நூலின் பெயர் :காவல் கோட்டம் 

நூலாசிரியர் :சு வெங்கடேசன்.

நூலின் விலை :ரூ.800

பதிப்பகம் :விகடன் பிரசுரம்

பக்கங்கள் :1173

பதிப்பாண்டு:2013

கதைச்சுருக்கம்

காவல் கோட்டம் என்ற 

கள்ளர் வாழ்வைக் கூறும் 

ஆவல் தூண்டி செல்லும் 

அறநூ(று) ஆண்டின் வரலா(று)

ஏவல் புரிந்த அரசர் 

எளிதில் சூழ்ச்சி வலையில் 

கூவ விட்டுக் கூடி 

கொலையைச் செய்து முடித்துச் 

சேவல் கூவும் காலை 

சீரும் சிறப்பு மாகத் 

தேவர் போன்று மகுடம் 

தேடி சூட்டிக் கொள்ளும் 

நாவல் பழத்தின் பயனாய் 

நல்ல செய்தி சொல்லும்

பூவ னமான மதுரை 

பொன்னின் மணியாய்க் காத்துக் 

காவல் புரிந்த வர்கள் 

கடவுள் ஆன தென்ன?

கதையின் ஆழம்

நாயக்கர்கள் வரலாறு மாலிக்கபூர்,படையெடுப்பு, விஜயநகர பேரரசின் விஜயம், கள்ளர்களின் காவல் கண்காணிப்பு என்று ஒரு புரிதல் வந்தவுடன் கடகடவென்று களைப்பின்றி களிப்புடன் நகர்கிறது.

கருப்பணன் – சடச்சி வீரத்தின் சாட்சியாகத் தப்பித்து நிற்கும் சின்னக்கருப்பு, 

குமாரக் கம்பணன் -கங்காதேவி ஆட்சியின் நீட்சியாகும் . விஜயநகர பேரரசின்  வாரிசு பாகீரதி, விஸ்வநாதன் -வீரநாகம்மாவின்  புதல்வன் கிருஷ்ணன்  என்று வரிசை கட்டி வரும் பந்தங்கள் பாசத்துடன் பண்பட்ட பண்பாட்டு வீரத்தின் விளைநிலமாகவும் உள்ளன.

மாலிக்கப்பூர் படையெடுப்பின் போது மாண்டு போன வீரர்களின் வீரமும், நாயக்கர்கள் வரலாற்றில் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சியின் மீத்திறனும், நினைக்க நினைக்க வியப்பைத் தருகிறது.

திருமலை நாயக்கர் மஹால், அழகன் முருகன் வீற்றிருக்கும்  திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  பற்றிய   செய்திகள் படிக்க படிக்க தெவிட்டாத இன்பம் தருகிறது.

மீனாட்சியை ஊருக்குள் அழைத்து வரும் காட்சி பக்தியின் பரவசம். ஊருக்குள் வந்ததும் மாமழையைப் பொழிந்து  கருணையைக் காட்டுகிறாள் 

 தாதனூர்  வாழ்ந்த கள்ளர் 

 தனித்துவ திறனைக் கொண்டு 

 சாதனை புரிவது போன்று

 சரித்திர பக்கம் நின்று

 ஆதவன் வருகை யாக 

அகயிருள் நீங்கும் வண்ணம் 

மாதவம் புரிந்து வந்த

மகத்துவம் நாவல் தானே!

மதுரையின்  ஆரம்ப கால வரலாற்றில் மக்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு. இந்த நாவல் சொல்லும் இடங்களில் எல்லாம் நாமும் தேடி செல்லும் வேட்கையை வெல்ல வேண்டும் என்ற உள்ள கிடக்கையை ஏற்படுத்துகிறது.

மதுரையை சுற்றி யுள்ள 

மல்லிகை வாசம் வீசும் 

மதுரையை ஆண்டு வந்த

மனத்தினைக் கவர்ந்து நிற்கும் 

மதுரையின் வீர ராக 

மாபெரும் காவல் செய்து 

மதுரையைக் காத்து வந்த

மாண்புடை மன்னர் வாழ்க!

நடையின் தனிச்சிறப்பு

வரலாற்றை வாழ்க்கையுடன் இணைத்து ஒரு வண்ணமயமான நாவலை வழங்கியுள்ளார்.காவல் கோட்டம்  கருத்துகளின் கூட்டம். மதுரையின் வரலாற்றை அறிந்து கொள்ள ஆர்வமா? அவசியம் காவல் கோட்டம் படியுங்கள்‌.

மதுரை மல்லிகையின் பூந்தோட்டத்திற்குள் சென்று மதுரை மல்லிகையின் வாசத்தைச் சுவாசித்து வாருங்கள். 

போரும், புயலும் இருந்தாலும் அமைதியும், அழகும் கொஞ்சி நெஞ்சை ஆலாபனை செய்கின்றன. திருட்டும், புரட்டும் இருந்தாலும் விறுவிறுப்பும்  வேகமும், விவேகமும் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன.