விம்மிங் கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம்.
இரண்டு ஆண்டுகளில் நான் freestyle stroke, breaststroke, என்று சொல்லப்படும் இரண்டு வகைகளையும் கற்றுக் கொண்டேன். என் சகோதரன் கணேஷ் டைவிங்கில் மிகுந்த ஆர்வம் காட்டினான். ( ஒரு முறை குதிக்கும் போது அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸ் தண்ணீருக்குள் கழன்று போனது ஒரு சுவையான சிரிப்பு சம்பவம்)
வீட்டிற்கு எப்போ தெரியும் என்று கேட்கிறீர்களா?
ஆறு மாதங்கள் ஆன பிறகு ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் உலர்ந்து கொண்டிருக்கும் எங்கள் “ஸ்விம்மிங் ஷார்ட்ஸை “ பார்த்துவிட்டு எங்கள் தமக்கை, தந்தையாரிடம் “போட்டுக் கொடுத்து” விட்டாள். தந்தையார் கோபம் கொள்ளவில்லை.எங்களைக் கூப்பிட்டு விசாரித்தார். நாங்களும் உண்மையை ஒத்துக் கொண்டோம்.
“நிஜமாகவே நீச்சல் கற்றுக் கொண்டு விட்டீர்கள் என்றால் அது நல்லதுதான். அடுத்த வாரம் உங்களோடு நானும் வருகிறேன். எப்படி நீந்துகிறீர்கள் என்று பார்க்கிறேன்.” என்றார்.
அதே போல அடுத்த ஞாயிற்றுக் கிழமை மெரினா ஸ்விம்மிங் குளத்தில் தந்தையார் முன் நீந்திக் காட்டினோம். கணேஷ் டைவ் செய்து காட்டினான், அப்புறம்தான் தெரிய வந்தது, எங்கள் தந்தையார் சிறு வயதில் கிராமத்துக் குளத்தில் வீர சாகஸம் செய்த நீச்சல்காரர் என்பது. குளத்தருக்கே உள்ள பிள்ளையார் கோவில் மேலிருந்து குளத்தில் குதித்து விளையாடுவார்களாம்.
“ ஏம்மா இதெல்லாம் முன்னாடியே நீ எங்ககிட்ட சொல்லல” என்றோம்.
“ ஆமாம்.. ஏற்கனவே நீச்சல் நீச்சல் என்று குதித்துண்டு இருந்தீங்க .. இதையும் சொல்லியிருந்தா குரங்குக்கு தேள் கொட்டினா மாதிரி ஆயிருக்கும்” என்றாள்.
அப்புறம் என்ன ?
“ அம்மா! ஸ்விம்மிங் போய்ட்டு வரோம் “ என்று உரத்துக் கூவி விட்டு , தமக்கைக்கு ஒரு பழிப்புக் காட்டிவிட்டு ஞாயிற்றுக் கிழமை காலைகளில் அஃபீஶியல் ஆக நீச்சல் குளத்துக்குப் போகத் தொடங்கினோம்.
நான் எம் எஸ்சி சேர்ந்தேன்; என் சகோதரன் சட்டக் கல்லூரி சேர்ந்துவிட்டான். எங்கள் ஆர்வம் திசை மாறிவிட்டது.
நான் இப்போது நீச்சல் போவது கிடையாது எனினும், டிவி யில் ஆண்கள் பெண்கள் கலந்து கொள்ளும் ஒலிம்பிக்ஸ் போன்ற சர்வதேச நீச்சல் போட்டிகளைக் கண்டு என் நீச்சல் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்கிறேன். குறிப்பாகப் பெண்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என நீங்கள் கமெண்டுவது கேட்டாலும் , அதில் கொஞ்சம் உண்மை இருப்பதால் உங்களிடம் நான் கோபிக்கப் போவதில்லை.
