2025 செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை
சந்தைக் கடை – காலச்சுவடு – திரு பெருமாள் முருகன்
—————————————————————————————————————————-
அன்புடைய இலக்கிய நண்பர்களே!
செப்டம்பர் மாதத்தில் வெளியான தமிழ் சிறுகதைகளில் மொத்தம் எழுபத்து நான்கைப் படித்து, ஆராய்ந்து, அவற்றில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
அது ஒரு மகிழ்ச்சியான பொறுப்பாக இருந்தாலும், மிகக் கடினமாக பணியாகவும் இருந்தது. ஏனெனில் ஏறக்குறைய ஒவ்வொரு கதையும் தன் தனித்துவத்தால் மனதைத் தொடுவதாக இருந்தது.
ஒவ்வொரு எழுத்தாளரின் ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு சொல்லும் செயலும், என் மனத்தைக் கவர்ந்தன. ஒவ்வொரு கதையையும் முழுமையாக வாசிக்கும் போது கதை சொல்லும் விதம் எவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும், பல்வேறு கோணங்களிலும் இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.
இக்கதைகள் பல்வேறு திசைகளில் பயணித்தன.
சில நாள் தோறும் நிகழும் சம்பவங்களை கூறின.
சில உளவியல் அடிப்படையில்..
மன உறவுகள் பற்றி சில..
குற்றங்களை பற்றி சில..
சில வரலாற்றின் வாசனைகளோடு..
சில உறவுகளை மிக நெகிழ்ச்சியாக சித்தரித்தன..
சில அறிவியல் கற்பனைக்கருகே சென்றன..
மேலும் சமூகப் பிரச்சினைகள், வேடிக்கையான சம்பவங்கள், தொழில்நுட்பம் போன்ற பலப்பல.
பொதுவாக இந்தக் கதைகளில் ஆழமான மொழி, மற்றும் சிந்தனையை தூண்டும் கருத்துக்கள் அமைந்திருந்தன. இத்தனை இனிமையான கதைகளிலிருந்து முதல் ஒன்றை தேடுவது, ஒரு சிறு குழந்தையை பெரிய ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்று எந்த ஒன்றை விரும்புகிறாய்? என்று கேட்பதைப் போல இருந்தது.
இந்தக் கதை தொகுப்பில் பல திறமையான, அனுபவம் மிக்க, பெரும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இருந்தாலும், எல்லா கதைகளுக்கும் உரிய மரியாதை அளித்து, கவனத்துடனும் வாசித்து, அவற்றின் சிந்தனை, மொழி, நயம், புதுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு என் முடிவுகளை மேற்கொண்டேன். இந்த அனுபவம் எனக்கு ஒரு சிறிய இலக்கியப் பயணம் போல இருந்தது.
இந்த தொகுப்பில் எனக்குப் பெரிதும் தாக்கம் அளித்த ஆறு கதைகளில், முதலாவதையும், குறிப்பிடத்தக்க மற்ற ஐந்து கதைகளையும் கீழே கொடுத்துள்ளேன். இவை அனைத்தையும் உங்கள் முன் வைக்கும் போது, என்னால் இயன்ற அளவில் நியாயமாகவும், அன்பாகவும் தேர்ந்தெடுக்க முயன்றேன் என்ற நம்பிக்கையுடன் நிற்கிறேன்.
என் தனிப்பட்ட எல்லைகளுடனும், உணர்வுகளுடனும் நான் செய்த இந்த சிறு முயற்சியை, தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னித்து, அன்புடன் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
முதலாவதாக,
- சந்தைக் கடை – காலச்சுவடு – திரு பெருமாள் முருகன்
சிறப்பான ஐந்து
- பிணைப்பு – நடுகல் – திரு பாஸ்கரன் ஜெயராமன்
- இருள் நடுவே மின்மினிகள் – நடுகல் – திரு வேலு ராஜகோபால்
- உணர ஒறுத்தல்- வாசகசாலை – திரு கீர்த்தி வாசன்
- நாமம் – வாசகசாலை – திரு ஜெயநதி
- மாயக்கை கிணறு – குமுதம் – திரு நெய்வேலி பாரதிக்குமார்
நம்பிக்கையுடனும், அன்புடனும் இந்தப் பொறுப்பை எனக்கு அளித்த திரு கிருபானந்தன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. அந்த நம்பிக்கையே எனக்கு ஊக்கமாய் இருந்து, இதை மறக்க முடியாத இலக்கிய அனுபவமாக மாற்றியது
அழகு விரவிய வானில் நட்சத்திரங்கள் போல குளிர்ந்து ஒளிபரப்பிய இந்த மாத எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்
நன்றி
அன்பன்
ராஜகோபாலன்
-
சந்தைக் கடை, காலச்சுவடு
திரு பெருமாள் முருகன்
சுருக்கம்:
அப்பா, அம்மா, பையன் திகழ் என்று இருக்கும் ஒரு சிறிய, அழகிய, ஆனால் எளிமையான குடும்பம். வழக்கம் போல பையன் நன்றாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர். திகழ் எல்லா சிறுவர்களையும் போல விளையாட்டுப் பையன். அவனை பள்ளியில் ஒரு நாடகத்தில் நடிக்க சொல்லி இருக்கிறார்கள். அதற்காக நடிக்கவிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு உடல் மொழியையும் பழக்கப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
நாட்கள் ஓட ஓட திகழின் செயல்களும், பாவங்களும், பேச்சும் மாறிக் கொண்டு வந்தன.. ஒவ்வொரு சொல்லையும் பொறுக்கி எடுத்து நிதானித்து அழுத்தமாக, உணர்ச்சியோடு, உச்சரிப்பதோ, செயல்களில் கவனமும் இசைவும் இருப்பதோ, உள்ளங்கை நனையாமல் சாப்பிடுவதோ எப்படி ஒரு பத்து பதினைந்து நிமிட பயிற்சியில் முடிகிறது என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர், அவனது பெற்றோர். இவர்கள் நடிக்கப்போகும் சந்தை என்ற நாடகத்தில் தாயுடன் முதன்முறையாக சந்தைக்குச் சென்ற ஒரு சிறுவன் தொலைந்து விடுகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டு செல்லும் பொழுது அங்கு அவர்கள் சந்திக்கும் மனிதர்களும் அவர்கள் செய்யும் உதவியும் பற்றியது. அதை முழுவதும் உள்வாங்கிக் கொள்வதற்காக பள்ளிக் குழந்தைகள் கிராம சந்தைக்கு ஒரு சிற்றுலா போகின்றனர். அங்கு செல்லும் திகழ் தன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சில பொருட்களை வாங்கி வருகிறான்.. அம்மாவிற்கு கொள்ளை மகிழ்ச்சி.
நாடகத்தில் திகழுக்கு ஆட்டை விற்க வரும் விவசாயியின் கேரக்டர் தான். அதை அவன் நன்கு பயிற்சி செய்து கொண்டிருந்தான். நாடகப் பயிற்சியாளரும் விடை பெற்றுக் கொண்டார். இதற்கு நடுவே திகழின் நாடகத்தில் இருந்த கேரக்டரை பள்ளியில் வேறு ஒரு பையனுக்கு அவன் அம்மாவின் வற்புறுத்தலால், மாற்றி கொடுத்து விடுகிறார்கள். சோகத்தோடு படுத்துக் கொண்டிருக்கும் திகழை அவன் அம்மாவும் அப்பாவும் தேற்றுகின்றனர் தாங்கள் இருவருமே வந்து பேசுகிறோம் என்று கூறுகின்றனர், இத்துடன் கதை முடிகிறது.
நாடகப் பயிற்சி எடுத்தவர்கள், உடல் மொழி என்பதையே ஒரு தனி கருவி மாதிரி பயன்படுத்த கற்றுக் கொள்வார்கள். அந்தப் பயிற்சியால் அவர்கள் உடலை எவ்வளவு கட்டுப்பாட்டுடன், சீரிய ரிதமில் இயக்கலாம் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். அந்த பழக்கம் நிஜ வாழ்க்கையிலும் பல நேரங்களில் வெளிப்படும். உதாரணமாக நடை, பேச்சு, கை அசைவுகள், முகபாவங்கள் ஏன் சிரிப்பில் கூட. அது உடல், மனம், மொழி, குரல் எல்லாம் ஒரே தாளத்தில் ஒத்திசைவாகப் பழகும் ஒரு கலை. அந்த ஒத்திசைவு தான் அவர்களின் வாழ்விலும் கலந்துவிடுகிறது. திகழ் பாத்திரம் அப்படிப்பட்டது. அதை சில வரிகளிலேயே மிக அழகாக தெரிவித்து விடுகிறார் ஆசிரியர்!
இந்த கதை நாட்டுப்புற வாழ்வின் DNA போல இருக்கும் சந்தையின் உருவகம். சப்தங்களையும், பரபரப்பையும், அதில் நிகழும் மனித உறவுகளின் சிக்கலையும், மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும், நுட்பமாக பிரதிபலிக்கிறது. சந்தைக் கடையும், நாடக மேடையும், மனித உணர்வுகளின் வெளிப்பாடாகவே செயல்படுகின்றன. இது மிகச் சிறப்பான உருவகப் பயன்பாடு.
. “டிசம்பர் மாதம் வந்தால் பறவையாகி விடுவான் திகழ். அரூபசிறகுகள் பிரிய துள்ளல் கூடிய உடலோடு திரிவான்” என்று துவங்குகிறது இந்தக் கதை.
இதில் வரும் மேலும் சில அழகிய உணர்வுகளை, வார்த்தைகளில் வடித்திருகிறார் ஆசிரியர்!
“ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது எல்லாருக்கும் பிரச்சனைதான். சொடக்கு போடுவதற்குள் மாறுவது என்றால் எப்படி முடியும் அதுவும் சந்தோஷமான ஒன்றிலிருந்து துயரமான ஒன்றிற்கு மாற யாருக்கும் பிடிக்காது அதற்குரிய நேரமாவது கொடுக்க வேண்டும்”
“இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க விடாமல் வந்து விடுவேன் வந்து விடுவேன் என்று அச்சுறுத்திக் குலைக்கும் இயல்பு துன்பத்திற்கு உண்டு”
“தாயும் மகனும் தம்மை மறந்து பேசி சிரித்து கொண்டிருக்கும் பொழுது இடையில் நுழைந்து ஏதாவது சொன்னா அது அத்தனை ரசமாக இல்லை, சரி என்று ஒதுங்கி நின்று இருவரும் குலாவுவதை ரசிக்கத் தொடங்கினான்”
இறுதியாக “அந்தப் பையனுக்கு அம்மா தான வந்தாங்க உனக்கு நாங்க ரண்டு பேரும் வர்றம்” என்று தேற்றும் குமரேசனின் வார்த்தைகள் நம்மையே தேற்றுவது போல இருக்கிறது.
2. பிணைப்பு, . நடுகல் திரு பாஸ்கரன் ஜெயராமன்
வழக்கமான அம்மா பிள்ளை பிரச்சனை இல்லை இது.. இந்தக் கதை, பிரசன்னா என்ற இளைஞனும், அவன் அம்மா உமாவுடன் உள்ள நெருக்கமான, ஆனால் அடக்கமான உறவையும், அதன் விளைவாக உருவாகும் உளவியல் குழப்பங்களையும் பற்றியது.
பிரசன்னா, தன் அப்பா சங்கரை விபத்தில் இழந்த பிறகு, தன் அம்மாவின் வாழ்வின் ஒரே தழும்பாக வளர்கிறான். உமா, தனது ஒரே மகனை தவிர வேறு எதிலும் வாழ்க்கையைப் பார்க்க மறுக்கிறார்.. உமா, பிரசன்னாவை மகனாக அல்ல, சங்கரின் மாற்று உருவாகப் பார்க்கத் தொடங்குகிறார்.
அந்த அன்பும், கவனமும், மெதுவாக ஒரு பிணைப்பாக மாறுகிறது. அவள் மகனை மகனாகப் பார்க்காமல், தனது துணையாய், தொட்டுத் தொடாத ஒரு சங்கராக, உயிரின் ஒரே நம்பிக்கையாகப் பார்க்க தொடங்குகிறார். இது ஒரு “உளவியல் பிணைப்பு” ஆகிறது—அவளது வெறுமையை நிரப்பும் ஒரு நிழல் உறவு.
அவன் வாழ்வின் எல்லா முடிவுகளும், எண்ணங்களும், அம்மாவின் தேவைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன இதனால் பிரசன்னாவின் தனி அடையாளம் மங்குகிறது. காதல், உறவுகள், தனிப்பட்ட ஆசைகள் அனைத்தும் அம்மா என்ற ஒரே உயிரணுக்குள் அடக்கப்பட்டு விடுகிறது.
பிரசன்னா இத்தனை ஆண்டுகளும் அம்மாவிற்காக வாழ்ந்தான். ஆனால் மனதிற்குள் ஒரு குழப்பம், ‘இது சரியா?’, ‘இது அன்பா? அல்ல இதுவும் ஒரு வலியா?’ என்ற எண்ணங்கள். இது ஒரு “மௌன சிதைவு”—வெளிப்படையான சண்டை இல்லாமல், உள்ளுக்குள் ஒரு மனிதன் சிதைந்து போகும் கதை. இதை அப்படியே விடாமல் இதற்கு ஒரு நல்ல முடிவையும் தந்திருக்கிறார் ஆசிரியர்.
இதில் ஆசிரியர் கையாண்ட சில ரசமான உத்திகள் .
குற்றம்சாட்டாமல் மனித மனதைக் காட்டல்: உமா ஒரு நல்ல பெண்தான். கணவனை இழந்த பிறகு, தனிமையில் தத்தளிக்கும் ஒரு தாயார்.
பிரசன்னா தன்னைத் தேடி நிற்பது வாழ்க்கையா, அல்லது வேறு யாரோவின் கனவா என குழப்பம் அடைந்தவன்.
வெளிப்படைத்தன்மையைத் தவிர்த்து, நுணுக்கமாகச் சொல்வது: கதையில் சில இடங்கள் குளியலறை, முத்தம், விக்ஸ் தேடுதல், சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது. எந்தப் பாகுபாட்டிலும் அது தவறான நோக்கிலும் இருப்பதாக தெரியவில்லை.
சைக்காலஜிஸ்ட்: தடுமாற்றத்தில் இருக்கும் மனிதர்களுக்குப் புரிதல் தரும் பாலமாக இருக்கிறாள்.”இது தவறு” என்று கூறாமல் “இது உங்களுக்கே நல்லதல்ல” என்று கூறுகிறாள். பாசத்திற்கும், பிணைப்புக்கும் இருக்கும் வித்யாசத்தை உணர்த்துகிறாள்.
எழுத்தாளர் தன் மென்மையான மொழியால் இந்தக் கதையை சர்ச்சையாக்காமல், கருணை, சிந்தனை, உணர்வுப் பரிமாற்றம் மூலமாகச் சொல்லி இருப்பதே இந்தக் கதையின் வெற்றி.
மரியாதையுடனான தீர்வைத் தருவது – தனிமை அல்ல, விடுதலை
3. இருள் நடுவே மின்மினிகள் , நடுகல் திரு வேலு ராஜகோபால்
இது டில்லி ஜோப்பட்பட்டியில் வருமானத்திற்காக நகரத்திற்கு புலம்பெயர்ந்து வீட்டு வேலை செய்து வரும் பார்வதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட சமூகக் கதையாகும். அவள் சார்ந்த குடும்பம் பற்றிய நெஞ்சை உருக்கும் கதை. டில்லியின் குடிசைப் பகுதிகளில், சூரிய ஒளி எட்டாத சுவர்களுக்கு நடுவே, அவளது கனவுகள் மின்மினிகள் போல ஒளிருகின்றன.
பார்வதி, வீடுகளில் வேலை செய்து, தன் மகள் சுனிதாவை கல்வி வாயிலாக உயர்த்த விரும்புகிறாள். அந்தப் பெண்ணும் அம்மாவுக்கு உதவிகளை செய்து கொண்டு, நன்றாக படிக்கவும் படிக்கிறாள். ஆனால் ஒரு நாள், சுனிதா தோழிகளுடன் வெளியே சென்றபோது, அந்த நம்பிக்கையின் ஒளி இருளில் விழுகிறது. மயக்கமடைந்த சுனிதா, மருத்துவமனையில் உயிரிழக்கிறாள். அதன்பின், நீதியின் மெதுவான நடை, கோர்ட்டு வழக்குகள். சோர்வும், சலிப்புதான் மிச்சம். சொந்த ஊருக்கே போய்விடுவோம் என்று பார்வதிக்கு தோன்றும். ஆனால் அங்கு நிலைமை இதை விட மோசம் இங்கே வருமானம் இருக்கிறது. இப்பொழுது மகளை மறந்துவிட்டு மகனை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள்.
நகரத்தில் எதுவுமே சரியில்லை தான். ஆனால் ஏதோ ஒன்று கிராமங்களை விட சரியாக இருக்கிறது அது எது என்பதை பார்வதி தேடிக் கொண்டிருந்தாள்.
கிராமத்தை விட்டு எதுவுமே சரியில்லாத நகரத்திற்கு வர காரணத்தை தேடிக் கொண்டிருக்கும் பெண் நம் மனங்களை என்னவோ செய்கிறாள்.
அந்த காரணம்தான் என்ன? வருமானத்திற்காகவா, குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்காகவா? அந்தக் காரணம் என்னவானாலும், நம்பிக்கையை விடாமல், அனைத்தையும் சகித்துக் கொண்டு, தத்தம் மனங்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு, நம் கூடவே வாழும் ஒரு சமுதாயம் பற்றி படிக்கும் போது மனது நெகிழ்கிறது.
ஆசிரியரின் “மின்மினிகள்” என்பது ஒரு உவமை மட்டுமல்ல; அது கனவுகளின் சின்னம். இருளுக்குள் ஒளிரும் நம்பிக்கைகள்.
பல இடங்களில் இவரது எழுத்து ஒரு சமூகக் கண்ணாடியாக இருக்கின்றது. குடிசைப் பகுதிகள், பள்ளி ஆசிரியர்களின் வசை, நீதிமன்றத்தின் மெதுவான நடை—இவை அனைத்துமே.
அருமையான எழுத்து. நம்மை அப்படியே டில்லி குடிசைப்பகுதிக்கு புலம் பெயர்த்து விடுகிறது!
4. உணர ஒறுத்தல் — வாசகசாலை திரு கீர்த்தி வாசன்
இது அகல்யா என்ற இளம் விஞ்ஞானியின் கதை. 30 வயதில் இந்தியாவின் தண்டனை முறையை மாற்றும் வகையில், ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்குகிறார்.
இந்த மென்பொருள், குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்த குற்றம் பாதித்தவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சி வலிகளை – துக்கம், பயம், வேதனை – உணர வைக்கும். இந்த மென்பொருளை அங்கீகரிக்க முக்கிய நபராக, முன்னாள் பள்ளி ஆசிரியர் மற்றும் தற்போதைய பன்முக அறிவியல் ஆலோசகர் நச்சராஜன் வருகிறார். அவரே, அகல்யாவின் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த பாலியல் வன்கொடுமையின் குற்றவாளி. அவர் முதலில் அந்த மென்பொருளை அங்கீகரிக்க மறுத்து விடுகிறார். பின் பரிசோதனை செய்யும் நிமிடங்களில், அகல்யா தனது மென்பொருளை அவர்மீது நேரடியாகச் சோதிக்கிறாள். அவர் தனக்கு ஏற்படுத்திய வலிகளை, அனுபவிக்கச் செய்கிறாள். இறுதியில், அந்த வலியினால் மனம்தளர்ந்த நச்சராஜன், திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார்.
இந்த கதையின் முக்கியமான வரி:“அகல்யாவிற்கு நீதி வழங்கப்படவில்லை. எனவே, அவள் அதை உருவாக்கிக் கொண்டாள்.
நீதி வழங்குதலே காலதாமதத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், வழங்கப்பட்ட நீதியும் பலனை அளிக்குமா என்று கேட்டால் அது சந்தேகத்திற்குரிய விஷயமாகவே படுகிறது. குற்றவாளிகள் தண்டனைக்குப் பிறகு திருந்தி, மீண்டும் வாழ்க்கையில் பொருந்துவார்களா; இல்லையென்றால் அவர்களை எப்படி திருத்த வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில்?
தொழில்நுட்ப ரீதியாக, இன்று உள்ள நியூரோமார்க்கட்டிங், நரம்பியல் செயற்கை உந்துதல் போன்ற துறைகள் மூலமாக, மனித உணர்வுகளை மெய்ப்பிக்க அல்லது மாற்றம் செய்ய இயலும்.. மற்றும் தொழில்நுட்பங்கள் கூடுதலாகச் சேரும்போது, உணர்வு புனைவுகள் (Simulated Pain)வெகு சாத்தியம். அதை நீதி வழங்குவதற்காக உபயோகப்படுத்துவது போன்ற இந்த கதையின் முயற்சி சற்றே வித்தியாசமாகப்படுகிறது.
பிளாக் மியூசியம் என்ற பிளாக் மிரர் தொடரில் மரண தண்டனை பெற்ற ஒருவரின் digital consciousness-ஐ, ஒரு ஹோலோகிராம் வடிவில் மியூசியத்தில் வைத்து, பொது மக்கள் தண்டனை அனுபவிக்க வைக்க பட்டனை அழுத்துவார்கள்.
சட்டம் மற்றும் ஒழுங்கியல் ரீதியாக, இதுபோன்ற மென்பொருள் – அதுவும் ஒருவரின் உணர்வுகளை கட்டாயமாக ஏற்படுத்தும் வகையில் உருவாக்குவது – மிகவும் சர்ச்சைக்குரியது.
இந்தக் கதையில் வரும் தண்டனை மனித உரிமைகள், அதிகார மீறல், தவறான பயன்பாடு போன்ற விஷயங்களை உருவாக்கலாம்.
எனினும், தொழில்நுட்பம் நீதியைக் கட்டமைக்க உதவும் கருவியா, இல்லையெனில் பழிவாங்கலுக்கான அபாயகரமான கருவியா? இந்த விவாதத்தை நம்மிடையே துவக்கும் இந்தக் கதை தனித்து நிற்கிறது
5. நாமம் – வாசகசாலை –திரு ஜெயநதி
மெல்லியதாக ஒரு ஜமீன் வீட்டில் துவங்கும் இந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக அமானுஷ்யமாக மாறத் துவங்குகிறது .
ஒரு பெரும் செல்வந்தர் வீட்டில் வேலை செய்ய வரும் மாலினிக்கு பழமையான பொருட்களை சுத்தம் செய்யும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. பின்னர், குடும்ப தலைவி அவளை ஒரு தனி அறைக்குள் அழைத்துச் செல்கிறார்.
அங்கு மாலினி ஒரு தெய்வச் சிலையை காண்கிறாள். அவளுக்கு கனவுகள் வரத் துவங்குகின்றன. அந்தக் கனவுகளில் நேர் ஒருவரில்லா வல்லி என்ற ஒரு பெண் தோன்றுகிறாள். அவள், அந்த சிலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு, தன் துயரமான கடந்த காலத்தை பகிர்ந்து கொள்கிறாள். நாயக்கர் குடும்பத்துடன் உள்ள தொடர்பும், கோவிலிலிருந்து திருடப்பட்ட தெய்வப் பொருட்கள் பற்றிய உண்மைகள் வெளிவருகின்றன. மாலினி, அந்த குடும்பத்தால், திருடப்பட்ட சிலையைச் சுற்றி உள்ள இருண்ட வரலாறையும் அறிகிறாள்.
நேர் ஒருவரில்லா வல்லி, தன் சிலையை தன் தெய்வத் துணைவன் சந்திரதுண்ட பெருமான் என்பவரின் சிலையொடு மீண்டும் இணைக்க வேண்டும் என மாலினியிடம் வேண்டுகிறாள். இறுதியில், மாலினி, அந்த குடும்பத்தின் நீண்ட கால சாபத்தை தீர்க்கும் தன் பங்கு என்ன என்பதை அறிகிறாள்.
இந்தக் கதை, அமானுஷ்யம், மறுபிறவி, குடும்ப பிணைப்பு, துரோகம், மற்றும் மீட்பு போன்ற கருப்பொருள்களை நுணுக்கமாக பின்னிப் பொருத்துகிறது.
கூடவே அழகான வர்ணனைகள்!
எதிர்பாராத திருப்பங்கள்!
உரையாடலின் ஊடே முன்கூட்டிய நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மனப்பாங்கு என்ற ‘கன்ஃபர்மேஷன் பயஸ்’ வந்து போகிறது.
ஒரு முழு நாவலைப் படித்தது போல் இருந்தது. ஒரு சிறுகதையில் இத்தனை விஷயங்களை எழுத முடியுமா? என்று யோசிப்போர்க்கு இந்தக் கதை பதிலாக இருக்கிறது. ஆசிரியருக்கு வாழ
6. மாயக்கை கிணறு, குமுதம் – திரு நெய்வேலி பாரதிக்குமார்
வேடிக்கையாக ஆரம்பித்து, ஊருக்கு நல்லது செய்வதற்காக ஊர் மக்களை ஏமாற்றும் ஒரு போலி சாமியாரையே ஏமாற்றி அழைத்துக் கொண்டு போகும் ஒருவர்.
மூத்தா மொழி கிராமக் கடைக் கோடியில் யாரும் பயன்படுத்தாத அதல பாதாள கிணறு ஒன்று பொட்டல் வெளியில் புதர் மண்டி இடத்தில் இருந்தது. மழைக்காலத்தில் பெய்த பேய் மழையில் எல்லா குளங்களும் நிரம்பி வழிந்த பொழுது கிணறு தீவிரத்துடன் வருகின்ற நீரை உள்வாங்கியது. ஆரம்பத்தில் அசட்டையாக கவனித்த ஊர் மக்கள் கிணறு நிரம்பாததை கவனித்து கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர் அடங்காத தாகத்துடன் கிணற்று பூதம் நீர் அருந்தி கொண்டிருக்க கூடும் என்று பேசிக் கொள்கின்றனர். அதற்கு மாயக்கை கிணறு என்று நாமக்கட்டம் சூட்டப்பட்டது அதன் பிறகு கடைகள், பேருந்து நிறுத்தம் என்று வசதிகளோடு ஒரு சாமியாரும் வந்து விட்டார். அந்த கிணற்றுக்கு கூவல் என்று பெயரும் உண்டு என்று சொல்லிவிட்டு அவர் கூவல் சாமியாராக அனைவரின் குறைகளை கேட்டு பழம், பூ என்று அகப்பட்டதை தந்து கொண்டிருந்தார்
உண்மையாக உள்ளுக்குள் இருக்கும் சுண்ணாம்புப் படுகைகள் தொடர்ச்சியாக இருப்பதால் பாறைகள் அத்தனை நீரையும் உள்ளே இழுத்து பூமியின் அடிபரப்பு முழுவதிலும் பரப்பிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவர், ஊருக்கு நல்லது செய்வதற்காக அந்த போலி சாமியாரை திட்டமிட்டு ஏமாற்றி வெகு தூரத்தில் வேறு ஊருக்கு அழைத்துப் போவதுதான் இந்தக் கதை.
“மக்கள் குடிக்கிற தண்ணீரை கும்பிடட்டும் மண்ண கும்பிடட்டும். வானத்தை நெருப்ப கும்பிடட்டும். அது தப்பு இல்ல. அது ஒரு நன்றிக்கடன். ஆனா நடுவுல இப்படி ஒருத்தன் வேடிக்கையாக ஆரம்பித்து, ஊருக்கு நல்லது செய்வதற்காக ஒரு போலி சாமியாரையே ஏமாற்றி அழைத்துக் கொண்டு போகும் ஒருவர். ஆரம்பிச்சிட்டா அப்புறம் இவன் கடவுளா ஆயிடுவான். எந்த இடத்திலும் இடைத்தரகர்தான் ஆபத்தானவன்” என்ற தீர்கமான வரிகள் முத்தாய்ப்பாக இருக்கிறது.

காலச்சுவடு..படித்துத் தேர்வு செய்கிறீர்கள். அவர்கள் இதையெல்லாம்
பொருட்படுத்துவார்களா தெரியவில்லை.அப்படியெனில் உயிர்மை…உயிர்
எழுத்து..கணையாழி இணைய இதழ்.. இவைகளின் படைப்புகளையும் எடுத்துக்
கொள்ளணுமே…செய்வீர்களா?
LikeLike
They are included for selection of stories
LikeLike