
அமைதியை நாடி லாட்டியம் தீவிற்கு வந்த ஏனியஸ், அந்தத் தீவின் மன்னனின் அன்பைப் பெற்றான். மன்னன் மகள் அழகுராணி லிவினியாவையும் கண்டான். அவளை ஏனியஸிற்கு மணமுடித்துத் தர மன்னனும் தயாராக இருந்தான்.
‘ஆஹா சொர்க்கம் என் பக்கம்’ என்று மகிழ்ச்சியில் திளைத்த ஏனியஸிற்கு விதியின் முடிவு வேறு மாதிரி இருந்தது. அதற்குக் காரணம் அனைத்து மக்களையும் ஆட்டி வைக்கும் மேல் உலகக் கடவுளர்கள்! அவர்கள் விதிகளைப் படைப்பவர்கள். அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்பிற்கேற்ப விதிகளையும் மாற்றுவர்.
அதைத்தான் செய்தாள் ஏனியஸின் பரம எதிரியான ஜூனோ கடவுள்.
பக்கத்து நாட்டு இளவரசன் டர்னஸைத் தூண்டினாள். ” உன் காதலி லிவினிலியாவை வெளிநாட்டு ஏனியஸ் கொத்திக்கொண்டு போகப்போகிறான்” என்று அவனுக்குப் போதனை செய்தாள். அவன் உடனே , ஏனியஸையும் அவன் வீரர்களையும் லாட்டியம் நாட்டைவிட்டுத் துரத்தப் போர் தொடுத்தான். அதற்கான ஆயுதங்களைத் திரட்ட ஆரம்பித்தான். அவனுடன் சேர்ந்து லாட்டியம் நாட்டு மக்கள் அனைவரையும் ஏனியஸிற்கு எதிராகத் திருப்பினாள் ஜூனோ!
ஏனியஸ் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தான்.
தூரத்தில் வானம் சிவப்பாக எரிந்தது கொண்டிருந்தது. எழில் நிறைந்த டைபர் நதிக்கரை. அந்த அதன் நீல நிற அலைகள் தன் காலை வருட ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தான் ஏனியஸ்.
டைபர் நதி போல அவன் மனதிலும் எண்ண அலைகள் மாறி மாறி எழுந்த வண்ணமே இருந்தன.
போரின் சூறாவளி அவன் கண்முன் தோன்றியது.
“நான் போரை நாடவில்லை. ஆனால் போர் என்று வந்துவிட்டால் அதைக் கண்டு ஓடும் கோழை அல்ல. இந்த லாட்டியம் முழுவதும் எனக்கு எதிராக வந்தாலும் அவர்களை வெல்ல என்னால் முடியும்” என்ற நம்பிக்கையை அந்த நதி மெல்லிய வருடல் மூலம் தனக்கு வழங்கியிருக்கிறது என்பதை உணர்ந்தான்.
அவன் நதியைக் கைகூப்பி வணங்கினான். அந்த நிமிடம், நதிநீர் அசைந்தது. அதிலிருந்து ஒரு தெய்வீக ஒளியுடன் கூடிய உருவம் எழுந்தது. “ஏனீயஸ் , அஞ்சாதே. நான் இந்த நதியின் தெய்வம். உன் தாய் வீனஸ் உன்னை மறக்கவில்லை. உனக்கு வழிகாட்ட என்னைப் பணித்தாள். உன் பயணம் சரியான பாதையில் தான் சென்று வருகிறது. நீ இந்த நதி செல்லும் பாதையில் பயணம் செய் . ஒரு நாள் பயணத்தின் முடிவில் நீ ஒரு புதிய தோழனைப் பார்ப்பாய். அவன் உனக்குப் படையையும் நட்பையும் தருவான்.”
நதி மீண்டும் அமைதியான நதியானது.
ஏனீயஸ் நெஞ்சில் ஒரு நிம்மதியுடன் எழுந்தான். “விதி பேசிவிட்டது. அது வகுத்த பாதையில் நான் பயணிக்கவேண்டும்”
அடுத்த நாள் விடியற்காலையில் ஏனீயஸ் சில வீரர்களுடன் படகில் ஏறினான். நதி நீர் செல்லும் பாதையில் படகைச் செலுத்தினான். கரையெங்கும் பசுமையான நிழல் தரும் மரங்கள். காட்சி ரம்மியமாக இருந்தது. “ஒருநாள், இந்த டைபர் நதிக் கரையில் மாபெரும் சாம்ராஜ்யம் ஒன்று எழும்.” என்று உறுதியாக நம்பினான் ஏனியஸ்.
பிற்காலத்தில் அந்த இடம்தான் ரோமாபுரிப் பேரரசாக மாறப் போகிறது என்று அந்தக் கணத்தில் அவன் தெரிந்திருக்கவில்லை.
ஒரு நாள் பயணத்தில் அவன் ஒரு சிறிய நகரத்தை அடைந்தான். அந்நாட்டின் மன்னர் ஏனியஸை அன்புடன் வரவேற்றார். அவரது மகன் இளம் வீரன் பல்லாஸ் ஏனியஸின் பெருமையை உணர்ந்தவன். அவரைத் தன் மானசீகத் தலைவனாக ஏற்றுக்கொண்டு அவரைச் சந்திக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அவனது ஜென்மம் சாபல்யமடைந்தது.
மன்னனிடம் ஏனீயஸ் ஆழ்ந்த நன்றியுடன் சொன்னான்: “என் மூலம் முழு இத்தாலியும் எழுந்துள்ளது. தங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன். ”
அன்று மாலை மன்னர் ஏனீயஸை நகரம் முழுவதும் சுற்றிக் காட்டினார். ஒரு புனிதத் திடலில் நின்று, ” இந்த இடத்தில்தான் கடவுளக்குச் சமமான ஹெர்குலிஸ் ஒருகாலத்தில் காக்கஸ் என்ற கொடூரனைக் கொன்றார். நீயும் அவரைப் போலச் சாதனைகள் புரியப் போகிறாய்! அதற்கு என்னுடைய வீரர்கள அனைவரையும் உன்னுடன் அனுப்புகிறேன் ” என்று விண்ணும் மண்ணும் அதிரக் கூறினார்.
அந்த வார்த்தைகள் ஏனீயஸின் உள்ளத்தை உறுதியாக்கின.
“அதுமட்டுமல்ல” என்று கூறிய மன்னர் , அருகில் உள்ள தன் மகன் பல்லாஸின் தோளில் கை வைத்தார்.
“மகனே, நீ ஏனீயஸுடன் செல். போரைக் கற்றுக்கொள். அவருக்காக உன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தரத் தயாராயிரு. அவர் கட்டளையைப் பணிந்து ஏற்றுக்கொள். இதை என்றும் மனதில் கொள். வீரமும் பணிவும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும்.”
பல்லாஸ் ஏனீயஸை வணங்கி, “நான் உங்களுடன் வருவது என் வாழ்வின் பெருமை.” என்றான்.
ஏனீயஸ் அவன் தோளைத் தழுவினான். “நீ எனக்கு இன்னொரு மகன். உன் தந்தையின் கட்டளைப்படி உன்னை மாபெரும் வீரனாக்குகிறேன்! ” என்று கூறினான்.
அதே சமயம் ஏனியஸின் தாய் வீனஸ் லாட்டியம் நகரில் தன் மகனுக்கு எதிராகப் போர் நிகழப் போகிறது என்பதை அறிந்தாள். அவள் தீ -இரும்பு- உலோகம் ஆகிய மூன்றின் அதிபதிக் கடவுளிடம் சென்றாள்.
” விதி நடத்தும் இந்தப் போரில் என் மகன் ஆயுதமின்றித் தவிக்கக்கூடாது. அவன் வீரர்களுக்குத் தேவையான கவசம் வாள் கேடயம் உருவாக்கு. அதுமட்டுமல்ல என் மகனை முற்றிலும் காக்கக்கூடிய ஒரு கவசத்தையும் உருவாக்கு. அது எதிரிகளுக்கு மட்டுமல்ல விதிக்கே எதிராக இருக்க வேண்டும்.” என்று கூறினாள்.
வீனஸ் தேவதையின் ஆணைப்படி ஆயுதங்கள் தயாரிக்க உத்தரவிட்டான் அந்த இரும்புக் கடவுள். அந்த எட்னா மலை அடிவாரத்தில் தீப்பொறிகள் பறந்தன. இரும்பு அடிக்கும் சத்தம் வானைப் பிளந்தது. எண்ணற்ற தெய்வீக ஆயுதங்கள் உருவாயின.
ஏனியஸிற்காக உருவான அந்தக் கேடயம் மிகவும் விசேஷமானது. அதில் பிற்கால ரோமாபுரிச் சக்கரவர்த்திகள் ரோமுலஸ் , அகஸ்டஸ் சீஸர் போன்றோர் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏனியஸிற்கு அதில் இருப்பவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும், ” இந்த நாட்டின் எதிர்காலம் என் தோள்களில் தான் இருக்கிறது.” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
பல்லாஸ் நாட்டின் மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டிருந்த ஏனியஸின் முன் அவனது அன்புத் தாய் வீனஸ் மேகங்களிலிருந்து இறங்கி வந்தாள்.
போர் புரிவதற்குத் தேவையான ஆயுதங்களை அவன் முன் வைத்தாள். அவனைக் காக்க வேண்டி அமைக்கப்பட்ட தெய்வீகக் கவசத்தை அவன் அணியுமாறு செய்தாள். அவனது வீரம் ததும்பும் முகத்தைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தாள் அவனது அன்னை.
ஏனீயஸ் தாயின் கைகளைப் பிடித்து மௌனமாக நின்றான்.
ஏனியஸ் தனது முழுப் படையையும் காட்டின் மத்தியில் மரவேலியின் பாதுகாப்பில் பத்திரமாகத் தங்க வைத்திருந்தான். இனி தாமதிக்கக் கூடாது; எந்த நேரத்திலும் போர் மூளலாம். எதிர்கள் போர் தொடுத்து வரும்போது தான் தான் படைத் தளத்தில் இருக்கவேண்டும் என்று புறப்படத் தயாரானான். மன்னனிடம் விடை பெற்றுக்கொண்டு அவரது வீர மைந்தன் பல்லாஸுடன் அவர் தந்த படை வீரர்களுடனும் புறப்பட்டான்.
ஆனால் அதற்குள், மேல் உலகத்தில் ஜூனோ, கோபத்தில் துடித்தாள்.
“ஏனீயஸ் இல்லாத நேரமே சரியான தருணம். இப்போது போர் துவங்கினால்தான் டிரோஜன்களை அழிக்கமுடியும் என்று நினத்த ஜூனோ தன் சக்தியால் டர்னஸின் மனத்தில் போர்வெறியை ஊற்றி உடனே போரைத் துவங்க ஆணியிட்டாள்.
டர்னஸ் தன் வீரர்களை அழைத்தான். “ஏனீயஸ் இங்கே இல்லை. இன்று இரவு ட்ரோஜர்கள் தூங்கப் போகும் கடைசி இரவு!” என்று கொக்கரித்துவிட்டு பெரும் முழக்கத்துடன் தன் லத்தீன் படையை முன்னுக்குக் கொண்டுவந்தான் டர்னஸ் . எந்த வித அரவமின்றி அவன் படை டிரோஜன் இருக்கும் காட்டை நோக்கி முன்னேறியது. டிரோஜன் வீரர்கள் இருக்கும் முகாமைச் சூழ்ந்தனர். தீப்பந்தங்கள் ஆகாயத்தைத் துளைத்தன. மரவேலிகள் எரியத் தொடங்கின.
ஆனால் ட்ரோஜ வீரர்களுக்கு ஏனீயஸின் கட்டளை தெளிவாக இருந்தது:
“வேலிகளுக்குள் இருங்கள்! கதவுகளைத் திறக்க வேண்டாம்!நான் திரும்பி வரும் வரை, பாதுகாப்பை விட்டு வெளியே வராதீர்கள்.”
டர்னஸின் பெரும்படை தங்களைச் சூழப் போகிறது. தங்கள் தலைவனும் இன்னும் வரவில்லை. அந்த இருளில், இரண்டு இளம் வீரர்கள் அமைதியாக நின்றனர். அவர்கள் இரவின் இருளை உடைத்துக்கொண்டு, எதிரி முகாமுக்குள் நுழைந்தனர். தூங்கிக்கொண்டிருந்த லத்தீன் வீரர்களை அவர்கள் சத்தமில்லாமல் வீழ்த்தினர். ஆனால் அதுவே அவர்களின் அழிவின் தொடக்கம் ஆனது.
எதிரி குதிரைப் படை அவர்களைச் சூழ்ந்தது. இருவரும் பிடிபட்டனர். இரு வீரர்களும் ஒரே இடத்தில், ஒரே இரவில், ஒரே புகழுடன் உயிர்நீத்தனர்.
அவர்களின் தலைகள் லத்தீன் படை வீரர்களால் கம்பங்களில் ஏற்றப்பட்டு’ எங்களை எதிர்ப்பவர்களுக்கு இந்த கதிதான்’ என்று உலகுக்குக் காட்டினர்.
ட்ரோஜன் முகாமில் அழுகை எழுந்தது. பெண்கள் அலறினர். வீரர்கள் பற்களைக் கடித்தனர்.
“ஏனீயஸ் மட்டும் இங்கு இருந்திருந்தால்…” என்ற வருத்தம் எல்லோரின் கண்களிலும் தெறித்தன.
அதற்குள் டரணஸ் தலையில் வந்த எதிரிப்படை டிரோஜன்கள் முகாமிற்குள் புகுந்தது. எண்ணற்ற டிரோஜன் வீரர்கள் இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிர் இழந்தனர். டர்னஸ் சிங்கம் போலப் போராடினான். பல ட்ரோஜன் வீரர்கள் வீழ்ந்தனர்.
ஆனால் இறுதியில், ட்ரோஜர்கள் ஒன்று திரண்டு எதிர்த்தனர்.
அந்த சமயம் அப்பல்லோ கடவுள் டர்னஸுக்கு எச்சரிக்கை செய்தார்.
“இன்றைக்கு போதும். விதியை அதிகம் சோதிக்க வேண்டாம்.”
டர்னஸ், அவர் குரலுக்கு செவிசாய்த்து போரை அன்றைய பொழுதுக்கு நிறுத்திவிட்டு டைபர் நதியில் குதித்து வெற்றிக் களிப்புடன் புறப்பட்டான் .
இரவின் துவக்கத்தில் போர் நின்றது.
ட்ரோஜன் வீரர்கள் சோர்வுடன் இருந்தாலும் மன உறுதியுடன் நின்றனர்.
“ஏனீயஸ் விரைவில் வருவான்,” என்று அனைவரும் நம்பினர்.
தூரத்தில் ஏனியஸ் படைவீரர்களுடன் வருவது தெரிந்தது.



அதே சமயம் மேல் உலகத்தில் கடவுளர் தலைவர் ஜூபீடர் முன்னிலையில் ஏனியஸ் – டர்னஸ் போரில் கடவுளர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர்.
வீனஸ் ஏனியஸிற்கு ஆதரவாகவும் ஜூனோ எதிராகவும் குரல் எழுப்பினர்.
ஜூபீடர் தன் முடிவைக் கூறினார்.
(தொடரும் )
