தன்னார்வ நிறுவன நுழைவு வாயிலில் எங்களைப் பார்த்ததுமே மஹிமா, “என்னைத் தவிர எல்லோருக்கும் தெரிந்திருந்தது!” என்று கூறியவாறு தேம்பித் தேம்பி அழுதாள்.
இருபத்தி ஐந்து வயதானவள் கையில் ஒரு வயதான மகன். “எல்லோரிடமும் சொல்லணுமா?” என்று சொல்லியவாறு மஹிமாவின் தந்தை வினோத், மனைவி ரசனாவையும் மனைவியின் தங்கை லாஸ்யாவையும் பார்த்தார்.
வாரத்திற்கு இருமுறைத் தொண்டாக அங்குள்ளவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனை செய்து வந்தேன். நிறுவனத்தை அமைத்த மங்கை பிரபலமான தொழிலதிபர். அபலைப் பெண்களுக்கு அடைக்கலமளித்து நிராகரிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பளித்தார். வாழ்வதற்கான வசதிகளையும் அமைத்திருந்தார்.
சட்டரீதியாக தத்தெடுக்க விதிமுறைகளை விதித்திருந்தார். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் வருடாவருடம் நிறுவனத்தில் வந்து கொண்டாடச் செய்திருந்தார். அந்தத் தினத்தில்தான் மஹிமாவும் வந்திருந்தாள். இங்குள்ளவர்கள் மஹிமாவை நன்கு அறிவார்கள்!
ஸைக்காட்ரிக் சோஷியல் வர்க் பற்றி அறிந்திருந்த மேடம், மஹிமாவை அழைத்துச் செல்ல எனக்குச் சமிக்ஞை செய்தார். செய்தேன். பின் தொடர்ந்த ரசனாவிடம் இப்போதில்லை என்று கைகாட்டினேன்.
அறையை அடைந்ததுமே மஹிமா மனக்குமுறலை வெளிப்படுத்தினாள். குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரசனாவின் உறவினர், “மஹிமாவிற்கு நம்ம குடும்பச் சாயலே இல்லை” என்றதைக் கேட்டுவிட்டாள். கணவன் ஆதித்யாவிடம் பகிர்ந்தாள். அவரோ சமாதானமாகவே “கரெக்ட் தானே” என்றதைக் கேட்டு வாயடைத்துப் போனாள்.
“எங்கள் சாயல் இல்லை” என்பது நிராகரிப்பின் வண்ணமாகும்.
பிரியமான சித்தியை விளக்கம் கேட்டதற்கு, “மஹிமா, உனக்குத் தெரியாதா? கொஞ்சம் கூட எங்க ஜாடை இல்லையே உனக்கு. அதிலிருந்து புரிந்திருக்குமே?” என்றதும் மேலும் பதறினாள். நியாயமாகப் பேசும் லாஸ்யா “நீ ரசனாவுக்குப் பிறக்கவில்லை” என்றதும் ஸ்தம்பித்துப் போனாளாம்.
“எங்கே பிறந்தேன்? பூர்வீகம்?” என்ற கேள்விகள் மனதைக் குடைந்தது.
இந்நிலைகளைத் தவிர்க்கவே தத்தெடுப்பைப் பற்றிப் பெற்றோர் தாமாகவே பகிர்ந்து கொள்வது சிறந்தது.
தந்தைமேல் பற்று அதிகம். உண்மையைக் கூறுவார் என்ற நம்பிக்கையில் கேட்டாள். அவரின் “அதெல்லாம் விடு” ஆசுவாசப்படுத்தவில்லை. மழுப்பியதாகத் தோன்றியது.
அன்றைய தினமே ரசனாவிடம் மாமா, “அப்பவே சொன்னோம், நம்ம ரத்தம் இல்லேன்னு மஹிமாவிடம் தயங்காமல் சொல்லிடுன்னு” என்றதை எதேச்சையாக மஹிமா கேட்க, தூக்குவாரிப் போட்டது என்றாள்.
அப்பொழுதிலிருந்து நாழிகைகள் யுகங்கள் போலிருந்தாகக் கண்ணீர் மல்கக் கூறினாள். தன்னைப் பற்றி அறிய ஆவல் அதிகரித்தது.
தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் எப்போதும் அடம் பிடித்துப் பெற்று விடுவாளாம். இன்றும் அதையே செய்து, வினோத் ரசனாவைத் தான் பிறந்த இடத்திற்குக் கூட்டிச் செல்ல வற்புறுத்தினாள். இங்கே அழைத்து வந்தார்கள். நம்பமுடியவில்லை என்றாள்.
இதுபோன்ற உணர்ச்சிக் குழப்பத்தைத் தவிர்க்கவே தத்தெடுத்தோம் என்பதைக் குழந்தைகளிடம் கூடிய சீக்கிரம் பகிர்வது நன்று. இதைப் பலர் வலியுறுத்தும் போதெல்லாம், வினோத்-ரசனா “நாங்க பார்த்துக்கறோம்” என்று பதிலளித்தார்கள். பிறகு தத்தெடுத்த இல்லத்திற்கு வருவதையே நிறுத்தி விட்டதோடு தொடர்பையும் துண்டித்து விட்டார்கள். பல வருடங்களுக்குப் பிறகு இன்று வந்திருந்தார்கள்.
தத்தெடுக்கப் பட்டதை பெற்றோரிடமிருந்து அறிவது மிக முக்கியமே. குழந்தைப் பருவத்திலிருந்தே எடுத்துக் கூற குழந்தை உளவியல் ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.
குழந்தையின் வயது, வளர்ச்சிக்கு ஏற்றவாறு புரிய வைத்தால் ஆரோக்கியமான உறவு ஏற்படும்! என் அனுபவத்தில், குழந்தையிடம், எங்கள் மனம் விரும்பி உன்னை அழைத்து வந்துள்ளோம்” என்று பலர் கூறியுள்ளனர்! நேர்மறையாக வெளிப்படைத் தன்மையுடன் பகிர்வது மிக அவசியம்!
இவ்வாறு செய்யாததின் விளைவு மஹிமாவிடம் தென்பட்டது. தான் அனாதை, தத்தெடுக்கப்பட்டோம் என்ற உண்மை கல்யாணத்திற்குப் பின்னரே தெரியவந்தது. அவளைத் தவிர உண்மையை மற்றவர்கள் அறிந்திருந்தது அவளுக்கு வெட்கமளித்தது, மனம் நோகச் செய்தது, அச்சமுமானது!
உண்மையை வினோத்-ரசனா மறைத்ததற்குக் காரணம், தமக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை மறைக்கவே. தத்தெடுத்ததுமே தங்களுக்குப் பெரிய மனதெனப் போற்றிக் கொண்டார்கள்.
இந்த நிதர்சனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் பல ஸெஷன்களுக்குப் பிறகே தெளிவு வந்தது.
இதையொட்டிய மற்றொரு தெளிவும் ஸெஷனில் பெற்றார்கள். தத்தெடுத்ததை மறைக்கவே வினோத் மஹிமாவின் நிழல்போல் கூடவே இருப்பார். வீட்டிற்கு வரும் உறவினர்களோ, விருந்தாளிகளோ, யாரும் மஹிமாவைக் குறை சொல்லக் கூடாதென்ற சொல்லாத சட்டம் விதித்திருந்தார். யாரேனும் குறைகூறினால் அவர்களுடன் உறவு முறிந்தது.சிறந்த பெற்றோர் என்ற பெயரைப் பெறவே மஹிமா கேட்டதையெல்லாம் வாங்கித்தருவது வழக்கமானது. குறையேதும் உணராமலிருக்க என்றார்கள்.
மணவாழ்வில், மஹிமா அடம்பிடித்துக் கேட்பது சிலதை ஆதித்யா தவிர்த்துவிடுவார். வினோத் அறிந்ததுமே பூர்த்தி செய்துவிடுவார். இதனால் மஹிமா-ஆதித்யா உறவில் நூலிழை விரிசல் ஏற்பட்டது. வினோத்-ரசனா இதை அறிந்ததும் தாம்பத்திய வாழ்வில் இது சகஜம் என்றார்கள்.
இப்படி உதறித் தள்ளியதை மஹிமா ஏற்றுக்கொள்ள மறுத்தாள். வருத்தத்துடன் பகிர்ந்தாள். ஸெஷனில் உன்னிப்பாகப் பார்க்கச் செய்தேன்.
ஒரு வருட ஸெஷன்களுக்குப் பின்னர்தான் மஹிமா தன் வாழ்வின் மின்னோட்டத்தைப் பார்க்கத் தைரியம் அடைந்தாள். அவளைத் தத்தெடுத்ததை அவளிடமிருந்து இரகசியமாக வைக்கவே எந்த உறவினருடனும் விளையாடவோ, தனியாக இருப்பதையோ தவிர்த்தார்கள். மஹிமா தன்னை வாட்டிய தனிமையை வெளிப்படுத்தவில்லை.
குற்ற உணர்வைச் சமாதானம் செய்யவே பெற்றோர் மஹிமா ஆசைப் பட்டதையெல்லாம் உடனடியாக வாங்கினார்கள். வினோத்-ரசனா தமது ஸெஷனில் இதை ஆழமாகப் பார்த்த பிறகே புரிந்தது, பந்தம் ஏற்பட இதைக் கருவியாக உபயோகித்தோம் என. இந்த வழிமுறை “ஓவர் காம்பன்ஸேஷன்” (overcompensation) எனப் புரிந்தது.இவர்களைப் போலவே இருபெற்றோரும் வேலைக்குப் போகும் சிலர், மற்றும் பல வருடங்களுக்குப் பின் குழந்தைப்பேறு பெற்றவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் இவர்களும் செய்யக்கூடும்.
மஹிமா ஸெஷனில் தன்னை வாட்டும் ஒன்றைப் பகிர்ந்தாள். தாம் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும் புரிதலுக்கும் சம்பந்தமே இல்லை என்று.
இதை ஆழமாகப் பார்க்கையில் மஹிமா புரிந்து கொண்டாள். பரீட்சை நேரத்தில் மனப்பாடம் செய்ய ஊக்குவிப்பார் வினோத். அதைக் கடைப்பிடித்ததில் அர்த்தம் புரிந்து கொள்ளாமலேயே பட்டப் படிப்பு வரைக் கடந்தாள் மஹிமா! திருமணம் குடும்பம் என ஆன பிறகு அறியாமை வாட்டியது. வெட்கப்பட்டாள்.
ஆனால் இது மஹிமாவின் நடத்தையில் தென்படாததை ஸெஷனில் எடுத்துக் கொண்டு ஆராயச் செய்தேன். அதன் மூல காரணம் ரசனா. எப்போதும் “யூ ஆர் தி பெஸ்ட்” என உச்சத்தில் புகழுவதால் மஹிமா தன்னைப் பற்றி பெருமிதமாக இருந்தாள். யாரேனும் ஏதாவது சொன்னால் அதற்கு ரசனா “பொறாமையில் கூறுகிறார்கள். நீ தான் க்ரேட்!” என்று கூறுவதால் வளர்ந்து வரும் மஹிமா, தன்னை சுற்றியுள்ள எல்லோரையும் தாழ்வாகப் பார்ப்பாள், பேசுவாள். இப்போது இதை அடையாளம் கண்டுகொண்டு, மாற்ற ஒப்புக்கொண்டாள்.
மஹிமா அனாதை என்ற நினைப்பில் இருபக்க தாத்தா-பாட்டிகளும் சலுகைகளைக் காட்டினார்கள். இதை “ஆறு பாக்கெட் சின்ட்ரோம்” (“Six pocket syndrome”) என்பார்கள், அதாவது வேண்டியதைப் பெற்றுக்கொள்ள ஆறு இடங்கள் என்று! பெற்றோர் மற்றும் இருதரப்பு தாத்தா பாட்டிகளிடமிருந்து எல்லா விதமான சலுகைகளும் குவிந்தன.
நன்றாகப் பராமரிக்கப் படுகிறாள் என நினைத்தார்கள். இதனால் உறவுக்குப் பதிலாகப் பொருட்களுக்கே மஹிமா முக்கியத்துவம் தந்தாள். வினோத் நிழலாக இருப்பதை அன்பைக் காட்டுதலாக எண்ணுவது திருமணமான பிறகும் தொடர்ந்தது. இப்படிப் பெற்றோர் தினந்தோறும் ஒவ்வொன்றையும் நிழல் போல் கண்காணித்ததால் மஹிமா-ஆதித்யாவின் மணஉறவு பாதிக்கப்படுவதை, அதன் தனித்துவம் அழிவதைக் காணவில்லை. ஏன்?
இவற்றால் தந்தை மீது வைத்த நம்பிக்கை சுக்கு நூறாகியது. அதைச் சரிசெய்ய இன்னும் ஸெஷன்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆதித்யா பெரும்பாலும் மஹிமாவின் கர்வத்தைக் கவனித்தார். ஆரம்பக் கட்டத்தில் போற்றினார். மஹிமா தன்னிச்சையை மட்டுமே செய்ய, நாளடைவில் அது நேர் எதிராக மாறியது.ஸெஷன்கள் பலவற்றிற்குப் பிறகு இது தம்முடைய தவறான சுய உரை என்று மஹிமா புரிந்து கொண்டாள். இதன் அடிப்படை திறன்களல்ல கர்வம் கலந்திருந்ததெனப் புரிந்தது. இதன் தோற்றத்தை மாற்ற முடிவெடுத்தாள். திறன்களை அடையாளம் காணச் செய்தேன்.
மஹிமாவின் விதவிதமான சமையல் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால் சாப்பிட்ட பலரும் “நம்ம குடும்பத்தில் இல்லாத ஒன்று இவளிடம் உள்ளதே?” என்பார்கள். இதைத் தவிர்க்கவே வினோத்-ரசனா, “நீ இதெல்லாம் செய்யப் பிறக்கவில்லை” என மிகைப்படுத்திய சொற்களினால் மஹிமா சமைப்பதைத் தாழ்வாக நினைத்துத் தவிர்த்தாள். தன்னை உயர்ந்த நிலையில் நினைத்துக் கொண்டதே திருமணமான பிறகு ஒரு சங்கடமான நிலையானது!
இதற்கு வினோத்-ரசனாவின் சிந்தனை செயல்பாட்டை மாற்றுதல் தேவையானது. ஏனெனில் மஹிமாவிற்கு தன் வயதினரைப் பார்த்துப் பழகும் போது மனதிற்குள் தன் பலவீனமும் அறியாமையும் தெரிந்தது. பெற்றோரோ அவளை உயர்ந்த நிலையில் வைத்திருந்ததில் தன்னுடைய நிதர்சனம் ஒளிந்திருந்ததை மஹிமா ஸெஷனில் புரிந்து கொண்டாள்.
திருமணம் நிச்சயிக்க ஆதித்யாவின் பறந்த மனப்பான்மையைச் சொல்லிச் சொல்லி மஹிமாவை மணக்க ஒப்புக்கொள்ள வைத்திருந்தார்கள் வினோத் ரசனா. மஹிமாவின் பெற்றோர் தரும் செல்வம், கர்வம் ஆதித்யாவிற்கு வருத்தமளித்தது. மஹிமாவின் அதீத “எனக்குத் தெரியும்”, கர்வம் அவர்கள் நெருக்கத்தில் இடையூறாக ஆனதை மஹிமா-ஆதித்யா கவனிக்கவில்லை. வினோத் “மணவாழ்க்கையில் அனுசரித்துச் செல்ல நேரமாகும்” என்றதால் மஹிமா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவற்றையெல்லாம் சுதாரிக்க இருவரும் முன் வர, ஸெஷன்கள் தொடர்ந்தது.
மறைத்து வைத்த ரகசியம்!
உறவில் விரிசல் ஏற்படுத்தும்
நம்பிக்கை தளர்ந்தால்
மீண்டும் பெறுவதற்கு நெடுங்காலம் ஆகலாம்!
******************************************
