நூலின் பெயர் : கிருஷ்ணதாசி
நூலாசிரியர் : இந்திரா சௌந்தர்ராஜன்
விலை: 180
பக்கம்:272
பதிப்பகம் :திருமகள் நிலையம்
முதற்பதிப்பு :2016
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் எழுத்தினை இப்பொழுதுதான் இந்த நாவல் வழியாகத்தான் முதன்முறை படிக்கிறேன்.
கதைச்சுருக்கம்
கிருஷ்ண தாசி என்றயிந்த கீதை பெயரைக் கொண்டவளின் அருமை குணத்தை அறிந்தவர்கள் அன்பைப் புரிந்து கொண்டாடி பெருமை யாகத் தம்வீட்டில் பேதம் ஏதும் பார்க்காமல் இருளை நீக்கும் காரிகையாய் என்றும் போற்றி மகிழ்ந்திடுவர்!
ஆம். புத்தகம் வாங்கும் போது தலைப்பில் தாசி என்று ஒட்டியுள்ள சொல்லைக் கண்டபோது அந்தக் காலத்தில் மட்டுமின்றி இந்தக் காலத்திலும் பேசும் பொருளாக உள்ள’ தாசி’ தொழில் பற்றியதாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.
ஆனாலும் அப்படி என்னதான் இந்தத் தொழில் குறித்து நூலாசிரியர் எழுதியுள்ளார் என்பதை அறியும் ஆர்வத்தில் வாங்கி விட்டேன்.
ஆனால் இதில் உத்தம பத்தினியாக உள்ள கிருஷ்ணவேணியின் வாழ்க்கை வரலாற்றை இருபத்தைந்து அத்தியாயங்களில் எழுதியுள்ளார்.
கருத்தின் ஆழம்
இந்த நூலில் தஞ்சாவூரிலுள்ள திருவையாறு தான் கதைக்களம்.
தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் கோயில்களில் நடனமாடிய தேவரடியார்களின் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டே கதையை எழுதியுள்ளார்.
எளிய நடையில் அழகான வர்ணனை ,ஊகிக்க முடியாத திருப்பங்கள், சிந்திக்க வைக்கும் சம்பவங்கள், விரும்பி படிக்கும் கதையோட்டம் நிறைந்துள்ளன.
கிருஷ்ண தாசிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பெயர் மீனாட்சி. தன் தந்தை யார் என கண்டுபிடிக்க மீனாட்சி போராடும் காட்சிகளுடன் தான் கதை தொடங்குகிறது. தந்தை யார் என கண்டறிந்த போது மகிழ்ச்சி பிரவாகம் தான்.ஆனால் அடுத்து கதையில் வேறு ஒரு திருப்பம்.
தன் தாய் கிருஷ்ணவேணி இல்லை என்பது தான். மீனாட்சி தன் தாயைக் கண்டறிந்தாளா என்பதை நீங்கள் கதையைப் படித்தால் அறிந்து கொள்வீர்கள்.
கதாநாயகன் சுந்தரேசனின் அறிவார்ந்த பேச்சும், உதவி செய்யும் பண்பும் ,நேர்மையும் இன்றைய இளைஞர்களுக்கு இருந்தால் இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயம் ஆகும். கிருஷ்ணவேணியின் வீட்டிற்குள் யாரும் வெளிப்படையாகச் செல்ல தயங்கும் நிலையில் நம் கதாநாயகன் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது வியப்பாக இருக்கும்.கடைசியில் “தாயிற் சிறந்த கோவிலுமில்லை “. இந்த வரிகளுக்கு இலக்கணமாகத் தான் சுந்தரேசன் சென்றுள்ளான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
நாவலைப் படித்தால் நல்லதோர் நற்சிந்தனையைப் பெறலாம் . 272 பக்கங்கள் உள்ள நாவலை ஒரே மூச்சில் உட்கார்ந்து படித்தேன் என்றால் பாருங்கள். அத்தனை அத்தியாயத்திலும் விறுவிறுப்பு காட்சிகள்.
வில்லனாக வரும் ஜம்புலிங்கம் கடைசியில் விதியின் விளையாட்டால் இடம் மாறிய குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க உதவுகிறார்.
நன்கு வளர்ந்த ஆகச்சிறந்த கதாநாயகன்-கதாநாயகியின் காதல் வாழ்வின் கண்ணியத்தை காப்பற்றும் நல்லதோர் மனிதனாக மாறுவது காலத்தின் கனிவு எனலாம்.
நடையின் தனிச்சிறப்பு
அந்தியில் உதித்து வானில்
அழகினைக் கூட்டி நிற்கும்
சந்திரன் ஒளியின் மூலம்
சந்ததி துயரம் நீக்கும்!
இந்திரா சௌந்தர் ராஜன்
இயற்றிய நல்ல நாவல்
சிந்திடும் காட்சி யெல்லாம்
சீரிய பெண்கள் வாழ்வே!
கிருஷ்ணதாசி கீழ்மையன்று. கேண்மையாகும்.

இந்திரா சௌந்தர்ராஜனின் எழுத்து எப்போதுமே சுவாரஸ்யம்.
ஸ்ரீராம்.
LikeLike