“மாலதி, நான் சொல்றத கொஞ்சம் கேளுமா. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.” மாலதியின் தாய், அவளை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.
“வேண்டாம் மா. விட்டுடுங்க. எனக்குக் கல்யாணமே வேண்டாம். என் நிறத்தைப் பார்த்துட்டு என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போறது எனக்கு அவமானமா இருக்கு.இதுல வரதட்சணை வேற அதிகமா வேணுமாம். காசு அதிகம் குடுத்தா, நிறம் கூடிடும் போல இருக்கு. ”
தன்னை அழகில்லை என்று கூறியதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் அதற்காகக் கூடுதல் வரதட்சணைக் கேட்டதைத் தான் மாலதியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
“இதோ பாரு மாலதி, புத்தி இல்லாதவங்க தான் அழகைப் பாத்துட்டு இருப்பாங்க. அழகு இன்னிக்கு இருக்கும் நாளைக்கு போயிடும்னு புரிஞ்சவங்க அதுக்கு மதிப்பு கொடுக்க மாட்டாங்க. புத்திசாலித்தனத்திற்கும் உன்னோட நல்ல மனசுக்கும் மாப்பிள்ளை கிடைக்காமலா போயிடுவான்?”
“அதுக்காக, ஒவ்வொருத்தனையா பார்த்துட்டு இருக்க முடியாதும்மா”
“இந்த ஒரு வாட்டிஒத்துக்கோ மாலதி. இது ஒத்து வரலைன்னா உன்னோட இஷ்டப்படியே விட்டுடறேன். சரியா?”
மாலதி பிடிவாதமாக மறுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டாள். அதற்கு மேல் பேசி மகளின் மனதை புண்படுத்த விரும்பாத தாயார் பெருமூச்சு விட்டார். “பாவம், அவளும் மனசு நொந்து இருக்கா. சரி, கொஞ்ச நாள் விட்டு தான் புடிச்சுப் பாப்போம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
தெரிந்த நண்பர் மூலம் வந்த சம்மந்தம் தான் இது. பெண்ணின் நிறம் மட்டு என்பதால் மாப்பிள்ளை வீட்டார் தயங்குவதாக நண்பர் சொன்னார். அதில் வந்த வாக்குவாதம் தான் இது.
மாலதி வீட்டின் மூத்த பெண். தந்தை இறந்து விட்டதால், கிடைத்த வேலையில் சேர்ந்து, வேலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறாள். தம்பி கல்லூரியில் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டு இருக்கிறான்.
அவன் வேலைக்குப் போகும் வரை, திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மாலதி பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அவள் அம்மாவோ அப்பாவின் ஓய்வூதியம் வருகிறது. வீடு சொந்த வீடு. அப்பா இருக்கும் போதே திருமணத்திற்குத் தேவையானவைகளைச் சேர்த்து விட்டேன். ஆகையால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டு, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால் சொல்லிவைத்த மாதிரி, வந்தவர்களெல்லாம் அவள் நிறத்தையே பார்ப்பவர்களாக வந்ததுடன், அதற்காகக் கூடுதல் வரதட்சணையும் கேட்க கொதித்துப் போனாள் மாலதி.
அதனால் ஏற்பட்ட எரிச்சலில்தான் தாயிடம் கோபித்துக் கொண்டாள்.
ஒரு ஜவுளி கடையில் வேலையாக இருக்கிறாள் மாலதி. தீபாவளி நெருங்குவதால் எக்கச்சக்க கூட்டம். அதனால் என்றையும் விட சீக்கிரமாகவே கிளம்பி விட்டாள். காலையிலிருந்து மதியம் வரை எடுத்துப் போட்டு, எடுத்துப் போட்டு சோர்வாக இருந்தது. அப்போது ஒரு கணவன் மனைவி இருவரும் வந்தனர்.
அலமாரியில் இருந்து பாதி புடவைகள் டேபிளின் மேல் இருக்க, அதையெல்லாம் ஒதுக்கி விட்டு உச்சாணிக் கொம்பில் இருந்து ஒரு புடவையைக் காட்டி, “அதை எடுங்க பாக்கலாம்” என்றாள் மனைவி. இருவருமாக மாறி, மாறிப் புடவைகளைப் புரட்டினர். ஒருவருக்குப் பிடித்தால் மற்றவருக்குப் பிடிக்கவில்லை.
கணவன் ஒரு புடவையை எடுத்து மனைவியிடம் காட்டி, “இது ரொம்ப நல்லா இருக்கு. நீ கட்டிட்டா, உனக்கு அழகா இருக்கும்” என்றான்.
“ஐயே! உங்க ரசனையே கேவலமா இருக்கு. இது எனக்குப் பிடிக்கவே இல்லை.” என்று அதை இடது கையால் ஒதுக்கி வைத்து விட்டாள் மனைவி.
பாதி கடையை அலசி, கடைசியாக ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு போனார்கள். மாலதி சோர்வுடன் ஒவ்வொன்றாக மடித்து வைக்க ஆரம்பித்தாள்.
மற்றொரு கணவன் மனைவி இருவரும் வந்தனர். புடவையை அலச ஆரம்பித்தார்கள். ஏற்கனவே குவிந்திருந்த குவியலில் இருந்து ஒவ்வொன்றாகக் கலைத்துப் போட்டுக் கொண்டு வந்தாள் மனைவி.
குவியலின் அடியில் இருந்த அந்தப் புடவையை இழுத்து எடுத்தாள். முன்னர் வந்த தம்பதியர் வேண்டாம் என்று ஒதுக்கிய அதே புடவை. “இங்க பாருங்களேன், இந்தப் புடவை எவ்வளவு அழகா இருக்குன்னு! என்கிட்ட இந்த கலர்ல இல்லவே இல்லை. எல்லா நீலமும் இதுல சேர்ந்த மாதிரி இருக்கிறது, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அந்தப் புடவையைக் கையில் எடுத்துக் கொண்டாள். “இது விலை கம்மியா இருக்கு. வேற எடுத்துக்கோ சுஜி.” என்றான் கணவன். ஆனால் அவள் கேட்கவில்லை.
“விலை கம்மியா இருந்தாலும் புடவை எனக்கு பிடிச்சிருக்குங்க. இந்த நிறம் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தது. நீல நிறமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.இதுல அத்தனை நீலமும் இருக்கு, பாருங்க. நான் இதையே எடுத்துக்கறேன். அப்புறம் தேடினாலும் கிடைக்காது ” என்று அதையே கையில் எடுத்துக் கொண்டாள்.
“சரி, உன்னிஷ்டம்”என்ற கணவன், மனைவிக்குப் பிடித்த நீல நிறத்திலேயே அவனும் சட்டை எடுத்துக் கொண்டு, நீல நிற ஜீன்ஸும் வாங்கிக் கொண்டான்.
ஏதோ புரிந்தது போல் இருந்தது, மாலதிக்கு. அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. “ஒருத்தருக்குப் பிடிக்காதது, ஒருத்தருக்குமே பிடிக்காதுன்னு கிடையாது மாலா” பொன்மொழியாய் அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தது. சோர்வெல்லம் பறந்தது போல உணர்ந்தாள். இதழ்களில் புன்முறுவலுடனும், மனதில் புது மகிழ்ச்சியுடனும் புடவைகளை மடிக்க ஆரம்பித்தாள்.
புடவைகளை மடித்து முடித்த போது அம்மாவிடமிருந்து போன். இந்த நேரத்திற்கு அம்மா போன் செய்ய மாட்டாளே என்று நினைத்தவள் அவசரமாய் போனை எடுத்தாள்.
“மாலதி, கொஞ்சம் சீக்கிரமா வர முடியுமா?” அம்மாவின் குரலில் ஏதோ மகிழ்ச்சி தெரிந்தது.
“என்னம்மா விஷயம்?” என்றாள் மாலதி. ‘தம்பிக்கு வேலை கிடைச்சிருக்குமோ’ என்று தோன்றியது. “நீ சொல்லிட்டு வாயேன். வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்” என்றாள் அம்மா.
இந்த மாதிரி எல்லாம் அம்மா கூப்பிடுபவள் அல்ல. அதனால் முதலாளியிடம் சொல்லிவிட்டு, ஸ்கூட்டியில் விரைந்தாள் மாலா.
வீட்டுக்குள் நுழைந்து போது யாரோ கூடத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு வாலிபனும், அவனுடைய தாயாரும் போல இருந்தது. யோசனையுடன் உள்ளே நுழைந்தாள்.
அம்மா காப்பி தட்டை ஏந்திக்கொண்டு சமையல் அறையில் இருந்து வந்தவள், கூடத்தில் இருந்தவர்களிடம் கொடுத்தாள்.
“இதோ, இது தான் என் மக மாலதி. இப்பதான் வந்திருக்கா. மூஞ்சிய கழுவிட்டு, கொஞ்சம் மேக்கப் பண்ணிட்டு வரட்டுமே” என்று மாலதியின் தாயார் வந்தவர்களிடம் சொல்ல, அந்த அம்மாள் புன்னகையுடன், “அவளுக்கு வேணும்னா செஞ்சிகட்டும். எங்களுக்காக அலங்காரம் எல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம். நாங்க தான் அவளை பாத்துட்டோமே. என் மகனுக்கும் வெளி அலங்காரத்தில் உடன்பாடு இல்லை. என்ன குமார்? ” என்றார் மகனைப் பார்த்து.
புன்னகையுடன் தாய் சொன்னதை ஏற்றுக் கொண்டான் குமார்.
ஒன்றும் புரியாமல் முழித்த மாலதியை அறைக்குள் கூட்டிச் சென்ற அம்மா, “நீ வேலை செய்ற கடைக்கு அவங்க ரெண்டு பேரும் தீபாவளிக்குத் துணிமணி எடுக்க வந்திருந்தாங்களாம். அங்க நீ பொறுமையாயும், புன்னகை மாறாமலும் வந்தவங்களைக் கவனிச்சிட்டு இருந்ததை பார்த்த உடனே உன்னை அவங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சாம். இவங்க தான் உன்னை ஏற்கனவே பொண்ணு பார்க்க வர்றதா இருந்தாங்க. அதனால உன்னை பார்த்த உடனேயே ஃபோட்டோவுல பார்த்ததை வெச்சு அடையாளம் கண்டுபிடிச்சு, வீட்டுக்கு வந்துட்டாங்க. சம்மதம் சொல்லிட்டு போலாம்னு வந்திருக்காங்க” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.
மகிழ்ச்சியுடன் பின்னாலயே வந்த பையனின் தாயார், “நான் வரலாமா?” என்று கேட்டுக் கொண்டே அறைவாசலில் நின்றாள்.
“கூடயே வந்துட்டேன்னு தப்பா நினைச்சுக்காத. உனக்கு பையனைப் புடிச்சிருக்கா, இல்லையான்னு உன்கிட்ட தனியா கேட்கணும்னு தான் வந்தேன். நீ அவன்கிட்டப் பேசிப் பாரு. உனக்குப் பிடிச்சா உடனே திருமணம்தான். குமார் உன்னைப் பிடிச்சிருக்குன்னு தன் சம்மதத்தைச் சொல்லிட்டான்” என்றாள் பையனின் அம்மா புன்னகையுடன் .
நால்வரும் அமர்ந்து முதலில் சாதாரணமாகப் பேசிக்கொண்டார்கள். பின்னர் குமாரையும் மாலதியும் தனியாகப் பேச விட்டு விட்டு, வீட்டைச் சுற்றி காட்டுவது போல் குமாரின் அம்மாவை மாலதியின் அம்மா கூட்டிப் போனாள்.
‘என்னைப் புடிச்சிருக்குன்னு எதைப் பார்த்துச் சொல்றாங்க’ மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை குமாரை பார்த்து மாலதியே முதலில் கேட்டாள்.
“உண்மையைச் சொல்லட்டுமா?” என்று புன் சிரிப்புடன் கேட்டான் குமார்.
“ ம், சொல்லுங்க” என்றாள் மாலதி.
இன்னிக்கு நானும் அம்மாவும் ஜவுளி கடைக்கு எதேச்சையாய்த்தான் வந்தோம். உண்மையா அங்க தான் வேலை செய்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு அம்மா, “குமார், அங்க பாரேன் அந்தப் பொண்ண”ன்னு உங்களக் காட்டினாங்க.
அந்த மாதிரி எல்லாம் அம்மா யாரையும் காட்ட மாட்டாங்க. நானும் யாருன்னு தெரியாம தான் திரும்பி பார்த்தேன்.பாத்த நொடியில எனக்கு ஏன்னு தெரியாம பிடிச்சது. வட்டமான முகம். சுருளான தலைமுடி. அழகான கண்கள். சிரிச்சு பேசிட்டு இருக்கும்போது கன்னத்தில் விழுந்த குழி. காதில் தொங்கிட்டு இருந்த ஜிமிக்கி. ரசனையான கலவையா இருந்தது. எல்லாமே எனக்குப் பிடிச்சி இருந்தது.
அப்பதான் நீங்க ஒரு நீல நிறப் புடவையை உங்க மேல போட்டுட்டு, எதிரில் இருந்த லேடிக்கு காட்டிட்டு இருந்தீங்க. உங்க சிரிச்ச முகம் மட்டும் நீலப்புடவைக்குள் தெரிஞ்சது. சட்டுன்னு எனக்கு பாரதிதாசன் பாட்டு ஒண்ணு ஞாபகம் வந்தது
“நீலவான ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை
கோலம் முழுதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?” வாய் தானா முணுமுணுத்தது.
நாங்க உங்க கிட்ட வராம தூரத்தில் இருந்து கொஞ்ச நேரம் நீங்க கஸ்டமர் கிட்ட பேசறதைக் கவனிச்சோம். சிரிச்சு முகத்தோட அவங்க கிட்ட நீங்க பேசின விதம் எங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. நான் அம்மா கிட்ட அங்கேயே என் சம்மதத்தைச் சொல்லிட்டேன். அம்மா உங்க அம்மா கிட்ட பேசணும்னு இங்கே கூட்டிட்டு வந்தாங்க.”
குமார் சொல்லி முடித்ததும், ‘குப்பென்று’ வியர்த்தது மாலதிக்கு. “இன்னொரு விஷயம். நான் உங்களைப் பிடிக்குதுன்னு சொன்னதுனால, என்னை உங்களுக்குப் பிடிக்கணும்னு அவசியமில்லை. அதனால உங்க விருப்பத்தை நீங்க சொல்லலாம்” என்ற குமாரை ஏறிட்டு நோக்கினாள் மாலதி. எந்த இடத்திலும் அவள் நிறத்தை பற்றிப் பேசாமல் கண்ணியமாகப் பேசியதும், பெண்மையை மதித்து உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள் என்றவன் கூறியதும், அவன் மேல் மரியாதையைக் கூட்டியது. கம்பீரமான அவன் தோற்றம் அவன் மீதான மதிப்பைக் கூட்டியது. இவனுடன் வாழ்ந்தால் என்றும் மதிப்பு குறையாமலும், கண்ணியமாகவும் நடத்தப் படுவோம் என்ற பாதுகாப்பு உணர்வு ஏனோ எழுந்தது. அகத்தின் மகிழ்ச்சியில், முகத்தில் சிரிப்பு வந்தது. அவளின் கன்னத்துக் குழி அழகை அவன் ரசிக்க, நாணித் தலை குனிந்தாள் மாலதி.

கதையை ரசிக்க முடிந்தது. இந்தக் காலத்தில் ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அந்த அளவு பெண் கிடைக்காமல் திண்டாட்டம்!
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike
கதை மிகவும் அருமை புற அழகை வைத்து எடை போடும் ஆட்களுக்கு இக்கதை ஒரு நல்ல படிப்பினை ..
நிறத்தைப் பார்த்து தேர்ந்தெடுப்பதை விட குணத்தைப் பார்த்து தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை நலமாக இருக்கும் என்பதை எடுத்துப் காட்டும் கதை
தி.வள்ளி
LikeLike
மிக்க நன்றி வள்ளி மா
LikeLike
மிக்க நன்றி வள்ளி மா
LikeLike
நல்ல கதை. நல்ல கருத்து
LikeLike
மிக்க நன்றி வசந்தாம்மா
LikeLike
கலருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதை இப்போது பலர் ஓரளவுக்கு புரிந்து கொள்கிறார்கள்.Fair & Lovely க்ரீம் பெயரைக்கூட மாற்றிவிட்டார்கள். இருந்தாலும் இன்னமும் சிலர் திருந்தவில்லை. இந்த மாதிரி கதைகள் அவர்களை மாற்றட்டும்.
சிறப்பான கதை! வாழ்த்துக்கள் மேடம் !
LikeLike