புத்தகம் : Spirituality: Simple and effective way to live life (English)

எழுதியவர்: கல்பனா ரமேஷ்

Publisher: Meher Publications

பக்கங்கள் : 160

விலை : ரூ. 180

      சமீபத்தில் பிட்ஸ் பிலானியின் அழைப்பை ஏற்று அங்கு நடந்த  இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு தலைநகர் தில்லியிலிருந்து சென்னை திரும்புமுன் என்னுடைய பள்ளி நண்பர் கர்னல் கே கே அருண் அவர்களையும் அவருடைய குடும்பத்தாரையும் சந்திப்பதற்காக அவர்களுடைய நோய்டா இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே நான் தங்கியது 20 மணி நேரம்தான் என்றாலும், பேரன்பினாலும், உபசரிப்பினாலும் என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டனர் அருணும் அவர்தம் அன்பு மனைவி பல்ஜீத்தும்.

பள்ளிப்  பருவத்துக்கு முன் அவர் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் கடகடவென்று பகிர்ந்து கொண்டார் அருண். அவருடைய மனைவியை சந்தித்ததும் கடிமணம் புரிந்து கொண்டதும் ஆன்மீகத்தில் அவருடைய இடைவிடாத தேடலும் இந்தப் பகிர்தலில் மிகவும் முக்கியமானவை.

அவர்களுடைய இல்லத்தை விட்டு கிளம்புமுன், நினைவுப் பரிசாக அருண் அளித்த சிறிய, கைக்கு அடக்கமான கல்பனா ரமேஷ் அவர்கள் எழுதிய நூல்தான்: “Spirituality: Simple and Effective way to live life”

“இந்தப் புத்தகத்தை நீ படித்துவிட்டு, இதை விரும்பும் உனக்குத் தெரிந்த வேறு யாருக்காவது இதைப் படிக்கக் கொடுத்து விடு !” என்ற வேண்டுகோளோடு இதனை என் கையில் அளித்தார் அருண்.

தில்லியிலிருந்து சென்னை திரும்பும் இண்டிகோ விமானத்திலேயே முக்கால்வாசி படித்து முடித்து விட்டேன். மிகவும் எளிமையான மொழியில் நேரடியாக நம்மிடம் பேசுவது போன்ற தொனியில் எழுதப்பட்டிருக்கும் அருமையான நூல் இது.

நான் என்னுடைய இளவயதிலேயே ஆன்மீக நூல்களை எக்கச்சக்கமாக படித்துத் தள்ளிவிட்டு, பின்னர் திகைப்பு தட்டியவுடன் இவற்றைப் படிப்பதையே நிறுத்தி பல ஆண்டுகள் சென்று விட்டன. ஆனால், மீண்டும் இந்த நூல் வடிவில், ஆன்மீகத் தேடல் என்னைத் தேடி வந்திருக்கிறது. இதுவும் இறை செயல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

மெஹர் பாபா என்ற இந்திய ஆன்மீக குருவை, அவதாரத்தைப் பற்றி நீங்கள் இதுவரை அறியவில்லை என்றால், இந்தத் தருணத்தில் நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டு விட்டீர்கள். பிப்ரவரி 1894 முதல் ஜனவரி 1969 வரை வாழ்ந்து மெஹராபாத்தில் அடக்கம் செய்யப்பட்ட இவர் தன்னுடைய வாழ்நாளில் அகிலம் முழுதும் பலரையும் அருளினாலும் அன்பினாலும் ஆட்கொண்டு அவர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி இருக்கிறார்.

கல்பனா ரமேஷ் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் தான் எழுதியது அல்ல – ஆட்டோ ரைட்டிங் என்னும் வழியின் மூலம் தன்னுடைய தந்தையின் ஆவியின் மூலமாக மெஹர் பாபாவே நேரடியாக அருளிய வழிகாட்டு நூல் இது என்று குறிப்பிடுகிறார்.

இதையெல்லாம் நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஆன்மீகத்தில் பற்று இருந்தால், நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது என்று பரிந்துரைக்கிறேன்.

படித்துத்தான் பாருங்களேன் !