இயற்கை தீட்டும் கவிதை
மேற்குலக நாடுகளில் கோடைக்காலம் முடிந்து, மெலிதாக முன்பனி துவங்கும் பருவ காலத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி தனக்குத் தானே விதவிதமாக வண்ணங்கள் தீட்டிக் கொண்டு அழகு பார்க்கிறாள்.
இக்கால கட்டத்தில்தான் பல மரங்களில் உள்ள இலைகளின் பசுமை நிறம், சிறிது சிறிதாக மஞ்சள், ஊதா, தங்கம், செம்பழுப்பு சிவப்பு, என மாறுகின்றன. மரங்களின் தன்மைக்கேற்ப மாறுதல்களில் வித்தியாசம் இருப்பதால் விரிந்த வனங்கள் கொண்ட பிரதேசங்கள், பல வண்ணங்களில் மிளிர்கின்றன.
ஏன் இந்த நிறமாற்றம்?
இலைகள் பசுமை நிறத்துடன் இருப்பதற்குக் காரணம் அதில் உள்ள பச்சையம் (குளோரோஃபில்) ஆகும். சூரிய வெளிச்சமும், வெப்பமும் குறையும் பொழுது மரங்கள், இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கின்றன.
கடும் குளிர்காலத்தை சமாளிக்கவும், மரத்தினுள் இருக்கும் நீர்ச்சத்தைச் சேமித்து வைக்கவும், இலைகளை உதிர்த்து விடுகின்றன. ஆதவன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலங்களில், சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால் பச்சையம் தயாரிப்பதும், பனி காரணமாக நீரை உறிஞ்சுவதும் மரங்களுக்குக் கடினமாக இருக்கும். அதனால் தங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன. இதில், பைன் மரங்கள் போல சில விதிவிலக்குகளும் உண்டு.
அழகான பசுமை நிறத்திலிருந்து இலைகள், அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, நிறைவாக இலைகளை முழுவதும் உதிர்க்கும் வரையிலான இந்த காலகட்டங்களில் உலகின் பல்வேறு நகரங்கள் இயற்கை அழகில் மிளிர்கின்றன.
அமெரிக்கா மற்றும் கனடா தேசங்களில், இந்த காலத்தை இலைகளைத் தரிசிக்கும் காலம் என அழைக்கிறார்கள். வார இறுதி நாட்களில் தங்களுக்கு அருகிலுள்ள வனப்பகுதிகளுக்குச் சுற்றுலா சென்று இயற்கையை ரசிக்கிறார்கள்.
ஐரோப்பாவில் இந்த பருவத்தைத் தங்க வேட்டை காலம் என்பர். ஒயின் தயாரிப்புக்கு உதவும் தங்க நிற திராட்சைகளை அறுவடை செய்யும் பருவம் இது.
காடுகள் நிறைந்த நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் மக்கள் வீட்டு வாசலில் மேஜையை இழுத்துப் போட்டுக்கொண்டு டீ, கேக், பிஸ்கட்களுடன் இயற்கையின் மாற்றங்களை ரசிக்கிறார்கள்.
மேற்கத்திய நாடுகள் மற்றுமின்றி, ஜப்பானில் மோமிஜிகாரி தென்கொரியாவில் டான்பங் நோரி, சீனாவில் சோங்யாங், என வெவ்வேறு பெயர்களில் இந்த இலையுதிர்காலம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் டிரெக்கிங் செய்து, மலைமேல் உள்ள மடாலயங்களைத் தரிசிக்கும் வழக்கம் உள்ளது. இதன் மூலம் மலையில் ஏறும்பொழுது அழகிய வண்ணங்களில் காடுகளையும் ரசிக்கலாம் அல்லவா?
இலைகளை முழுவதும் உதிர்த்துவிட்ட மரங்கள், வசந்தகாலத்தில் மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கும். இதேபோல வண்ண மாற்றங்கள் படிப் படியாக ஏற்பட்டு, அப்பொழுது பெய்யும் மழையை உள்வாங்கி, பின்னர் முழுமையான பசுமை நிறமாக மாறுகின்றன. முதலில் பூக்கள் தோன்றி பிறகு இலைகளாக மாறும் அதிசயத்தையும் சில மரங்களில் காணலாம். இயற்கையின் இந்த சுழற்சி வருடா வருடம் தடையின்றி நடக்கிறது
இந்த இலைகளை விடுதல் நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது;
உதிர்வதும் பின் அரும்புவதும் இயற்கையின் படிமங்கள், எப்பொழுதும் மாற்றத்திற்குத் தயாராக இருப்பது, தேவையற்றவற்றை விடுவிப்பது, ‘அழகு’ என்பது தற்காலிகமான ஒன்று போன்ற வாழ்க்கை தத்துவங்களைச் சொல்லாமல் சொல்கின்றன.
இயற்கையானது, உலகின் எண்ணங்களையும், வண்ணங்களையும் தொடர்ந்து மாறுதல் செய்து வருகிறது, ஆனால், அது மட்டும் மாறாமல் ஒரு சாட்சி பூதமாக, எங்கும் நீக்கமற வியாபித்து நிற்கிறது. அதற்கு இலையுதிர்காலம் சிறந்த உதாரணம்.
வாழ்கையின் கூறுகளை இயற்கையைவிட எளிதாக யாரால் கூற இயலும்?


“உதிர்வதும் பின் அரும்புவதும் இயற்கையின் படிமங்கள், எப்பொழுதும் மாற்றத்திற்குத் தயாராக இருப்பது, தேவையற்றவற்றை விடுவிப்பது, ‘அழகு’ என்பது தற்காலிகமான ஒன்று போன்ற வாழ்க்கை தத்துவங்களைச் சொல்லாமல் சொல்கின்றன.” – உதிரும் இலைகள் சொல்லும் தத்துவங்கள் தாம் என்னே!
எனது அமெரிக்கப் பயணங்களின்போது இயற்கையின் இந்த வண்ண விளையாட்டுகளை அருகிலிருந்து உணர்ந்ததுண்டு. அறிய அனுபவம் போங்கள் !
LikeLike
“மரத்தின் மீதுதான் பக்தி என்றபின்
இலைகள் பாசமே ஏனடா..
துளிர்க்கும் இலையினை
அடுத்த பருவத்தில்
காத்திருந்துதான் பாரடா
காத்திருந்துதான் பாரடா…”
என்று மாற்றி பாடலாமோ!
ஸ்ரீராம்
LikeLike