
புத்தகத்தின் பெயர் :யுக புருஷன்
ஆசிரியர் பெயர்:ஜே. செல்லம் ஜெரினா
பதிப்பகம்:வானதி
பக்கங்கள்:156
விலை:₹150.00
பதிப்பு ஆண்டு:டிசம்பர் 2024
யுக புருஷன்
*******************
தலைப்பே கனகச்சிதமாகவும், கம்பீரமாகவும் நின்று, படிப்பவர்களை வரவேற்கிறது. யார் இந்த புருஷன்? எந்த யுகத்திற்கு? படிக்கப் போகிறவர்களுக்கு ஆவல் கண்டிப்பாக வரும்.
மேவார் இராச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் அரசரும், ராஜபுத்திரர்களின் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவராகவும் இருந்த மகாராணா பிரதாப்சிங் பற்றிய கதையே இது.
அக்பரை, மஹாராணா பிரதாப் இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொண்டதில்லை. தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்கிறார். அக்பர் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை தன்பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்.
அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதும், அக்பரிடம் சித்தூரை இழந்ததும், ராணாவின் மனதை உறுத்துகிறது.
எளிமையான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு, மக்களோடு மக்களாக வாழ்கிறார்.
ராணாவின் மற்ற சகோதரர்கள், அக்பருக்கு அடிபணிந்துவிட, பிரதாப் சிங் மட்டும் தன் சுயமரியாதையைக் கைவிட மறுக்கிறார். ஆனாலும் கடைசியில் ஹல்திகாட் போரில் இறக்கிறார்.
ராஜபுதனம் என்று சொல்லும்போதே அவர்களின் வாளும், வீரமும் தான் மனதில் தோன்றும். அதை வார்த்தைகளில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்.
அக்பருடன் சேர்ந்து இருந்தாலும், கடைசியில் ஒரு சகோதரன் ராணாவின் உயிரைக் காக்க ஓடி வருவது, அழகான முறையில் கூறப்பட்டிருக்கிறது.
நடுவில் ஒரு கற்பனைக் காதலும் உண்டு. தியாகம் அரச குலத்தாருக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் உண்டு என்பதை துங்காவின் பாத்திரம் மூலம் கூறியது மிக அழகு.
சூழ்நிலை வர்ணனைகளாகட்டும், மனிதர்களை வர்ணிப்பதாகட்டும் இவரை மிஞ்ச முடியாது.
சரித்திர சம்பவங்களை விவரிக்கும் போது , அதில் எது உண்மை என்று தெரியாத அளவுக்கு கற்பனை அதில் கலந்திருப்பது தான், சரித்திரப் புனைவை ரசிக்க வைக்கும். ஆனால் அதற்காக உண்மையை அடியோடு மாற்றக் கூடாது . அதில் செல்லம் ஜெரினா வெற்றி பெற்றிருக்கிறார்.
சரித்திர மாந்தர்களோடு, ராணாவின் குதிரை ‘சேதக்’கையும் உண்மைப் பெயரோடு உலவ விட்டிருக்கிறார்.
வார்த்தை முத்துகளைச் சம்பவச் சரங்களாக்கி அழகான சரித்திரப் புனைவு மாலையைத் தொடுத்திருக்கிறார் ஜெரினா.
அணிந்துரை கொடுத்திருப்பவர் பிரபல எழுத்தாளர் வேதா கோபாலன் அவர்கள் என்றால், இதற்கு மேல் என்ன விமர்சனம் வேண்டும்?
அழகான உரையாடல்களையும், வர்ணனைகளையும் ரசித்து, ருசித்து காட்சிப்படுத்தியிருக்கிறார். முதலில் அவைகளை ரசித்து, அவை எங்கே வருகின்றன என்று தேடிப்பிடித்து சுவைக்க வேண்டியதுதான்.
“உதய்சாகர் ஏரி வானத்து, நட்சத்திரங்களைத் தன்னில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை நிலவு வெட்டி எறிந்த நகத்துண்டாய் மினுக்கியது” என்று தொடங்கும் கதை, “நாடு நாடு என்று நாட்டின் தன்மானத்துக்காகவே உயிர் வாழ்ந்த வீரனின் கதையை விதி முடித்தே விட்டது.
ஒரு மாவீரனின் சகாப்தம் முடிந்தே விட்டது. ஒரு யுகபுருஷன் மறைந்தே விட்டான்” என்ற வரிகளுடன் முடிகிறது.
ராஜபுத்திரர்களின் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய மகாராணா பிரதாப் சிங் வரலாறு ஓர் ஆழ்ந்த பெருமூச்சை வரவழைக்கிறது.
இந்த எழுத்தோவியம், கல்வெட்டாய் மனதில் பதியும்.


அருமையான ஒரு சரித்திர நாவலுக்கு அருமையான விமர்சனம். ஆசிரியர் செல்லம் ஜரினாவுக்கும், விமர்சனம் செய்திருக்கும் சுபாஷினி அவர்களுக்கும் நல் வாழ்த்துகள்.
LikeLike
சிறப்பு. உங்கள் வரிகள் புத்தகத்தின் சிறப்பையும் சொல்கின்றன.
ஸ்ரீராம்
LikeLike