
இன்னுமோர் ‘மெகா சங்கீத கச்சேரி சீசன்’ முடிந்திருக்கிறது.
எனக்கு சிறுவயதிலிருந்தே கர்நாடக இசை கேட்டு ரசிக்கும் அனுபவம் இருந்தது. அதற்கு என் மூத்த சகோதரிதான் காரணம். அவள் பாட்டு கற்றுக் கொண்டவள். முறையான கர்நாடக சங்கீதம் தெரிந்தவள். அதோடு வீணையும் வாசிக்க கற்றவள். அவள் திறமை தான் என்னை அசைத்திருக்க வேண்டும். அவளிடமிருந்துதான் நான் கர்நாடக சங்கீதம், அதன் பிரபல பாடகர்கள், கீர்த்தனைகள், பாடும் விதம், ரசனைகள், இவற்றை கேட்டு அறிந்தேன்.
எனக்கு நிரந்தர வேலை கிடைப்பதில் நிறைய சங்கடங்கள் இருந்தன. அதற்கும் கர்நாடக சங்கீதத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. நீங்கள் குழம்ப வேண்டாம். வேலை கிடைத்தபின் நான் ஒரு ஆசிரியரிடம் சென்று வீணை கற்றுக்கொள்ள விழைந்தேன். அதற்கும் என் சகோதரிதான் காரணம். ஆனால், என் வாழ்க்கையில் நான் சங்கீத வித்துவானாகும் வாய்ப்பு கிடையாது எனபதை நான் விரைவிலேயே உணர்ந்தேன். அதனால், எனக்கு அதன்மேல் சற்று மனத்தாங்கல் ஏற்பட்டது. கொஞ்ச காலம் வீட்டில் வீணை இருந்தாலும் வாசிக்க மனம் வரவில்லை. சங்கீத கச்சேரிகளையும் எதோ ஒரு வகையில் சென்று கேட்பதை தவிர்த்தேன்.
ஆனால், ஏதோ ஓர் நாள் ஓர் சங்கீத சபாவை கடந்து சென்றபோது எனக்கு ஓர் சந்தேகம் தோன்றியது. நமக்கு இன்னும் சங்கீத ஞானமும் ஆர்வமும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள. அரங்கத்தினுள் நுழைந்தேன். பாடிக்கொண்டிருந்தவர் ஓர் பிரபல பாடகிதான். அவர் பாடிக்கொண்டிருந்த ராகமும் எனக்கு பாடலும், ராகமும் எனக்கு தெரிந்தவைதான். அமர்ந்து கேட்க தொடங்கினேன். என்னால் முழுமையாக அந்த சங்கீதத்தை அனுபவிக்க முடிந்தது. அதன் பின் இலவசமாகவே நடந்து கொண்டு இருந்த பல கச்சேரிகளுக்கு செல்ல தொடங்கினேன்.
எழுதுவதிலும், கச்சேரிகள் பற்றி பல பிரபல விமர்சகர்கள் எழுதுவதையும் படித்து பார்த்த பின் ‘ஏன் நாமும் இதுபோல் கச்சேரி விமர்சனங்கள் எழுதக்கூடாது?’ என்று தோன்றியது. எழுதி? நான் சொல்வது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன். அப்போது ஓர் ஆங்கில தினசரியில் ஞாயிறு தோறும் ஓர் சிறு கச்சேரி விமர்சனம் வெளியாகும். அதை இரு விமர்சகர்கள் எழுதுவார்கள். அவர்கள் பேர்தான் எனக்கு தெரியும். வேறு எதுவும் தெரியாது.
இந்த தினசரியில் விமர்சனம் சுருக்கமாகவும், அழகாகவும் வருகிறது. ஏன் நாமும் இதை முயற்சி செய்தி பார்க்கக்கூடாது என்று தோன்றியது. நானே ஓர் நாள் வலிய அந்த தினசரி அலுவலகத்திற்கு சென்று நான் சங்கீத விமர்சனங்கள் எழுத யாரை பார்க்க வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் ஓர் பெண்மணியின் பெயரை சொல்லி அவரை சந்திக்க சொன்னார்கள். நான் அவரிடம் சென்று என்னை பெயர் மட்டும் சொல்லி அறிமுகம் செய்து கொண்டு ‘நான் ஓர் கர்நாடக சங்கீத ரசிகன். உங்கள் ஞாயிறு இதழில் வரும் விமர்சனங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கும் சங்கீதம் மற்றும் எழுத்து இவற்றில் அனுபவம் உண்டு. அதனால் எனக்கும் ஓர் வாய்ப்பு கொடுப்பீர்களா? என்று கேட்டேன்.
அந்த பெண்மணி என்னை வியப்புடன் பார்த்தார். பின் சொன்னார். ‘இதில் வருமானம் அதிகம் கிடைக்காதே?’ என்றார். நான் புன்னகை செய்தேன். ‘நான் இதை ஆசைக்காக செய்கிறேன்; காசுக்காக இல்லை.’ என்றேன். அவரும் புன்னகை செய்தார். (இந்த வரி குமுதத்தில் ‘மேஜர் சந்திரகாந்த்’ பட விமர்சனத்தில் வந்த வரி என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாமில்லை; ‘இது ஆசைக்காக எடுத்த படம், காசுக்காக அல்ல.’)
அடுத்த வாரம் நான் பிரியா சகோதரிகளின் கச்சேரி ஒன்றை கேட்டுவிட்டு அது பற்றிய விமர்சனத்தை அனுப்பி வைத்தேன். அப்போது ஈமெயில் எல்லாம் கிடையாது; தபாலில்தான் அனுப்ப வேண்டும். அந்த விமர்சனம் அந்த வார ஞாயிறு இதழில் இசை விமர்சனமாக வந்தது. இதுதான் என் இசை விமர்சன பயணத்தின் ஆரம்பம். அதற்குப்பின் பல நல்ல பெரியவர்களின் வாழ்த்துக்கள், ஆதரவு, உதவி இவற்றால் ஓர் பிரபல ஆங்கில நாளிதழின் வாராந்திர பகுதியில் 2020 ஆண்டிலிருந்து தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
இதில் நான் சந்தித்த பல சங்கீத வித்துவான்கள், விதூஷிக்கள் உண்டு. எல்லாமே மிக நல்ல, நினைவில் நிற்கும் அருமையான அனுபவங்களே.
இந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் கேட்ட, ரசித்த, இன்றும் கேட்டு ரசிக்கும் அனுபவங்கள் பல. அவை பற்றிய கருத்துக்களே எந்த கட்டுரை. நான் எந்த உயரத்திலும் நின்று தீர்ப்பு வழங்கவில்லை. வழங்கவும் முடியாது. வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப கலைகளும் மாறிக்கொண்டேதான் இருக்கும். அதுதான் நிஜம்.
எந்த வளர்ச்சியிலும் சாதகமான, பாதகமான, நடுநிலையான சந்தர்ப்பங்கள் இருக்கும். கர்நாடக சங்கீதமும் விதி விலக்கல்ல.
அந்த நாட்களில், சங்கீத வித்வத் சபை என்று அழைக்கப்படும் ‘மியூசிக் அகாடெமி’ தவிர ‘இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி’ மற்றும் ‘தமிழ் இசை சங்கம்’ என்ற மூன்று முக்கிய நிறுவனங்கள் மட்டுமே நிகழ்த்தி வந்த இந்த கர்நாடக சங்கீத கச்சேரிகள் இன்று பல நிறுவனங்களால் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக நடத்த படுகிறது. சென்னை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே விழா காலம் பூண்டு விடுகிறது. இது பொங்கல் வரை தொடர்கிறது. காலையிலிருந்து இரவு வரை செல்லும் இந்த விழாக்களில் பங்கு பெற்று தங்கள் திறமைகளை காட்டும் கலைஞர்கள்தான் எத்தனை பேர்கள்? இளையவர் முதல் மிக மூத்த கலைஞர்கள் வரை எல்லோரும் எல்லா சபாக்களிலும் கச்சேரி செய்கின்றனர். பிரபலங்களின் கச்சேரிகளுக்கு கூட்டம் சொல்ல முடியாத அளவு வருகிறது. கச்சேரி தவிர ஆராய்ச்சி கட்டுரைகள் பகிர்ந்து கொள்ள படுகிறது. இரண்டு மூன்று வித்துவான்கள் இணைந்து கலந்துரையாடல்கள், சங்கீதம் குறித்த விஷயங்கள் ஆழ்ந்து விவாதிக்க படுகின்றன. கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்கள் அலசப் படுகின்றன. செவிக்கும். சிந்தைக்கும் பலவிதமான செய்திகள் தரப்படுகின்றன. பல புதுமைகள் பேசப்படுகின்றன. சில இசை கலைஞர்கள் நேரம் போதாமல் தவிக்கின்றனர் என்பது போல் பலர் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமலும் வருந்துகின்றனர் என்றும் சொல்ல வேண்டும்.
ஆனால்,
இவை சென்று அடைய வேண்டிய மக்கள், அதாவது கச்சேரிகளுக்கு சேரும் கூட்டம் எந்த காரணங்களால் என்றும் ஆராய வேண்டி இருக்கிறதல்லவா?
இந்த ஆண்டும் நான் சில கச்சேரிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.ஓர் பிற்பகல் கச்சேரி; பிரபலமான அரங்கம்தான். அந்த பாடகி நன்றாகவே பாடிக்கொண்டிருந்தார். இளைஞிதான். ஆனால். கேட்பவர்கள் ஓர் 30 அல்லது 40 பேர்கள் தான் இருந்தனர். அது முடிந்து அடுத்த கச்சேரி வாத்திய இசை. இவர்களும் பிரபலமானவர்கள்தான். ஆனால், அத்தனை பெரிய அரங்கத்தில் இருந்தது மொத்தம் 13 லிருந்து 20 பேர்கள் மட்டுமே. ஏன்? தெரியவில்லை. இதில் ஓர் பெண்மணியை இன்னோர் பெண்மணி ஓர் சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து வந்து மிகுந்த சிரமத்துடன் ஓர் நாற்காலியில் மாற்றி அமரச்செய்தார். இரண்டு பாட்டுக்குப் பின்னர் அந்த பெண்மணியை அழைத்து வந்த அந்த இன்னொருவர் மீண்டும் உள்ளே வந்து மிகுந்த சிரமத்துடன் நாற்காலியில் இருந்து மீண்டும் சக்கர நாற்காலியில் அமரச்செய்து வெளியே கொண்டு சென்றார். நான் அப்போது அந்த ரசிக பெண்மணியின் பாதங்களை பார்த்தேன். சுமையாக வீங்கி இருந்தது. அதன் கஷ்டம் நிச்சயம் அதை அனுபவிக்கும் அந்த ரசிக பெண்மணிக்கு தெரியும். அந்த காலத்தில் வேண்டுமானால், வானொலியை விட்டால் இசை கேட்க வழி கிடையாது; இன்று அப்படி இல்லையே? வீட்டின் அமைதியான சூழலிலேயே இந்த இசையை கேட்டு ரசிக்க முடியுமே ? ஏன் அரங்கத்திற்கு வந்து அவதிப் பட வேண்டும்? அதுவும் இரண்டு பாடல்களை கேட்க? தெரியவில்லை.
இன்னொரு சம்பவம். என் உறவுக்கார பெண்மணி, எல்லோரையும் போல் அவள் செல்வங்கள் அமெரிக்கா மண்ணிலும், ஐரோப்பிய மண்ணிலும் ஊன்றியவர்கள். இவளும், இவள் கணவரும் சங்கீத வித்வத் சபையில் இன்றைய ஓர் பிரபல பாடகரின் இசையை கேட்க சென்றிருக்கின்றனர். எக்கச்சக்கமான கூட்டம். இடமே கிடைக்கவில்லை. இவள் பால்கனிக்கு சென்று தனக்கு அவருக்கும் இடம் தேடி இருக்கிறார். ஆனால், இவளுக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது. அவர் காரை வேறெங்கோ நிறுத்தி விட்டு கீழேயே எதோ ஓர் நாற்காலியில் அமர்ந்து கச்சேரி கேட்டிருக்கிறார். இவளும் வித்துவான் என்ன பாடினார் என்பதை என்னிடம் சொல்லவில்லை. மாறாக, இவளுக்கு அருகில் இருந்த பெண்மணி அட்லாண்டா, யூ.எஸ்ஸில் இருந்து வந்திருந்ததாகவும், இவளுக்கு தெரிந்த சிலரை அவளுக்கும் அட்லாண்டாவில் தெரிந்து இருந்தது பற்றியும், இந்த வித்துவான் அமெரிக்கா வந்த போது இவர்கள் வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறினாள் என்று மட்டுமே சொன்னாள். கச்சேரியில் என்ன பாடினார், எதை சிறப்பாக கையாண்டார் என்பது பற்றி ஓர் வார்த்தை கூட கிடையாது.
இன்னோர் நிகழ்வு. குறுகலான அந்த வீதியில் நான் ஓர் கச்சேரி கேட்கச் சென்றபோது கிட்டத்தட்ட காலை 11மணி இருக்கும். சங்கீத சபையை ஒட்டி இருந்த கேன்டீனில் நுழைய இரண்டு நீண்ட க்யூ வரிசைகள் நின்று கொண்டிருந்தன. நான் விசாரித்து அறிந்து கொண்டது: ஒன்று சாப்பாடு டோக்கன் வாங்க. இன்னொன்று டோக்கன் வாங்கியபின் உள்ளே நுழைந்து சாப்பிட. சாப்பாட்டின் விலை 650 ரூபாய். ஆனால், அதற்கு காரணம் அந்த கேன்டீன் நடுத்துபவர் கல்யாண சமையல் தொழிலில் மிகப் பிரபலமானவர். நான் அரங்கத்திற்குள் சென்ற போது அங்கே 20 பேர் கூட இல்லை.
இன்னுமோர் மிக பெரிய அரங்கத்தில் ஓர் கச்சேரி. பாடகர்கள் சோதரர்கள். மிக நன்றாகவே பாடிக்கொண்டிருந்தனர். அரங்கம் கிட்டத்தட்ட முக்கால் நிரம்பி இருந்தது. நான் ஒரு மணி நேரம் கழித்து திரும்பி பார்த்தபோது அரங்கம் முக்கால் பகுதியில் இருந்து கால் பகுதி ஆகி இருந்தது. ஏனோ? நல்ல சங்கீதம் என்று அன்பர்களுக்கு தோன்றவில்லை போலும்!
இன்னோர் அனுபவம். அந்த வீணை வித்துவான் மிக நன்றாகவே வீணை வாசித்து கொண்டிருந்தார். கூட்டமும் ஓரளவு இருந்தது. வித்துவானும் ஒவ்வொரு கீர்த்தனைக்கும் தொடர்புள்ள சில விஷயங்களை சுவையாக பகிர்ந்த வண்ணம் கச்சேரி செய்தார். அவர் வீணையில் தானம் வாசிக்கையில் ரசிகர்களின் விருப்பம் எதாவது உண்டா என்று கேட்டபோது, கிட்டத்தட்ட 20 புதிய ராகங்களை ரசிகர்கள் பேப்பரில் எழுதி அனுப்பினார். அதில், பிரபலமாக இல்லாத, பலர் இதுவரை கேட்காத ராகங்கள் கூட இருந்தன. ஆனால், என்ன செய்ய, நேரம் காரணமாக அவரால் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.
சங்கீத இலக்கணங்களை பற்றி பாடி மற்றும் பேசி விளக்கம் கொடுக்கும் ஓர் நிகழ்வில் நல்ல கூட்டம். பேசியவர்கள் மிக இளம் ஆனால், நன்கு இசை தேர்ச்சி உள்ளவர்கள் என்பது அவர்கள் உரையாடலில் இருந்தே தெரிந்தது. ஆனால், ஓரளவு சங்கீதம் தெரிந்த எனக்கு கூட அவர்கள் பேசிய பல பகுதிகள் புரிந்து கொள்ள கடினமாகவே இருந்தது. ஆனாலும், ரசிகர்களுக்கு குறைவில்லை.
சமீபத்தில் எனக்கு நன்கு பழக்கமான இசை உலகில் உள்ள ஓர் நண்பர் அவரும் அவருடன் சங்கீத ஞானமும், பல பிரபல சங்கீத உலக நண்பர்களும் உள்ள இருவருடனும் ஓர் கச்சேரிக்கு சென்றிருக்கின்றனர். அதில், அந்த வித்துவான்கள் செய்த ஓர் சிறப்பான அம்சத்தை கூட இவர்கள் இவரிடம் குறிப்பிட்டு பேசாமல் வெறுமே கேட்டுக்கொண்டும் கைதட்டிக்கொண்டும் அமர்ந்திருந்தனர் என்பது வியப்பாக இருந்திருக்கிறது ; எனக்கல்ல, அவர்களுடன் சென்ற அந்த பாடக நண்பருக்கே.
பெரும்பாலானவர்களுக்கு, இசை கலைஞர்களும், பேட்டிகளில் கச்சேரிக்கு வரும் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து ‘மொபைல் போனி’ல் ஆழ்ந்து இருப்பதையும், செய்திகள் அனுப்பி கொண்டிருப்பதையும் கவனித்ததாக சொல்ல கேட்டிருக்கிறேன்.
பெயரும், புகழும் பெற்றுள்ள சங்கீத கலைஞர்களுக்கு கூட்டம் வருவதை புரிந்து கொள்ள முடிகிறது. அதை அவர்கள் ஓர் ‘ஸ்டேட்ஸ் சிம்பலா’க கருதுவது வியப்புக்குரிய விஷயமல்ல. அதுதான் ‘கூட்ட உளவியல்’.
ஆனால், நிச்சயமாக இந்த டிசம்பர் இசை விழாவின் அபரிமிதமான கூட்டத்தால் பல தொழில்கள், குறிப்பாக உணவு தயாரிப்பு, ஒளி அலங்காரம், ஒளி மற்றும் ஒலி ஏற்பாடு செய்பவர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் பெரும் பலன் பெறுகின்றனர் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சில வளரும் கலைஞர்கள் மேலே ஏறவும் பலர் கவனத்தை ஈர்ப்பதும் குறிப்பிடப் பட வேண்டிய சமாச்சாரங்கள்.
ஆனால், நான் சொன்ன இந்த பிரதிபலன், தகுதி உள்ள எல்லோருக்கும் கிடைக்கிறதா என்பது சர்ச்சைக்குரிய விஷயமே. நான் எவரையும் குறை கூறவில்லை. எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரும், சமீபத்திலும் நிகழ்ந்த ஓர் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் கூறியது போன்ற ஓர் பிற்பகல் கச்சேரிக்கு நான் சென்றிருந்தேன். அதில் பாடிய ஓர் இளைஞன் மிக நன்றாகவே பாடினான். ஆனால், ரசிகர்களே இல்லை. அவன் கச்சேரியை முடித்து விட்டு கீழே இறங்கி வெளியே செல்லும் போது அவனிடம் சென்று சொன்னேன். ‘உன் சங்கீதம் மிக நன்றாக இருந்தது. ஆனால், ரசிகர்களே இல்லையே. அது உனக்கு வருத்தமாகவோ, சோர்வையோ உண்டாக்கவில்லையா?’
அந்த இளைஞன் புன்னகை செய்தான். ‘இல்லை’, என்றான். ‘ நான் தொடர்ந்து பாடுவேன். சங்கீதம் என் பேரார்வம், அதாவது பேஷன் (passion). அதை என்னால் விடமுடியாது.’
எனக்கு வியப்பாக இருந்தது.
பின்குறிப்பு: நான் சமீபத்தில் ஓர் சரசாங்கி ராகத்தில் அமைந்த ஓர் பழைய கர்நாடக இசைப் பாடலை பற்றி வலைத்தளத்தில் தேடியபோது ஓர் ஒலி-ஒளி தொடர்பு கிடைத்தது. அதை திறந்து பார்த்தேன். நான், சில ஆண்டுகளுக்கு முன்பு, அன்று சந்தித்து பேசிய இளைஞன் நான் தேடிய அந்த கீர்த்தனையை பக்க வாத்தியம் எதுவும் இன்றி ஓர் ஏகாந்தமான புல்வெளியில் அமர்ந்து, அந்த பாடலைப் பற்றிய ஓர் சிறு விளக்கம் கொடுத்துவிட்டுப் பாடியிருந்தான். கேட்க எளிமையாக, அருமையாக இருந்தது .
ஆனால், அந்த இடம் இந்தியாவில் அல்ல ; அமெரிக்காவில் உள்ள ஓர் ஏகாந்தமான இடம். அவன், அன்று சொன்ன பதிலின் அர்த்தம் எனக்கு இப்போது புரிந்தது.
