56 Atm Withdrawal African Stock Vectors and Vector Art | Shutterstock‘மேடம் ஒரு 5000 ரூபாய் தர முடியுமா, எனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை அதற்காக அவசரமாக தேவைப்படுகிறது’

என்று ராகேஷ் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த மாதவியைப் பார்த்து கேட்டான்.

‘என்னுடைய கணவர் இறந்து விட்டார், நான் என் ஒரே பையனை வளர்க்க ரொம்ப கஷ்டப்படுகிறேன், எனக்கு வருமானம் என்று ஒன்றும் கிடையாது, என் கணவர் இறந்த பொழுது போட்டு வைத்த பணத்தின் மீது மாதா மாதம் வருகிற வட்டியிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து செலவு பண்ணுகிறேன், இப்பொழுது என்னிடம் இருப்பது இந்த 5000 ரூபாய் மட்டும் தான், இதை நான் எப்படி உனக்கு கொடுக்க முடியும்?’

‘இல்லை மேடம் எனக்கு இப்பொழுது அவசரமாக பணம் தேவைப்படுகிறது, என்னிடம் பணம் இல்லை, ஆனால் என்னை நம்புங்கள் நான் இந்தத் தொகையை உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவேன்’

‘உன்னிடம் பணம் இல்லாத போது எப்படி திருப்பித் தருவாய்?  உன்னிடமிருந்து எனக்கு திருப்பி வாங்க மனம் இல்லாவிட்டாலும், இப்போது உனக்கே கொடுக்க என்னிடம் பணம் இல்லை’

‘மேடம் என்னை நீங்கள் நம்புங்கள், இதோ பாருங்கள் என்னிடம் ஒரு லாட்டரி சீட்டு இருக்கிறது, இதற்கு எனக்கு ஒரு லட்சம் ரூபாய் விழுந்துள்ளது, அதை வாங்குவதற்கு முன்பணம் 5000 ரூபாய் கொடுக்கச் சொல்கிறார்கள், அதற்காக இந்த பணத்தைப் கேட்கிறேன், நீங்கள் பணம் கொடுத்தவுடன் டெபாசிட் கட்டி நான் பணம் வாங்கி விடுவேன், என் அம்மாவையும் காப்பாற்ற முடியும், உங்கள் பணத்தையும் திருப்பி கொடுத்துவிடுவேன்’

என்று கண்ணீர் மல்க அவன் கெஞ்ச,

‘கண்டிப்பாக கொடுத்து விடுவாயா, எனக்கு வேறு வழி இல்லை, அதனால் தான் இந்த பணத்தை திருப்பிக் கேட்கிறேன்’

‘நீங்கள் என்னை நிச்சயமாக நம்பலாம், என்னுடன் வாருங்கள், நான் பணத்தை வாங்கியவுடன் உங்கள் பணத்துடன் நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு கைம்மாறாக லாட்டரி பணத்தில் 20% தருகிறேன்’

 ‘அப்படியா, ரொம்ப நல்லது, அந்தப் பணம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் எனக்கு இப்போது வேற வேலை இருப்பதால், நீ என்னுடைய போன் நம்பர் வாங்கிக் கொண்டு அதற்கு ஜிபே பண்ணி விடு அந்த கூடுதல் பணமும் சேர்த்து’

 என்று சிறிது சந்தோஷமும், தயக்கமும் கலந்து கூறினாள்.

 ‘சரிங்க மேடம், இந்தாருங்கள் என்னுடைய நம்பர்’

 என்று கூறி மாதவியிடம் தன் நம்பரைக் கொடுத்துவிட்டு 5000 ரூபாய் பணத்தையும் நம்பரையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான் ராகேஷ்.

மாதவிக்கு ஒரே சந்தோஷம், கூடுதலாக இருபது ஆயிரம் ரூபாய் வரப்போகிறது, மனம் கோட்டை கட்ட ஆரம்பித்தது, ரொம்ப நாளாக மகன் ஒரு ஃபுட்பாலும் நல்ல உடையும் கேட்டுக் கொண்டிருக்கிறான், வாங்கிக் கொடுக்கலாம், ஒரு நாள் பீச்சுக்கு சென்று அப்படியே நல்ல உணவு விடுதியில் அவனுக்குப் பிடித்ததை வாங்கித் தரலாம். இப்படி எல்லாம் எண்ணியவாறு மாதவி ஒரு கடைக்குள் நுழைந்தாள். இப்போதைக்கு அவனுக்கு இந்தக் கடையில் இருந்து சில தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு செல்லலாம், இந்த கடைக்காரி நன்கு தெரிந்தவள், ஆதலால் அவளுக்கு பணம் வந்தவுடன் தந்துவிடலாம், அவள் மறுக்க மாட்டாள் என்று நினைத்துக் கொண்டே மாதவி அந்த கடைக்குள் நுழைந்தாள். அந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மீனாவுக்கு ஒரே ஆச்சரியம் சிரித்துக் கொண்டே உள்ளே நுழையும் மாதவியைப் பார்த்து!

 ‘வாருங்கள் மேடம், என்ன வேண்டும், இன்றைக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிற மாதிரி இருக்கிறதே!’

 ‘ஆம் நீ சொல்வது சரிதான், நான் இன்று ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறேன், அதற்கு பலனும் கூடிய சீக்கிரம் கிடைக்கும், எனக்கு இப்போதைக்கு சிறிது சாக்லேட், பிரட், சில காய்கறிகள், பழங்களும் தருவாயாக, நான் இதனுடைய பணத்தை நாளை வந்து தருகிறேன்’

   ‘மேடம், நீங்கள் தாராளமா எடுத்துச் செல்லலாம், நீங்கள் மூத்த  வாடிக்கையாளர், கடைக்கு அடிக்கடி வருபவர்கள் தான், ஆனால் உங்களது சந்தோஷத்திற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா, என்னிடம் சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லுங்கள், பகிர்ந்து கொள்வதால் எப்போதுமே சந்தோஷம் இரட்டிப்பாகதான் ஆகும்’

‘அதற்கென்ன, நீ என் பெண் மாதிரி, உன்னிடம் சொல்வதால் எனக்கும் சந்தோஷம் இரட்டிப்பாகும், இன்று நான் ஏடிஎம்மில் இருந்து கடைசியாக என்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வரும்பொழுது ஓர் ஆள் அவனுக்கு லாட்டரி விழுந்திருப்பதாகவும் அந்த பணத்தை வாங்குவதற்காக 5000 ரூபாய் டெபாசிட் பண்ண வேண்டும் என்றும், அதன் பிறகு தன் அம்மாவிற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், நான் செய்யும் இந்த உதவிக்கு கைம்மாறாக தன் லாட்டரி பணத்திலிருந்து 20% கூடுதலாக தருவதாகவும் சொன்னான்’

 ‘மேடம் நீங்கள் பணம் கொடுத்தீர்களா?’

 அவசரமாக மீனா கேட்டாள்.

 ‘ஆம், ஏன் பதட்டப்படுகிறாய்?’

 ‘மேடம், இதெல்லாம் ஏமாற்று வேலையோ என்று எனக்குத் தோன்றுகிறது’

 ‘என்ன அப்படி சொல்லிவிட்டாய்? ஏன் அப்படி சொல்லிவிட்டாய்? அவனைப் பார்த்தால் எதுவும் நல்ல மாதிரியாகத்தான் தெரிகிறது’

 ‘உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் சரி, மேடம் அந்த ஃபோன் நம்பரைக் கொடுங்கள்’

 என்று மீனா வாங்கி அதற்கு ஃபோன் பண்ணுகிறாள், அந்த போன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது.  

‘தன் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று பணத்தை எடுத்துக் கொண்டு அவசரமாகச் சென்றவன் ஃபோனை எதற்காக சுவிட்ச் ஆப் பண்ணுகிறான்?’

அதற்குள் ராகேஷ் தன் நண்பன் மாதவனிடம்

‘இன்று 5000 ரூபாய் கிடைத்துள்ளது, நாம் இதே மாதிரி இன்னொரு பத்து நாட்கள் வேட்டையாடிவிட்டு இங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விடலாம்’

 என்று கூறினான்.

 மீனா அழுது கொண்டிருக்கிற மாதவியைப் பார்த்து

  ‘அழாதீர்கள், இந்த விஷயத்தில் என்னால் என்ன உதவி செய்ய முடிந்தாலும் கண்டிப்பாகச் செய்வேன்’

 என்று கூறிவிட்டு, ஓர் எலுமிச்சம்பழம் சர்பத் கொடுத்து குடிக்க வைத்து அவளை ஆசுவாசப்படுத்திகிறாள்.

 மறுபடியும் ராகேஷ் அதே ஏடிஎம் வாசலில் நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது ஏடிஎம்மில் இருந்து வெளிவந்த பெரியவர் ராமமூர்த்தியைப் பார்த்து திரும்பவும் அதே வார்த்தைகளைக் கூற ஆரம்பிக்கிறான்

 ‘எனக்கு உடனடியாக பணம் வேண்டும், ஒரு 5000 ரூபாய் இருந்தால் கொடுங்கள், எனக்கு லாட்டரி சீட்டில் ஒரு லட்சம் ரூபாய் வந்துள்ளது, அதை எடுக்க டெபாசிட்டாக 5000 ரூபாய் கட்ட வேண்டியது உள்ளது, அந்தப் பணம் வந்தவுடன் என் அம்மாவுடைய சிகிச்சையும் நடக்கும், உங்கள் பணத்தையும் திருப்பி கொடுத்துவிடுவேன், உங்கள் பணத்துடன் நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு கைம்மாறாக லாட்டரி பணத்தில் 20% மேலும் தருகிறேன்’ என்று கூறி தன் நம்பரைக் கொடுத்துவிட்டு 5000 ரூபாய் பணத்தையும் அவரது நம்பரையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.

முதலில் மறுத்துவிட்டு பிறகு இரக்கப்பட்டு கொடுத்த அதை வாங்கிக் கொண்ட ராகேஷ் மறுபடியும் தன்னுடைய நண்பன் மாதவனிடம் சென்று

‘இன்று மறுபடியும் இன்னொரு 5000 ரூபாய் கிடைத்துள்ளது, நமக்கு நல்ல வேட்டைதான்’

 என்று சொல்லும் பொழுது பின்னால் இருந்து போலீஸ் வந்து அவர்கள் இருவரையும் கைது செய்தது. பின்னாலேயே அங்கு வந்த மாதவி அந்த பையனைப் பார்த்து

‘எங்களை மாதிரி ஆட்களை குறி வைத்து பணம் சம்பாதிப்பது என்ன ஓர் ஈனச் செயல், நாங்கள் முதியவர்கள் இரக்கப்பட்டு விடுவோம், அதனால் உங்களுக்கு பணம் சம்பாதிப்பது சுலபமாகிறது, ஆனால் இதன் முழு பலனை நீ தெரிந்து கொண்டாயா, எந்த ஒரு செயலும் அவன் பார்வையிலிருந்து தப்ப முடியாது, நான் உன்னை நம்பின அளவு கூட ஸ்டோரில் வேலை செய்யும் இந்தப் பெண் நம்பாமல் தன்னுடைய அப்பாவை ஒரு நாடகமாடச் சொன்னார், ஏமாற்றாமல் கேட்டிருந்தால் கூட இந்தப் பணத்தை நாங்கள் கொடுத்திருப்போம், இப்படி எல்லாம் யோசிப்பதை விட்டு நல்ல விதமாக யோசனை செய்’

என்று கூறி அவனைத் தலை குனிய வைத்தாள்!