Indian Woman Mothers Lap Indian Asian Stock Photo 2643590429 | Shutterstockஅலுவலகத்தில் தணிக்கை காரணமாக கடுமையான வேலைப்பளு, கணவரின் அலுவல் நிமித்த தொடர் சுற்றுப்பயணங்களால் ஏற்பட்ட பிரிவுத் துயர், இரட்டை ஆண் குழந்தைகளின் சேட்டைகளை சமாளிக்கும் அயர்ச்சி எல்லாமாக சேர்ந்து வித்யா தன் மொத்த சக்தியும் வடிந்தது போல உணர்ந்தாள்.  இரண்டு நாட்கள் சற்று ஓய்வு தேவை என்று பிள்ளைகளை தங்கை வீட்டுக்கு அனுப்பிய அடுத்த நாளே, எதிர்பாராமல் வந்திறங்கும் வேண்டா விருந்தாளிகள் போல சளிக்கட்டும், இருமலும், காய்ச்சலும் வந்து அவளை ஆக்கிரமித்து விட்டன. அதுவும் அனல் பறக்கும் சித்திரை மாதத்தில், நான்கு நாட்களாக கட்டிப் போட்டது போல் எழுந்திருக்க முடியாமல் படுக்கை அறையின் கட்டிலோடு கட்டிலாகக் கிடந்தாள். அம்மாவின் மடியில் சற்று நேரம் தலை வைத்துப் படுத்தால் தேவலை போல் தோன்றியது. ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.

அந்த அறையில் இணைந்திருந்த குளியலறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வித்யா கண்களைத் திறந்தாள். அவள் நினைத்தது காதில் விழுந்தது போல் அம்மா வெளிப்பட்டாள்.  மஞ்சள்நிறத்தில் சிறிய ஆரஞ்சு வண்ணப் பூக்கள் நிரம்பிய சேலையுடனும், ஈரக் கூந்தலுடனும் அம்மா அருகில் வந்தாள்.  ” இந்தப் புடவை புதிதாக இருக்கிறதே ” என்று மனதில் எழுந்த  சந்தேகத்தை அம்மாவிடம் அவள் கேட்கவில்லை. அந்த நிமிடத்தில் அம்மாதானே முக்கியம் என்று சிரமத்துடன் எழுந்து அம்மாவைப் பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள்.

வாசனைகளுக்கு உருவமும், நிறமும், மனிதர்களை அல்லது சம்பவங்களை நினைவு படுத்தும் திறனும் இருக்கிறது என்பது நிரூபணமான ஒன்றுதான். என்றாலும்  உண்மைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்தானே. திருமணமான பதிமூன்று ஆண்டுகளாக ஜாதி மல்லியின் மணம் அவளுக்கு முதலிரவின் இனிமையை நினைவூட்டி ஒரு புன்னகையை வழங்கி விட்டுத்தான் செல்கிறது. எப்போதாவது காற்றில்  வரும் மெல்லிய ஜவ்வாது மணம் அப்பா அருகிலிருக்கும் பிரமையை ஏற்படுத்தத்  தவறியதே இல்லை. பார்க் அவன்யூ  வாசனை திரவியத்தின் மணம் கொடைக்கானலுக்கு தேனிலவு கூட்டிப்போய் விடுகிறது.

ஆனால் அப்போது அம்மா மீதிருந்து வந்த சீயக்காயும், கஸ்தூரி மஞ்சளும் கலந்த நறுமணம் அவளுக்கு எதையுமே ஞாபகப்படுத்தவில்லை. எல்லாவற்றையும் மறக்க வைத்தது போல் இருந்தது. ஒரு கணத்திற்கு நான் என்று ஒன்று இருப்பதே இல்லாதது போல் இருந்தது. இந்த சீயக்காய் நெடியையும், கஸ்தூரி மஞ்சளையும் வாராவாரம் நுகர்கிறேனே, இப்படி நிகழ்ந்ததே இல்லையே என்று தோன்றியது. இந்தப் பொடிகள் எதுவும் செய்யவில்லை, மாயத்தை நிகழ்த்துவது அம்மாதான் என்ற மின்னல் சட்டென பளிச்சிட்டது. அம்மாவே ஒரு தனிப்பட்ட வாசனையாக இருப்பதால்தான் ஊரில் உள்ள எந்த மணத்தாலும் அவளை நினைவு படுத்த முடியவில்லை என்று தோன்றியது. அம்மாவை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

“ஜுரத்துடன் ஈரத்தலை மேல் சாயாதே ” என்றாள் அம்மா.

“போம்மா.” சிணுங்கினாள் வித்யா.

. ” அடி அசட்டுப்பெண்ணே ” என்றாள் அம்மா. வித்யாவுக்கு  சிரிப்பு வந்தது.

‘ அம்மா, திரும்பவும் சொல்லேன் ” என்றாள்.

” போடி அசடே ” என்றாள் அம்மா.

அசடு – இந்த வார்த்தையை அம்மாவைத் தவிர  வேறு யாராவது சொன்னால் பிடிக்குமா? கோபமல்லவா வரும். அம்மாவின் ஒரு அசடு அவளது கொஞ்சலையும், செல்லத்தையும், பிரியத்தையும், பாசத்தையும், உரிமையையும் ஒன்றாக வெளிப்படுத்துவதுடன், சந்தோஷத்தையும் அல்லவா தருகிறது என்று எண்ணினாள் வித்யா. எவரிடமிருந்தும் கேட்கப் பிடிக்காத சொல் அவளிடமிருந்து மட்டும் எப்படி வேறுபட்ட பரிமாணத்துடன் வருகிறது? மறுபடியும் மின்னல் – இதை அம்மா சொல்வதால்தான்.

அம்மா அவளை முன்னால் இழுத்துக் கொண்டாள்.

“கட்டிலில் உட்காரும்மா” என்றாள் வித்யா.

“இப்போதான் குளிச்சேன், சுவாமி விளக்கேத்தி நமஸ்காரம் செய்துட்டு   வரேன். “

” அப்புறம் செய்துக்கோயேன் “.

அம்மா ஒன்றும் சொல்லாமல் உடனேயே கட்டிலில் அமர்ந்தாள். மென்மையாகப் புன்னகைத்தாள். வித்யாவிற்கு அடுத்த மின்னல். எல்லா அம்மாக்களுக்கும் குழந்தைகள்தான் முதல் சாமி. கடவுளானாலும், கணவனானாலும்   காக்கத்தான் வேண்டும் போல. நெகிழ்ந்து போனாள்.

” எப்பவும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்காமல் கொஞ்ச நேரம் தூங்கு ” என்று அம்மா சொன்னவுடன், அவள்  மடியில் படுத்துக் கொண்டாள். அவளது ஜூர வேகத்துக்கு, அம்மாவின் குளித்து விட்டு வந்திருந்த சில்லிப்பு இதமாக இருந்தது. எப்படி வேண்டும்போது சில்லிப்பாகவோ, அல்லது வெது வெதுப்பாகவோ அம்மாவால் மாறிக்கொள்ள முடிகிறது?  அம்மா என்பவள் இப்படித்தான் என்ற எந்த வரையறைக்குள்ளும் அடக்க முடியாமல் விரிந்து பரந்து கொண்டே இருக்கிற சக்தி வடிவம் அல்லவோ அவள்? வித்யாவிற்கு அம்மாவைப் பற்றி யோசிப்பதே முடிகிற காரியமில்லை என்று தோன்றியது.

” தூங்கு வித்யா. உடம்புக்கு மட்டுமில்லை, மனசுக்கும் ஓய்வு வேணும்”. அம்மாவின் கை அவளது தலையை வருட வருட, அப்படியே தூங்கிப் போனாள்.

ஓர் ஈர உணர்வால் சட்டென்று விழித்துக் கொண்டாள் வித்யா. வியர்வையால் உடல் தொப்பமாக நனைந்திருந்தது. கண்களை உயர்த்தினாள். எதிரிலிருந்த சுவரில் அம்மா மாலையுடன் எப்போதும் போல் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். வித்யாவிற்கு காய்ச்சல் முற்றிலும் விட்டிருந்தது.

*******************