மூன்று நதிகளின் அற்புத சங்கமம்
இலக்கிய உலகில் அரிதாக நிகழும் ஒரு சிறப்பை நாம் காண்கிறோம் —மூன்று சிறந்த இதழ்கள் — விருட்சம், குவிகம், மற்றும் பூபாளம் —இவை ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்த தீபாவளி மலர் 2025, ஒரு அரிய சாதனை. இலக்கியத்தின் உலகில் ஒரு சிறப்பான மைல் கல்.
“மூன்று” என்ற எண் தமிழருக்கு சாதாரணமல்ல. மூவேந்தர் நம் வரலாற்றை எழுதியவர்கள். முப்பால் நம் அறிவை வழிநடத்துபவை, முத்தமிழ் நம் உணர்வை முழுமையாக்குவது.
அதேபோல், இந்த மூன்று இதழ்களும் இணைந்து மலர் வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு புதிய முன்னோடியை தந்துள்ளன.
ஒவ்வொரு இதழும் தனக்கென ஒரு பாணி, ஒரு அடையாளம், ஒரு வாசகர் வட்டம் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த மலரில், அந்த எல்லைகளெல்லாம் அழகாக கரைந்து போயுள்ளன.
இந்த மூன்று தனித்துவங்கள் இணைந்ததில்,
ஒரு முழுமையான இலக்கிய விருந்து உருவாகியுள்ளது.
இந்த மலரின் முகப்பு வடிவமைப்பே ஒரு சிறப்பு —
மூன்று கைகளால் ஏற்றப்படும் ஒரே ராக்கெட்,
ஒளிரப் போகும் அந்த நொடி — அருமை
அதன் வண்ணங்களும் வடிவங்களும் தீபாவளியின் ஆனந்தத்தையும், இலக்கியத்தின் ஒளியையும் ஒருங்கே பிரதிபலிக்கின்றன.
இந்த மலரின் வடிவமைப்பு, அச்சுத்தரம், அமைப்பு —அனைத்தும் மிகுந்த நயத்துடன் செய்யப்பட்டுள்ளன. மனங்களை கவர்கின்றன
பொருளடக்கத்தில் மூன்று இதழ்களின் இலக்கிய தரவுகள் கலந்து மலரின் அனைத்து இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு பக்கமும் அழகும் செம்மையும் நிறைந்துள்ளது.
ஒவ்வொருவார்த்தையிலும் எழுத்தாளர்களின் அன்பும், ஆழமும் வெளிப்படுகிறது.
அழகு, தரம், உள்ளடக்கம் — மூன்றும் இணைந்து இதனை ஒரு முழுமையான படைப்பாக மாற்றியுள்ளன.
இத்தகைய உயர்தர வெளியீட்டை உருவாக்குவது எளிதல்ல. இதற்குப் பின்னால் நிறைய உழைப்பும், ஒருமைப்பாடும், கலைநயமும் இருக்கிறது. இந்த தீபாவளி மலர் அதற்கே ஒரு சான்று.
இந்த தீபாவளி மலர் ஒரு பண்டிகை வெளியீடு மட்டுமல்ல,
இது ஒரு இலக்கிய ஒளி விழா —
எழுத்து, சிந்தனை, கலை — மூன்றும் ஒன்று சேர்ந்து எரியும் ஒரு தீபம்.
இத்தகைய அருமையான வெளியீட்டை உருவாக்கிய விருட்சம், குவிகம், பூபாளம் இதழ்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள் — அனைவரும் எங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
இவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, ஒற்றுமை, படைப்பாற்றல் —இந்த மலரின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகிறது
இந்த மலர், தீபாவளி ஒளியைப் போல் வாசக மனங்களிலும் பிரகாசிக்கட்டும்.
தமிழ் இலக்கியத்தின் ஒளி என்றும் மங்காதிருக்கட்டும். .
கலைமகள் கட்டுரை
ஞானத்தை அருளும் சரஸ்வதி தேவியை துவக்கத்திலே கீழாம்பூர் வேண்டியதாலோ என்னவோ சரஸ்வதி தேவி புத்தகம் முழுதும் தன் அருளை வாரி வழங்கியுள்ளாள்
வாழ்க்கை வரலாறு
இசைஅரசியின் ஏழு ஸ்வரங்கள்- கவிக்குயில் இசையரசி என்றெல்லாம் அழைக்கப்படும் எம் எஸ் அம்மா வின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக ஐந்தே பக்கங்களில் நல்ல தகவல்களோடு கொடுத்திருக்கிறார் வீ எஸ் வீ ரமணன் அவர்கள்
பயணக் கட்டுரைகள்
ஜே பாஸ்கரன் அவர்கள் எழுதிய -கடலில் ஒரு ஒடிசி – கிரீஸ், இத்தாலி ரோம் தெர்க்கி ஆகிய நகரங்களுக்கு ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் குரூசில் சென்று வந்த பயணக் கட்டுரை, புகைப்படங்களோடு. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அவர்கள் கூடவே பயணிப்பது போன்ற அனுபவம். அனுபவம் பேசுகிறது.
மலை நாட்டு திவ்ய தேசங்களும் மகாபாரத பாண்டவர்களும்- மலைநாடு திவ்ய தேசங்களை பற்றி அறிந்து கொள்ளவும் வழிகாட்டும் படியாக இருக்கவும் வெகு உபயோகமான கட்டுரை – நித்தியானந்தம் அவர்களின் பஞ்சபாண்டவர் திவ்ய தேசங்கள்.
அகில வெற்பும் இன்று ஆனை ஆனவோ அடைய மாறுதோ, புரவி ஆனவோ.. (கலிங்கத்துப்பரணியின் பாடல் வரி) பாஸ்கரன் பாலா அவர்களின் பூடான் பயணம் வெகு வித்தியாசமான பயண கட்டுரை. நிச்சயமாக இது பயணம் மட்டுமல்ல தேடல். பள்ளத்தாக்கு கடைசியாக அவருக்கு அளித்த பரிசு பதில் அல்ல அழைப்பு.
பொன்னியின் செல்வன் பாதையில் பயணம் செய்து பல கோயில்களை நமக்கு தரிசனம் செய்விக்கிறார் சியாமளா கோபு அவர்கள்
கட்டுரைகள்
பாரதி படைப்புகளில் மண்டி கிடக்கும் எள்ளல் சுவை பற்றி முனைவர் வ வே சு அவர்கள் எழுத்தில் பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு; ஏன் தன் சுயசரிதையிலேயே கூட இருந்த எள்ளல் சுவை பற்றி படித்தால் புன்னகைக்காமல் கடக்க இயலாது.
எப்படி சீதை வறியவள் ஆனாள் என்பதை சுவையோடு எழுதி இருக்கிறார் வரதராஜன் அவர்கள்.
ஶ்ரீ அன்னை என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் அன்னை பற்றி பலர் அறிந்திராத விடயங்களின் தொகுப்பு காந்த லட்சுமி சந்திரமௌலி அவர்களது எழுத்து அறிந்து கொள்ள உதவுகிறது.
ராய செல்லப்பா அவர்கள் எழுதிய நாராயணீயம் மெய் சிலிர்க்கும் கட்டுரை ஒரு ஆன்மீக அனுபவம் என்றே கூறலாம்
திரு வளவ துரையன் தனது பசுமணி என்கிற பாத்திரம் மூலமாக வினாக்களை இளங்கோவடிகளிடமிருந்தும் திருவள்ளுவரிடமிருந்தும் கேட்கும் கட்டுரை ..நினைக்கப்படும்… வித்தியாசமாக இருக்கிறது
துரை தனபாலன் அவர்கள் வள்ளுவரின் காமத்துப்பால் ஏழு அதிகாரங்களில் களவியல் காட்டும் காட்சிகளில் நம்மை திளைக்க வைக்கிறார்.
திருமதி வேதா கோபாலன் அவர்கள் எழுதிய ஜ ரா சு என்கிற பாக்கியம் ராமசாமி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜ ரா சு அவர்களின் முகநூல் நண்பராக இருந்திருக்கிறேன். அவர் எழுத்துக்களில் நகைச்சுவையும் ஆன்மீகமும் நிறைய இருக்கும்.. ஆனியன் ரவா தோசை பற்றி ஒரு முறை ஒரு பெரிய வியாக்கியானம் எழுதி ஃபோட்டொ போட்டி ஒன்றும் வைத்தார். நான் அவரை சந்திக்க முடியாதது பெருவருத்தமே
தேர்வாகி பிரசுரம் செய்ய வேண்டிய 360 கதைகள். தேர்வு செய்யக்கோரும் 2300 கதைகள். விகடனில் சேரும் உங்கள் ரசிகன் ரவி பிரகாஷ். என்ன செய்திருப்பார்? விகடனுக்கு கெட்ட பெயர் வந்ததா? படியுங்கள் தெரியும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வியக்க வைக்க இரு பரிமாணங்கள் பற்றி முனைவர் தென்காசி கணேசன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் மிக ரசனையுடன் எழுதிய கட்டுரை
சாதனை முறியடிப்பு என்றெல்லாம் பேச இது ஒன்றும் பந்தயமோ போட்டியோ இல்லை நோயாளியின் நலனும் பாதுகாப்பு மே இங்கு பிரதானமானது என்று கூறும் பிரசவமருத்துவர் பற்றி மாதங்கி அவர்களின் ஏழரை நிமிடங்கள். வித்தியாசமான தலைப்பு
இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் புதியதோர் உலகம் செய்வோம் ஆட்டோமேஷன் இலிருந்து ஏ ஐ பற்றி பேசுகையில். செயற்கை நுண்ணறிவு சுய சிந்தனையும் திறமையும் வாய்ந்த மனிதனை அடைக்க முடியாது என்ற பாசிட்டிவ் உணர்வோடு எழுதப்பட்டுள்ளது
ரேவதி ராமச்சந்திரன் அவர்களின் மௌனம் பேசியதே ராணுவ வீரர்களின் தாய்களைப் பற்றி…
டி எஸ் தியாகராசன் அவர்கள் எழுதிய இலக்கியம் உணர்த்தும் பண்பாடு.. கலித்தொகையில் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு பண்பாடுகள் பற்றி கூறும் விளக்கம் அருமையிலும் அருமை
எம் எஸ் ஸ்ரீலட்சுமி அவர்களின் மிட்டாய் தட்டு மிகவும் சுவையானது சிங்கப்பூரில் உள்ள நகரத்தார் தங்களது மொழி கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி நடப்பதையும் அதை எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தலாம் என்பதையும் கதை மூலம் விளக்கி உள்ளார். பல இடங்களில் நகரத்தாரின் அழகான வழக்கு! இனிமை.
மடிப்பாக்கம் வெங்கட் அவர்களின் வந்தாச் தீபாவளி சிரிப்.
மீனாட்சி பாலகணேஷ் அவர்களின் தேவன் எழுதி வைத்தான், விமானத்தில் நட்பாகத் துவங்கி உறவாக முடியும் அழுத்தமான கதை.
ஆர் கே. அவர்களின் ஸ்டோரி டிஸ்கஷன் மாரத்தான் நகைச்சுவை தோரணம். ஓ! இப்படித்தான் படம் எடுக்கிறார்களா
எஸ் எல் நானு அவர்களின் அந்த அரை மணி நேரம் அவர் தவிப்பை நம் சிரிப்பாக்குகிறது. பக்கத்தில் வஸ்துக்களை வைத்துக்கொண்டு தான் படிக்க வேண்டும்!
தத்துவ உரையாடல்கள்
அனைத்துக்கும் நடுவே ஜேகே தன்னை பற்றி சொல்லிச் செல்கிறார்.
பாரம்பரிய ஆன்மீகக் கருத்துகளை முற்றிலும் மறுத்த யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஒரு உரையாடல் உள்ளது.
குறுக்கெழுத்து
குறுக்கெழுத்து கூட.அதன் விதவிதமான குறிப்புகள்
கதைகள்
இளமைக் காலத்து மழைச்சாரல் என்று தெலுங்கில் எழுதிய கதையை தமிழாக்கம் செய்து இருக்கிறார் நம் கௌரி கிருபானந்தம் அவர்கள். மனைவி தன் கணவனிடம் பகிர்ந்து கொள்ளும் தன் காதல் கதை. மிக மிக வித்தியாசமான கதை.. மேலே தமிழாக்கம் என்ற குறிப்பு மட்டும் இல்லாவிட்டால் இது தமிழில் எழுதியது என்று தான் தோன்றும்
கே ஜி ஜவஹரின் கதை ஊர்வலம், தற்கால அரசியலை ஒட்டிய கதை. நம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள். அறிந்து கொள்வார்களா? காலம் பதில் சொல்லும்
திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்ணும் ஒரு பெரிய மனதுடைய ஆணும் அவன் குடும்பமும்…அழகிய சிங்கர் அவர்களின் வீழ்வேன் என நினைத்தாயோ கதை முன் வைக்கிறது
முன்னுரையில் திரு அழகிய சிங்கர் எழுதியது போல ஐராவதம் அவர்களின் அச்சு வெல்லம் என்ற கதை அருமை.
டி வி ஆர் அவர்கள் எழுதிய விளாங்கனி என்ற கதையை திருப்பத்தோடு அமைந்திருந்தது சுவாரஸ்யம்
சிந்துஜா அவர்களின் ..மன்னிப்பு .. ஆணாதிக்க பின்னணியில் ஒரு திருமணத்தில் பேசும், ஏசும் பேச்சுக்களும் அதன் விடுதலையும் பற்றி.
கா நா சு அவர்களின் அலமேலுவோ அல்லது கொனஷ்டை அவர்களின் துப்பறிவு பற்றி சொல்லவே வேண்டாம். சிரிப்பு உத்தரவாதம். எஸ் ஜி ஸ்ரீனிவாசாசாரி என்ற சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ் தான் கொனஷ்டை என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார் என்பது உபரி செய்தி
ஹெச்என் ஹரிஹரன் அவர்களின் ரெயில் உறவு நிச்சயம் வித்தியாசமான கதை. நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் சில அன்றாட நிகழ்ச்சிகள் எப்படி கதையாக மாறலாம் என்பதற்கு சான்று
ந பானுமதி அவர்களின் ..அன்பில் செழிக்கும் வையம் .. செயற்கை நுண்ணறிவு புதிர்ந்துள்ள தானியங்கி மொழி மாதிரிகளால் இயக்கப்படும் ஒரு ரோபோ தன் குழந்தையை பராமரிப்பதற்காக வாங்கிச் செல்லும் ஒரு தாய். மிக அழகாக இதை கட்டமைத்துள்ளார்
உயிர் மல்லாரி அனந்து ரவியின் இந்தக் கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். படித்து உயிர்த்து அனுபவிக்க வேண்டிய கதை.
மஞ்சுளா சாமிநாதன் அவர்களின் தீபாவளி ஒட்டிய நிகழ்ச்சி விஸ்வரூபமாக வடிவெடுத்து இருக்கிறது.
அப்படியே பட்டாசு வெடிக்கும் வைபவம் என்ற ரேவதி பாலுவின் எழுத்தில் குழந்தைகள் தீபாவளி பட்டாசு வெடிக்கும் குதூகலம் இருக்கிறது
காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய விண்ணப்பம் குடும்ப சூழ்நிலைகளிலும் அலுவலக அரசியல்களிலும் சிக்கித் தவித்து மீண்டு வரும் சங்கமேஸ்வரன் பற்றிய சிறுகதை
எப்போதும் பிடிக்கும் அப்பாவின் நண்பர் நீமாய் கோஷ் ஏன் இப்போது பிடிக்காமல் போய்விட்டார்? ராஜாமணியின் அப்பாவின் நண்பர் கதை.
யாரோ எழுதிய நானும் கச்சேரிக்குப் போனேன் ல் நகைச்சுவை மேலூட்டமான இருக்கிறது
கவிதைகள்
நமக்கு என்ன வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும் என்பதை அழகாக கூறும் நிறை ஒன்றே போதும் கவிதையைத் தந்திருக்கிறார் ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன்.
பூக்கள் பாடும் சங்கீதம் என்ற குவிகம் இளைஞர் சுந்தர்ராஜன் அவர்களின் கவிதை நம்மை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லலாம்
காளிதாஸ் அவர்களின் நார்மடி புடவைகளில் இழையோடுவது மெல்லிய வருத்தம்!
வாழ்க்கையே ஒரு பாடம். கற்றுக் கொடுக்கும் அனைத்திற்கும், அனைவருக்கும் கரம் கூப்புவது சஞ்சயனின் ஜகத்குரு கவிதை
ரவி சுப்பிரமணியன் அவர்களின் நன்றன்று கூறும் ஒளி மிக அருமை
மதுவந்தி அவர்களின் தீபாவளி மருந்து மென்மையான காலப்பயணம். நிச்சயமாக தீபாவளி மருந்து தேவைதான்..
கடந்த காலத்தின் உயிர்த்த நினைவுகள் மூலம் நிகழ்காலத்துடன் இணைக்கும் அனுபவம் கிஷாங்கினி அவர்கள் தமிழாக்கம் செய்த ..தன் வனத்தின் நினைவு.
நாகேந்திர பாரதி அவர்களின் வண்ணமே வாழ்க்கை வானவில்
சு சே புனித ஜோதி அவர்களின் பார்வையாளன் கவிதை உடலையும், காலத்தையும் கடந்து நிலைத்திருக்கும் நினைவு, உணர்வு, மனம்… தேர்ந்தெடுத்த வரிகள்.
தமிழின் அழகு பற்றி சத்திய வேழன் எச் சாய் கணேசன், எல்லா சீர்களிலும் ழகரம் வருமாறு எழுதி உள்ளார். கவிதை அழகு.
கவி ஜி அவர்களின் மொட்டை மாடி யாத்ரீகன் வரும் ஒரு வரி. நித்தியத்தின் நிழலுக்குள் நித்திரைக்கு இயங்கும் மேகங்கள். ஆஹா!
அப்பு சிவா அவர்களின் ..வெட்கம்.. காதல் ஸ்பரிசத்தை தேடுகிறது
செவல்குளம் செல்வராசு அவர்களின் எழுதாத கவிதை சுவை.
சலீம் நூர்ஜகான் இவர்களின் காதல் பற்றியது புவனத்தின் பேரொளி லாவண்யா சத்யநாதன் அவர்களின் கவிதை
அதிிரன் அவர்களின் ..ஆரம்பம்.. குடும்பத்தின் அன்னாளையும் இன்னாளையும் ஒப்பீடு செய்யும்.
சிறகா அவர்களின் ..அழைப்பு.. எதார்த்தம்
தில்லை வேந்தன் அவர்களின் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் குழலோசை கேட்கிறது
திரு எஸ் கௌரிசங்கர் அவர்களின் ..பெருமை.. கவிதை சிந்திக்க வைக்கும் நையாண்டி
கோவை சங்கர் அவர்களின் தானாகத் தேடி வரும் கவிதை பாரில் உள்ளோருக்கு ஒரு வேண்டுகோள்
விளக்கங்களை தேடும் மௌனங்கள் பற்றி வத்சலா அவர்களின் கவிதை
வைத்தியநாதன் அவர்களின் சிறிய கவிதை நாற்காலி மிக அழகு
சதுர் புஜன் அவர்களின் சந்தேகங்களும் யார் கவிதை வடிவில் உண்டு. கண்டுபிடிப்போருக்கு பரிசு இருக்கலாம்.
முடிவாக கவிஞர் வைத்தீஸ்வரன் அவர்களின் என் அறைக கதவு ..எளிய சொற்களில் எழுந்துள்ள பெரும் உணர்வு — “விடுதல்” என்பதின் வலியும், அன்பின் தாங்கும் சக்தியும். அமைதியான, ஆனால் என் மனத்தை ஆழமாகப் பாதித்த கவிதை.
விஜயதிருவேங்கடம்
ந பானுமதி :
மும்மலரில் உங்கள் அறிவியல் கதை அற்புத ரகம்.இயந்திரங்களும் பரிணாமப் படிநிலைக்கு ஆளாவதை எடுத்துரைக்கும் படைப்பு.
மனிதத்தை மதிக்கும் இயந்திரமென்பது மாயமல்ல, மந்திர வித்தை அல்ல , நிஜம் என்பதை நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்.
பண்டிகை மலர்களாகப் பூத்தவை பல. அவற்றில் மனம் கவர்ந்ததாக பரிசு பெறத்தக்கது மும்மலரென்றால் முதற் காரணம் உங்கள் படைப்பாக இருக்கக்கூடும்.
வாழ்க.
sac Asimov ன் அறிவியல் கதையொன்று அறிவியலுக்கு எதிரான நிலை எடுத்ததை நான் என்னளவில் கண்டித்திருக்கிறேன்.
அதில் மனிதமுறும் இயந்திரத்தை அது தப்பி ஓடும் கடைசி நொடியில் மனிதன் அழிப்பான்.
மாறாக நீங்கள் அது , அவள் ஆனதைத் தானாக அழித்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
சிவாய நம. மூன்று இதழ்களின் இணைந்த தீபாவளி மலர் 2025 கிடைக்கப் பெற்றேன். நிறைய கதைகள், பல கவிதைகள், சில கட்டுரைகள் என இதழ் கதம்ப மணம் வீசுகிறது. மலர் குழுவையும், படைப்பாளிகளையும் பாராட்டுகிறேன்.
சின்மய சுந்தரன் ஐதராபாத்
வியந்து போய் நிற்கிறேன்.
விருட்சம், குவிகம், பூபாளம் ஆகிய மூன்று இலக்கிய இதழ்களின் தீபாவளி கூட்டணி 2025 கண்டு!
கிராமங்களில் மூன்று கற்களை அடுப்பாக வைத்து தை பொங்கல் இடுவார்கள்.
இங்கு மூன்று இலக்கிய பத்திரிகைகள் இணைந்து தீபாவளியை தெறிக்க விட்டி ருக்கின்றன!
அத்தனை எழுத்து பிரபலங்களும்
மொத்தமாக இங்கே!
ஒரு சுவையான தகவல்!
சரித்திரத்தில் “கிமு”வா “கிபி” யா என்று கேட்பார்கள்.. இந்த மலரில்
அடியேன் எழுதிய “ஊர்வலம்” என்ற சிறுகதையை நான் எழுதியது ” கமு” வா “”கபி ” யா என்று நிறைய பேர் கேட்டார்கள்.Prof. Valiyur Subramanian Hariharan Narayanan, Kirubanandan Srinivasan உட்பட பலர்.
” நீங்க இக்கதையை எழுதியது
கரூருக்கு முந்தியா கரூர்க்கு பிந்தியா? என்று!
ஆம். நான் சில மாதங்களுக்கு முன்பே கற்பனையில் எழுதியது பல வகையில்
அது போலவே நடந்திருந்தது!
(ஆனால் என் கதையில் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பற்றி.
மருந்து வாங்கப் போன அவர் கூட்டத்தில் சிக்கி…. பல பயங்கரங்கள்!)
வாய்ப்பு இருப்பவர்கள் படிக்கவும்.
– கே ஜி ஜவஹர்.
வி-கு-பூ’-2025 என்ற புதிய தீபாவளி மலர் வெளிவந்துள்ளது. மூன்று சிற்றிதழ்கள் இணைந்து தயாரித்துள்ள ஒற்றை மலர்
– ராய செல்லப்பா
[20:42, 10/22/2025] Azhakiya singar: நேற்று தீபாவளி மலர் கைக்கு கிடைத்தது.
மெல்ல புரட்டி பார்த்ததில் மிகச் சிறந்த படைப்புகள் காணக் கிடைத்தது.
படிப்பதற்கான சுவாரசியம் கூடியது.
விருட்சம், பூபாளம், குவிகம் என முப்பெரும் புத்தகங்கள் ஒருங்கிணைந்து வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய சிறப்பம்சமாகும்.
இந்த முதல் முயற்சி தொடர்ந்து செயல்பட மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 🙏
– பெஷாரா
கதம்பமாய் கோர்க்கப்பட்ட அழகிய மலர் என் கரங்களை வந்தடைந்தது.. – சுரேஷ்
கிருபானந்தம் சார் அவர்களோடு வீடு தேடி வந்த தீபாவளி மலர் ரொம்ப அம்சமா இருக்கு. அட்டை முகப்பு உள்பக்கம் எல்லாம் லக்ஷணமா இருக்கு. விளம்பரங்கள் இல்லாமல் விஷயம் மட்டும் தாங்கி வந்திருக்கிறது. படித்துவிட்டு அடுத்த பதிவு அளிக்கப்படும். மிக்க நன்றி குவிகம் விருட்சம் பூபாளம் என்கிற மூன்று பெரிய சக்திகளுக்கும் – சாந்தி ரசவாதி
மூன்று இதழ்கள் இணைந்து படைத்த தீபாவளி மலர் முழுதும் படித்து விட்டேன். அனைத்தும் அமர்க்களம்.
சோடையில்லா சொக்கத் தங்கம்.
வாழ்த்துகள்!
-_வவேசு
3 in one.மலர்கிடைக்கப்பெற்றேன்.நன்றி.மிக நேர்த்தியாக,அமைத்து சிறந்த கட்டுரைகளை தொகுத்து அற்புதமாக வெளியிட்டுள்ளீர்கள்.
திருஷ்டி சுற்றி போடவும் மூவருக்கும்!!
கண்கள் படகூடும்.பின்னே பெரிய பத்திரிகைகளுக்கு இணையாக இப்படி உழைத்தால்…..
வாழ்க வளர்க.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
– காந்தலக்ஷ்மி
விருட்சம்- குவிகம்- பூபாளம் இணைந்து வழங்கிய தீபாவளி மலர் 2025 இப்பொழுதுதான் வந்து சேர்ந்தது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தாலும் புத்தகம் நனையாமலே இருந்தது! தரமான வடிவமைப்பு! 157ம் பக்கத்தில் எனது கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன். மலரின் ஆசிரியர் குழுவிற்கு மிக்க நன்றி. தலைப்பைக் கொடுத்துக் கவிதையைக் கேட்டுப் பெற்ற சுந்தர்ராஜன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றி!
– சாய் கணேசன்
வணிக இதழ்கள் தவிர சிற்றிதழ் வகைகளில் தீபாவளி மலர் என்று வருவது இதுவே முதல் முறை என்று எண்ணுகிறேன்.
அதுவும் மூன்று இதழ்கள் சேர்ந்து ஒரு மலர் கொண்டு வந்ததும் மிக தனித்துவம்.
அப்படியே புரட்டினேன்.
அச்சு நன்றாக இருக்கிறது.
இடையிடையே வண்ண வண்ண விளம்பரங்கள் எதுவுமின்றி இருப்பது இதன் சிறப்பு.
பெரிய பணிதான் இது.
மெதுவாக அனைத்தையும் வாசிப்பேன்.
விருட்சம், குவியம், பூபாளம் மூன்று இதழ்களின் பின்னிருந்து இயங்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.
தனிப்பட்ட முறையில் அவரவர்களுக்கு என் அன்பையும் மகிழ்வையும் தெரியப்படுத்தி விடுங்கள் மெளலி.
- Sha ha
முக்கனி 2025 தீபாவளி மலர்
நமது தீபாவளிக் கொண்டாட்டங்களில் முக்கியப் பங்கு தீபாவளி மலர்களுக்கும் உண்டு.
இடையில் 32 ஆண்டுக் காலமாக நின்றுபோயிருந்த ஆனந்த விகடன் தீபாவளி மலர்கள் 2003-ம் ஆண்டிலிருந்து மீண்டும் வெளியாகத் தொடங்கின. தீபாவளிக்குச் சில மாத காலம் முன்பு ‘தீபாவளி மலர்க் குழு’ அமைக்கப்பட்டு, சீனியர் ஒருவரின் தலைமையில் தீபாவளி மலர்கள் தயாராகும். அப்படி என் தலைமையின் கீழும் ஒரு ஏழெட்டு முறை தீபாவளி மலர்கள் வெளியாகின. அந்த அனுபவத்தை ‘மலர்வனம்’ தீபாவளி மலரில் விரிவாக எழுதியுள்ளேன்.
ஒருமுறை ஆனந்த விகடன், சக்தி விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், டாக்டர் விகடன், சுட்டி விகடன் எனத் தனித்தனிக் குழுமப் பத்திரிகைகளுக்கும் தீபாவளி மலரில் பக்கங்கள் ஒதுக்கி, அந்தந்தக் குழுவிடமிருந்து கட்டுரைகள் வாங்கி வெளியிட்டேன். இதனால் தீபாவளி மலர் தயாரிப்பு வேலையின் சுமை சற்றுக் குறைந்ததோடு, அந்த முயற்சி ஒரு புதுமையாகவும் விகடனில் பேசப்பட்டது.
அதுவாவது விகடன் குழுமப் பத்திரிகைகளுக்குள்ளேயே நடந்த ஒரு புதுமை. ஆனால் விருட்சம், குவிகம், பூபாளம் எனத் தனித்தனியாக இயங்கி வரும் மூன்று பத்திரிகைகள் ஒன்றிணைந்து ஒரே தீபாவளி மலராக வெளியிட்டிருப்பது பத்திரிகையுலகில் இதுவரை நான் கண்டிராத புதுமை!
முக்கனிச் சுவையோடு வெளியாகியிருக்கும் இந்தத் தீபாவளி மலரின் அட்டை நல்ல கெட்டியான வழுவழுப்புத் தாளில் இருப்பதால், புத்தகத்தை ஏந்துகிறபோது ஏதோ பரிசுப் பெட்டகத்தைக் கையில் வைத்திருப்பது போன்ற உணர்வு! அந்த உணர்வுக்குப் பழுதில்லை என, உள்ளே வழக்கத்தைவிடச் சற்றுக் கூடுதலான ஜி.எஸ்.எம். தாளில் அச்சாகியிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள் சான்றுரைக்கின்றன.
கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியின் மகிமைகளோடு தொடங்குகிறது புத்தகம். இந்தக் கட்டுரையை எழுதியிருப்பவர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன். அது சரி… சரஸ்வதியின் மகிமையை கலைமகள் ஆசிரியர் அல்லாமல் வேறு யார் எழுதினாலும் பொருத்தமாயிராதே! மகான்களின் அருளுரை இல்லாத குறையைப் போக்கிவிட்டது கீழாம்பூராரின் அருமையான இந்தக் கட்டுரை.
கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பலவும், எல்லா தீபாவளி மலர்களிலும் உள்ளது போன்று இதிலும் உண்டு. ஆனால், மற்ற வழக்கமான தீபாவளி மலர்களைப் போல் அல்லாமல், பக்க வடிவமைப்பில் ஓர் ஒழுங்கை, ஒரு நேர்த்தியைக் கடைப்பிடித்திருப்பதால், பக்கங்களைப் புரட்டும்போது ஒரு தேர்ந்த பதிப்பகத்தின் பிரசுரப் புத்தகம் ஒன்றைப் புரட்டுவது போன்று உள்ளது. எந்தப் பக்கமும் காமா சோமாவென்று இல்லாமல், வாசிக்கச் சுலபமாகச் சற்றே பெரிய எழுத்துகளில், இஸ்திரி செய்யப்பட்ட வெள்ளைக் கதராடையைப் போன்று கம்பீரமாக இருக்கிறது புத்தகம்.
இந்த மாதம் முழுக்க வைத்து வாசிக்கும் அளவுக்கு இதில் ஏகப்பட்ட விஷயங்கள்! என் கண்ணையும் கருத்தையும் சட்டென்று கவர்ந்த ஒரு சில விஷயங்களை மட்டும் உடனடியாகப் படித்துவிட்டேன். மிச்சத்தையும் பொறுமையாகப் படிக்க வேண்டும்.
நான் வணங்கும் மகாஸ்ரீ அரவிந்த அன்னையைப் பற்றிய கட்டுரையைத்தான் முதலில் படித்தேன். இதுவரை நான் அறிந்திராத, சிலிர்க்க வைக்கும் பல தகவல்களை வழங்கியுள்ளார் காந்தலக்ஷ்மி சந்திரமௌலி. “இந்திய நாட்டில் கடவுள்கள் அனைவரும் உயிருடன் உள்ளதை நான் காண்கிறேன்” என்கிற அன்னையின் வார்த்தைகள் எத்துணை நுட்பமானவை!
ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி பற்றிய வேதா கோபாலனின் கட்டுரை அவரைப் பற்றிப் பலரும் அறிந்திராத பல புதிய தகவல்களைச் சொல்கிறது. பசிக்கிறது என்று வருவோரிடம் ஒரு சீட்டு எழுதிக் கொடுத்து ‘ராமாஸ் கஃபே’-க்குப் போய்ச் சாப்பிடச் சொல்வாராம் ஜ.ரா.சு. பிறகு, தான் அங்கே போகும்போது, கணக்கை செட்டில் செய்வாராம். ஜ.ரா.சு-வோடு அவ்வளவு காலம் பழகியிருந்தும் அவருக்குள்ளிருந்த ‘என்.எஸ்.கே’-வை அறியாமல் போனேனே என வருந்துகிறேன்.
ஜ.ரா.சு. முகநூல் கணக்கு தொடங்கியது பற்றி எழுதியுள்ளார் வேதா. ஜ.ரா.சு-வுக்காக அதை உருவாக்கிக் கொடுத்தவன் என் மகன் ரஜ்னீஷ். அப்போது அவன் மிகச் சிறுவன். அவனை அழைத்துக்கொண்டு பாக்கியம் ராமசாமியைப் பார்த்துவரச் சென்றிருந்தேன். அப்போது அங்கே யதேச்சையாகச் சிரிப்பானந்தாவும் வந்திருந்தார். அனைவருமாகப் பேசிக்கொண்டிருக்கையில் பாக்கியம் ராமசாமி கேட்டார்… “ஏன் ரவி, இந்த ஃபேஸ்புக் ஃபேஸ்புக்குங்கிறாங்களே, நீ கூட அடிக்கடி சாவி பத்தி, டி.எம்.எஸ். பத்தியெல்லாம் அதுல எழுதிட்டு வர்றதா அனில் (உதவியாளர்) சொல்வான். நானும் அப்படி ஏதாவது எழுதலாம்னு பாக்கறேன். எனக்கும் ஃபேஸ்புக் ஆரம்பிச்சுக் கொடேன்” என்றார்.
“சார், உண்மையில் எனக்கு அந்த டெக்னிக்கல் விஷயம் எதுவும் தெரியாது. என் பையன்தான் எனக்கு ‘பிளாக்’ ஆரம்பிச்சுக் கொடுத்தான். அவன்தான் ‘ஃபேஸ்புக்’கும் ஆரம்பிச்சுக் கொடுத்தான். அவனையே இப்போ உங்களுக்கும் ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் ஓப்பன் பண்ணித் தரச் சொல்றேன்” என்றேன்.
பின்பு அவர்கள் இருவருமாகக் கணினி முன் உட்கார்ந்து, ஜ.ரா.சு. விருப்பப்படியே அவரின் இஷ்டமான புனைபெயரில், கவர் பிக்சர், புரொஃபைல் பிக்சர் எனச் சகலமானதையும் செட் செய்து, அவர் சொன்ன விஷயத்தை அப்போதே டைப் செய்து, அதில் பதிவேற்றுவது எப்படி என்றும் விளக்கினான் என் மகன். அதன்பின், ஃபேஸ்புக்கில் ஏதாவது சந்தேகம் என்றால், பாக்கியம் ராமசாமி நேரடியாக அவனுக்கே போன் செய்து விசாரித்து அறிந்துகொள்வார். ஓர் எழுத்துலக மேதை, நகைச்சுவைச் சக்கரவர்த்தி தன் தலைக்குப் பின்னால் எந்த ஒளிவட்டமும் இல்லாமல், அவரின் பேரன் வயதில் இருந்த என் மகனைப் பெரிய மனுஷனாக மதித்துப் பேசியதும் பழகியதும் இப்போது நினைத்தாலும் என்னை நெகிழ வைக்கிறது.
நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தாலே என் மனசு கொஞ்சம் கிறுகிறுக்கும். ஆனால், ஒரு பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலே கடலுக்குள் மிதந்து செல்வது போன்று ஒரு பெரிய கப்பலில் புறப்பட்டு, ரோம் நகரின் சிவிட்டாவெக்ஸியா, கிரீஸ்,
டர்க்கி, பொம்பெய் எனப் பல இடங்களுக்குப் பயணித்த ‘ஒடிஸி ஆஃப் த ஸீஸ்’ கடல் வழிச் சுற்றுலாவை பார்ட் பார்ட்டாக விவரித்து, வியப்பிலும் பிரமிப்பிலும் என்னை மூச்சு முட்ட வைத்துவிட்டார் என் இனிய நண்பரும் மருத்துவரும் பண்பட்ட எழுத்தாளருமான ஜெ.பாஸ்கரன். ‘பீட்சா நகரம்’, அதாவது, இன்றைய இளம் தலைமுறை ஆசையாக வாங்கிச் சாப்பிடும் ‘பீட்சா’ பிறந்த நகரம் எது தெரியுமா? இந்தக் கட்டுரையைப் படியுங்கள்; தெரியும்.
‘இசை அரசி’ எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பற்றியும் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பற்றியும் எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும், அலுக்கவே அலுக்காது! இதிலும் அவர்களைப் பற்றி முறையே ‘கல்கி’ வி.எஸ்.வி. ரமணனும் முனைவர் தென்காசி கணேசனும் வெகு சிறப்பாக எழுதியுள்ளார்கள்.
இன்னும்… ஐராவதம், க.நா.சு., கொனஷ்டை, காலச்சக்கரம் நரசிம்மா, அழகியசிங்கர், குவிகம் சுந்தர்ராஜன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டி.வி.ராதாகிருஷ்ணன், ஹெச்.என்.ஹரிஹரன், கே.ஜி.ஜவஹர், இந்திரநீலன் சுரேஷ், எஸ்.எல்.நாணு எனப் பல ஜாம்பவான்களின் படைப்புகளைத் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ‘விகடனுக்குக் கெட்ட பேர் வராதா!’ என்ற தலைப்பிலான எனது கட்டுரையும் இடம்பெற்றிருப்பது எனக்கான கொடுப்பினைதான். கட்டுரையைக் கேட்டு வாங்கி இதழில் இடம்பெறச் செய்த எழுத்தாளர் ஜெ.பாஸ்கரன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி
– உங்கள் ரசிகன் ரவிபிரகாஷ்

கையில் புத்தகம் இருக்கிறது. இன்னும் படிக்கவில்லை.
ஸ்ரீராம்.
LikeLike