சிவசங்கரி – சிலிகான் ஷெல்ஃப்

மீட்பு - சிறுகதை!அக்டோபர் மாதத்தில் வெளிவந்துள்ள சிறுகதைகளில்  லதா ரகுநாதன் அவர்கள் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தது  எஸ் வி வேணுகோபால் எழுதிய  – “மீட்பு”  சிறுகதை  – 15 அக்டோபர் 25  ஆனந்தவிகடன் இதழில் வெளியானது 

====================================================================================

குவிகம் எனக்குக்கொடுத்த ஒரு பணி – அக்டோபர் மாதத்தில் பல பத்திரிகைகளில் வெளி வந்துள்ள சிறுகதைகளைப்படித்து அதில் எனக்குப்பிடித்த ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். இது திருமதி சிவசங்கரியின் அறக்கட்டளை வருடந்தோறும் குவிக்கத்தோடு இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டிக்கான தேர்வு பணி.

சுமார் 94 சிறுகதைகள். மூன்று தவணையில் எனக்கு அனுபப்பட்டது. வெவ்வேறு பத்திரிகைகள் ,அவர்களின் வெவ்வேறு தேர்வு செய்யும் முறைகள். அதில் எழுதக்கூடும் கதாசிரியர்கள், வேறுபடும் கதைக்களங்கள், மாறுபடும் கதை சொல்லும் விதம் என்று ஒரு அவியலாக எனக்கு இந்தக்கதைகள் தோற்றம் அளித்தன. ஆனாலும் மிகவும் ஜாக்கிரதையாகச் செய்யப்பட்ட அவியலாக இருந்ததால், ஒவ்வொரு கதையும் தனித்தனியாக, ஒரு தனி காயாக, இருந்ததால் மிகவும் சுவையாகத்தான் இருந்தது.இந்தச் சுவையை நான் ரசிக்க குவிகம்தான் காரணம். அதனால் என் ஸ்பெஷல் நன்றிகள்.

இப்போது கதைகளைப்பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்.

ஒரு நிகழ்ச்சியின் போது திரு வாவேசு அவர்கள் கூறிய வார்த்தைகள் – கதையின் நாயகன் நாயகி பெயர்களே அதை எழுதிய கதாசிரியரின் வயதைக்கூறிவிடும் என்றார்.

எவ்வளவு உண்மை. பல கதைகள் தொன்று தொட்டு என்று சொல்லக்கூடிய மாமியார் பிரச்சனை, வயதானவர் பிரச்சனை,காதல் பிரச்சனை போன்ற கதைக்களங்களில் அமைந்துள்ளது. இவை இன்றும் பிரச்சனைகள் தான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அந்தப்பிரச்சனையை நாம் எதிர்கொள்ளும் தளம் பல விதங்களில் மாறி விட்டது. ஆனால் இதை இந்தக்கதைகள் பிரதிபலிக்கவில்லை.

ஆனாலும் ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒன்று சொல்லப்படுகிறது. அதைவைத்துப்பார்த்தால் இப்போது பலருக்கும் எழுத வருகிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் அவர் வாழ் நாளில் மற்றவர் ரசிக்கக்கூடிய கதை ஒன்று நிச்சயமாக இருக்கும். இவை அதைப்போல் ஒரு பொழுது கதையாக எழுதப்பட்டதா அல்லது தொடர்ச்சியாக இந்தக்கதாசிரியர்களிடம் இருந்து கதைகளை எதிர் பார்க்க முடியுமா என்பது கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

அடுத்தது கதை சொல்லப்படும் விதம். முன்பு போல் ஒரு சிறு கதைக்கு ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி ஒரு முடிவு என்ற பாணி இப்போதெல்லாம் இருப்பதில்லை. அது வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை, ஆனால் ஒரு சிறு கதை என்பது மிகக்குறுகிய நேரத்தில் படிப்பவரிடம் நாம் சொல்ல வந்ததைக்கொண்டு சேர்க்க வேண்டும். இது பல மிஸ்ஸிங்க். காரணம் தேவையில்லாத வார்த்தைகள், அதிகப்படியான கதாசிரியரின் கருத்துக்கள் என்று பாராக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அயர்ச்சியைத்தான் உண்டு பண்ணுகிறது. அட….என்ன சொல்ல வந்தீர்கள்,,,,,சொல்லித்தொலையுங்கள் என்று கோபப்பட வைக்கிறது.

சில கதைகள் வட்டார மொழி கதைகளாக உள்ளன. வட்டார மொழி ரசிக்கத்தான் செய்கிறது. இதில் கதைக் களமும் சற்றே அழுத்தமாக இருந்திருந்தால் இந்தக்கதைகள் நிச்சயமாக முதல் பரிசை தட்டிச்செல்லக்கூடும்.

சரி…..உங்களிடம் ஒரு கேள்வி.

குவிகம் என்பதன் அர்த்தம் தெரியுமா? கு குமுதத்திற்கும், வி விகடனுக்கும்,க கல்கிக்கும் குங்குமம்  பத்திரிகைக்குமான வார்த்தைகள். இவை இணைக்கப்படும்போது “குவிகம்” ஆகியதாம். 

இந்த பத்திரிகைகளில் இன்றும் வெளி வந்துகொண்டிருக்கும் முதல் மூன்று பத்திரிகைகளின் கதைகள் இந்தப்பட்டியலிலிருந்தது. அதில் ஆச்சரியம் என்ன தெரியுமா…..நான் மிகவும் கஷ்டப்பட்டுத் தேர்வு செய்த அருமையான கதைகள் நான்கும் விகடனில் வெளி வந்தவை. அடுத்து நான் மிகவும் ரசித்த கதைகளை தினமணி கொடுத்துள்ளது.இதை நான் இங்குச் சொல்லும் காரணம் விகடனில் கதை வரவேண்டும் என்பது எல்லா கதாசிரியர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு. இதனால் தாங்கள் எழுதும் கதைகளில் மிகவும் அருமையானவற்றை இவர்கள் விகடனுக்கு அனுப்புகிறார்களா அல்லது விகடன் ஆசிரியர் குழு அருமையாகக் கதைகளைத் தேர்வு செய்கிறதா காரணம் தெரியவில்லை.

மீண்டும் எச்சரிக்கை.இவை நான் ரசித்தக்கதைகள்.இவை மட்டும்தான் நல்ல கதைகள் என்று நான் சொல்லவில்லை.

சில கதைகள் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்குப் புரியாமல் இருந்தன. அவற்றை புரிந்துகொள்ளக்கூடிய ஞானம் எனக்கு இல்லை போல…..!!

சில கதைகள் ஓரிரு பக்கத்தில் முடிந்து போய்விடக்கூடிய மிகச்சிறு கதைகளாக இருந்தன. ஒருவேளை ஸ்பேஸ் பிராப்ளம் இருப்பதால் பத்திரிகைகள் வார்த்தைக்கணக்கை வைத்து கதைகளைத் தேர்வு செய்கிறார்களா தெரியவில்லை.

ஆக மொத்தத்தில், இவ்வளவு பத்திரிகைகளை நான் தேடி எடுத்து சிறுகதைகளை படித்து இருப்பேனா என்றால் சந்தேகம்தான், அதைப்போன்ற வேலை இல்லாமல் அனைத்துக் கதைகளையும் மிக அழகாகக் கோர்த்து அனுப்பி இருந்த குவிகம் குழுவினருக்கு என் நன்றிகள்.

 

 

நான் ஏன்” மீட்பு’ கதையைத் தேர்ந்தெடுத்தேன்?

சுமார் 90 சிறுகதைகள். இவை அக்டோபர் மாதம் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளி வந்தவை.இவற்றில் சிறந்த ஒன்றை அதாவது எனக்கு மனதிற்குப் பிடித்த ஒன்றை நான் தேர்வு செய்து குவிகத்திற்கு கொடுக்க வேண்டும். இங்கே என் மனதிற்குப்பிடித்தது என்ற வார்த்தைகளை கோடிட்டுக்காட்ட வேண்டும். காரணம் சிறுகதைகளில் இதுதான் சிறந்தது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஒவ்வொரு சிறுகதையும் எழுதியவரின் மனதிற்கு நெருக்கமானதுதான்.அவருக்கு அது மிகவும் அற்புதமான கதையாகத்தான் தோன்றும். இதை இல்லை என்று கூறுவதற்கு எந்த ஒரு வேற்று மனிதருக்கும் தகுதி கிடையாது.

ஆனால் இந்த அத்தனை சிறுகதைகளிலும் ஏதோ ஒன்றோ அல்லது இரண்டோ தான் அவற்றைப் படிப்பவரின் மனதில் பல நாட்களுக்கு நின்று கொண்டிருக்கும். இதற்கான காரணம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அவர் அவருக்கு ஏற்பட்ட ஒரு கற்பனைத்துளியின் வார்த்தை வெளிப்பாடாக இருந்திருக்கலாம், அல்லது அவருக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்பை நெருங்கி நின்ற கதைக்கருவாக இருக்கலாம்,அல்லது கதை எழுதப்பட்ட விதமாக இருக்கலாம்…..இப்படி எவ்வளவோ காரணங்கள் மாறுபட்டு இருக்கக்கூடும்.

இப்போது இந்தக் கதையை நான் ஏன் தேர்வு செய்தேன்? எது என்னை இந்தக்கதையோடு கட்டிப்போட்டது என்று கூறுகிறேன்.

முதலில் கதை எழுதப்பட்டுள்ள விதம்.ஒரே சீராகச்செல்லும் கதை.அங்கே இங்கே டீவியேஷன்ஸ் இல்லாமல் சொல்ல வந்தக் கருத்தை நோக்கி அழகாக நகர்த்தப்பட்டிருக்கிறது.

அடுத்தது கதையின் கரு.ஒருவரின் குணம், அது நல்லதோ அல்லது கொடுமையானதோ, அவர் நல்லவரா அல்லது கெட்ட குணம் உள்ளவரா என்பது அவரின் வாழ் நாளில் என்றும் மாறுவதில்லை. மிகவும் சாதுவான ஒருவர் ஏதோ ஒரு வலியைப்பெறும்போது அதனால் சடாரென்று எழுச்சி பெறுபவராக சினிமா கதைகளில் தான் பார்க்கிறோம். ஆனால் நாம் அன்றோடும் சந்திக்கும் பலர் அவர் அவர் குணம் எந்த நிலையிலும் மாறாமல் தான் இருக்கிறார்கள்.

இதைத்தான் கதை மிக அழகாகச் சொல்கிறது.லால் தன் மகனுக்கு இழைக்கப்பட்ட  துன்பத்திற்குக் கெட்டவனாக உருவெடுத்து மோட்டுவை போட்டுத்தள்ளி இருக்கலாம். அல்லது லால் பையனே மோட்டுவை பழி வாங்கும் எண்ணத்தோடு ஏதாவது தீங்கிழைத்திருக்கலாம்.

ஆனால் கதாசிரியரின் கடைசி வரிகள் லால் அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்பது பளிச்சென்று வந்து விழுகிறது.

நான் சிறு வயதில் படித்தக்கதை ஒன்று நினைவில் வருகிறது.

ஒரு புத்த பிஷுவும் அவர் சீடனும் நடந்துச் சென்றுக்கொண்டிருப்பார்கள். அப்போது வழியில் ஒரு கல் மேலே விழுந்து துடித்தபடி இருக்கும் ஒரு தேளைப்பார்ப்பார்கள். பிக்ஷு உடனடியாக அந்தக்கல்லை அப்புறப்படுத்தி அந்த தேளைக்காப்பாற்றுவார். ஆனால் அந்தத்தேள் அவர் கைகளைக் கொட்டிவிடும்.உடனே சீடன் என்ன குருவே நல்லது செய்பவருக்கும் இந்த தேள் தீங்கு இழைக்கிறதே என்பான்.உடனே பிஷு கொட்டுவது தேளின் குணம் என்பார்.இதுதான் இந்தக்கதையின் நூலிழை.

அதே போல் ஒரு கஷ்டம் என்று வரும் போதுதான் அவரவர் செய்யும் தவறுகளை அவரவர் உணருகிறோம் என்பதையும் மிக அழகாக வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழியே கதாசிரியர் கோடிட்டுக் காட்டி உள்ளார்.இதற்கும் இந்தக்கதைக்கு ஒரு பாராட்டு.

கதையின் யதார்த்தம் ஒரு பிளஸ் பாயிண்ட். தெளிவான நல்ல விதமான முடிவும் சந்தோஷத்தைத்தருகிறது.

இவ்வளவு காரணங்கள் போதுமா? நீங்கள் கதையைப் படித்து மீதமுள்ள காரணங்களைக் கண்டு பிடியுங்கள்……..