நமது குரு வ வே சு அவர்களுக்கு நாம் செய்யும் குரு தட்சணை இந்த ஆவணப்படம் !
குவிகத்தின் மன நிறைவான பணி!
இதைச் செயலாக்க நமக்கு அனுமதி தந்த ஆசான் வ வே சு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
அவருக்கு என் குரு வணக்கம்!
மகாகவியின் மந்திரச் சொற்கள் என்ற வரிசையில் நமது மதிப்பிற்குரிய குருநாதர் வ வே சு அவர்கள். ஒவ்வொரு புதன்கிழமையும். இந்திய நேரப்படி மாலை 6:30 முதல் 7:30 மணி வரை ஜூம் மூலம் பாரதியின் மகத்துவத்தை அவரது பாடல்கள் மூலம் நமக்கு விளக்கிக் கூறிக்கொண்டு வருகிறார்.
பாரதி என்ற மகா கடலில். மூழ்கி முத்தெடுத்து. அந்த முத்தினை அழகான மாலையாக கோர்த்து நமக்கு வாராவாரம் வழங்கிக்கொண்டு வருபவர் வ வே சு என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த விதத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தைகள் சொல்ல வேண்டும். குவிகம் அளவலாவலில் பாரதியின் குயில் பாட்டுப் பற்றி 1 மணி நேரத்தில் பகிர்ந்து கொள்ளும்படி அவரை அன்புடன் வேண்டிக் கொண்டோம். பாட்டுதிறத்தால் இந்த வையத்தைப் பாலிக்க வந்த பாரதியை ஒரு மணியில் அடக்கிவிட முடியுமா? சொல் புதிது, பொருள் புதிது என்று கூறிய பாரதியின் ஒவ்வொரு சொல்லின் சிறப்பையும் சொல்லாமல் பொதுவாகச் சொன்னால் சொல்லுபவருக்கும் சிறப்பிருக்காது; கேட்பவருக்கும் திருப்தியிருக்காது. பாரதிக்கும் பெருமை சேராது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் ராஜாராமன் அவர்கள் பாரதியின் ஞான ரதம் மற்றும் பாரதியின் மற்றப் பாடல்களையும் வ வே சு அவர்கள் தொகுத்து ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.
கிருபானந்தனும் நானும் வ வே சு அவர்களிடம் இந்த எண்ணத்தைக் கூறியதும் வ வே சு அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அவரே அதற்கு மகாகவியின் மந்திரச் சொற்கள் என்ற தலைப்பையும் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு புதன் கிழமையன்றும் ஜூம் இணையவெளி அரங்கில் ஒரு மணி நேரம் பாரதி அன்பர்களுக்கு விருந்து படைக்க உறுதி பூண்டார்.
12 மே 2021 அன்று சங்கீதா கலாநிதி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்க நூற்றுக்கும் மேற்பட்டவர் கலந்துகொள்ள குதூகலமாகத் துவங்கியது மகா கவியின் மந்திரச் சொற்கள் என்ற நிகழ்வு. பாரதியின் மகோன்னதப் படைப்பான பாஞ்சாலி சபதம் காப்பியத்தை முதலில் ஆரம்பித்தார். பின்னர் கண்ணன் பாடல்கள், புதிய ஆத்தி சூடி, குயில் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை, பாரதி சுயசரிதை, பாரதி 66, ஞானப் பாடல்கள், சக்திப் பாடல்கள், காளிப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என்று பல பாடல்களை படிப் படியாக நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் வ வே சு அவர்கள்.
பாரதியின் எல்லா பரிமாணங்களையும் பாடலின் பொருளையும் சொல்லின் சிறப்பையும் அதற்கு பாரதி கட்டுரைகளிலிருந்தே அகச் சான்றுகளையும் வள்ளுவர் கம்பர், வேதங்கள் உபனிஷத்துக்கள் மற்றும் எண்ணற்ற தனிப்பாடல்களில் இருந்து புறச் சான்றுகளையும் தந்து வ வே சு அவர்கள் தனக்கே உரிய ஜனரஞ்சக பாணியில் இனிமையான குரலில் விளக்க விளக்க இந்தத் தொடர் எத்தனை ஆண்டுகளானும் தொடரட்டும் என்று விரும்பினோம்.
அதன்படி இப்போது 230 வாரங்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது மகா கவியின் மந்திரச் சொற்கள் நிகழ்வு. வ வே சு அவர்கள் முன்னே செல்ல அவரைத் தொடர்ந்து நாமும் பாரதியின் அடிச்சுவட்டில் பயணித்து வருகிறோம்.
அவர் மூலம் நாம் பெற்ற இலக்கியப் புதையல் எத்தனை என்று எண்ணிலிட்டால் அது கணக்கிலடங்காது.
பாரதி இவர் உரையைக் கேட்டிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்.
தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியவர் எனதருமை சீடர் வ வே சு என்றுரைப்பேன்.
இவரைப் போல என் கவியை ஓதிப் புகழ்வாரை வேறெங்கும் காண்பேனா யான் ?
கண்ணையினி தென்றுரைப்பார்;கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணை அளக்கும் இவர் உரை கேட்போருக்கு இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
விரியுமொளி இவர் உரை என்பேன்!
இவர் உரைக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் வ வே சுவினை
புதன் மாலைப் பொழுதினிலே குவிகத்தில் நான் கண்டேன்
என்று பாரதியே கூறியிருப்பார்.
வ வே சு அவர்கள். ஆயிரக்கணக்கான கவியரங்குகளில் இலக்கிய மேடையில் பட்டி மன்றங்களில், பக்தி மண்டபங்களில் , வழக்காடு மன்றங்களில் இசை அரங்குகளில் நாடக மேடைகளில் வினாடி வினாக்களில், ஆன்மீக அரங்குகளில், பங்கு பெற்றவர்.
இப்படி எங்கெல்லாம் இலக்கியமேடை இருக்கிறதோ அங்கெல்லாம் கோலோச்சிய அவர் குவிகத்திற்கு
எங்கிருந்தோ வந்தார் வ வே சு நான் என்றார்.
இங்கவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்.
பற்று மிகுந்துவர பார்க்கின்றோம் வ வேசு அவர்களால்
பெற்று வரும் தமிழின்பம் பேசி முடியாது.
சொன்னதெல்லாம் கேட்பார் பாடங்கள் நடத்திடுவார்.
சின்ன குழந்தைக்கும. புரியும்படி நன்றாக விளக்கிடுவார் .
கண்ணின் இமையிரண்டும் மூடாமல் அவருரையை.
வண்ணமுற கேட்கின்றோம் குவிகத்தில் நாமெல்லாம்
நண்பராய் மந்திரியாய் நல்லாசிரியாராய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே தோழராய்
எங்கிருந்தோ வந்தார் வ வே சு நான் என்றார்
இங்கவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்.
சொல்லியதை சொன்னபடி சொன்னவரும் அவரே.
சொல்லாத சொல்லுக்கு பொருள் தேடித் தந்தவரும் அவரே! .
குவிகத்தில் அவர் உரையைக் கேட்டு அவரால் நாம் பெற்ற பலன்களைக் கேளுங்கள்.
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறக்கும்
வித்தைகள் சேரும் மனத்திடைத் தத்துவம் உண்டாகும்
நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிவிடும்.
புதனன்று கூடும் பாரதி அன்பர்கள் ஓட்டுமொத்தமாகக் கூறி வருகின்றனர்:
வ வே சு என்று ஒருவர் வந்தார் அப்பா.
அவர் புகழை வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா.
நாம் செய்த பேற்றாலே குருவாக வ வே சு வந்தார்.
ஞானம் புகழ் அனைத்தும் பெற்றோம் நாம்
அவர் குவிகத்தில் குரல் எழுப்பிய நாள் முதலாய்.
எண்ணம் விசாரம். எதுவும் அவர் பொறுப்பாய்.
செல்வம், இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி.
கல்வி அறிவு, கவிதை சிவயோகம்.
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காணீர்!
யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய்
யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியவனாய்
வந்தார் நம் வ வே சு சொல்லின்செல்வரும் அவரே
விண்டுரைக்க அறிய அரியதான திறமை நம் குருநாதரின் புகழ்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல் என்பதற்கு இணங்க
நம் குரு வ வே சு அவர்களின் சிறப்பு அவர் ஒவ்வொரு வாரமும் துவங்கும் பாரதியின் வரிகளில் அடங்கும்.
தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப்பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்
கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல்
இங்கிவையெல்லாம் வ வே சு சார்!
நீங்கள் குவிகம் அன்பர்களுக்கு வாரா வாரம் வழங்கும்
அருளுரையின் பொருளுரை அன்றோ?
இவருக்குத் தொழில் பேச்சு நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
கதைகள் சொல்லி. கவிதை எழுதுவார்
காவியம் பல நீண்டன கட்டுவார்
விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி
நாடகச் செய்யுளை வேவுவார்
ஓர் வார்த்தை
கற்ற நம் நண்பர்களுக்குச் சொல்வேன்,
கவிதைக் கனிபிழிந்த சாற்றினிலே,
பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி
அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
குவிகம் எனும் மேடையிலே காயவைத்த கட்டியினால்
வகுத்தவை நம் குரு வ வே சுவின் சொல்லோவியங்கள்
அவைதான் மகா கவியின் மந்திரச் சொற்கள்
இங்கவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்
என்ன தவம் செய்துவிட்டோம்
ஆவணப்பட வெளியீட்டு விழா 12.12.25 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் நலம் விரும்பிகள் முன்னிலையில் வானவில் ரவி அவர்கள தலைமையுரை கூற, திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை வழங்க, சந்துரு மாணிக்கவாசகம் அவர்கள் கருத்துரை வழங்க, வந்திருந்தவர் அனைவரும் வாழ்த்துரை வழங்க வ வே சு அவர்களின் ஆவணப்படம் “வற்றாத ஊற்று” கோலோகலாமாக வெளியிடப்பட்டது.
அதன் காணொளியை நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பினோம். அதைப் பார்த்துப் பரவசமடைந்த மக்களின் கருத்துக்கள் ஒரு சில உங்கள் பார்வைக்கு:
1. சிவசங்கரி அவர்கள்:
“Interesting and informative. My congratulations to Kuvikam and Director Nanu”
2. அதிரன்:
இன்று தான் ” வற்றாத ஊற்று ” காணொளி பார்க்க கிடைத்தது மற்றும் ஐயா வ.வே.சு அவர்களை பற்றியும் முழுமையாக அறிய முடிந்தது
எத்தனை பெரிய ஆளுமை
எத்தனை எத்தனை சாதனைகள்
அத்தனையும் மிக அருமையாக ஆவணப்படுத்திருக்கும் அன்பு நண்பர் நாணு அவர்களுக்கும் குவிகம் இலக்கிய குழுவினருக்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
ஐயா வ.வே.சு அவர்களை வணங்குகிறேன்
பி.கு : எனது முதல் கவிதைத் தொகுப்பான “அம்மாவின் பூனை” க்கு ஐயா வ.வே.சு அவர்கள் அணிந்துரை வழங்கியது என் வாழ்வின் உன்னத தருணம்
3. D ராஜேந்திரன்:
குவிகத்தின் ஆகச்சிறந்த ஆவணப்படம் “வற்றாத ஊற்று”
முனைவர் வா.வே.சு.
அவர்களின் மகுடத்தில் ஒரு மாணிக்கம்.
வற்றாத ஜீவநதியாக
அவரின் இலக்கியப் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வார்.சிறப்பான ஆவணப்படம் தந்த திரு.நாணு அவர்களுக்கு நன்றி.
4. தியாகராஜன் ஐயர்:
நான் பெரிதும் மதிக்கும் எனது ஞானாசான் வ வே சு அவர்களின் வாழ்க்கைப் பற்றிய குறும்படம் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தேன்
அதே சமயத்தில் அவரது அறிமுகம் கிடைத்தது நான் செய்த புண்ணிய பலனே.
அவருடைய மாணாக்கனாக நான்கு ஆண்டுகளுக்கு மேல் நான் தொடர்ந்து வருவதும் எனது பெரும் பாக்கியமே ! என்னை புடம் போட்டு புடம் போட்டே மென்மேலும் நல்லமனிதனாக மாற்றிக்கொண்டே வரும் என் ஞானகுரு வற்றவே வற்றாத ஜீவநதியான வவேசு அவர்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.
5. துரை தனபாலன்:
திரு.தியாகராஜன் அவர்களின் கூற்று, எனக்கும், நம் எல்லோருக்கும் பொருந்தும்.
ஆசானின் வரலாற்று ஆவணத்தைக் கண்டேன்!
ஆனந்தக் களி நெஞ்சில் கொண்டேன்!
இப்படத்தின் தலைப்பில் 2022ல் நான் எழுதிய வாழ்த்துப் பாவையும், வணக்கத்துடன் வாழ்த்தினையும் நம் குழு அன்பர் அனைவருடனும் பகிர்ந்து மகிழ்கிறேன்
6.ராஜகோபாலன்:
நம்முடனே இருந்து கொண்டு நம்முடையவரான வவேசு அவர்களைப் பற்றி பலர் சிலாகித்து பேசுவதைக் கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படிப்பட்ட ஆளுமையும், திறமையும், ஆற்றலும் கொண்ட இவர், எப்படி அந்த பாரத்தின் ஒரு துளியையும் தன் மேல் சுமக்காமல், இவ்வளவு சகஜமாக இருக்கிறார் என்ற எண்ணமும் எனக்கு மேலோங்கி இருந்தது. ஆவணப்படத்தை அழகாக, தனக்கே உரிய பாணியில் எடுத்த நாணு அவர்களையும், அற்புதமாக இந்த நிகழ்ச்சியை நடத்திய நம் குவிகம் அமைப்பையும் எத்தனை பாராட்டினாலும் தகும். நன்றிகள் பல. 🙏🏻🙏🏻🙏🏻 –
7. இந்திரா ராமநாதன்
“வற்றாத ஊற்று” இந்த ஆவணப்படம் இறுதியில் “பரம்பரை தொடர்கிறது” என்று தலைப்பிட்டு – ஒரு விதை முளைத்து சின்னஞ்சிறு செடியாகத் தலை அசைத்து நிற்பது “ அவர் ஒவ்வொரு உயிரின் மீது கொண்டுள்ள பற்றினையும் , Botany professor என்பதற்கு அடையாளமாகவும் திகழ்கின்றது.
எடுத்தவுடன் நீர் (ஊற்று), இறுதியில் “செடி” மிகப் பொருத்தமான – முதலும் -முடிவும் – (நடுவில் வளர்ச்சி) கொண்ட இந்த ஆவணப்படம் திரு SL Naanu sir அவர்களின் திறமைக்கும் , கற்பனைக்கும் ஒரு ஆதாரமாகத் திகழ்கின்றன.
திரு வ வே சு அவர்களின் பலவகைப்பட்ட திறமைகள் ( கவிதை, கட்டுரை, கதை எழுதுதல் , நாடகம் , பேச்சுநயம், நாட்டியநாடக வசனங்கள் , extraordinary vocabulary in Tamil, ஒரு விஷயத்தையே பல்வேறு கோணங்களில் ஆராயத்தக்க விமர்சனத்திறமை, பிறரைப் பாராட்டும் பண்பு , எதிலுமே அன்னம்போல் நல்லவற்றையே நாடிநிற்கும் தனித்தன்மை ) அவரைப் பற்றி படம் முடிந்து விட்டதே; இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாமோ என்று அனைவருமே எண்ணும் அளவிற்கு வெரைட்டி காட்டும் ஒரு அற்புதப் படமாக அமைந்தது. இவரைப் பாராட்டிப் பேசியவர்களும் – துறவி, இசை, தாளம், இலக்கியம், நாடகம், நடனம், நண்பர்கள்,மாணாக்கர்கள் , உறவினர்கள், குடும்பத்தார் என பல்வேறு வகையினராக அமைந்ததால் அடுத்தது -யார் யார் – எனும் ஆர்வத்தைத் தூண்டுகின்றது- அதனாலேயே அலுப்புத் தட்டாமலும், விறுவிறுவென்றும் படம் நடை போடுகின்றது.
இவ்வளவு வகைத் திறமைகள் கொண்ட வ வே சு அவர்களையா, அல்லது அதனைச் சிக்கென்று படம் பிடித்த நாணு சாரையா, அல்லது இப்படி ஒரு ஆவணப்படம் வ வே சு பற்றி எடுக்கவேண்டும் என்று நினைத்து நிறைவேற்றவும் செய்த குவிகம் அமைப்பையா – யாரைத்தான் பாராட்டுவது ?
மூவரையும் சேர்த்தே பாராட்டி இன்புறுவோம் !
இந்நிகழ்ச்சியின் இறைவணக்கம் கூட அவரது கவிதையின் ஒரு பகுதிதான் என்பது மேலும் சிறப்பு கூட்டுகின்றது .
இந்நிகழ்வில் மிகச்சரியான நேரத்தில் , மிக அற்புதமான ருசியான உணவை பாதாம்பாலோடு இணைத்து வழங்கிய “சாய் சங்கரா மேட்ரிமோனியலின் “ நிறுவனர் பஞ்சாபகேசன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர் !
வந்த அனைவரும் இறுதிவரை இணைந்து அமர்ந்திருந்து நிகழ்வை வெற்றிச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றது மிகச் 👏 சிறப்பு . அனைவருக்கும் நன்றி ! நன்றி! நன்றி! 🙏🙇♀️🙇♀️
8.ஆர்க்கே
வ வே சு எனும் வானவில்(லின்) மையம்!
–
குவிகம்–
புதுமைகள் வற்றாத ஊற்று.
எஸ் எல் நாணு–
பன்முகத் திறனின் வற்றாத ஊற்று.
வானவில் ரவி, சுப்பு, வைத்தி , இசைக்கவி ரமணன், மற்றும் பல்லாண்டு கால நண்பர்கள்–நன்னட்பின் வற்றாத ஊற்று.
இந்திரா ராமநாதன்- செழிப்பு இணைப்புரையின் வற்றாத ஊற்று.
தமிழ் இணைய வழி அரங்கம்–
இன்றைய கோலாகலத்தின்-வற்றாத ஊற்று.
திருப்பூர் கிருஷ்ணன்–நற்றமிழ் நயவுரை/மனமார்ந்த பாராட்டுகளின் வற்றாத ஊற்று.
இன்றைய நாள் சிறப்பு- அரங்கில் கூடிய ஆளுமைகளின் அன்பு -வற்றாத ஊற்று.
அத்தனை பேரும் ரசித்து லயித்து களித்துப் பார்த்த அழகான ஆவணப் படம்-வற்றாத ஊற்று.
விழாவின் நாயகர் மந்திரச் சொல் வேந்தர்
தமிழ் வளர்த்த சான்றோர் அறிமுக உரைகளின் முன்னத்தி ஏராய்- வற்றாத ஊற்று..
அன்பு, ஆளுமை, பண்பு, திறமை, அத்தனையையும் தன்னுடைய நிஜமாய் வைத்திருக்கும் வற்றாத ஊற்றுக்கு
இன்னொரு பெயருண்டு.
அவர் பெயர் முனைவர் வ வே சு. அவரின் ரசிக மனங்கள் இணைந்து களித்த கொண்டாட்ட உற்சவத் திருவிழா இன்று.
9. வாசுகி கண்ணப்பன்
வரலாறாக என்றென்றும் நிறைந்து நிற்கும் அற்புதப் படைப்பாகும் இந்தப் பதிவு.
10. நாகேந்திர பாரதி:
ஆசான் வ வே சு ஐயா அவர்களைப் பற்றிய ஆவணப் படம் ,குவிகம் அமைப்பின் சார்பாக, நண்பர் நாணு அவர்களின் இயக்கத்தில் வெளியான விழா , தமிழ் இணைய கல்விக் கழக அரங்கில் அரங்கு நிறைந்த விழாவாக இனிதே நடந்தது .🎉
வ வே சு ஐயா அவர்களின் பெற்றோரில் ஆரம்பித்து பேரக்குழந்தை வரை தொடர்ந்து’ தலைமுறை தொடர்கிறது ‘ என்று முடித்து , இடையில் அவரின் அத்தனை திறமைகளையும் அவரின் நண்பர்கள் மூலமாக நமக்குத் தெரிய வைத்த இந்த ஆவணப் படம் குவிகம் குழுவின் மற்றுமொரு மைல் கல் . 🙏
நாணு அவர்கள் தன் இயக்கத் திறமையால் நம்மைச் சிலிர்க்க வைத்த பல இடங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு இடம். வ வே சு அவர்கள் பாடும்போது பின்னே அந்தப் பாடல் வரிகளை, புல்லாங்குழல் உட்பட காட்சிப்படுத்தி புல்லரிக்க வைத்த அந்தக் கலைத்திறமை. வாழ்த்துக்கள் நாணு சார்.🎉
தொடர்ந்து பாராட்டுரைகள் நல்கிய அத்தனை பிரமுகர்களின் உரைகளும் அவரின் வாழ்வின் பல நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வந்தன. தொடர்ந்த நன்றி உரையில் , ஆசான் அவர்கள் நெகிழ்ந்து பேசிய அத்தனை வார்த்தைகளிலும் அன்பும் இலக்கியமும் அடங்கி இருந்தன.🎉
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘ நமது அழகியசிங்கரின் இசை புதிது குழு ‘பிலிம் நியூஸ் ‘ இந்திரா ராமநாதன் அவர்களின் பேச்சுத்திறன் அரங்கத்தை நிரப்பிய தருணங்கள் பல. அவருக்கு உதவி புரியும் வாய்ப்பை எனக்கு அளித்த கிருபானந்தன் அவர்களுக்கு நன்றி. 🙏
நேரில் பார்க்கத் தவறவிட்டோர் விரைவில் காணொளியில் கண்டு கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏
11. என் எஸ் பிரேமா
மிக அற்புதமாக பேராசிரியர் வ. வே.சு அவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி அனைவரின் கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தளித்த திரு நாணு திரு ஆர் கே குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். சிறப்புரை வாழ்த்துரை வழங்கிய ஆளுமைகளுக்கும் தொகுப்பாளர்களுக்கும் இயக்கிய திரு கிருபானந்தம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.குவிகத்திற்கு மிக்க நன்றி. ஆவணப்பட நாயகனுக்கு வணக்கம் . தொடரட்டும் தங்கள் சீரிய பணிகள்🙏
12. மதுவந்தி
இந்த ஆவணப் படத்தில் வ வே சு அவர்களின் பல் வேறு பரிமாணங்கள் சிறப்புற சொல்லப் பட்டிருக்கின்றன.
சொல்லப் படாத இன்னொரு பரிமாணம் இருக்கிறது. அது அவரது விமர்சகர் அல்லது சுவைஞர் பரிமாணம்.
மெய் நிகர் நிகழ்வுகளில் கவிதைகள்வாசித்தவர்க்கு தெரியும் அவர் எப்படி மிகச் சரியாக ஒரு படைப்பின் மையப் புள்ளியை எடுத்துக் காட்டி படைப்பாளியை ஊக்கப் படுத்துகிறார் என்று.
அதே போல அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டிக் கதைகள் நூல் வெளியீடு விழாவுக்குப் பின்பு, ஒரு 5 நாட்களில் அந்த நூலின் ஒவ்வொரு கதையையும் அவர் எடுத்து, அதன் சிறப்புகளைச் சொன்ன விதம் ஓரே சொல்லில் அபாரம்.
பல கதை ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் அவர் போல சிறப்புகளை வேறு எவரும் சொல்லி இருக்க இயலாது.
13. ரேவதி பாலு:
மிக அற்புதமான ஆவணப்படம் வா.வே.சு என்னும் ஆளுமை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது
14. மீ விஸ்வநாதன்:
🙏நிறைவான விழா. பேராசிரியர் வ.வே.சு. , S.L.நாணு, குவிகம் இரட்டையர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.🙏
15. மஞ்சுளா சுவாமினாதன்:
Excellent documentary on Va.Ve. Su sir
16. R V ராஜன்
Excellent documentary on Va வே Su – a multifaceted personality. Got to know a lot of info about the professor. Congratulations to Kuvikam Twins for conceiving the idea and S L Nanu for producing an engaging film. Thanks for sharing. God bless!
17. ராஜாராமன் :
பார்த்தேன், ரசித்தேன் ! பன்முக திறமையும் ஆளுமையும் கொண்ட மாமனிதரைப்பற்றிய ஆவணப்படம் பலரையும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை !
18. நித்தியானந்தம்:
நல்ல முறையில், தொய்வில்லாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படம் சார். நேற்றைய அரங்கு நிறைந்த கூட்டத்தில் அனைவரும் ரசித்து பாராட்டி மகிழ்ந்தனர். 9 மணி ஆனபோதும் கூட்டம் கலையவில்லை. இது குவிகம் மற்றும் வ. வே. சு. கூட்டணியின் வெற்றிப் படம்💐🙏
19. வசந்தா ராஜா
ஆவணப்படம் மிகவும் அருமையாகவும் பெருமையாகவும் இருந்தது.
(குவிகம் இலக்கியத் தகவலில் வந்த கருத்துகள்)
20. பானுமதி வெங்கடேஸ்வரன்
பிரமாதம்! எத்தனை பெரிய மனிதர்! இவரோடா சகஜமாக உட்கார்ந்து உரையாடுகிறோம்? என்று தோன்றுகிறது. குவிக்கிறது நன்றி
21. யாரோ ராமமூர்த்தி
பன்முகங்களைக் கொண்ட வ வே சு அவர்களிடம் எனக்குப் பிடித்த முகம் அவரது மனித நேயமுகம். அவர் சிறந்த மனிதர் என்பதை இந்த ஆவணப் படத்தின் ஒவ்வொரு பிரேமும் பிரதிபலிக்கிறது.






