No photo description available.

 

 காரை கீழ் தளத்தில் நிறுத்தி விட்டு லிஃட்டில் ஏறி, மண்டபத்துக்குள் நுழைந்தேன். முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது. உள்ளே பெரிய கூட்டம்,  சப்தம், சிரிப்பு, நகைச்சுவை, கல்யாண வாசல்கள், குங்குமம்,  மஞ்சள் மலர்கள்  வாசம் , நெய் சோறு வாசனை எல்லாம் சேர்ந்து ஒரு தோரணைக்கோலம்  போட்டிருந்தது. 

என்னுடன் வந்த மனைவி, “நான் உள்ளே போயிட்டு வரேன், எல்லாரையும் எனக்கு தெரியும். உங்க வேலையெல்லாம் இங்க கூட்டத்தில  யாரோ ஒருத்தரை பிடிச்சுகிட்டு  பேசுறதுதான் !” என்று புன்னகையோடு உள்ளே போனாள். 

நான் மட்டும் நின்றுகொண்டு , உள்ளே இருந்த கூட்டத்தையே சுற்றும். முற்றும் பார்த்தேன்.. யாராவது நம் உறவினர்கள் பக்கம் இருக்கிறார்களா என்று பார்த்தேன். யாராவது பேச கிடைப்பார்களா என்று! 

அதோ அங்கே சேரில் தனியே உட்கார்ந்திருந்த் அவர்தான் கண்ணில் பட்டார். 

பார்க்க மிகவும் சாதாரணமாக, வித்யாசமாக இருந்தார். 

வெளிறிய சட்டை, பழைய வேஷ்டி, கால் செருப்பு கூட இல்லை. 

கூட்டத்திலிருந்த வேறுபட்டு, இருந்த அவரது தோற்றம், எனக்கு எதையோ சொன்னாற்போல் இருந்தது 

பட்டு புடவை, ஜரிகை வேட்டி, ரோலெக்ஸ் வாட்ச், ஸ்டைலிஷ் ஜிப்பா என பணம் பகட்டு வெளிப்படும் இடத்தில், இவரது அமைதி ஒருவிதமாய், வேறுபட்டு எனக்குள் ஒலித்தது. 

“ஏன் இவர் இப்படி வந்திருக்கிறார் ? நம்ம உறவா!! ஒரு முறை கூட பார்த்ததே இல்லியே இவரை!!!?” 

 கண்களை சுழற்றி எல்லோரையும்  பார்த்து கொண்டிருந்தார். 

” இவர் பார்வை வேறு மாதிரி இருக்கே!” 

வேலைக்காரர் போல தெரியவில்லை. அப்போ காரோட்டியா? தோட்டக்காரரா! யார் இவர். நம் பக்க உறவினர் மாதிரியும் தெரியவில்லையே!!”

அவர் அங்கும் இங்கும் தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தார். 

அவசரமாய் என் மனதைக் கேட்டேன் “இவரோடு பேசலாமா? பேசாமலே இருக்கலாமா?” 

அருகில் சென்று அமைதியாக அமர்ந்தேன்.

அவர் சற்றுத் திடுக்கிட்டார். 

பேச்சைத் தொடங்கினேன்.

“நான் பெங்களூரு,  சென்னைக்கு வந்திருக்கேன். உங்க ஆட்கள் யாராவது இங்க இருக்காங்களா?” 

சின்ன சிரிப்புடன், தயங்கிய குரலில் சொன்னார்:

“நானும் கோவில் பட்டி .. நானும் பொண்ணு வீட்டுக்கு… சித்தப்பா. தூரத்து வகைல.” 

“என்னது !” என்னையும் அறியாமல் என் குரல் வெளிப்பட்டது . 

ஆனால் உடனே மனம் ஏதோ சொல்லியது!!!

அவர் பதில் சொல்லும் விதமும், புன்னகையின்மையும், உடம்பு முழுக்க ஓர் தயக்கமும்  தென்பட்டது! 

அந்த நேரத்தில் என் மனைவி அவசரமாக வந்தாள்.

“எங்கெல்லாம் தேடியே நொந்துட்டேன்! கவர கொடுத்தீங்களா? முகூர்த்தம் முடிஞ்சாச்சு, பந்தி ஆரம்பிச்சாச்சு. பசிக்குது. வாங்க சாப்பிட போகலாம்.” 

அருகே இருப்பவரை பார்த்து 

அவள் ” யாருங்க இவரு ?” பார்த்ததே இல்லியே!!!! ” என்னிடம் மெதுவாக கேட்டாள்.

அவளிடம் சொல்ல மனத்தில் ஒரு ரகசிய தயக்கம். 

“ஏதோ பொருந்தாத உண்மை போல இருக்கே… ஆனால்!” 

அவரைப் பார்த்தேன்.

அவருடைய … பஞ்சடைத்த கண்கள் .

உடல் சுருண்ட வயிறு… ஒட்டிப் போன தோள்கள்…

பசியின் பிசுபிசுப்பை சுமந்த முகம். 

அந்த கணம் ஒரு உணர்வு எழுந்தது .

ஓர் மனிதனுக்கு  விலை உயர்ந்த ஆடைகள், ஆடம்பரம், செல்வம்  இவை தான்  அடையாளமா?

இல்லை இதையும். தாண்டிய வேறு எதோ ஒன்றா !

“வாங்க. சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என்று அவரை அழைத்துப் போனேன். 

டைனிங் ஹாலில் அவருக்கு அருகே இடம் வைத்தேன். 

அவர் தயங்கி, “இல்ல… நானும் சாப்பிடலாமா?” என்று கேட்டது போல இருந்தது. 

“ஏன் அப்படி கேக்கறீங்க… நாம எல்லாம் உறவு இல்லையா?” 

“அவங்க கிட்டே இருந்து அழைப்பு இல்ல நானா பார்த்திட்டு போக வந்தேன்!” 

“சின்ன வயசில எடுத்து வளத்த பிள்ளை ” 

கண் கலங்க வார்த்தைகள் நின்றது. 

அவரிடம் கேள்விகள் கேட்காமல், பதிலும் சொல்லாமல் அவர் ஏதோ பேசட்டும் என்று கேட்டு கொண்டு இருந்தேன். 

சிறு புன்னகை அவர் முகத்தில்.

அவரோடு பந்தியில் உட்கார்ந்தேன். 

என்னோடு சாப்பிட்ட பிறகு, அவர் எழுந்தார்.

அவசரமாய்ப் போகச் சித்தமாயிருந்தார். 

“அண்ணே!”

அவர் திரும்பினார். 

“இன்னும் கொஞ்ச நேரம் இருங்க… “

“கிளம்பணும்…” தயக்கத்தோடு இழுக்கவே நானே சென்று தாம்பூலம் வாங்கி கொடுத்து வாசலுக்கு சென்று வழி அனுப்பி வைத்தேன்.

விழா,  பாசத்தின் சாயலோடு முடிந்தது. முகூர்த்தம், மரியாதை, பாராட்டு, ஆடம்பரம்  எல்லாம் ஒரு பக்கம். 

அந்த எளிய மனிதனின் வருகை மட்டும் எனது மனதைத் தொட்டது. பந்திக்கு பின் அவர் முகம் சிறிது தெளிவு பிறந்தது போல பட்டது. அவர் யார் உண்மையிலே உறவா, மற்றைய விவரங்களை, அவரின் ஒட்டிய வயிறு நிறைந்து, முக மலர்ச்சியை பார்த்த பின், அவரிடம் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

இது ஒரு பூணுல் கல்யாணம் என்று அவரிடம் நான் சொல்லவில்லை.

அந்த நாள் எனக்குப் புது புரிதலைக் கொடுத்தது. பசியால் மனமும். வயிறும் நிறைந்த அந்த கணமே, ஒரு பந்தம் அங்கே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

ஒருவரை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுவே, அவருடனான பந்தத்தை தீர்மானிக்காது. அவரை உணர்ந்த கணமே, அந்த பந்தம் பிறக்கிறது. மண்டபத்தை விட்டு கிளம்பும் போது வயிறு மட்டுமல்ல, மனமும் சேர்ந்து நிறைந்தே இருந்தது.