அன்புடன் அந்தரங்கம்!

நான் கனகா அக்காவின் முன் அமைதியாக அமர்ந்திருந்தேன் .

நான் அழைப்பு மணியை அழுத்திவிட்டு தர்மசங்கடத்துடனும், மித மிஞ்சிய சோகத்துடனும் நின்று கொண்டிருந்தபோது, ரவிதான் வந்து கதவை திறந்தான். என்னை பார்த்ததும் அவன் முகத்தில் துக்கம் கரைபுரண்டது.

‘அண்ணா…’ என்று வேறு எதுவும் சொல்லாமல் என் தோள்களை பற்றிக்கொண்டு விம்மினான். கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் பொங்கி வந்தது. எனக்கும், கண்களில் நிரம்பிய கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

‘தமிழ் நம் எல்லோரையும் ஏமாற்றிவிட்டாள்,’ என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு உள்ளே அழைத்து சென்றான். ஹாலில் ஒரே ஒரு விளக்குதான் எரிந்து கொண்டிருந்தது. அந்த சற்று மங்கிய வெளிச்சத்தில் என்னால் கனகா அக்கா ஹாலின் நடுவில் இருந்த சோபாவில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

ரவி ‘அம்மா..’ என்றான்.

கனகா அக்கா மெதுவாக என்னை திரும்பி பார்த்தார். அவர் முகமும், அந்த மங்கலான வெளிச்சமும், சோகத்தை வெளிப்படையாக காட்டியது.

கனகா அக்காவுக்கு எப்போதுமே சிரித்த முகம்; அதில் இப்போது அந்த சிரிப்பை பார்க்க முடியவில்லை. வெறுமையாக இருந்தது. என்னை பார்த்ததில் அவருக்கு என்னை புரிந்து கொண்ட பாவம் தெரிந்தாலும் வேறு எந்த உணர்ச்சியையும் என்னால் கிரகிக்க முடியவில்லை.

ஐம்பத்தைந்து வயது மகளை இழந்துவிட்ட எழுபத்தி இரண்டு வயது தாயிடம் என்னமாதிரியான உணர்வை எதிர்பார்க்க முடியும்?

நான் அருகில் சென்று அக்காவின் கைகளை பற்றிக்கொண்டேன். அவை லேசாக நடுங்குவது போல் தோன்றியது.

‘நம்ப முடியவில்லை அக்கா..தமிழ் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போய்விடுவாள் என்று…’ இதை சொல்லி முடிக்கும் முன்பே என் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது.

நான் அவர் எதிரில் அமர்ந்தேன். அக்கா பதில் சொல்லவில்லை. என்னையும் பார்க்கவில்லை. அவர் பார்வை எங்கோ ஜன்னல் வழியே இருட்டை ஊடுருவிக் கொண்டு செல்வது போல் தோன்றியது.

எனக்கு அசந்தர்ப்பமாக, தமிழ் அந்த ஜன்னல் வழியே தன் பிஞ்சு கரங்களை நீட்டி ‘அண்ணா அண்ணா’ அன்று சிரித்துக்கொண்டே அழைத்தது நினைவுக்கு வந்தது.

 

எத்தனை ஆண்டுகளுக்கு முன்? யார் சொன்னது காலம் நினைவுகளை அழிக்கும் என்று? ஐம்பது வருஷங்களுக்கு முன் என் பக்கத்து வீட்டுக்கு வந்த சிறுமி தமிழ்ச்செல்வி ஐந்து வயது சிறுமியாக சிரித்துக் கொண்டே கையசைத்தது என்று நினைவில் வந்து நிற்கும் என்று?

ஓரிரு நிமிடங்கள் அமைதியில் கழிந்தது. நானும் அதை குலைக்க விரும்பவில்லை. கனகா அக்காவும்தான்.

அந்த அமைதியில் எனக்கு தமிழ் என்ற தமிழ்செல்வியின் வாழ்க்கை பயணம் மனதில் நிழற்படமாக ஓடியது.

நானும், தமிழின் குடும்பமும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். என் வீட்டில் நான், என் அப்பா அம்மா மட்டுமே. தமிழ் வீட்டில் அவள் தந்தை சிவசுந்தரம் என்ற தமிழாசிரியர், அவர் மனைவி கனகம், மகள் தமிழ் செல்வி, மகன் முகில் மற்றொரு மகள் கவிதா. மூவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள் தான். தமிழ் எம் ஏ தமிழில் தேர்ச்சி பெற்று மாநில அரசில் நல்ல வேலையில் இருந்தாள். முகில் சிறிய அளவில் சொந்தமாக தொழில் செய்து கொண்டிருந்தான். கவிதா பொறியியல் படித்து கணினி துறையில் லண்டனில் வேலையாகி சென்றாள்.

சிவசுந்தரம் மிகவும் கெடுபிடி உள்ளவர். கொள்கை பிடிப்புகளும், பிடிவாதங்களும் மிக அதிகம். அவர் வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. மிகுந்த கடவுள் நம்பிக்கையும், மத கொள்கைகளையும் கடுமையாக பின்பற்றுபவர்.

அவர் குடும்பத்தில் அவருக்கு இடி தமிழால் வந்தது. அவள் ஓர் வேற்று மத இளைஞனை காதலித்தாள். அந்த பையன் அவர் குடும்பங்களுக்கு அறிமுகம் ஆனவன், நல்லவன், நல்ல வேலையில் இருப்பவன் என்றபோதும், அதை அவரால் துளி கூட ஏற்று கொள்ள முடியவில்லை. அதோடு பிள்ளை வீட்டினர் நல்லவர்களாக இருந்த போதும், அவர்கள் தமிழை மதம் மாற சொல்லி வற்புறுத்தினர். அது சிவசுந்தரத்திற்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.

சிவசுந்தரம் தமிழின் மேல் அனல் கக்கினார். ‘நீ சொல். உனக்கு உன் மதத்தை துறந்து இன்னோர் மதத்திற்கு மாறி உன் வாழ்க்கையை அமைத்து கொள்ள விருப்பம்தானா? உன்னை நான் அப்படியா வளர்த்தேன்? தேவாரமும், திருவாசகமும், அருணகிரிநாதரும் பாடிய பாடல்களையும், தெய்வங்களையும் மறந்து உன் பெயர் உட்பட எல்லாவற்றையும் அவன் ஒருவனுக்காக மாற்றிக்கொள்ள போகிறாயா?’ என்று கர்ஜித்தார்.

தமிழ் பதில் சொல்லவில்லை. 

‘நான் என் மனசாட்சிக்கு எது சரி என்று தெரிகிறதோ அதை கட்டாயம் செய்வேன் அப்பா.’ என்றால் கண்களில் வழிந்த கண்ணீருடன்.

‘அப்போ உன் மனசாட்சி உன் விருப்பத்துக்கு உரியவனை கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கிறது, அப்படித்தானே?’

தமிழ் பதில் சொல்லவில்லை. மௌனமாக இருந்தாள்.

‘தொலை..என் கண் முன் நிற்காதே, இனி உன் முகத்தை கூட பார்க்க நான் விரும்பவில்லை, ‘ என்று கையை வெளியே காட்டி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார். பின் ஓர் நாற்காலியில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார்.

எல்லோருக்கும், அப்போது அந்த காட்சி எதோ நாடகத்தில் வருவது போல் தோன்றியது. அப்போது மதம் மாறிய திருமணங்கள் குறைவு. இன்று போல் இல்லை. தயக்கம், தவிப்பு, சண்டை, பிரிவுகள் தோன்றிக்கொண்டுதான் இருந்தன. 

தமிழின் திருமணம் அகில்லுடன் நடந்தது அவர்கள் மத சடங்குகளின்படி. அவள் பெயரைக்கூட மாற்றினார்கள்.

தமிழின் குடும்பத்தில் அப்போது எவராலும் அவரை எதிர்த்து பேச முடியவில்லை; வழியும் இல்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எந்த பேச்சும், போக்குவரத்துகளும் இல்லாமல் இருந்தது.

ஆனால், ஆறு மாத முடிவில் சிவசுந்தரம் கடும் மாரடைப்பில் மரணம் அடைந்தார். பலர் தமிழின் செயல்தான் காரணம் என்று கூறினர். அப்படி கூட இருக்கலாம் என்றுதான் தோன்றியது. தமிழ் அவருக்கு மிகவும் நெருங்கிய பெண். அவள் அவரை முழுமையாக பகைத்துக்கொண்டதுதான் காரணம் என்று ஊர் பேசியது. ஆனால், தமிழின் குடும்பத்தினர் ஓர் வார்த்தை கூட தமிழை தாழ்த்தி பேசவில்லை. தமிழும்,  நிகிலும் இருந்து சடங்குகளில் பங்கு பெற்றனர்.

ஓர் வகையில், குடும்பத்தலைவனின் மரணம் அவர்களை இணைத்தது.

காலம் எவருக்காகவேனும் நிற்கின்றதா என்ன? அது ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. தமிழ் மிகச் சிறந்த அராசாங்க வேலையில் சேர்ந்து, தன் திறமையால் விரைவாக முன்னேறினாள். ஓர் மகளையும் பெற்று அவளும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்து தான் காதலித்தவனேயே மணந்து கொண்டாள். அந்த பெண் தமிழ் மணம் செய்த குடும்பத்தின் மதத்தை சேர்ந்தவன் என்பதால் எந்த பிரச்சினையும் எழவில்லை.

தமிழ் மட்டும் தன் இறை நம்பிக்கையும், தமிழ் பற்றையும் விடவில்லை. வேலையில் இருந்தபோதும் தமிழ் கவிதைகள் எழுதுவதிலும், படிப்பதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம். அது காலத்தின் ஓட்டத்திலும் மாறவில்லை.

ஆனால்,

தமிழின் ஐம்பதாவது வயதில் அவளுக்கு சோதனை ஆரம்பித்தது. அவளின் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது . அவைகள் எல்லாம் இந்த நாளைய மருத்துவ முன்னேற்றத்தால் சீர் செய்யப்பட்டு சிலகாலங்கள் அமைதியாக சென்றது. ஆனால், விதியின் விளையாட்டை யாரால் தடுக்க முடியும்? எப்போதும் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் பல வேலைகளையும் பார்த்து வந்தவளை பலவிதமான உடல் உபாதைகள் தாக்கின. சில மிதமாக, பல பலமாக.

மருத்துவமனை விஜயங்கள் அதிகமாயின. உடல் சோர்வு கூடியது. நாளுக்கு நாள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக சீர் குலயத்தொடங்கியது. கிட்டத்தட்ட அவளே ஓர் சமயத்தில் தன் முடிவை எதிர்பார்த்திருப்பவள் தோன்றியது. ஆனாலும், தன் இறை நம்பிக்கையும், தன் போய்ச் சேர்ந்த்திருக்கும் மதத்தின் இறை நம்பிக்கையையும் அவள் ஒரு போதும் விடவில்லை.

ஓர் நாள் சோர்ந்து போன அந்த உடலும், உயிரும் முழுமையாக ஓய்ந்து போயிற்று.

வெளி நாட்டில் அந்த நேரத்தில் இருந்த எனக்கு செய்தி ஓரளவு எதிர்பார்த்தது தான் என்றாலும், அவள் வாழ்க்கையின் முடிவு சொல்லமுடியாத துக்கத்தை தந்தது என்னவோ நிஜம்.

கனகா அக்கா திடீரென்று என்னை பார்த்து சொன்னார். ‘உனக்கு நினைவு இருக்கிறதா? தமிழ் அவள் அப்பாவிடம் போகும்போது சொன்ன சொல்?’ என்று கேட்டார்.

நான் சற்று திகைத்து விட்டு ‘ஏன்?’ என்றேன்.

‘உங்கள் மகள் உங்கள் நம்பிக்கையை ஒருநாளும் குலைக்க மாட்டாள். அவள் உங்கள் மகளாகத்தான் சாகும்போது கூட இருப்பாள்’ என்று.’

‘ஆமாம்..நினைவிருக்கிறது..அதெற்கென்ன? ‘ என்றேன்.

கனகா அக்கா என் முகத்தை நேராக பார்த்தார்.

‘தமிழின் உடல் அவர்கள் புதைக்க படவில்லை. எரியூட்டப்பட்டது. தெரியுமா?’ என்றார் நடுங்கும் குரலில்.

‘ஓ, ஆமாம். பார்த்தேன்’ என்றேன்.

‘தமிழ் தான் தனக்கு தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையை அவள் அவளின் நம்பிக்கைகளுக்கு முரண் இல்லாமல் வாழ்ந்தாள். அவள் எந்த முறையில் ஆண்டவனிடம் செல்ல வேண்டும் என்று விரும்பினாளோ, அதே முறையில் அவர் பாதங்களை அடைந்து விட்டாள். அவள் என் மகள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவள் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு நாளும் மீறவில்லை. அவள் பிறந்த மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் ஒரு போதும் துறந்ததில்லை. அதை விட என்ன செய்திருக்க முடியும்? அவள் மனதிற்கு பிடித்த கணவன். அவள் விரும்பிய வாழ்க்கை. ஆனால், அதற்காக அவள் எந்த விதமான சமரசங்களை செய்து கொள்ளவில்லை. அது எனக்கு அவள் மேல் உள்ள மதிப்பை மேலும் கூட்டியிருக்கிறது. உனக்கு புரிகிறதா?’ என்றார் உறுதியான குரலில்.

நான் பதில் சொல்ல ஒன்றுமில்லை.

‘சொல்வதும், செய்வதும் வேறு வேறாக இருக்கும் இந்த நாட்களில், தான் சொன்ன சொல்லை தன் இறுதியிலும் காப்பாற்றிய என் மகள் தமிழை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.’ என்றார் அக்கா.

காதல், காசு, பதவி என பல காரணங்களுக்காக தங்கள் இறை நம்பிக்கையையும், தங்கள் செய்யும் சத்தியங்களின் முக்கியத்துவத்தையும், எளிதாக காற்றில் பறக்கவிடும் இந்த நாட்களில், தமிழின் உறுதியான மனமும், தெளிவான நம்பிக்கையும் எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. அதை மதித்து நடந்து கொண்ட அவள் கணவன் அகில் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பையும் தந்தது. இதுவன்றோ காதல்? மன ஒற்றுமை? இதுவன்றோ மனம் ஒத்த திருமணம்?

துக்கம் தெளிவாக தெரிந்தபோதிலும். கனகா அக்கா குரலில் நடுக்கத்துடன் உறுதியும், பெருமையும், அழுத்தமாக, தெளிவாக தெரிந்தன.

என்னிடம் பதில் சொல்ல வார்த்தையில்லை. இருந்தாலும், அவை வெறும் அர்த்தமற்றவையாகத்தான் இருந்திருக்கும். நான் பதில் சொல்லவில்லை.

என் கண்ணீரை துடைத்துக்கொண்டு மெளனமாக வெளியே வந்தேன்.