பிருந்தாவன துளசி – Dr.J. பாஸ்கரன்

புஸ்தகா பப்ளிகேஷன்ஸ்

 

சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம்  டாக்டர்.பாஸ்கரன் அவர்கள் எழுதிய ‘பிருந்தாவன துளசி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு. கலைமகள், அமுதசுரபி,லேடீஸ் ஸ்பெஷல் போன்ற பத்திரிகைகளிலும், முகநூலிலும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இன்நூல்.

சுவாரஸ்யமான, ஆழமான,நுட்பமான கட்டுரைகள்.  பிரபலமான மனிதர்களை அவர் சந்தித்தது, அவரது எண்ணங்கள், அனுபவங்கள் இப்படி பலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் அவரது கவனிப்பு, தீவிரம் போன்றவற்றை நாம் உணர முடிகிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியைைப் பற்றிய முதல் கட்டுரையே பின்வரும் கட்டுரைகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதற்கு கட்டியம் கூறுவது போல அமைந்து விட்டது.  காஞ்சி மஹா பெரியவர் எம்.எஸ்சை பிருந்தாவன துளஸி என்பாராம்.வீணை தனம்மாள் மூலம் அறிமுகமான பிருந்தா, முக்தா, பாலசரஸ்வதயுடனான எம்.எஸ்சின் நட்பு கடைசி வரை தொடர்ந்தது என்னும் தெரியாத தகவல்களை அறிந்து கொள்கிறோம். இப்படி எல்லா கட்டுரையிலும் இதுவரை நாம் அறியாத ஒருவிஷயம் இருக்கிறது. சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் பொழுது அகப்படும் முந்திரியைப் போல அவை சுவைக்கின்றன.

கரிசல் காட்டு ராஜ் நாராயணனை சந்தித்த கட்டுரையில் அவர் கூறினாராம், நாதஸ்வரம், நாகஸ்வரம் இரண்டுமே தவறு. நாயனம் என்பதே சரி” என்று. அது மட்டுமல்ல காரக்குறிச்சி அருணாசலம் நன்றாகப் பாடுவாராம்.

கேன்சர் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர்.சாந்தா அவர்கள் அறிமுகப்படுத்திய நடைமுறைகளினால் இன்று உலகளாவிய் Tumor Registry அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்டில் இருக்கிறதாம்.

அசோகமித்திரன் எழுத்துக்களைப் பற்றி கூறும்பொழுது,//எதையும் மிகைப்படுத்தியோ, அதிக ஆரவார அலங்காரங்களுடனோ எழுதுவது அவர் பாணியல்ல. அவர் எழுத்துக்களும் அவரைப் போலவே எளிமையானவை. அடிமட்ட மத்தியத்தர மனிதர்கள்,அவர்களது ஆசைகள், துயரங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் இவைகளையே பெரும்பாலான கதைகளில் எளிமையோடும், மெல்லிய நகைச்சுவையோடும் சொல்லியிருப்பார். அனால் அவரது எளிமை சிறிது சிக்கலானதுை//  அசோகமித்திரனை எவ்வளவு ஆழமாக வாசித்திருக்கிறார் என்று வியக்கிறோம். எளிமை சிக்கலானது என்னும் சொல்லாடலை மிகவும் ரசித்தேன்.

கப்பலோட்டிய தமிழரைப் பற்றி நாம் அறியாத எத்தனை தவல்கள்!

எல்லாமே சீரியஸ் கட்டுரைகள் என்று நினைத்துவிட வேண்டாம். ஜனரஞ்சகமான , நகைக்சுவை(ரிங்க் டோன், மருத்துவத்தில் சில வினோதங்கள்) இழையோடும் கட்டுரைகளும் இருக்கின்றன.  ‘மாம்பழமாம் மாம்பழம’ கட்டுரையில் அந்தக் காலத்தில் மேட்லி சப்வே கட்டப்படும் முன், தள்ளு வண்டியில் வைத்துக் கொண்டு,  எசப்பாட்டு பாடுவது போல் மாறி மாறி கூவி விற்றதை வர்ணித்திருக்கும் அழகை ரசிக்காமல் இருக்க முடியது.

சிதம்பரம் கோவில் தேர் திருவிழா பற்றி அவர் வர்ணித்திருக்கும் விதத்தில் நாம் சிதம்பரத்திற்கே சென்று விடுகிறோம். சுவாமி புறப்பாடு, தேர் அலங்காரம் மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் வீதிகளில் இருக்கும் கடைகள் எல்லாம் கண்முன் வருகின்றன. அப்போது கிடைத்த தேர்க்காசு  ஆஹா!

முதல் முதலாக கட்டுரையில் முதல் காதல் என்று தேவிகா முதல் ஏழெட்டு பெண்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெண் மீது வருவதுதானே முதல் காதலாக இருக்க முடியும்?😊)

அரசியல் நீங்கலாக ஆன்மீகம், விஞ்ஞானம், இசை என்று பல  தலைப்புகளில் ரசமான கட்டுரைகள். பலவிதமான நிறத்திலும், மணத்திலும் இருக்கும் மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையினைப் போன்ற அருமையான புத்தகம்!