வந்த பாதை – ஒரு பார்வை
(எண்பதில் நின்று திரும்பிப் பார்க்கிறேன்) – ராணிமைந்தன்
392 பக்கங்கள்
வானதி பதிப்பகம் வெளியீடு
விலை ₹600/-
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் எனது உடல்நலம் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை. திரு ராணிமைந்தன் அவர்களை மிகவும் நேரடியாக சுமார் ஓராண்டு காலமாகத் தான் பழக்கம்.
என்னுடைய நூல் ஒன்றை ‘பேனாக்கள் பேரவை’ – (திரு மோகன்தாஸ் அவர்கள் இல்லத்தில்) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அளித்து மகிழ்ந்தேன். அவர் அந்த நூலை வாசித்து விட்டு எனக்கு நீண்டதொரு அன்புக் கடிதம் எழுதி அனுப்பி அவர் அன்பினால் திக்குமுக்காடச் செய்தார்.
பின்னர் நடைபெற்ற அவரது இந்த நூல் வெளியீட்டு விழா அழைப்பை அனுப்பி அலைபேசி மூலமும் அழைப்பு விடுத்தார். எனது காரணங்களைப் புரிந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நான்கு ஐந்து நாட்கள் கழித்து “என் இனிய நண்பர் திரு பாலசாண்டில்யன் அவர்களுக்கு” என்று கையெழுத்து இட்டு குரியரில் வந்தது தூக்க முடியாத கனத்துடன் இருந்தது. காரணம், அவர் அன்பும் அதில் இருந்ததால் தான். ஒரே பார்வை என்னை மயக்கும் என்பது போல நட்பு பல்லாண்டுகள் கடந்த ஒன்று போல மனம் உணர்ந்தது.
ஏற்கனவே இவர், சாவி 85, ஆர் எம் வி, எஸ் பி எம், சங்கீதப் பெருங்கடல் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, எழுத்து சேவை என்சிஎம் உட்பட 40 வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதியுள்ளார். தவிர, 21 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். மேலும் 8 தொகுப்பு நூல்களும் எழுதியுள்ளார்.
இவருடைய இந்த சுயசரிதை நூலுக்கு முனைவர் டி எஸ் அர்த்தநாரி (சாவி குடும்ப உறுப்பினர்), இயக்குநர் திரு எஸ் பி எம், ஏவிஎம் திரு சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, கவிப்பேரரசு வைரமுத்து என்று பெரிய ஆளுமைகள் அணிந்துரை மற்றும் வாழ்த்துரை வழங்கி நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
வண்ணப்படங்கள் நிறைந்த இந்த வழவழப்பான நூலில் 68 கட்டுரைகள் உள்ளன.
இவற்றில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் பல. முக்கியமாக கலைஞரோடு ஒரு வாக்கிங், ஒரு வித்தியாசமான மேட்டர், மெல்லிசை மன்னர் எம் எஸ் வி, மெரினாவில் சுண்டல் விற்றேன் (இன்னும் பல) போன்ற கட்டுரைகள்.
எனக்கு மிகவும் வருத்தம் அளித்த கட்டுரை இளையராஜா அவர்களுடன் (பெருமை புகழ் தலைக்கேறினால் பாதிக்கப்படும் சாதாரணர்கள்) என்ற தலைப்பிலானது.
எனக்குத் தெரிந்த பூர்ணசக்தி உஷா, எழுத்தாளர் நாகராஜன் மற்றும் அவரது மனைவி பற்றிய விவரங்கள் இதில் கண்டு மகிழ்ந்தேன்.
இவர் எளிமை. இவர் எழுத்தும் தான். சுவாரசியமான நடை. பூச்சுக்கள் அற்ற யதார்த்தமான எழுத்து. வங்கி அதிகாரியாக இருந்தார். பின்னர் நட்பு அன்பு பாராட்டு வாங்கி அதிகாரியாகத் திகழ்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே.
இவரை எனது நட்பு வட்டத்தில் சேர்த்த இறைவனுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.
நூலாசிரியர் மேலும் தமது எழுத்துப்பணியைத் தொடர்ந்து பல காலம் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
