ராதாரவி ‘அந்த’ வார்த்தையைச் சொன்னாரா?

Radha Ravi About Shocking Truth: சொந்த தங்கைக்கே காதலனாக நடித்த பிரபல நடிகர்? யார்.. எந்த படத்தில் தெரியுமா? | Actor Radha Ravi Who Played His Lover Role With Own Sister Mma | Asianet News Tamil

நடிகர் ராதாரவி ஒரு குமுதம் இதழ் தயாரித்தார். அதற்கும் கோ ஆர்டினேட்டர் என் கணவர்தான். இது போல் இதழ் தயாரிப்பின்போது சம்பந்தப்பட்ட பிரபலத்துடன் நிறைய நேரம் செலவழித்தால்தான் சுவாரஸ்யமான விவரங்களும் பேட்டிகளும் கிடைக்கும்.

ராதாரவி அப்போது மிக பிஸியான நடிகர். இருந்தாலும் அருமையான ஒத்துழைப்புக் கொடுத்தார். அது பாமாகோபாலனுக்குக் கொடுத்த கோ-ஆபரேஷன் அல்ல. குமுதம் என்ற நான்கெழுத்து மந்திரச் சொல் அப்படிச் செய்ய வைத்தது என்பதால் இதில் பெருமிதப்பட எதுவும் இல்லை என்பார் என் கணவர்.

சில சமயம் ஷூட்டிங் நடக்குமிடத்தில் இடையிடையே  பேட்டி கொடுத்துவிடுவார்.

அப்படியும் ஒருநாள் அவகாசம் இன்மையால் “சார்.. நான் இன்னிக்கு ஈவினிங் ‘பார்’ உள்ள ஹோட்டலுக்குச் சாப்பிடப் போவேன். அங்கே வர்றீங்களா? பேட்டியை வெச்சுக்கலாம்” என்றார் ராதாரவி.

“நீங்க ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்களா?” என்று என் கணவரிடம் கேட்டிருக்கிறார். இவர் பதற்றத்துடன் மறுத்திருக்கறார். நெற்றியில் தினமும் ஸ்ரீசூர்ணம் + விபூதி இட்டு, சஹஸ்ரநாமம் சொல்லி, சந்தியாவந்தனம் செய்பவர் கோபாலன். இது போன்ற பழக்கம் உள்ளவர்களிடமிருந்து நூறு காதம் ஒதுங்கிவிடுவார்.

எனினும் ராதாரவி அடிப்படையில் மிக நல்ல மனிதர். தவிரவும் குடிப்பீர்களா என்றுதான் கேட்டாரே தவிர மறுத்தவுடன் “சாரி சார். நான் கம்பல்  செய்ய மாட்டேன்.  ஆனா, நான் தண்ணியடிச்சா உங்களுக்குச் சங்கடமா இருக்காதா?” என்று கேட்டிருக்கிறார்.

இருக்கும்தான். ஆனால் அதைவிடவும் பேட்டி அவசியமாயிற்றே. டெட்லைன் பயமுறுத்தியது. ஆகவே “இருக்காது” என்று சொல்லிவிட்டார்.

அன்று மாலை அவர் குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு வேறு வழியின்றிப் போய், அவர் எதிரில் அமர்ந்து பேட்டியை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தார்.

முதலிலேயே ட்ரிங்க் செய்வது பற்றியும் அவரை இந்த இடத்துக்கு வரச் சொன்னது பற்றியும் கண்ணியமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுதான் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.

கேள்விகளுக்கு எந்த விதமான தடுமாற்றமும் இல்லாமல் பதில் சொல்லியதால், பேட்டி நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தது. லிமிட்டாய் சாப்பிட்டாராம்.

இதனால் ஒரு நன்மையும் ஒரு சங்கடமும் ஏற்பட்டன. நன்மை.. பதில்கள் தயக்கமின்றியும் .. சற்று வெளிப்படையாகவுமே வந்தன. சிரமம் என்னவென்றால்…. பேட்டியினூடே இரண்டு மூன்று கெட்டவார்த்தைகள் வந்து விழுந்துவிட்டன.

சங்கடத்தை விழுங்கிக் கொண்டு ரெக்கார்ட் செய்தார் பாமாஜி. பிரமாதமான பேட்டி. அடுத்தடுத்து ஏராள விவரங்கள். நாங்கள் நினைத்ததற்கும் அதிகமாகவே விஷயங்கள் கொடுத்தார்.

கடைசியில் மனப்பூர்வமாக நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பும் நேரத்தில் ராதாரவி அந்தக கேள்வியைக் கேட்டார்.

“காஸட்டை நீங்க மட்டும்தானே ‘பிளே’ செய்து கேட்பீங்க?”

“இல்லை.. என் ஒய்ஃப்தான் டைப் செய்வாங்க” என்று இவர் சொல்லியிருக்கிறார்.

அவர் பதறிப்போய்விட்டார்.

“அவங்க பேர் என்ன?” என்று கேட்டிருக்கிறார். இவர் சொன்னார்.

“ரெக்கார்ட் பட்டனை அழுத்துங்க சார்.” என்று சொல்லியிருக்கிறார்.

ரெக்கார்ட்டிங் ஆரம்பித்ததும்“அம்மா. வேதாம்மா.. அயம் வெரி சாரி. பேட்டியில் ரெண்டு மூணு கெட்ட வார்த்தை வந்துடுச்சு.. என்னை ரொம்பவும் மன்னிச்சுடுங்க.. பொருட்படுத்தாதீங்க” என்று ஒரு லெக்சரே கொடுத்துவிட்டார்.

சினிமாக்காரர்கள் பற்றி.. குறிப்பாக வில்லன் நடிகர்கள் பற்றிப் பொதுவாகவே யாருக்கும் சரியான புரிதல் இல்லை. அவர்களிக் கண்ணியம் வியக்க வைக்கிறது.

வீட்டுக்கு வந்தவுடனேயே இந்த நிகழ்வை சுவாரஸ்யமானச் சொன்னபடி இரவு உணவு சாப்பிட்டுவிட்டு இவர் தூங்கப் போனார். நான் டைப் செய்ய ஆரம்பித்தேன்.

உண்மையில் அவர் அப்படியெல்லாம் மன்னிப்பே கேட்க வேண்டாம். ‘உனக்குப் பேட்டி வேணும்னுதானே வந்தாய். சகித்துக் கொள்’, என்று நினைத்திருக்கலாம். ஆனால் ராதாரவி அப்படிச் செய்யாதது கிரேட்.

அடுத்த நாள், நான் டைப் செய்து கொடுத்த கற்றைத் தாள்களுடன் இவர் ஆபீசுக்குப் போனார். மூன்று பெரிய அருமையான பேட்டிகள் சுவாரஸ்யமாக வந்திருந்தன.

பதினோறு மணிக்கு என் கணவரிடமிருந்து போன். என்னிடம் பேட்டியின் கார்பன் காப்பி எப்போதும் இருக்கும். ஒரு பேட்டியின் தலைப்பைச் சொல்லி அதன் குறிப்பிட்ட பகுதியை எடுக்கச் சொன்னார். எடுத்தேன். “அதுல ராதாரவி ஒரு வார்த்தை பயன்படுத்தியிருக்கார். “அவர் அப்படிச் சொல்லும் பட்சத்தில்” என்று வருகிறது. நீ டைப் செய்திருக்க.  ‘பட்சத்தில் என்ற வார்த்தையை ராதாரவி பயன்படுத்தினாரா?’ என்று எடிட்டர் (எஸ் ஏ பி சார்தான்) கேட்டார். எனக்கும் நினைவில்லை. காஸட்டை ஓடவிட்டுப் பார்க்கறேன்னேன். எடிட்டரே போட்டுப் பார்த்துட்டு அவர் அந்த இடத்தில் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தலை என்றார். மாற்றச் சொன்னார். மாற்றிவிட்டேன்” என்று சொன்னார்.

ய..ம்..மா..டீ அயர்ந்து போய் உட்கார்ந்துவிட்டேன். காதில் வாங்கியதை அப்படியே வார்த்தை மாறாமல் டைப் செய்பவள் என்று என்னைப் பற்றி நானே தேவையற்ற கர்வம் கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று உணர்ந்தேன். அதன் பிறகு இரட்டிப்பு ஜாக்கிரதைதான்.

அதைவிடவும், எடிட்டர் என்பவர் எந்த அளவு நுணுக்கமாகவும், கூர்ந்தும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும்கூடப் பார்க்க வேண்டும் என்பதற்குக் குமுதம் எடிட்டர் திரு எஸ் ஏ பி உதாரணமாக இருந்தார் என்பதற்கு இது ஒரு சோறு பதம்தான். இன்னும் நிறைய உள்ளன.

டிகர் விவேக் மெல்ல மெல்லப் புகழ் பெற்று வளர்ந்துகொண்டிருந்த சமயம் அது. நகைச்சுவை சங்கங்களில் வந்து ஜோக் சொல்லிவிட்டுப் போவார். திரைத்துறையில் அவரின் ஆரம்ப காலம் அது. பாலசந்தரின் பாசறையில் ஜமாய்த்துக் கொண்டிருந்ததால், பல முறை பேட்டி காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.

எந்த அளவு எளிமையான மனிதர் என்றால், “பேட்டிக்காக இவ்ளோ தூரம் பஸ்ஸிலும் ரயிலிலும் அலையாதீங்க கோபாலன் சார். போன் செய்ங்க. கேள்விகளை ஷூட் செய்ங்க. பதில்  சொல்றேன்” என்பார். பல முறை நான் போன் செய்து போனிலேயே பேட்டி வாங்கிய அனுபவம் எனக்கே நேரடியாக உண்டு.

அப்போது 1993 ல் குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் பல நாட்களுக்கு நடந்தன. முன்னாள் மாணவி என்ற முறையில் என்னை ஆலோசனைக்கு அழைத்திருந்தார்கள். மாணவிகளுக்கு நிறையப் போட்டிகள் வைத்திருந்தார்கள். அவற்றிற்குப் பிரபலமானவர்கள் நடுவர்களாக வந்து போட்டிகளை நடத்திக்கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

“நீதான் குமுதம் கான்டாக்ட் மூலம் நிறையப் பிரபலங்களைத் தெரிந்து வைத்திருக்கியே… அவர்களை ஜட்ஜா ஃபிக்ஸ் செய்து கொடு” என்றார் எங்கள் ஆங்கிலப் பேராசிரியை திருமதி லலிதா. 

பரத நாட்டியப்போட்டிக்கு சித்ரா விஸ்வேஸ்வரன், கர்நாடக சங்கீதத்துக்கு அவரின் கணவர் திரு விஸ்வேஸ்வரன், வீணைக்கு லீலா பார்த்தசாரதி (இவர் கணவர் பார்த்தசாரதி யாரெனில், இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானின் ஆஸ்தான வீணை வித்வான். மகன் ஸ்ரீராம் பார்த்தசாரதி பிரபல திரைப்பாடகர். இந்த லீலாவதி என் கணவருக்குத் தங்கைமுறை), லைட் மியூசிக்கிற்கு அபஸ்வரம் ராம்ஜி, சினிமா க்விஸ்ஸுக்கு விவேக் என் ஆரம்பித்து மேலும் பல்வேறு துறைப் பிரபலங்களை அணுகிக் கேட்க.. அனைவருமே சம்மதித்தார்கள். வந்தார்கள். (சிறு கதைப் போட்டிக்கு.. நானும் என் கணவரும் நடுவர்கள் என்பது கொசுறுத் தகவல்)

ஒரு வாரத்துக்கு என் பழைய கல்லூரியில் நடந்த போட்டிகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தது மறக்க முடியாத சந்தோஷம். அந்தக் கல்லூரியின் மாணவிகளின் பிரசிடென்ட், அருள்செல்வி. விவேக்கும் அருள் செல்வியும் முதல் முதலாய்ச் சந்தித்தது அந்தப் போட்டியின்போதுதான். (சினிமாவில் வருவது போல).

இருவருமே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்த்துறைப் பேராசிரியை ஒருவரும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாயிருக்குமே என்று எண்ணிய அவர் இரு பெற்றோரிடமும் பேசித் திருமணத்தை நடத்தி வைத்தார்.

அன்றைய பேட்டிகளில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் விவேக்.. எல்லோருக்கும் ஒரே சமயத்தில், ஒரே மாதிரிதான் பேட்டி கொடுத்தார். சில தினசரிகள் எங்கள் இருவரின் பெயரையும் குறிப்பிட்டன. சில தினசரிகள் அது பேட்டிக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம் என்பதால் “வைஷ்ணவா கல்லூரிக்கு சினிமா விநாடி வினா நிகழ்ச்சிக்குப் போனபோது சந்தித்தேன்” என்று எழுதினார்கள். பத்திரிகையாளர்கள் என்ற முறையில் இது நியாயம் என்றே நாங்கள் இருவரும் நினைத்தோம்.

விவேக்கின் திருமணம் கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் நடந்தது.

சீர்திருத்தக் கல்யாணத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தார் விவேக். எனவே கே.பாலசந்தர் தாலி எடுத்துக் கொடுக்க, அதைத் தான் கட்டுவது மட்டுமே திருமண நிகழ்ச்சி என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

இருவீட்டாரும், உறவினர்களும் ஒப்புக் கொண்டனர்.

பூத்தோரணங்களுடன் காகித மாலைத் தோரணங்கள் அலங்கரிக்க.. போட்டோக்களும் வீடியோக்களும் அமர்க்களமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். (அப்போது இருந்த  ஓரிரு சானல்களின் செய்திக்காகவும்) வீடியோ எடுத்தனர்.

கே பி சார் வந்துவிட்டார்.

அதிக வாட்ஸுடன் பிரகாசமாக வீடியோ லைட்கள் ஒளிர்ந்தன. காகிதத் தோரணத்தில் ஒரு லைட் நிறைய நேரம் ஒட்டி உரசியதால் சட்டென்று தீப்பிடித்து.. சூழ்நிலை திமிலோகப்பட்டது. நல்லவேளையாய் அதிகம் பரவுவதற்கு முன்பாக அணைத்துவிட்டார்கள்.

பிறகு தாலி எடுத்துக் கொடுக்கும்போது கே பாலசந்தர் சொன்னார். “அக்கினி சாட்சியாத் தாலி கட்ட மாட்டேன்னு நீ சொன்னாலும்.. அது தானே சாட்சிக்கு வந்துடுத்து பாரு. இதுதான் தெய்வச் செயல்” என்றார். அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அன்றைக்கு மாலை பாம்குரோவ் ஹோட்டலில் ரிஸப்ஷன் நடைபெற்றது. அதற்குத் திரையுலக மற்றும் பத்திரிகைப் பிரபலங்கள் குவிந்திருந்தனர்.

“வேதா மேடம். பத்திரிகையாளர்களை உங்களுக்குத்தான் தெரியும். நீங்க வரவேற்புப் பகுதில நிக்கறீங்களா? சாப்பிட்டுப் போனாங்களான்னு கன்ஃபர்ம் செய்து அனுப்பணும்” என்றார் விவேக்.

அந்த நிகழ்விற்கு ராதாரவி, நடிகை ஸ்ரீவித்யா, ராம்கி பிரபு  உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள்.

அப்போது ராதாரவியிடம் என்னை அறிமுகம் செய்தார் பாமாஜி.

பக்கத்தில் நின்றிருந்த ஸ்ரீவித்யாவிடம் “நான் குமுதம் தயாரிச்ச போது என்னாச்சு தெரியுமா?” என்று ஆரம்பித்து வெள்ளை உள்ளத்துடன் வெளிப்படையாக தான் டேப்ரெக்கார்டரில் மன்னிப்புக் கேட்ட விவரத்தை வார்த்தை மாறாமல் சொன்னார் ராதாரவி. சுற்றி உள்ளவர்கள் கேட்டு வியந்து பாராட்டினார்கள்.

எங்கள் குமுத அனுபவத்தில் இப்படியெல்லாம் முந்திரிகளும் திராட்சைகளும் மிதப்பதுண்டு.

(பாயாசம் தொடரும்)