ரமலோவ்நூல் : ரமலோவ்
ஆசிரியர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம் :உயிர்மை
விலை ரூ240
கடல் எப்போதும் எந்த வயதிலும் அதிசயம். எத்தனை முறை பார்த்தாலும் கடல் பார்த்தல் திகட்டுவதில்லை. அதுவும் கடல் இல்லாத ஊரில் வசிப்பவர்களுக்கு அதுவொரு மாயவித்தைக்காரனைப் போல மலைக்க வைக்கும்.
ரமலோவ் வாசிப்பனுபவம் அப்படியொரு மாயத்தை நிகழ்த்தியது.
கடல் தன் மக்களின் ஆழ்மனதோடு உரையாடுகிறது. நிமித்தங்கள் மூலமாக தன்னை அறிவிக்கிறது. மூத்தகுடி ஆமை, எஃப்சியின் கனவு, எமிலியின் சிப்பியோட்டு மாந்த்ரீகம், என அழகான ஒரு கற்பனை உலகைப் படைத்திருக்கிறார்.
நானே ஒரு கனவுலகவாசி. நாவலின் கதாபாத்திரங்களும் கனவு காண்கிறார்கள். கனவுக்குள்ளும் கடல் வருகிறது. இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது ஒரு கனவிலிருந்து விழித்ததுபோல இருந்தது.
எட்டு வருடங்களுக்கு முன் வாசித்த சரவணன் சந்திரன் எழுத்துமொழியில் தான் இன்று எவ்வளவு வித்தியாசம். மொழியின் அசாத்தியமான பாய்ச்சலை ரமலோவ்வில் நிகழ்த்தியிருக்கிறார்.
கடலில் பயணிப்பது போன்ற சுவாரஸ்யமான வாசிப்பு வசமானது.
கடல்,கடல் உயிர்கள் அதன் தொன்மம் பற்றிய ஞானம் சிறிதளவாவது இல்லாமல் இப்படியொரு நாவலை எழுதிவிட முடியாது.
சரவணன் சந்திரன் படைப்புலகில் ரமலோவ் ஒரு சாகசம்.
(வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்)