நூல் குறித்த விபரம் :

 

நூல்: “ஊத்தாம் பல்லா”

வகைமை: நாவல்

முதல் பதிப்பு : 2024

ஆசிரியர்: செஞ்சி தமிழினியன்

வெளியீடு: வேரல் புக்ஸ்

தொடர்பு எண்: 95787 64322

பக்கங்கள்: 488 / விலை. ரூ. 500/-

“இருளர் வாழ்வியல்: பலவ மேளமும், கன்னிம்மா ஒளியும் “

 

 

பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது செஞ்சி தமிழினியனின் “ஊத்தாம் பல்லா” நாவல். அழகியலும், மானுடவியல் அறமும் சாராம்சமாகக் கொண்டுள்ள நாவல் இது.   

‘ஊத்தாம் பல்லா’ என்பது வலையில் பதுங்கியுள்ள எலிகளைப் புகைபோட்டுப் பிடிக்க இருளர்கள் பயன்படுத்தும் ஒரு வேட்டைக் கருவி.  தமிழ்நாட்டில் 37 வகையான பழங்குடிகள் வாழ்கின்றனர். பெரும்பாலான பழங்குடி மக்களின் பேசு மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது.  இவர்களில் சமவெளிப் பகுதியில் வாழும் இனக்குழுவினர் ‘இருளர்கள்’ வேட்டை நுட்பம் அறிந்தவர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, தொண்டை மண்டலம் என்றும் நடு நாடு என்றும் போற்றப்படுகிற செஞ்சி நகருக்கு அருகே தும்பூர் கிராமம், சன்னாசி ஏரிக்கரை இருளர் குடிசை மக்களை களமாகக் கொண்டு விரிகிறது நாவல்; அப்பகுதி குடிசைவாசிகளான இருளர் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது.

நாவல் சொல்லப்படும் விதத்தாலும், பயன்படுத்தப்படும் இருளர் மொழியாலும்,  அழகியல் தன்மைகளைக் கொண்டு  ரத்தமும் சதையுமான ஒரு உயிர்த் துடிப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு அளிக்கிறது. இருளர்களின் தெய்வம் ‘கன்னிம்மா’ சார்ந்த சடங்குப் பாடல்களும், இருளர் தொன்ம நம்பிக்கைகளும், ஐதீகங்களும் விரவிக்கிடந்து நாவலுக்கு ஒரு செறிவையும், ஆழத்தையும் தருகின்றன.

நாவல் மூன்று பகுதி அடுக்குகளாக விரிவு கொள்கிறது.

“வேட்கையும் வேட்டையும்” எனும் முதல் பகுதியில் சன்னாசி ஏரிக்கரை இருளர் குடிசை மக்களின் வாழ்க்கை காட்சிகளாகக் காட்டப்படுகிறது. அவர்களின் வாழ்க்கையை  சூளை வேலைக்கு அழைத்துச் சென்று வளமாக்குகிறேன் என்று புரோக்கர் மனோகர்  ஆசை காட்டுகிறான். உள்ளூர் சுரண்டல் முதலாளிகளின் கையாள் புரோக்கர் மனோகரின் ஆசை வார்த்தைகளில்,  வறுமையின் பரமபத ஆட்டத்தில் பகடைக் காய்கள் ஆகிறார்கள் இருளர் மக்கள்.

“இசையும் அடவும்” எனும் இரண்டாம் பகுதியில் இருளர் மக்களின் சடங்குகள், வாழ்க்கை அறம், தெய்வ நம்பிக்கை ஆகியன காட்சி பெறுகின்றன. ஊரில் திருவிழா நடத்தி, செங்கல் சூளை வேலைக்கு புலம்பெயர கன்னிம்மா உத்தரவு கேட்டு நிற்கிறார்கள் சன்னாசி ஏரிக்கரை இருளர் குடிசை மக்கள்.

“புழுதிப் படலம்” எனும் மூன்றாம் பகுதியில், செங்கல் சூளை வேலைக்குச் செல்லும் சன்னாசி ஏரிக்கரை இருளர் குடிசை மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வாடி வதங்குவது காட்சிப்படுத்துகிறது. சூளை நிலத்தில் நெஞ்சறுக்கும் பாடல்களைப்பாடி ‘கன்னிம்மா’ தெய்வத்திடம் விடிவுக்கான வழிகேட்டு நிற்கிறார்கள் இம்மக்கள்.

இறுதியில் இவர்களின் வேண்டுதலுக்கு விடை தருகிறாள் கன்னிம்மா. இருளர் மக்கள் கொத்தடிமை வாழ்க்கையில் இரு ந்து மீட்கப்படுகிறார்கள்,

உணர்வோட்டத்தை வெறும் தகவல்களாக புறவயமாக சொல்லி செல்லாமல், அகவயமான உணர்வுகளை முக்கியப்படுத்தி, ஆழ்மன ஈடுபாட்டுடன் வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது இந்நாவலின் எழுத்துக்கள். விவசாயத்தை ஒட்டிய வாழ்வியலோடு பின்னப்பட்ட இருளர் இன மக்களின் இன்பம், துன்பம், தெய்வ நம்பிக்கை ஆகியவற்றை இலக்கிய வடிவமாக்கியுள்ளார் இந்நூலாசிரியர்.  சமவெளி வாழ் இருளர் மக்களின் வாழ்க்கை, பண்பாடு நம்பிக்கைகள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக பேசும் நாவல் இது.