
மக்களெல்லாம் ஆடுகிறார் மண்ணுலகில் தீபாவளி
மகேசர்களும் ஆடுகிறார் விண்ணுலகில் தீபாவளி
சிவபெருமான் முக்கண்ணால் மன்மதனை எரித்துவிட்டு
நெற்றியிலே காமன்சாம்பலை இட்டுக்கொண்டவந்தபின்னர்
பார்வதி தேவியுடன் குடங்குடமாய் எண்ணை மொண்டு
யானைத்தலையையும் ஆறுமுகத்தையும் குளுப்பாட்டும் தீபாவளி
பட்டாடை தான் உடுத்தி லக்ஷ்மிவெடி கை சேர்த்து
சக்கரத்தைச் சுற்றிச்சுற்றி பரந்தாமன் வருகையிலே
கலைமகளும் கைமலரில் ஓலைவெடி எடுத்துவர
நான்முகனின் நான்முகமும் மயங்கி நின்ற தீபாவளி !
நாரதரும் ஞான வெடி கொண்டுவந்து கலகமிட
முருகனும் மயில் மார்க்கம் சென்றுலகை வென்றுவர
கணபதியோ சிவசக்தி அருளினால் சிவகாசி பெற்றுவிட
முருகனவன் கோபித்து பழனியில் நிற்கையிலே
அவ்வையவள் அள்ளித்தந்த தமிழென்னும் மத்தாப்பில்
சினம்தணிந்த குமரனும் சிரித்துவிட்ட தீபாவளி
கண்ணனைக் கொன்றுவிடக் கம்ஸனின் கோடிவெடி
கண்ணனே செய்துவிட்டான் அத்தனையும் தவிடுபொடி
பூதனையை கொக்கை காற்றை பனம்பழத்தை
கம்ஸனுடன் வெடித்தது கண்ணனவன் தீபாவளி
சூரியன் நெருப்புச் சக்கரமாய் பொறிபறக்க
சந்திரன் மேகச் சக்கரமாய் சரசரக்க
அங்காரகன் சிவப்பு மத்தாப்பைப் பொறிபறப்ப
புதனவன் பச்சை மத்தாப்பைக் சுழற்றி கரகரக்க
குருவியாழன் சாட்டை மத்தாப்பை வீசி பரபரப்ப
சுக்கிரன் கம்பி மத்தாப்பை சுற்றி பொறிபெருக்க
சனியும் கறுப்புப் புகையைப் பெருக்கி கருகருக்க
ராகுவும் கேதுவும் திரிதிரிக்கும் நவகிரகத் தீபாவளி
இந்திரன் வஜ்ராயுதத்தால் அசுரரைப் பொடிபொடிக்க
வாயு மேகத்தில் மின்னல் பொறி தெறிக்க
வருணன் மேகத்தில் வெடிபோல் இடிஇடிக்க
அக்னி மத்தாப்பிலும் திரியிலும் சிரிசிரிக்க
குபேரன் பொன்னை வாரிவாரி இறைக்க
வெடித்துச் சிரித்தது விண்வெளித் தீபாவளி
கூனி வத்திவைக்க கைகேயி பத்தவைக்க
தசரதன் துடிதுடிக்க வெடித்ததோர் அணுகுண்டு
ராமனும் சீதையும் கங்கையில் குளிகுளித்து
கானகத்தில் குதூகலித்த கனிந்ததலை தீபாவளி
ராமஜானகியை இராவணன் சிறையெடுக்க
ராமனும் மனம் வெடித்து உலகமெலாம் தேடிவர
இந்திரஜித் அனுமனுக்கு வால்திரியில் தீவைக்க
இலங்கையையே எரித்து பொறிபறந்த தீபாவளி
அனுமனும் சுக்ரீவனும்அங்கதனும் வாலுயர்த்தி
ஆயிரம் வாலாக்கள் ராமனுக்கு உதவி வர
இராமபாணம் விடுத்து இராவணன் உயிர் பறித்து
பட்டாசு அபிஷேகம் கண்டுகொண்ட தீபாவளி
பாண்டவர் அழிந்துபட அரக்கினிலே வீடுகட்டி
மீண்டுவர இயலாமல் கண்ணிவெடி சேர்த்துவைத்த
துரியனின் சதியினை உணர்ந்துவிட்ட பாண்டவரும்
சொக்கப்பனை கொளுத்தி தப்பிச்சென்ற தீபாவளி !
தருமனவன் சூதுவெடி பாண்டவர்க்கு பழிசேர்க்க
கருமனத்தான் துரவுபதியை துணிபற்றி இழுத்துவர
மனம்பதைத்த பாஞ்சாலி கையேந்தி உனையழைக்க
கண்ணா உன் கைவெடிப்பில் சேலைவந்த தீபாவளி !
பார்த்தன் அம்பினிலே நெருப்பாறு பொறிபறக்க
பீமனின் கதையினிலே இடிபோல வெடிவெடிக்க
கண்ணனின் கைச்சாட்டை பம்பரத்தை ஆட்டிவைக்க
பாரதப் போர்முடித்து குழல்முடித்த தீபாவளி !
ஈன்றமகன் நரகனைத் தந்தையே கொல்லவந்து
தானும் துணைநின்று கொன்றோமே என்றழுது
பூமித்தாய் நெஞ்சினிலே வெடித்துவந்த கோபத்தீ
பொறிபொறியாய் வெடிவெடியாய் துடிப்பதுவே தீபாவளி !

அதி அற்புதம் கவிதை!!!
LikeLike