
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
பக்கத்தில் எது நின்றாலும்
பிடித்துக் கொண்டு
மேலேறுகிறது கொடி
அருகில் எது இருந்தாலும்
பிடித்துக் கொண்டு
விடுகிறது பாக்டீரியா
கணினிகளை கைது
செய்யும் வைரஸ்கள்
எதிரில் எவர் இருந்தாலும்
ஏமாற்றத் துடிக்கும் மனிதர்
மறு புன்னகை வீசி விட்டாலே
காதல் சொல்லும் இளைய சமூகம்
புத்திமதி யார் சொன்னாலும்
தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்
வருவது எவராக இருந்தாலும்
கையூட்டு வாங்கி விடும் அதிகாரிகள்
இலவசங்களை அளித்து
அரியாசனம் ஏற நினைப்போர்
எல்லா நாளுமே
எதிர்மறை செய்தி சொல்லும்
நாள் இதழ்கள், ஊடகங்கள், திரைப்படங்கள்
நமது எல்லையைத் காக்கும்
வீரர்களின் மரணம்
இப்படி எது நடந்தாலும்…,
நமக்குள் நம்பிக்கை
இருப்பதால் தான் உயிர் இருக்கிறது !
அதை மட்டும் கட்டிக் காப்போம் …!
– டாக்டர் பாலசாண்டில்யன்

ஆத்திரமூட்டும் ஆயிரம் சொல்
வேண்டாம் இனி வேண்டாம்
அன்பாய் ஒரு சொல் – அதுவே
அமைதி தரும் !
வெற்றி தோல்வி போராட்டம்
மனதுக்குள் இனி வேண்டாம்
‘போதும்’ எனும் சொல் அதுவே
அமைதி தரும் !
நானா நீயா போட்டி எதற்கு?
வேண்டாம் அது வேண்டாம்
‘நாம்’ என்போம் அதுவே
அமைதி தரும் !
புகையும் மதுவும் விஷமாகும்
வேண்டாம் இனி வேண்டாம்
புன்னகைத்து மறப்போம் அதுவே
அமைதி தரும் !
கவலையும் சோம்பலும்
கரையான்கள் அவை வேண்டாம்
உழைப்பதாய் உறுதி கொள்வோம் ..அதுவே
அமைதி தரும் !
தயக்கமும் அச்சமும் தேவையா ?
வேண்டாம் இனி வேண்டாம்
தைரியம் விவேகம் இவையே
அமைதி தரும் !
புரட்சியும் போராட்டமும் புயல் போல்
தடைக்கற்கள் இனி வேண்டாம்
நிதானமாய் இருப்போம் அதுவே
அமைதி தரும் !
பகையும் வன்மமும் எதற்கு ?
வேண்டாம் இனி வேண்டாம்
பரிவு சமாதானம் இவையே
அமைதி தரும் !
