23 வருடங்கள் கழித்து முளைத்த விதை

 

 

எடிட்டர் எஸ் ஏ பி நிறையப் புத்தகங்கள் வாங்கியதால் அவற்றை அடுக்கி  வைப்பதற்கென்றே ஒரு பங்களா வாங்கினார் என்றும் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மிகப் பிரபலமான ஒருவரை அழைத்து ஒரு மணி நேரம் பேசச் சொல்லி, அதைத் தொகுத்து அடுத்த வாரத்தில் குமுதத்தில் பிரசுரிப்பார்கள் என்றும் உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரியும்.

அது போன்ற ஒரு மீட்டிங்கில் பேசுமாறு சுஜாதா அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் பேசுவதற்குக் கேட்கவும் வேண்டுமா?

என்ன தலைப்பில் பேசவிருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன தலைப்பே வியக்க வைத்தது. நாமெல்லாம் சிந்திப்பதற்கு நேர்மாறாகத்தானே அவர் சிந்திப்பது வழக்கம் !

“எப்படி எழுதக்கூடாது என்ற தலைப்பில் பேசறேனே..” என்று அநாயாசமாகச் சொல்லிவிட்டார். அது வரை எப்படி எழுத வேண்டும் என்ற தலைப்பில்தான் மற்றவர்கள் எழுதியும் பேசியும் பார்த்திருக்கிறோம்.

எனக்கு ஒரு பெரிய வசதி உண்டு. மற்றவர்கள் எல்லாம் அடுத்த வாரத்தில் குமுதத்தில் பிரசுரமாகும் மூன்று பக்கங்களைத்தான் படிக்க முடியும் (அதாவது பிரபலங்கள் பேசியதில் எடிட் செய்யப்பட்ட சைஸாக.. பத்தில் ஒரு பங்கு படித்தால் அதிகம்.)
ஆனால் எனக்கு?

அந்த மீட்டிங்கில் மொத்தமே மூன்று வரிசைகள்தான். முதல் வரிசையில் முதல் ஆளாக லேனா தமிழ்வாணன் இருப்பார். ஏனெனில் வரும் பிரமுகருக்கு அவர்தான் மாலை அணிவிப்பார். இரண்டாவதாக என் கணவர் பாமாகோபாலன் அமர்ந்திருப்பார். அவர்தான் கையில் டேப் ரெக்கார்டருடன் பதிவு செய்ய வேண்டும். எடிட்டர் இரண்டாம் வரிசையில் அமர்வதையே விரும்புவார்.

இது போல் ரெகார்ட் செய்து வரும் காஸட்டைமுதல்  முதல் கேட்கும் பாக்கியம் எனக்கே.. முழுதாய்க் கேட்கும் அதிர்ஷ்டமும் என்னுடையதே. (இன்னும் கேட்டால், நான் மட்டும்தான் கேட்பேன்)

பொதுவாக பிரபலங்களின் ஸ்பீச்சில் சபையோருக்கு நமஸ்காரம் ரீதியில் அவர்கள் பேசுவதையெல்லாம் விட்டுவிட்டு டைப் செய்வேன். தவிரவும் ஒரு மணி நேரத்தில் நான் சூப்பர் என்று நினைக்கும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தை மட்டுமே டைப் செய்வேன். அது தொடர்ச்சியாகவோ.. விட்டுவிட்டோ இருக்கும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட பகுதியின் ஒரு வார்த்தை என்றால் ஒரு வார்த்தை விடாமல் டைப் செய்வேன். (பொதுவாகவே என்னிடம் ஒரு பழக்கம்.. பேச்சுக்கு நடுவில் சிரித்தால் பிராக்கெட்டில் சிரிப்பு என்று டைப் செய்வேன். பேட்டிகளிலும் அப்படியே.)

ஆக.. லைப்ரரி மீட்டிங்கில் பிரபலங்கள் பேசுவதில் ஆறேழு பக்கங்களுக்கு மேல் டைப் செய்ய மாட்டேன். அதைத்தான் இணையாசிரியரோ துணை ஆசிரியர்களோ விரும்புவார்கள். இல்லாவிட்டால் அநாவசிய எடிட்டிங் சுமையாகிவிடும்.

ஆனால்…

சுஜாதா பேசியபோது நான் அப்படியெல்லாம் தாவவில்லை. எடிட்டர் உள்ளிட்ட சபைக்கு வணக்கம். என்று ஆரம்பித்தார் நான் ஒரு எழுத்துக்கூட விடாமல் டைப் செய்தேன். வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன். கற்கண்டின் இனிப்பான பகுதியை மட்டும் எடுத்துக் கொடுங்கள் என்றால் என்ன செய்ய முடியும்… என்பதற்காக மட்டுமல்ல… இந்தப் பதிவு எனக்குப் பயன்படும். ஒரு ரெஃபரன்ஸ் புத்தகம் மாதிரி எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படித்துச் சுவைத்துக் கொள்ளலாமே?

என்னிடம் இன்னொரு பழக்கம் உண்டு. எதை டைப் செய்தாலும் கார்பன் பிரதி எடுத்துவிடுவேன்.

ஒரு வேளை தொலைந்துபோய்விட்டால்…? என்ற ஜாக்கிரதை உணர்ச்சிதான்.

அந்தப் பழக்கம் இந்த சுஜாதா மீட்டிங் விஷயத்தில் மாயா ஜாலம் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மொத்தம் அறுபது பக்கங்கள் டைப் செய்தேன். ஒரே ராத்திரியில் டைப் செய்து முடிக்கும் அளவுக்கு விறுவிறுப்பாய்ப் பேசியிருந்தார்.

ஆனால்…

எழுத்தாளர்களுக்கு ஆலோசனை வழங்கப் போகிறார் என்று பார்த்தால்… பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்குமான அட்வைஸ். மணி மணியான யோசனைகள்.

அதில் சுவாரஸ்யமான பகுதிகளை பென்சில் மார்க் செய்து அலுவலகத்துக்கு அனுப்பினேன். அவர்கள் சுஜாதாவிடம் அதைக் காட்டி அனுமதி கேட்க..

“பிரசுரிக்க வேண்டாம்.” என்று பளிச்சென்று சொல்லிவிட்டார்.

ஆபீசுக்கு வந்திருந்தவரிடம் அந்த டைப் செய்யப்பட்ட தாள்களைக் காட்டியிருக்கிறார்கள்.

படித்துவிட்டு “இது மொத்தமும்  பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உதவக்கூடியவை. இதில் பொதுமக்களுக்கு என்ன தகவல் உள்ளது? எனவே ஐம்பது நூறு பிரதிகள் போட்டு, பத்திரிகையாளர்கள் மற்றும் நிருபர்களுக்கு மட்டும் குடுங்க போதும்” என்று சொல்லிவிட்டார். எனக்குப் பொசுக்கென்றானது.

என்னதான் பத்திரிகையாளர்களுக்கு என்றாலும் பொதுமக்கள் மிகவும் விரும்புவார்கள். அவர்கள் பத்திரிகை படிப்பவர்களாயிற்றே. மேலும் அவர் லாண்டரி கணக்கு எழுதினாலும் அதைப் பிரசுரித்தால் ஆர்வமாய்ப் படிப்பார்கள் என்பதை வாசகர்கள் அறிவார்கள்.

அந்த ஸ்க்ரிப்டை அவர் வாங்கி எடுத்துப் போன நிலையில்-

எடிட்டர் எஸ் ஏபி என்ற ஆலமரம் சாய்ந்தது. ஏப்ரல் 17, 1994 அன்று அமெரிக்காவில் தன் மகன் ஜவஹர் பழனியப்பன் இல்லத்தில் காலமானார்.

 இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டு அவரின் உடல் அஞ்சலிக்காக அவருடைய பங்களாவில் வைக்கப்பட்டிருந்தது. அவரளவுக்குப் பத்திரிகையை யார் திறம்பட நடத்த முடியும் என்று பெரிய கேள்விக்குறியுடன் பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

உடலுக்கு அஞ்சலி  செலுத்திவிட்டு (விசும்பியவாறு) வெளியே வந்த எங்களைப் பார்த்து “கோபாலன்ஸ்” என்று யாரோ அழைக்க, திரும்பினால் !

சுஜாதா !!

“ஒரு ஸ்பீச்சை எழுத்தில் கொண்டு வர்றது சாத்தியமே இல்ல. ஆனால் நீங்க துல்லியமாய் என்னுடைய டோன் மாறுபடாமல் (கருத்துக்கள் கொஞ்சமும் மாறாமல்) செய்திருந்தீங்க” என்றார். 

நான் டைப் செய்தேன் என்று இவரிடம் சொல்லியிருப்பார்கள் என்பதே எனக்கு வியப்பு.

Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: கற்றதும் பெற்றதும் - எழுத்தாளர் சுஜாதா மறைந்த அன்றும் பாதிப்புடன் எழுதியது [What is learnt & begotten ...அஞ்சலி செலுத்த வந்த கலைஞர் கருணாநிதியிடம் “எஸ் ஏ பி பற்றி ஒரு கட்டுரை குடுத்துடறீங்களா?” என்று கேட்டபோது எங்களுக்கு அவர் சொல்லாமலேயே ஒரு விஷயம் புரிந்தது.

குமுதத்தின் அடுத்த எடிட்டர் சுஜாதா!

அவர் எடிட்டோரியலில் மிகவும் சுவாரஸ்யமான அனுபவங்கள் பல உண்டு என்றாலும், அந்த ‘எப்படி எழுதக்கூடாது’ கட்டுரை மட்டும் பிரசுரமாகவேயில்லை. அதன்பிறகு எல்லோருமே அதை மறந்து போய்விட்டார்கள்.

சுஜாதா சில காலம் குமுதத்தில் பணியாற்றியபிறகு அதிலிருந்து விலகி, பிறகு மாலன் ஆசிரியராகி, அதன்பிறகு பிரியா கல்யாணராமன் எடிட்டர் பதவியில் அமர்ந்தார்.

2017ஆம் ஆண்டு வரை நான் மட்டும் அந்தக் கட்டுரையின் கார்பன் பிரதியை அடிக்கடி எடுத்துப் படித்து ரசிப்பதோடு சரி.

2017ல் ஒரு திடீர்த்திருப்பம்.

எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வரும் பிரியா கல்யாணராமன் அன்றைக்குக் குரோம்பேட்டையில் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்காக வந்தபோது எங்கள் வீட்டையும் எட்டிப் பார்த்தார்.

பழைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அன்றைய நிருபர்களுக்கும் இன்றைய நிருபர்களுக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

“இப்பகூட நான் சுஜாதா ஸ்பீச்சை அடிக்கடி எடுத்துப் படிச்சுப் பார்ப்பேன் பிரகாஷ்” என்றேன். (அவரின் நிஜப்பெயர் பிரகாஷ்தான்).

அதிர்ச்சியாகிவிட்டார். “அதை இன்னும் பத்திரமா வெச்சிருக்கீங்களா?” என்றார்.

காண்பித்தேன்.

துள்ளினார். “இது லட்டாச்சே. அவருடைய பெயரைப் போட்டாலே சர்க்குலேஷன் உயருமே” என்றவர் உடனடியாக அதன் பிரதி ஒன்றை எடுக்கச் சொல்லி, திருமதி சுஜாதாவிடம் அனுமதி வாங்கி, 13 வாரங்களுக்குப் பிரசுரித்தார். பலருக்கும் சந்தேகம். இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது எப்படி அவர் எழுதுகிறார்? யாரோ அவரைப் போல எழுதுகிறார்கள் என்று சிரித்தார்கள்.

கடைசி அத்தியாயத்தில் பிரியா கல்யாணராமன் விஷயத்தை முழுவதுமாக விளக்கி வாசகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதோடு, இத்தனை வருடங்களாக அதைப் பாதுகாத்த எங்களைப் பாராட்டியும் எழுதி, ஒரு பக்கம் சுஜாதா தம்பதியின் போட்டோவும் மறுபுறம் எங்கள் போட்டோவும் பிரசுரித்து கௌரவித்தார்.

(இன்னும் வரும் )