பசி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia  Tamil ‘பிரட் பக்கோடா இன்னும் ஒன்று கொடு’

‘இந்தாருங்கள் மேம்’

‘நல்ல பசி, நன்றாக இருந்தது, எவ்வளவு ஆயிற்று’

‘எழுவது ரூபாய்’

‘ஜிபே நம்பர் சொல்’

 ‘என்னிடம் ஜிபே கிடையாது மேடம்’

 ‘ஐயகோ என்னிடம் பணம் கிடையாது, நான் எப்போதும் பணத்தை  எடுத்து செல்வதில்லையே, சரி உன் வீட்டில் யாருடைய ஃபோன் நம்பராவது சொல்லு, ஜிபே பண்ணி விடுகிறேன்’

 ‘இல்லை மேடம் எனக்கு ஒரு வயதான அம்மா தான் வீட்டில் இருக்கிறார்கள், அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது’

 ‘இப்போது என்ன செய்வது?’

 ‘இந்த பக்கம் வரும்போது கொடுங்கள் மேம்’

 ‘இந்தப் பக்கம் எப்போதாவதுதான் வருவேன்,  இப்போது என்ன செய்வது, என்னிடம் பணம் இல்லையே’

  ‘பரவாயில்லை மேம், பசிக்கு நீங்கள் சாப்பிட்டு விட்டீர்கள், நீங்கள் திரும்பி இந்த பக்கம் வரும்பொழுது பணத்தை கொடுத்து விடுங்கள்’

  ‘இதை நான் எப்படி உனக்கு திருப்பித் தருவேன்?’

  ‘நீங்கள் வேறு யாருக்காவது உதவி செய்தீர்கள் என்றால் அது எனக்கு செய்த மாதிரி ஆகிவிடும்’

  ‘உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா நடக்கும்’

  ‘சரி பார்க்கலாம்’

  

‘அம்மா என்னம்மா? நான் பக்கோடா போட்டுக் கொண்டிருக்கிறேன்;

  ‘வீட்டில் ரேஷன் இல்லை, எனக்கு உடம்பு முடியவில்லை, கொஞ்சம் கோதுமை மாவு, பருப்பு வாங்கிக் கொண்டு வா’

  ‘சரி அம்மா’

 ‘ ஐயோ இன்று பக்கோடா வித்தே போகவில்லையே, என்னிடம் எப்போதும் பைசா இருக்கும், அந்த மேம் பணம் தரவில்லை, என்னிடம்  இப்பொழுது 100 ரூபாய் தான் இருக்கிறது, சரி பார்ப்போம், அந்த கடைக்காரனிடம் சொல்லி வாங்கிக் கொண்டு செல்வோம்’

‘ஐயா எனக்கு இரண்டு கிலோ கோதுமையும், சிறிது பருப்பும் தேவை’

‘இந்தா எடுத்துக் கொள்’

‘எவ்வளவு ஆயிற்று?’

‘200 ரூபாய்’

‘என்னிடம் 100 ரூபாய் தான் இருக்கிறது, பாக்கி நான் பிறகு தரவா?’

‘எப்போது பார்த்தாலும் கடன் வைக்கிறாய், இதை நான் ஞாபகம் வைத்துக் கொண்டா இருக்க முடியும், கடனையும் திருப்பித் தருவதில்லை’

 ‘ஐயா ஏன் இப்படி சொல்கிறீர்கள்? நான் எப்பொழுதுமே ஏதாவது கடன் வைத்தால் அதை கொடுத்து விடுகிறேன், சில சமயம் சிறிது காலதாமதம் ஆகி விடுகிறது’

‘இல்லை, உன்னோடு இதே தொல்லையாக இருக்கிறது, இப்போது பணம் கொடுத்து பொருளை கொண்டு செல், இனிமேல் நான் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்’

‘ஐயா என்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அவள் மருந்து சாப்பிட வேண்டும், சாப்பாடு சாப்பிட்டு விட்டு தான் மருந்து சாப்பிட முடியும், தயவு செய்து இதை கொடுங்கள் ஐயா’

‘தள்ளிப் போ, நான் வருபவர்களைக் கவனிக்க வேண்டும்’

‘இந்த கடிகாரம் என்ன விலை?’

‘சார் இது 200 ரூபாய், நீங்கள் நேற்று எனக்கு 200 ரூபாய் தர வேண்டும், அதையும் சேர்த்து 400 ரூபாய் ஆகிறது’

‘சரி ஏன் இந்த பெண்ணிடம் நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’

‘அதை விடுங்கள் சார், இந்த பொண்ணு எப்போதுமே இப்படித்தான் அவசரமா வந்து ஏதாவது வாங்கி செல்வாள், பணமும் சரியாக  தரமாட்டாள்’

‘ஐயா அப்படி சொல்லாதீர்கள், நான் பணத்தை திருப்பி செலுத்தி  விடுகிறேன் அல்லவா, இப்பொழுது என்னிடம் பணம் இல்லை’

‘இல்லை நான் கடனுக்கு எல்லாம் தர முடியாது, நீ இங்கிருந்து செல்’

‘ஏன் இப்படி அந்த பெண்ணிடம் கடினமா நடந்து கொள்கிறீர்கள்?’

‘சார் உங்களுக்கு இவர்களைப் பற்றி எல்லாம் தெரியாது’

‘சரி, இந்தா 500 ரூபாய், 400 என்னுடையது, 100 இந்தப் பெண்ணிற்காக’  

 ‘இந்த பொண்ணை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?’

 ‘தெரியாது, ஏன்’

 ‘பின் ஏன் தருகிறீர்கள்?’

 ‘நான் தருவதில் உனக்கு என்ன கஷ்டம்? இது என்னுடைய விருப்பம், நான் பொருள் வாங்கிக்கொண்டு அதற்கு பணத்தை தந்து விட்டேன், இந்த பெண்ணிற்கும் அதில் இருந்து தருகிறேன், எடுத்துக் கொள்ளவும்’

 ‘ரொம்ப நன்றி, உங்களுடைய வீட்டு விலாசத்தை கொடுங்கள், நான் கொண்டு வந்து தருகிறேன், பக்கத்தில் தான் என்னுடைய பக்கோடா கடை இருக்கிறது’

 ‘வேண்டாம் வேண்டாம், இந்த நூறு ரூபாய் நீ திருப்பி தர வேண்டாம், அப்படி நீ திருப்பித் தர வேண்டும் என்று எண்ணினால்  யாருக்காவது உதவி செய், அது எனக்கு அந்த பணத்தை கொடுத்த மாதிரி ஆகும்’

‘அடடே நாம் இன்று காலையில் அந்த மேமிடம் சொன்னது நமக்கே திரும்பி வந்துவிட்டதே!’

 

‘ராஜன் வாருங்கள், இப்பதான் ஆபீஸ்ல இருந்து வருகிறீர்களா?’

‘ஆம்’

‘இன்று ஒரு சம்பவம் நடந்தது, நான் பைசா செலவே இல்லாமல் பகோட்டா சாப்பிட்டேன்’

‘அது எப்படி?’

‘எனக்கு ரொம்ப பசியாக இருந்தது, காரும் ரிப்பேர் ஆகிவிட்டதால் அதை ஒர்க் ஷாப்பில் கொடுத்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தேன், அப்பொழுது இந்த தெரு கோடியில் ஒரு பெண் பக்கோடா விற்று  கொண்டிருந்தாள், எனக்கு பசியாக இருந்ததால் அவளிடம் வாங்கி சாப்பிட்டேன், ஆனால் என்னிடம் பணம் இல்லை, ஜிபே பண்ணுவதற்கு அவளிடம் போனில் வசதி இல்லை, அப்பொழுது அவள் சொன்னாள்,  ‘பரவாயில்லை மேம், நீங்கள் யாருக்காவது உதவி செய்தால் அது இந்த பணத்தை எனக்கு திருப்பித் தந்த மாதிரி ஆகும் என்று’

‘அடடா எனக்கும் அந்த மாதிரியே ஒரு சம்பவம் நடந்தது, கடிகாரம் வாங்குவதற்காக நான் கடைக்கு சென்றேன், அங்கு ஒரு பெண் தன்னுடைய வயதான நோயாளியின் அம்மாவிற்கு பருப்பும் கோதுமையும் வாங்கிக் கொண்டிருந்தாள், அவளிடம் போதிய பணம் இல்லை, நான் தான் அந்த பெண்ணுக்கு நூறு ரூபாய் கொடுத்து உதவினேன், அந்தப் பெண் வீட்டு விலாசத்தை கேட்ட பொழுது, ‘பரவாயில்லை, நீ யாருக்காவது உதவி செய்’ என்று சொல்லிவிட்டு வந்தேன், இப்போது அதே வார்த்தைகளை அந்தப் பெண் சொன்னதாக நீயும் சொல்கிறாய்’

‘ராஜன் நீங்கள் சொன்ன அந்த பெண் பக்கோடா விற்றுக் கொண்டிருந்த இந்தப் பெண்ணாக இருக்குமோ? இருந்தால் நல்லது, நமது கணக்கு தீர்ந்த மாதிரி ஆகும்’

‘இல்லை ரோகிணி, இந்த கணக்கு எப்பொழுதுமே தீராது, இது பசிக் கணக்கு, நாம் பிறருக்கு நல்லது செய்வது நமக்கே திரும்பி வரும், இது ஒரு சங்கிலி தொடர் மாதிரி நீண்டு கொண்டே இருத்தல் தான் நலம்’