என் இனிய LUX
நாங்கள் தேனீ வளர்த்த கதையை (எங்களின் வித்யாசமான பெட்!) சொல்லியிருந்தேன். இப்போது மாடு வளர்த்த கதை!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை, விளக்கேற்றும் நேரம் எங்கள் வீட்டுக்கு முதன்முதலாய் வந்ததால், எங்கள் பாட்டி அந்த அழகிய பசுமாட்டிற்கு ‘லஷ்மி’ என்று பெயரிட்டாள். “தமிழில் ’மாடு’ என்றால் செல்வம்னு அர்த்தம், தெரியுமா குழந்தைகளா?” என்றாள். பளபள கருப்பு நிறத்தில் OREO போல ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகள். குறிப்பாக, நெற்றியில் ஒரு சங்கு வடிவில் தீற்றல்!
பாட்டிக்கு லக்ஷ்மி என்றாலும் எங்களுக்கு, செல்லமாக ‘LUX’. வீட்டருகே ஒரு சின்ன ஷெட் போட்டோம். மலைகிராமத்தில் இருந்ததால் புல்வெளிகளுக்குப் பஞ்சமில்லை.
நாங்கள் காபி குடிக்கும் காலைப் பொழுதில், வீட்டு வாசல் முன் வந்து, கழுநீருக்காகக் காத்திருக்கும்.
“இரண்டையும் மாற்றிக்கொடுத்தால் நமக்கும் வித்தியாசம் தெரியாது, மாட்டுக்கும் வித்யாசம் தெரியாது”, என்று அம்மா கொடுத்த காபியைக் கிண்டலடிப்பார் அப்பா.
அது மேயக் கிளம்புவதற்கு முன், பாட்டி மூன்று சுற்று சுற்றி வந்து பின் அதன் நெற்றிக்கு மஞ்சள், குங்குமம் பூசி, வால் பகுதியைத் தொட்டுக் கும்பிடுவாள்.
நாங்கள் பள்ளி செல்லும் வழியில், எங்காவது பார்த்தால், ‘ம்ம்மா…!’ என்று அழைக்கும். கூட இருக்கும் அதன் தோழிகளைப் பார்த்துத் தலையசைக்கும். நம்மை அறிமுகப் படுத்துகிறதோ?!
மாலை ஆறு மணியானால் வீடு திரும்பிவிடும். சிலநாள் லேட் ஆக வந்து, அப்பாவிடம் திட்டு வாங்கும். குழந்தைமாதிரி எங்களிடம் அடைக்கலத்துக்கு வரும். நாங்களும் அதன் கழுத்தை ஆதரவாகத் தடவி, “விடு நம்ம அப்பா..தானே, சொன்னால், சொல்லிட்டுப் போரார்” என்று தேற்றுவோம். அடுத்த ரெண்டு நாட்கள், அப்பாவிடம் போகாமல் பிகு பண்ணிக்கொள்ளும்.
அதற்கு, குளிப்பதென்றால் கொள்ளை குஷி. எங்கள் ஊரில் அழகாகப் பாயும், ஆற்றில் இறக்கி விட்டால், நீரைவிட்டு வெளியே வராமல் அடம் பிடிக்கும். போன பிறவியில், யானையாகப் பிறந்திருக்குமோ என்னவோ?
புற்கட்டு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு என்றில்லாமல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என்று எல்லாம் சாப்பிடும். வெல்லக்கட்டிமேல் கொள்ளை ஆசை.
எங்கள் பாட்டி, “நாம சாப்பிடும்போது, பேசாமல், லஷ்மிக்கும் சேர்த்து ஓர் இலை போட்டுவிடலாம்” என்பாள் கலகலப்பாக; அளவில்லாமல், அமுதமாய் பாலைப் பொழியும். மாட்டுப்பொங்கல் சமயத்தில், அதன் கொம்புக்கு வர்ணம் பூசினால், பொறுமையாகக் காண்பிக்கும்.
அது கருவுற்றிருந்த காலத்தை மறக்க முடியாது. மிகவும் சிரமப்பட்டு நடக்கும். சுமை தாங்காமல், கண்ணீராய் வடிக்கும். மாடுகள் பற்றி நன்கு விபரம் அறிந்தவர்கள், இப்போது நிறைமாதம், அதை வெளியே எங்கும் அனுப்பாதீர்கள். அடிக்கடி தொழுவத்திற்குச் சென்று கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
ஒரு நள்ளிரவு, வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு இடி, மின்னல், பலத்த மழை. காலை தொழுவத்திற்குப் போய்ப் பார்த்தபோது, அழகான கன்றுக்குட்டியை ஈன்றிருந்தது. யாருடைய துணையும் இன்றி, பூமிதேவியே தாங்கிக் கொண்டதனால் பாட்டி, கன்றுக்குட்டிக்கு ‘பூமா’ என்று பெயரிட்டாள்.
கன்றுக்குட்டி முட்டி முட்டி பால் அருந்துவதை நெகிழ்ச்சியுடன் பார்த்தோம். எங்களுக்கெல்லாம் வீட்டிற்கு ஒரு குழந்தை வந்ததைப்போல் பெரு மகிழ்ச்சி!
நாட்கள் நகர, தாயும், மகளும் சேர்ந்து போய் மேய்ந்துவிட்டு வருவார்கள். பாட்டி, பூமாவின் மேல் எங்களை விட ஒரு பங்கு அதிகம் அன்பு காட்டினாள்.
இப்படி நாட்கள் இனிமையாகப் போய்க் கொண்டிருக்க, பணி காரணமாக, எங்கள் அப்பாவுக்கு இடமாற்றம் வந்தது. புது இடத்தில் மாடுகளெல்லாம் வைத்துக்கொள்ளமுடியாத நிலை. இரண்டு அன்புள்ளங்களையும், உள்ளூரிலேயே ஒருவரிடம் கொடுத்தோம்.
அடுத்தநாள் மாலை, பேக்கிங் எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம். பார்த்தால் வழக்கம்போல இரண்டும் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது. அப்புறம் புது ஓனர் வந்து கூட்டிப் போனார்.
எல்லா உடைமைகளையும் லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, நாங்கள் ஊரை விட்டுக் கிளம்பினோம். ஊர் கோயிலின் வாசலில் இருந்த புல்வெளியில் இரண்டும் மேய்ந்து கொண்டிருந்தன. அதைக் கண்டு, வாகனத்திலிருந்து இறங்கினோம். எங்களைப் பார்த்ததும் இரண்டும் ஓடி வந்தன. பூமா, பாட்டியை வண்டியின் ஜன்னல் வழியே தேடியது.
பாட்டி இறங்கி வந்து அதன் கழுத்தைத் தடவ, அதன் கண்களில் கண்ணீர். லக்ஸ், எங்களையே சுற்றி, சுற்றி வந்தது.
வாகனத்தில் மனமின்றி ஏறினோம். வண்டி மெதுவாக நகர, இரண்டும் பின்னாலயே தொடர்ந்தன. எங்கள் கண்களில் குளம். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம்.
இனி, No more Pets in life.
பிணைப்பின் வலிமையை விட, பிரிவின் வலி சற்று அதிகம்தானே.
(முற்றும்)
அடுத்த மாதத்திலிருந்து புதிய தொடர்!
‘பாலைவனத்தில் ஒரு நீல ரிப்பன்’
(முன்னோட்டம்)
எகிப்து சுற்றுலா என்பது, பூமிப்பந்தின் வரலாற்றுப் பக்கங்களைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் புரட்டிப் பார்க்கும் ஒரு மகத்தான அனுபவம்!
எகிப்து, பண்டைய நாகரீகத்தின் எச்சங்களை, இன்னும் மிச்சம் வைத்து உலகுக்குத் திறந்து காட்டும் ஓர் அதிசயப் பெட்டகம். அங்குள்ள கற்களும், மணல்களும், நைல் நதியின் அலைகள் தொட்டுச் செல்லும் கரைகளும், மனிதகுல வரலாற்றை இன்றும் சொல்லியபடி உள்ளன.
சரித்திரப் படையெடுப்புகளைக் கண்ணாடி போல் காட்டும் அலெக்சாந்திரியா, பல ஆட்சிகளின் கைமாறல்களை ஒரு சதுரங்கப் பலகையைப் போலத் தாங்கிக் கொண்டிருக்கும் கெய்ரோ, எகிப்திய கலாச்சார வடிவங்களின் சின்னமாக விளங்கும் லக்சர், நைல் நதியின் சீற்றத்துக்கு அணைபோடும் அஸ்வான், என நகரங்கள் பல.
முக்காலத்திற்கும் சவால் விட்டபடி பல புதிர்களை ஒளித்து வைத்திருக்கும் பிரமிடுகள், பிரம்மாண்ட சிலைகளுடன் நிமிர்ந்து நிற்கும் அபு சிம்பல், முற்காலச் செழுமையைச் சொல்லும் பிலே, கார்நாக் போன்ற கோயில்கள், அதற்குள் வரலாற்றுச் சின்னங்களாக நிற்கும் எகிப்திய தெய்வங்கள்,
இறந்தவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேலி ஆஃப் தி கிங்ஸ், அங்கு மணலில் புதைந்து கிடக்கும் மர்மங்கள், சூரிய ஒளியில் ஜொலிக்கும் நைல் நதி, அதன் நீரோட்டத்தில் தாலாட்டியபடி செல்லும் நைல் க்ரூஸ் கப்பல், அதிகாலை மஞ்சள் வானத்தில், வண்ண மயமாகப் பறக்கும் ஹாட் ஏர் பலூன்கள், மனதை மயக்கும் இசை, பிரமிக்க வைக்கும் கலாச்சாரம், வித்யாசமான உணவு, அலங்காரப் பருத்தி உடைகள் இன்னும் பற்பல..
இவற்றை நேரில் கண்டு, அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்திரநீலன் சுரேஷ் எழுத்தில், எகிப்து பயணக் கட்டுரை.
‘பாலைவனத்தில் ஒரு நீல ரிப்பன்’
அடுத்த இதழில் ஆரம்பம்!



மாட்டுச் செல்வம்! மாட்டுச் செல்லம் (pet)! நீரோடை போன்ற வரிகளில் அந்த மாடும் கன்றும் சொல்லப்பட்டது இனிமை.
LikeLike