பள்ளி விடுதி பற்றியும் பட்டப்படிப்பு படிக்கையில் நான் கண்ட கல்லூரி விடுதி பற்றியும் சென்ற கட்டுரையில் எழுதியிருந்தேன். அவற்றின் மூலம் பெற்ற அனுபவங்களையும் விளக்கி இருந்தேன். இந்தக் கட்டுரை நானே இரண்டாண்டுகள் அனுபவித்த முதுகலைப் படிப்பின் போது பெற்ற அனுபவங்களின் தொகுப்பு.
முதலில் இருந்தே தொடங்குகிறேன்..
M.Sc Botany with specialization in Genetics and Plant Breeding என்ற படிப்பில் எனது ஈடுபாடு காரணமாக நான் பாட்னா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பம் செய்தேன். அச்சமயம் தமிழகத்தில் அது போன்ற சிறப்பு முதுகலைப் பட்டத்தை எந்தப் பல்கலைக் கழகமும் அளிக்கவில்லை. எனவே ஹிந்தியில் அனா ஆவன்ன தெரியாத நிலையிலும் மிகத் துணிச்சலாக நான் பாட்னா கிளம்பிவிட்டேன்.
கையில் பெட்டி படுக்கையுடன் பாட்னா ஸ்டேஷனில் இறங்கி ஒரு வாடகை ரிக்ஷாவில் ஏறி “ராஜேந்தர நகர் போக வேண்டும் என்று அரை குறை ஹிந்தியில் அவசரமாக உளறினேன். “தஸ் ருபியா” என்றார் ரிக்ஷா ஓட்டுனர். ( 1970-ல் அது பெரிய தொகை} அதிகம் என்று தெரிந்தாலும் , புதிய இடம், மொழி தெரியாது என்பதால் “சரி” என தலையாட்டினேன்.
ரிக்ஷா ஓட ஆரம்பித்தது. ராஜேந்தர் நகர் பகுதிக்கு வந்தவுடன் ரிக்ஷாவாலா கேட்டான்,
“ ராஜேந்தர நகர் மே கிஸ் ஜகா தக் ஜானா ஹை பாபு ?”
“ வோ விஸ்வவித்யாலயா கா பி..ஜி. ஹாஸ்டல் தக் ஜானா ஹை சலோ” என்றேன்.
ஒரு கணம் என்னை கொஞ்சம் பயத்துடன் பார்த்து ,
“க்யா சாப் ஆப் வஹா கா வித்யார்த்தி ஹோ “
“ ஹாங் ஹாங்” என்று தலையாட்டினேன்.
உடனேயே முண்டாசை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு,
“ அரே சாப் மாப் கர்தோ ! வாடா பாஞ்ச் ரூபியா தேனா தோ டீக் ஹை “ என்று மரியாதையுடன் கூறினான்.
மாணவர் விடுதி மேல் லோக்கல் ரிக்ஷாவாலாக்கள் என்ன “பய பக்தியுடன்” இருக்கிறார்கள் என்று புரிந்தது. வாடகை அதிகம் கேட்ட ஒரு ரிக்ஷாவை மாணவர்கள் ஹாஸ்டல் வளாகத்துக்கு உள்ளேயே பூட்டி வைத்ததாக சில வரலாறுகள் இருப்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன். உற்சாகத்துக்கும் எல்லை கிடையாது; துணிச்சலுக்கும் எல்லை கிடையாது என்று இருந்த ,விரைவாக உணர்ச்சி வசப்படும் விடுதி மாணவர் கூட்டத்துள் நானும் ஒருவனாகி உள் புகுந்தேன் .
அக்கம் பக்கம் கட்டடங்கள் குடியிருப்புகள் இல்லாத பெரிய நிலப்பரப்பு. நடுவிலே எங்கள் விடுதி. “ப” வடிவிலே அமைந்த கிரவுண்ட் ஃபுளோர் ம் சேர்த்து மூன்று தளங்கள் கொண்ட கட்டடம். ஒவ்வொரு தளத்திலும் மொத்தம் முப்பத்து மூன்று அறைகள் ;எல்லாமே தனி அறைகள். ஒருவர் மட்டுமே தங்கலாம் . எந்தத் துறையாக இருந்தாலும் பல்கலைக் கழகத்தின் போஸ்ட் கிராஜூவேட் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு, கிரவுண்ட் ஃபுளோர்-ன் வேறொரு புறத்தில் பெரிய சாப்பாட்டுக் கூடமும் , வாயில் அருகே ஹாஸ்டல் அலுவலகமும் ,அதன் பின்னே ஒரு டேபிள் டென்னிஸ் கூடமும் உண்டு. இது தவிர நிலப்பரப்பு அதிகம் உள்ளதால் ஹாஸ்டல் எதிரிலேயே ஷட்டில் விளையாட இடம் உண்டு. பின்புறம் ஒரு கால்பந்து மைதானமும் இருக்கும்.
யாருடைய இடையூறும் இல்லாத தனி அறை. தளத்தின் ஒரு முனையில் விசாலமான குளியலறை மற்றும் கழிப்பறைகள்.. மாணவர்களாலேயே நிர்வகிக்கப்படும் கேண்டீன்.; காலையும் மாலையும் நடைப் பயிற்சிக்கு ஏற்ற நெருக்கடி இல்லாத சூழல். “முன்ஷி” என அழைக்கப்படும் ஒரு மேனேஜர் தவிர வேறு சீனியர் பேராசிரியர்கள் யாரும் தங்கமாட்டார்கள் எனவே கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரம் அனுபவிக்கும் விடுதி எங்கள் விடுதி.
இத்தனை “நிறை” களுக்கு நடுவே சில குறைகளும் இருந்தன. முதல் குறை பல்கலைக் கழகத்திற்கும் எங்கள் விடுதிக்கும் நான்கு கி,மீ. தொலைவு. மற்ற சில விடுதிகளும், மகளிர் விடுதியும் பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயே இருந்தன. ஆனால் அவற்றில் தனி அறைகளே கிடையாது. நெருக்கடியான நகர மையப் பகுதியில் இருந்ததால் அவற்றில் இடநெருக்கடி உண்டு. பேராசிரியர்கள் வார்டன்களாகப் பொறுப்பேற்று அங்கே இருந்தனர்.
விசாலமான இட வசதி, தனி அறைகள், கண்காணிப்பு அதிகம் இல்லாத சுதந்திரம் ஆகிய இவை காரணங்களாக மாறி. நான் பி. ஜி ஹாஸ்டலில் சேர்ந்தேன். சேரும் போதே, ஒரு புது சென் ராலே சைக்கிள் வாங்கிக் கொண்டேன். எனவே அங்கிருந்த இரண்டு ஆண்டுகளும் தொலைவு எனக்கொரு பிரச்சினை ஆக இருந்ததே இல்லை.
என் படிப்பைத் தவிர பீகார் என்ற மாநிலத்தைப் புரிந்து கொள்ள ஹாஸ்டல் வாழ்க்கை எனக்கு மிக உதவியது. மேலும் அங்கிருந்த மாணவர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் கேரளா, ஆந்திரா, உ,பி , டெல்லி , மத்திய பிரதேஷ் எனப் பல இடங்களிலிருந்து வந்தவர்கள். ஒரு முதுகலை ஆங்கில மாணவர் நேபாளத்திலிருந்து வந்து படிப்பவர்.
கல்லூரி சென்று வந்த பிறகு மாலை , டேபிள் டென்னிஸ் அல்லது ஷாட்டில் விளையாடுவேன். ஆறிலிருந்து எட்டு மணி வரை ஸ்டடி நேரம். எட்டு மணிக்கு ஹாஸ்டல் டின்னர் ரெடி. அப்புறம் பத்து மணி வரை அரட்டை அல்லது படிப்பு , ரெகார்ட் வேலைகள் இருந்தால் அதைப் பார்ப்பது என்று ரொடீன் ஓடும். பத்து மணிக்கு லைட்ஸ் ஆஃப் பிறகு தூக்கம்.
இந்த விதி சனி ஞாயிறுகளிலும் , விடுமுறைக் காலங்களிலும் ரிலாக்ஸ் செய்யப்படும். மொட்டை மாடிக்குச் சென்று இரவு பதினொரு மணி வரையில் சீனியர் மாணவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.
பொதுவான விதிகளில் ஒன்று, இரவு பத்து மணிக்கு மேல் ஒரு அறைக்குள் ஒருவரைத் தவிர வேறு யாரும் உடன் தங்கக் கூடாது. சில நேரங்களில் நாங்கள் “கம்பைண்ட் ஸ்டடி” செய்வோம். அதற்கு “முன்ஷி” யிடம் பர்மிஷன் வாங்கவேண்டும். அவ்வாறு இருக்கும் நேரங்களில் கதவு திறந்திருக்க வேண்டும்.
அறைகளில் மின்விசிறி, அயர்ன் , ஹீட்டர் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஒவ்வொன்றுக்கும் மாத வாடகையோடு ஒரு தொகை அதிகமாக வாங்கப்படும். எனக்குப் பல நண்பர்கள் கிடைத்து விட்டதால் , யாரேனும் ஒருவர் அறைக்குச் சென்று அயர்ன் பயன்படுத்திக் கொள்வேன். இதை “முன்ஷி” க்குத் தெரியாமல் செய்யவேண்டும்.
ஒரு வினோதமான வழக்கம் அந்நேரத்தில் பாட்னா நகரில் பழக்கத்தில் இருந்தது. சில திரையரங்குகளில் காலை பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை பழைய கருப்பு வெள்ளை படங்களைத் திரையிடுவார்கள். அந்தக் காட்சிகளுக்கு கல்லூரி மாணவர்களுக்கு பாதி விலைக்கு “டிக்கெட்” கிடைக்கும். எங்கள் ஹாஸ்டலில் இருந்து யாரிடமெல்லாம் சைக்கிள் இருக்கிறதோ அந்த மாணவர்கள் எல்லாம் மாதத்தில் ஒருமுறையேனும் இது போலச் சென்று பழைய படங்களைப் பார்த்து இரசிப்போம்.
அப்படி நான் பார்த்த பல “கிளாசிக்” ஹிந்தி படங்கள் என் ஹிந்தி மொழி அறிவையும், ஹிந்தி திரைப்பாடல்களில் ஈடுபாட்டையும் அதிகரித்தது. அச்சமயம் நடந்த ஒரு நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாது.
ஒரு காலைக் காட்சி அன்று “மொகலே ஆஜாம் “ படம் திரையிடப்பட்டது. திலீப்குமார் ,மதுபாலா, பிருதிவி ராஜ்கபூர் எனப் பல அருமையான நடிகர்கள். சூப்பர் பாடல்கள். பாதி அரங்கில் மாணவர் கூட்டம்தான். அன்று இரவு டின்னருக்குப் பின் எங்கள் ஹாஸ்டல் மொட்டை மாடியில் நாங்கள் ஒரு பத்து பேர் ( அரட்டைக் குழு) சேர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கிரிஷ் குமார் தாகூர் என்ற ஆங்கில இலக்கியம் பயிலும் என் அடுத்த அறைத் தோழன், இந்து பூஷண் என்ற நண்பனை அழைத்து வந்து அறிமுகம் செய்தான். அவன் எங்கள் ஹாஸ்டலில் இருப்பதே தெரியாது. ரொம்ப அடக்க ஒடுக்கமானவன். எங்கள் அதிரடி கும்பலில் சேராதவன்.
ஏய் கிரிஷ் இவனை எதுக்கு இங்க கூப்பிட்ட .. இவன் போய் “முன்ஷி” கிட்ட பத்த வைக்கப் போறான்” என்றான் அஜீத்
“ஒண்ணும் பயப்படாதே. இவன் சாது. அதெல்லாம் பண்ண மாட்டான். ஆனால் இவன ஒண்ணு பண்ணச் சொல்லறேன். கேட்டா அசந்துடுவ”
“ என்ன அப்படி அதிசயம் ? பண்ணச் சொல்லு”
“டேய் இந்து ஆரம்பி.. அந்த ஃபைனல் திலீப்குமார் டயலாக் “ என்றான் கிரிஷ்.
இந்து பூஷண் கொஞ்சம் நாணத்தோடு மெல்ல ஆரம்பித்தான். அடேங்கப்பா! அக்பர் சலீம் இரண்டு பேர் வசனங்களையும் அப்படியே சொல்றான்! இது மிமிக்கிரி இல்ல. அப்படியே அந்த வசனங்களை சொல்லற விஷயம்.. அதிலே கடினம் என்ன என்றால் அதெல்லாம் உருது வசனங்கள்.
மாணவர் கூட்டம் கூடி விட்டது. ஒரு முப்பது பேர் மொட்டை மாடிக்கு வந்துவிட்டார்கள். இவன் சொல்லி நான் ஏற்கனவே கேட்டிருக்கேன் எனச் சிலர் சூழ்ந்து கொண்டார்கள். படத்தின் ஆரம்பத்திலிருந்து முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை விடாமல் சொல்லி எல்லோரையும் அசத்திவிட்டான். என்ன உருது உச்சரிப்பு ! என்ன மெமரி ! இன்றும் என்னால் நம்பமுடியவில்லை!
நம்ப முடியாத பலவற்றை சந்திப்பதுதானே ஹாஸ்டல் வாழ்க்கை!
( தொடரும்)
