குவிகம் குறும் புதினப் போட்டிக்கு ஒருபாதி கதை அனுப்பி அதனைப் பின்னர் ஒருமுழு  நாவலாக  மாற்றி வெளியிட்ட ஆசிரியர் ஜெயகண்ணனுக்குப் பாராட்டுதல்கள்!!

அவர் எப்படி எழுத்துத் துறைக்கு வந்தார் என்பதை அவரே விவரிக்கும் கட்டுரை ! 

எழுத்தாளர் எனும் என் அடையாளம், என் வாழ்வின் ஒரு முக்கியமான பக்கம். நான் ஜெயகண்ணன் – எனது இயற்பெயர் சுரேஷ் கண்ணன். 1993ஆம் ஆண்டு மும்பை தாராவியில் பிறந்து, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ஆழமான புலமை பெற்றேன்.

2012ல் நாட்குறிப்பு எழுதுவதிலிருந்து என் எழுத்துப் பயணம் தொடங்கியது. 2014 வரை தொடர்ந்த இப்பயணம்… ஒரு சில தனிப்பட்ட பிரச்சனைகளால் நின்றுப் போனது. அதற்கு பின் ஒரு சில ஆண்டுகள் எழுத்து பயணத்தில், அதாவது தமிழ் எழுதுவதில், எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாகவே எனது தாய்மொழி தமிழ் மொழியை மறந்தது போல் உணர்ந்தேன்… “எந்த மொழியை மறந்தாலும் நம் தமிழ் மொழியை மறக்கவே கூடாது” என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

அதன்பிறகு, மீண்டும் எழுத தொடங்கி, கவிதைகள், கட்டுரைகள், சிந்தனைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்களில் என் கலை விரிந்தது. அன்பு, வாழ்க்கை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வ நம்பிக்கை மற்றும் தத்துவம் போன்ற கருப்பொருள்களை வாசகர்களின் உள்ளத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் நான் எழுதி வருகிறேன்.

எழுத்துப் பயணத்தில் நான் பெற்ற “சிகரம் விருதுகள்: LAKSHMI_LIFE_LINES – Emerging Writer (2024)” என்னும் விருதும், சமூக ஊடகங்களில் எனது தனித்துவத்தையும் திறமையையும் உறுதிப்படுத்தியது. தொழில்முறை வாழ்க்கையில், M.Sc. புள்ளிவிவரத்தில் பட்டதாரி எனும் வகையில், ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் புள்ளிவிவர நிபுணராக 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த அனுபவம் எனது எழுத்துகளுக்கு வாழ்க்கையின் உண்மையான அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் சேர்க்க உதவுகிறது.

2024–25 ஆம் ஆண்டில் குவிகம் குறும் புதினம் போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் நான் என் கதையின் முதல் பாதியை எழுதி அனுப்பினேன். என் கதையை மூன்று சிறந்த கதைகளில் தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால் அதுவே எனக்கு முன்னேற தூண்டுகோல் ஆனது. அதன்பிறகு, கதையின் இரண்டாம் பாதியை எழுதி, அதை ஒரு முழுமையான நாவலாக உருவாக்கினேன்.

அந்த நாவல் இன்று என் முதல் நாவல், “காஞ்சனாவின் நிழல்: ஆன்மா முன்னே! ஆண்டவன் பின்னே!” ஆக வெளிவந்துள்ளது. இது ஒரு இயற்கை மீறிய பழிவாங்கல் திரில்லர், உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

இந்த நாவல் Amazon-இல் Horror மற்றும் Religious & Inspirational Fiction eBook வகைகளில் Top 100 இடத்தில் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது.

இவ்வாறு என் எழுத்துப் பயணத்திற்கு தூண்டுகோலாக இருந்த குவிகம் மின்னிதழுக்கும், நாவலை தெளிவாக பதிப்பிக்க உதவிய நல்லறம் பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் எழுத்துப் பயணம் தொடர்ந்து செல்வதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த அனுபவம் மற்ற ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு தூண்டுதலாகவும், ஊக்கமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.