கடைசி குரு
நூலாசிரியர் : தீபன்
(இயற்பெயர் டி.என் ராதாகிருஷ்ணன்.)
பதிப்பகம்:புஸ்தகா டிஜிட்டல் மீடியா
வெளியான ஆண்டு:2024
விலை : ₹150.
விமர்சனப் போட்டிக்காக..
“கடைசி குரு”
இந்தத் தலைப்பு பற்பல வினாக்களை எழுப்பியது. யார் கடைசி குரு? அவர் யாருக்கு குரு. கடைசி குரு …சாத்தியமா..?
இதற்கெல்லாம் விடை தீபன் என்ற புனைப் பெயரில் எழுதும் T.N .ராதாகிருஷ்ணனிடம் உள்ளது.
மகாபாரதத்தில் சில பாத்திரகளை மட்டுமே எடுத்து கொண்டு சித்து விளையாட்டு காட்டுகிறார். தமிழ் வசீகரமாய் கயலின் துள்ளலாய்
தாவிக்குதிக்கிறது எங்கெங்கு காணினும் புத்தகம் முழுக்க தமிழில் சொற்சிலம்பமாடுகிறார்.
வாலிபக்கவிஞர் வாலியே மீண்டும் உயிர்த்து வந்து விட்டாரோ என்ற ப்ரமையையும் ப்ரமிப்பையும் தருகிறது அப்படி எதுகையும் மோனையும் இசைவாய் எசப்பாட்டு பாடுது.
எல்லாமே வித்தியாசக் கோணத்தில் பார்க்கப்பட்டு இலக்கணம் வகுக்கப்பட்டு புதுப்பார்வை பெற்று நம்மையும் ஆலோசிக்க வைக்கின்றன.
“வியாச கீதையில்” சகாதேவனும் வியாசரும் நடத்துவது சொல்வேள்வி அல்ல உயிர் வேள்வி!
“வாழ் சித்ர வைகுந்தன்.” வாழும் தமிழின் வாழ்விக்கும் சொற்சித்திரமாய் என்னஒரு அழகான நாமம் அந்த வைகுந்த வாசனுக்கு.
இது ஒன்றே போதும் ஆசிரியரின் மகுடத்துக்கு மயிலிறகு பீலியாய் நீலவிழியாய்..
அம்பையின் “தேவ விரதரே “எனும் விளிப்பில் தான் எத்துணை ஆளுமை. அவளுடைய கூற்றின் உண்மையை உணர்ந்து அம்பு படுக்கையில் கிடந்த பவித்திரமே சரித்திரமான பிதாமகரின் “இறுதி வணக்கம் -என் இதய குருவிற்கு” என்பதிலும்
இதிலுமே பூர்ணமான ஆளுமை. கடைசிகுரு வின் மேன்மை!
பூதனை எனும் அரக்கியின் இறப்பு இதில் வேறு கண்ணோட்டத்தில்! பூதனை சந்தோஷித்து அனுபவித்து
//உறிஞ்சுகிறான் -நான் ஊதப் பட்டேன்!
உறிஞ்சுகிறான் -நான் இசைக்கப் பட்டேன்
உறிஞ்சுகிறான் -நான் வாசிக்கப்பட்டேன்
உறிஞ்சுகிறான் -நான் மீட்டப் பட்டேன்//
அவளின் ஆனந்த அனுபவத்தை “பூதனை பேசுகிறாள்”
//விழி
ஊற்றம் கண்டுஉறைபவன் வேண்டாம் – என்
உள்ளொளி உணரும் உடையவன் வேண்டும் //என்று திண்ணிய எண்ணத்தைவெளியிட்டு பட்டுத்துணியால் கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரி கதை சொல்லும் “அகவிழி “கூறும் மறைமொழி மயக்குகிறது.
“தாய்மைப்பசியில் “சந்தித்தே விட்டார்கள் சஞ்சலத் தாயும் சலித்த மைந்தனும்.
தேம்பி அழுதார்கள் தேரோட்டி மைந்தனும் தேவதைத் தாயும்!
எனக்கு கர்ணன் திரைப்படம் நினைவூஞ்சலில் அசந்தர்ப்பமாய் ஆடியது.
//சந்ததிச் சரசாத்தியம் ஆக்கும்
சந்நிதி அவரே – தந்தை என்பவர்
புரிந்ததா புருஷோத்தமரே! //
அரவணை மீது துயில்பவனிடம் சீறும் ஸ்ரீமதி நாச்சியாரை என்னென்பது?
“தந்தையார்? “”என்ற வினாவெழுப்பி தந்தைத்துவம் பற்றிய விளக்கம் தந்த விஷ்ணுவை வைத்தவிழி எடுக்காது பார்க்கிறாள் ஸ்ரீ லக்ஷ்மி. நாமும் தான்.!
எதை சொல்ல? எதை விட? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்! புத்தம் புது விதமாய் புதுமையாய் சிக்கல்களை எழுப்பி சிக்கலை தீர்த்து பாத்திரங்களுக்கு அரிதாரம் பூசி கிறங்கடிக்கிறது.
புனிதம் குறையாது மனிதம் நிறைத்து மறைந்து நிற்கும் மறைபொருளை மாண்புற பேசுகிறது.
“இறுதிச்சந்திப்பில்” ராதை கண்ணனிடம் கூறுகிறாள் //;நாங்கள்உன்னை ரசித்து வாழ்கிறோம்//
என்பது போல்
இந்நூலை
ரசிக்கலாம்
ருசிக்கலாம்
வாசிக்கலாம்! தமிழில் திளைக்கலாம்! இனிமையில் நனையலாம் தொலைந்தும் போகலாம்.!
அத்தனை அருமை. கையிலிருந்தாலே பெருமை!
லா.ச.ரா சப்தரிஷியின் அணிந்துரையே பணிந்துரையாகத் தொடங்குகையில் வேறென்ன சொல்வதாம்.?

இந்தப் புத்தகம் படித்து பிரமித்துப் போனேன். சங்கப் பலகையில் விமரிசனம் எழுதினேன். சகோதரி செல்லம் ஜெரினாவின் விமரிசனம் அற்புதம்.
LikeLike
புலவர் ராதாகிருஷ்ணன், சொற்சுவையும் பொருட்சுவையும் சேர்த்து சுந்தரத் தமிழில் கவிதையாய் கதை எழுதும் விற்பன்னர். அவர் நாவல்களில் ஒவ்வொரு வரியும் பிரமிப்பை அள்ளி அள்ளிக் கொடுக்கும். இது அவரின் முதல் நாவல்; ஆனால் இதன் பெயர் கடைசி குரு. பிரமாண்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் ராதாக்ருஷ்ணனின் நாவலுக்கு மக்களின் எழுத்தாளர் செல்லம் ஜரினாவின் விமர்சனம் பாயசத்தில் முந்திரிப் பருப்புகளாய் இனிக்கிறது. இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம் வாசகர்களின் அதிர்ஷ்டம்.
LikeLike
நானும் படித்து, ரசித்து, என்னிடமும் உள்ள புத்தகம்.
ஸ்ரீராம்
LikeLike