டிபன் பாக்ஸ்

நேற்று வீட்டில் சாமான்களை எல்லாம் எடுத்து அடுக்கி வைக்கையில் ஒரு பழைய டிபன் பாக்ஸ் கண்ணில் பட்டது. எவ்வளவு பழசு என்றால், அது நான் ஸ்கூல் செல்லும் காலத்தில் எடுத்துச் சென்ற டிபன் பாக்ஸ் . பிறகு அது பல வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. கடைசியில் அதில் கோலப்பொடி வைத்திருந்ததாக ஞாபகம். நேற்று திறந்து பார்த்த போது அது காலியாக இருந்தது.
பேருதான் டிபன் பாக்ஸ் ; ஆனால் உண்மையிலே அது ஒரு சின்ன எவர்சில்வர் தூக்கு. நானூறு மில்லி கொள்ளளவு இருக்கும். அதற்கு உள்ளேயே பொருந்தக் கூடிய ஒரு சின்ன தட்டு உண்டு. கொஞ்சம் பொரியலோ , காய்களோ அல்லது சிப்ஸ், சட்னி போன்றவையோ வைத்துக்கொள்ள உதவும். இதை சரியாகப் பொருத்தி டிபன் பாக்ஸை மூடுவது ஒரு கலை. எலுமிச்சம் சாதம் வைத்துவிட்டு, சிப்ஸை உள் தட்டில் வைத்து மூட வேண்டும். தயிர் சாதம் என்றால் உள் தட்டில் ஊறுகாய் இருக்கும்.
வட்ட வடிவமாக சின்ன சிலிண்டர் போலிருக்கும். அதன் காதுகளில் இருந்து அழகாக வளைந்த ஒரு பிடி. அதைப் பிடித்துதான் பாத்திரத்தைத் தூக்கவேண்டும்; அல்லது சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டிக்கொள்ள வேண்டும்,
நானும் என் இரட்டை சகோதரன் கணேசனும் ஆறாம் வகுப்பு- (அப்போதைய ஃபர்ஸ்ட் ஃபார்ம். ) செல்லத் தொடங்கிய போது வாங்கிக் கொடுத்தார்கள். இரண்டு பாத்திரங்களும் ஒரே மாதிரி அழகாக இருந்தது. இது எனது இது உனது என எங்களுக்குள் சண்டை வராமல் இருக்க இரண்டிலும், சீர் கொடுக்கும் பாத்திரங்களுக்கு பேர் அடிப்பது போல ஒன்றில் V.V.G என்றும் இன்னொன்றில் V.V.S என்றும் பெயர் அடித்துக் கொடுத்தார்கள். ரொம்ப காலத்துக்கு அது எங்களுக்குப் பெருமையான விஷயம். வீட்டில் நம்ம பேரில் ஒரு பாத்திரம் .. அடடா!
பள்ளியில் வகுப்புத் தோழர்கள் இடையே நெருக்கமான நட்பு இருக்கும். அதை இன்னும் நெருக்கமாக்குவது விளையாட்டு மைதானங்களும்; மதிய உணவு நேரங்களுமே ஆகும். ஐந்தாம் வகுப்பு வரை “எலிமென்டரி: ஸ்கூல். அது எங்கள் வீட்டுக்கு மிக அருகில் இருந்ததால் ,மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றுவிடுவோம். ஆறாவதிலிருந்து பதினோராம் வகுப்பு (S.S.L.C) வரை இருக்கும் மெயின் ஸ்கூல், இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி ,தி. நகர் பனகல் பார்க் எதிரே இருந்தது. அதுவும் எங்கள் வீட்டிலிருந்து அதிக தூரம் கிடையாது. ஆறு ஏழு நிமிட நடைதான். இருந்தாலும் அது அந்தக் காலத்திலேயே “ஹெவி டிராஃபிக்” ஏரியா; மேலும் வெய்யிலில் நாங்கள் அலையவேண்டாம் என்று எங்கள் தாயார் முடிவு செய்து மதிய உணவுக்கு “டிபன் பாக்ஸ்’ தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்த டிபன் பாக்ஸ் கல்ச்சர் எனக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. முப்பத்திரண்டு மாணவர்கள் கொண்ட எங்கள் ‘பி” செக்ஷனில் ஐந்து அல்லது ஆறு பேர்களைத் தவிர மற்ற எல்லோரும் டிபன் பாக்ஸ் கொண்டு வருவார்கள். பொதுவாக மழைக்காலம் தவிர நாங்கள் வகுப்பறைக்குள் சாப்பிடமாட்டோம். வெளியே மரத்தடியில் போடப்பட்டிருக்கும் பெஞ்ச் களில் அமர்ந்து சாப்பிடுவோம்.
அருகிலேயே வரிசையாக கை அலம்பும் குழாய்கள் பத்து இருக்கும். சாப்பிட்ட பிறகு அங்கே சென்று கை கால் கழுவிவிட்டு , டிபன் பாக்ஸை சுத்தம் செய்து அதிலேயே குடிநீர் நிரப்பிக் கொண்டு வகுப்புக்குத் திரும்புவோம். தனியாக வாட்டர் பாட்டில் எல்லாம் அப்போது கிடையாது. ஆனால் , ஆசிரியர் வராத இடைவெளிகளில் நாங்கள் போடும் சத்தத்திற்கு அவ்வப்போது தொண்டையை நனைத்துக் கொள்ள இந்த டிபன் பாக்ஸ் வாட்டர் தான் உதவி செய்யும்.
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் A to H வரை -செக்ஷன்கள் இருந்தன. வெவ்வேறு செக்ஷன் மாணவர்கள் உணவு இடைவேளையில் ஒன்றாகப் பழகும் வாய்ப்பு உண்டு. காரணம், உணவு பழக்க வழக்கத்திற்கு ஏற்ப மதிய உணவு சாப்பிடும் குழு உருவாகிவிடும். வகுப்பைத் தாண்டி பள்ளித் தோழமை வளரும் இடம் இது.
வருட ஆரம்பத்தில் அவரவர் டிபன் பாக்ஸில் இருந்து சாப்பிடும் மாணவர்கள் போகப் போக ஒருவருக்கொருவர் “ஷேர்” செய்து சாப்பிடும் நெருக்கம் உருவாகும். பொதுவாகவே நம் வீட்டு சாப்பாடு நமக்கு அலுத்திருக்கும்; நண்பன் வீட்டு சாப்பாடு வித்தியாசமாக இருப்பதால் அதை சுவைக்கத் தோன்றும். இந்த “கலவை சாப்பாட்டில்” இருக்கும் சுவையே தனி. இப்போது நினைத்தாலும் நாக்கில் இனிமை ஊறுகிறது. கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் யார் வீட்டில் எது நன்றாக சமைப்பார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். அவரவர் இல்லங்களிலிருந்து பண்டிகை நாட்களில் எடுத்துவரும் லஞ்ச் மெனு மிக நீளமாகிவிடும்.
டிபன் பாக்ஸ் எடுத்துச் சென்று சாப்பிடுவதில் உள்ள மிக முக்கியமான அட்வாண்டேஜ், வேகவேகமாய் சாப்பிடுவிட்டு உடனே விளையாடப் போகும் வசதி. ஒருமணி நேர லஞ்ச் பிரேக்கில் பதினைந்து நிமிடங்களில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு விளையாடப் போய்விடுவோம். சாப்பிட்ட பின் தூக்கம் வரதெல்லாம் இப்பத்தான். அந்த காலத்தில் இள வயதில் சாப்பிட்ட பின் உடலில் எனர்ஜி அதிகமாகிவிடும். சுறுசுறுப்பும் எறிவிடும்.
இன்னொரு அட்வாண்டேஜும் இருந்தது. வீட்டிலிருந்து கொண்டு வந்து, நண்பர்கள் பகிர்ந்து கொண்ட திண்பண்டங்கள், பள்ளி வாசலில் விற்கும் விசிறி போல அழகாக வெட்டப்பட்டிருக்கும் உப்பு மிளகாய்த் தூள் தடவிய மாங்காய் பத்தைகள், வேர்க்கடலை பட்டாணிகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்துக் கொண்டு, வகுப்பறைக்குள் ஆசிரியர் பாடம் நடத்தும் போதே ,அவர் பார்க்காத நேரத்தில் கொறிக்கும் வசதி. ( சிலர் இந்த விவகாரத்தில் ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டு அடிவாங்கிய சோகக்கதைகளும் உண்டு)
சின்னத் தூக்குப் போலிருந்த டிபன் பாக்ஸ், பள்ளியோடு டாடா சொல்லிவிட்டது. அந்த இடத்தில் இரண்டு அடுக்கு டிபன் பாக்ஸ்; இது சைஸ் பெரிசு; எவர்சில்வர் பாத்திரம் எனவே கனம் கொஞ்சம் அதிகம். பட்டையான பக்கத் தகடுகளில் அமரும் பாத்திரம் ஒவ்வொன்றிற்கும் மூடி உண்டு. பக்கத் தகடுகள் மேலிணைத்து பிரஸ் செய்தால் லாக் ஆகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
கல்லூரியில் பி. யு. சி. படிக்கும் போது ஒரு நாள்தான் இதை எடுத்துச் சென்றிருப்பேன்; பயங்கர கமெண்ட்ஸ் . அடுத்த நாளே வட்ட வடிவில் இருக்கும் இன்னொரு டிபன் பாக்ஸ், கையடக்கமாக புக்ஸ் கூட சேர்த்து அப்படியே எடுத்துப் போகலாம். அதைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். ( அதாவது டிபன் பாக்ஸ் எடுத்துக் கொண்டு போகிறமாதிரியும் இருக்கணும்-போகாதமாதிரியும் இருக்கணும் !)
ஒரு வருஷம் ஓடியே போயிடிச்சு. அடுத்த வருஷம் அதே கல்லூரியில் டிகிரி சேர்ந்தேன். கல்லூரியில் பள்ளிகளைப் போல நிறைய பேர் டிபன் பாக்ஸ் கொண்டு வருவதில்லை. இதற்கு ஒரு காரணம், டிபன் பாக்ஸ் கொண்டு வரவங்களை பசங்க செமையா கேலி செய்வார்கள். இன்னொன்று இதைக் காரணம் காட்டி பலர் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு செல்வார்கள். நானும் ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்தேன். ஆறு மாதத்தில் வயிறு கெட்டுப் போச்சு.
எனது நண்பருள் ஒருவன் சத்தியமூர்த்தி. அவன் அப்போது மேற்கு மாம்பலத்தில் இருந்தான். அவனுக்கு மதிய உணவு காரியரில் வீட்டிலிருந்து ஒரு வேலையாள் கல்லூரிக்குக் கொண்டு வருவான். அவனே எனக்கும் காரியரில் சாப்பாடு எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகென்ன? ராஜ வாழ்க்கைதான்.
காலையில் கல்லூரிக்குக் கிளம்பும்போது கையில் ஒரு நோட் புக் மட்டும்தான் இருக்கும். வேறெதையும் சுமக்க வேண்டியதில்லை. சாப்பாட்டை அவசரமாக கட்டிக் கொடுக்க வேண்டிய வேலை என் தாயாருக்கும் இல்லை. எனவே முழுமையான சாப்பாடு மூன்றடுக்குக் காரியரில் வைக்கப் பட்டு அனுப்பப்படும். எங்கள் வகுப்பில் எனக்கு மட்டும்தான் இந்த வசதி இருந்தது. சத்தியமூர்த்தி ஃபிசிக்ஸ் டிபார்ட்மெண்ட். அவன் என்னோடு மதிய உணவுக்கு மட்டும் வந்து இணைந்து கொள்வான். இன்னும் நாலைந்து நண்பர்கள் அவரவர்கள் டிபன் டப்பாக்களோடு எங்களுடன் சேர்ந்துகொள்ள ஒரு சிறு கூட்டமாக நாங்கள் உணவு உண்போம்.
சில நாட்கள் காரியரில் “வாழை இலை வைத்து அனுப்பியிருப்பார்கள். அன்று “இலை போட்டு” சாப்பாடு பிரமாதமாக நடக்கும். டிபன் பாக்ஸ் கொண்டுவந்த போது அவசர அவசரமாக சாப்பிட்டது போக , காரியரில் மதிய உணவு வர ஆரம்பித்த பிறகு , கூடிக் கும்மாளம் போட்டுக் கொண்டு வகுப்புக்கான மணி அடிக்கும் வரை மெதுவாகச் சாப்பிடும் “கல்ச்சர்” வளர்ந்தது. இந்தக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அல்லது பண்டிகை நாட்களில் சிலர் ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல் ,பாயசம் போன்றவற்றை எடுத்துவர ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட மதிய உணவு சாப்பிடுவதை நாங்கள் ஒரு கலையாகவே பயிலத் தொடங்கினோம்.
இதன் மூலம் எங்களுக்குச் சில புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். சிலரை நாங்கள் “விருந்தாளிகளாக” அழைப்பதும் உண்டு. இதெல்லாம் இருந்தாலும், “ஹோட்டலில்” சாப்பிடும் சில “எதிரிகள்” எங்களை “தீனிப் பண்டாரங்கள் “ என்று அழைப்பதுண்டு.
காரியர் மூலம் வீட்டிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிடும் இந்த மதிய உணவு கூட்டம் பற்றி சில ஆசிரியர்களுக்கும் தெரிந்துவிட்டது. எங்களில் யாருக்கேனும் “கிளாஸ் டெஸ்டில் “ மதிப்பெண் குறைந்துவிட்டால் “ நீங்க எல்லாம் படிக்க எங்க வரீங்க ! சாப்பிடத்தானே வரீங்க “ என்று ஆசிரியர்கள் சொல்லும் அளவு எங்கள் பெருமை கல்லூரியில் பரவி இருந்தது.
மேற்படி இனிய அனுபவம் எல்லாம் “டிகிரி” படிப்பின் போதுதான் இருந்தது. முதுகலைப் படிப்பிற்கு நான் வெளியூர் சென்று “ஹாஸ்டலில்” தங்கிப் படிக்க ஆரம்பித்த பிறகு இத்தகைய வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால் அது மட்டுமென்ன .. அது இன்னொரு வகையான அனுபவம் !
“சமையல் அறையில் இத்தனை நேரம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ?” என்ற மனைவியின் குரல் கேட்டதும், பழைய டிபன் பாக்ஸை திரும்ப அதே இடத்தில் வைத்துவிட்டு ஹாலுக்குள்” நுழைந்தேன்.

சாப்பாட்டைப் பற்றி ருசிகரமான எழுத்துக்கள் என் பசியைத் தூண்டிவிட்டது. நான் விட்ட ஜொள்ளு அந்த தின்பண்டங்களுக்கு மற்றுமல்ல .. தேன் சுவை போல எழுதப்பட்ட எழுத்துக்களுக்கும் …
LikeLike
சுவையான நினைவுகள் என்று சொல்லலாமா? நானும் எனது பள்ளி கால டிபன் பாக்ஸை சமீபத்தில் கண்டெடுத்தது பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். எங்கே இருக்கிறது என்று தேட வேண்டும் . எனக்கு தான் அது பொக்கிஷம். பாஸுக்கு – அதாவது மனைவிக்கு – அப்படி அல்ல! என் அந்த டிபன் பாக்ஸ் சின்ன வயதில் நான் ஓரிருமுறை கீழே போட்டதில் டிபன் பாக்ஸ் மூடி கொஞ்சம் நெளிந்திருக்கும்!
ஸ்ரீராம்.
LikeLike