
பரஞ்ஜோதியை நன்றாக ஆய்வு செய்த அல்லோபதி டாக்டர் பரமன் தன் பிரிஸ்க்ரிப்ஷனை எழுதிக் கொண்டே பேசினார். ‘மிஸ்டர், உங்களுக்கு தொண்டை ரொம்ப இன்பெக்ஷன் ஆயிருக்கு. ஃபீவர் நூறுக்கு மேல். ஆண்டிபயாட்டிக் கொடுக்கிறேன் மூணு நாளைக்கு. சாப்பாட்டில் ஆயில் சேர்த்திக்க வேணாம். சிம்பிள் டயட் இருக்கட்டும். நிறைய நீர்ச்சத்து எடுத்துக்கணும். இது பாக்டீரியா தொற்றுன்னு நினைக்கிறேன். பயப்பட ஒண்ணுமில்லை, சொன்னபடி செஞ்சா மூணாவது நாள் நல்லா ஆயிடுவீங்க‘.
பரஞ்ஜோதி, ஒரு ஆயுர்வேத மருத்துவர், அமைதியாகக் கேட்டுக் கொண்டார். “சரி டாக்டர். ரொம்ப நன்றி” என்று பில் தொகையைச் செலுத்தி விட்டு விடைப் பெற்றார். அடுத்த வாரம் ஒரு டூர் வேறு போக வேண்டியிருந்தது. ஆங்கில மருத்துவத்தின் வேகமான தீர்வை நாட வேண்டியிருந்த சூழலை எண்ணிச் சிரித்துக் கொண்டார். சில சமயங்களில், உடனடி நிவாரணத்திற்கு இது தேவை தான்.
இரவில் க்ளினிக் வேலை முடித்து வீட்டிற்கு வந்த டாக்டர் பரமன் தன் துணைவியிடம் வேண்டினார். ‘தொண்டை ஒரு மாதிரியா இருக்கு. தொண்டை கரகரன்னு வலி எடுக்க ஆரம்பிச்சிருக்கு. நாளைக்கு அத்தனை பேஷண்ட்களை எப்படி சமாளிக்கப் போறேனோ தெரியலை. மஞ்சள், மிளகு போட்டு சூடா ஒரு டம்ளர் பால் குடு. அப்புறம், உப்பு போட்டு வெதுவெதுப்பு தண்ணியில ஒரு வாய் கொப்பளிக்கணும். கார்த்தாலே இட்லி பண்ணிடு. தோசை வேணாம். எண்ணெய், காரம் வேண்டாம், இல்லனா தொண்டைக்கு இன்னும் எரிச்சலா இருக்கும்‘. துணைவி பரிவோடு அவர் கேட்டதை உடனே தயார் செய்யச் சென்றார். பரமனுக்குத் தெரியும், இந்த ஆரம்பக்கட்ட தொண்டை வலிக்கு, அவரது பாட்டியும் அம்மாவும் சொல்லிக் கொடுத்த இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று.
மூன்று நாட்களுக்குப் பிறகு…
நான்காவது நாள் ஆயுர்வேத டாக்டர் பரஞ்ஜோதி தன் வீட்டில் காலையில் உற்சாகமாக மனைவி கௌரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘அந்த இங்கிலீஷ் டாக்டர் பரமன் நல்ல ராசி போலிருக்கு. கரக்டா மூணு நாளிலேச் சொன்ன மாதிரி தொண்டைச் சரியாய்டிச்சே!. ஆண்டிபயாட்டிக் நல்ல வேலை செஞ்சிருக்கு. ஆனா, அந்த மூணு நாளும் சும்மா கஞ்சி, இட்லின்னு சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்குது. ஜம்முன்னு இன்னிக்கு ரெண்டு நெய் தோசை ஊத்து. கார சட்னி தொட்டுக்கலாம், இட்லி வேணாம், சலிப்பா இருக்கு‘. கௌரி சிரித்துக் கொண்டே தோசைக்கல்லில் எண்ணெய் தடவச் சென்றாள்.
அதே சமயம், அல்லோபதி டாக்டர் பரமன் தன் அறையில் அமர்ந்து ஒரு ஆயுர்வேதப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். முதல் நாள் இரவு அவர் பயந்தது போலவே, தொண்டை வலி அடுத்த நாள் இன்னும் அதிகமாகியது. ஆனாலும், ஆண்டிபயாடிக் எடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. காரணம், “இது கிருமித் தொற்றாக இருக்க வாய்ப்பில்லை, சளி மற்றும் ஒவ்வாமையால் வந்த சாதாரண தொண்டை வலி தான்” என்று தனக்குத் தானே பரிசோதனை செய்துக் கொண்டார்.
மனைவி நீட்டிய ஆவி பறக்கும் இஞ்சி கஷாயத்தை குடித்தார். “வாவ், அருமையா இருக்கு,” என்று ரசித்துக் குடித்தார். ‘கஷாயம் குடிச்சதுமே கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி இருக்கு. தொண்டைக்கும் இதமா இருக்கு. மஞ்சள், மிளகுப் பாலும், உப்புத் தண்ணி கொப்பளிச்சதும், நேத்து ராத்திரி இந்த இஞ்சி கஷாயமும் நல்லா கை கொடுத்திருக்கு. இன்னைக்கு க்ளினிக்ல கொஞ்சம் ஆயுர்வேதப் புத்தகங்களைப் படிக்கணும்னு நினைக்கிறேன். ஆங்கில மருத்துவம் அவசரத்துக்குத் தான், ஆனால் இந்த பாரம்பரிய முறைகள் உடலுக்கு இன்னும் நல்லது போல !’
அன்று மாலையில், டாக்டர் பரமனின் க்ளினிக்கில் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. டாக்டர் பரஞ்ஜோதி தான் உள்ளே வந்தார். “என்ன பரஞ்ஜோதி ? உடல் நிலை எப்படி இருக்கு? நான் கொடுத்த மாத்திரை எல்லாம் கரெக்டா எடுத்தீங்களா?” என்று ஆர்வமாகக் கேட்டார் பரமன்.
பரஞ்ஜோதி புன்னகையுடன், “நல்லா இருக்கு டாக்டர், நீங்க கொடுத்த மருந்து பலிச்சிருச்சு. ரொம்ப தேங்க்ஸ்! நான் உங்களைப் பார்க்க வந்தது, ‘இந்த ஆயுர்வேதக் கஷாயத்தைப் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு தான். இப்போ உள்ள நவீன வாழ்க்கை முறைக்கு ஆயுர்வேத கஷாயங்கள் ஒரு நல்ல துணை துணை மருந்தாக உதவுமே, இல்லையா ? ” என்றார்.
பரமன் பதிலுக்குப் புன்னகைத்தார். “அப்போ கஷாயம் பற்றி உங்க அனுபவங்கள் எனக்குத் தேவைப்படுது பரஞ்ஜோதி !. கரகரன்னு தொண்டை வலிச்சப்ப நேத்து நானே மஞ்சள், மிளகுப் பால், இஞ்சிக் கஷாயம்னு ட்ரை பண்ணேன். உடனடி நிவாரணம் கிடைச்சது. ஒருவேளை, நம்ம ரெண்டு மருத்துவ முறைகளும் ஒரு புள்ளியில் சந்திச்சா நல்லா இருக்குமோ ?” என்று பரஸ்பரம் கைகளைக் குலுக்கிக் கொண்டார்கள். ஒரு அலோபதி மருத்துவரும், ஒரு ஆயுர்வேத மருத்துவரும் அறிவுக் களத்தில் சந்தித்த அந்த நிமிடம், மருத்துவத்தின் இரு துருவங்களும் ஒரு பொதுவான மனிதநேய இலக்கை நோக்கிப் பயணிக்கத் தயாரானதைக் குறித்தது.

இக்கரையா, அக்கரையா என்று குழம்பாமல், சண்டையிடாமல் இரண்டு கரையையும் சேர்த்து வைக்க நினைக்கும் அக்கறை பிடித்திருக்கிறது!
ஸ்ரீராம்
LikeLike