பொன்னியின் ரங்கராஜன்

பொதுவாகவே குமுதம் சம்பந்தப்பட்டவர்கள் மற்ற யார் வீட்டுக்கும் வர மாட்டார்கள். வேலை நெருக்கடியால் நேரமின்மை ஒருபுறம்.. கொள்கை மறுபுறம். கல்யாணத்துக்கு அழைத்தாலும் பெரும்பாலும் வருவதில்லை.

அப்படி இருக்கையில் ஒரு நாள் “கோபாலன் இந்த  ஞாயிற்றுக் கிழமை நீங்களும் மிஸ்ஸஸூம் வீட்டில் இருப்பீங்களா? வரலாமா?” என்று குமுதத்தின் தூண்களில் ஒருவராகி ரா கி ரங்கராஜன் கேட்டால் என் கணவருக்கு எவ்வளவு பரபரப்பு ஏற்படும்.

இவர் சந்தோஷமாய் “கட்டாயம் வரணும் சார். வாங்க வாங்க என்று” சொன்னவுடன்

“மிஸஸ்ஸைக் கேட்டுச் சொல்லுங்கள். அட்லீஸ்ட் இரண்டு மணி நேரம் உங்க வீட்டில் இருப்போம். அதாவது நான், ஒய்ஃப் (கமலாம்மா), மகள் பாமா, பேரன் நவீன் நாலு பேரும் வருவோம்” என்றார்.

என்னைக் கேட்டுவிட்டுச் சொன்னால்தான் ஆயிற்று என்று பிடிவாதமாய்ச் சொன்னதால், இவர் அங்கிருந்து எனக்கு போன் செய்தார்.

நான் குதிக்காத குறையாய்ச் சந்தோஷப்பட்டு, கட்டாயம் வரச் சொல்லுங்கள். மதிய சாப்பாட்டுக்கே வரலாமே?” என்றேன்.

அவர் மாலை டிபனுக்கு வருவதாகச் சொன்னார். அதுவே அதிசயம்தான். ஆனால் காரணத்தைச் சொல்லவில்லை.

நாங்கள் காரணத்தை ஊகிக்க முயன்றோம். குரோம்பேட்டையில் ஏதாவது விசேஷம் இருக்கலாம். யாருக்காவது சம்பந்தம் பேச வருவாரோ என்னவோ.. என்றெல்லாம் ஊகிக்க.. இது எதுவுமே காரணம் இல்லை.

வந்த சிறிது நேரத்தில், “வேதாம்மா நீங்க ஒரு உதவி செய்யணும்.” என்ற பீடிகையுடன் சொன்னார். “பாமா கோபாலன் அடிக்கடி உங்களைப் பத்தி நிறையச் சொல்லுவார். ஒரு சமயம் பேசும்போது நீங்கள் பொன்னியின் செல்வன் தொடரை ஆறேழு முறைகள் படிச்சிருப்பதாய்ச் சொன்னார்.”

பெருமிதத்துடன் ஆம் என்றேன். “இப்போ அந்தக் கதையை அப்டியே சொல்லப்போறீங்க. நான் கேட்டுக்கப் போறேன். தட்ஸ் ஆல்” என்றார்.

“கட்டாயம் சொல்றேன் சார்..” என்றேன் சந்தோஷமாய்.

“வெளியில் யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. கமலஹாசன் பொன்னியின் செல்வன் கதையை சினிமாவா எடுக்கப்போறார். அதில் டிஸ்கஷனுக்கும் வசன உதவிக்கும் என்னைக் கூப்பிட்டிருக்காரு. நான் சில வருஷங்களுக்கு முன்னால் படிச்சிருக்கேன். இப்போது அஞ்சு வால்யூம் படிக்கணும். கட்டாயம் படிப்பேன். அதுக்கு முன்னால் ஒரு பிரஷ் அப்..”

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன் – குவிகம் மின்னிதழ் (மாத இதழ்)ஏதோ நான் உதவி செய்துதான் அவர் சாதிக்கப்போவது போல் உடனே மனதில் ஒரு வேகமும் உற்சாகமும் வந்தன.

சொல்ல ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உள்ளூரில் உள்ள குமரன் குன்றம் முருகர் கோயிலுக்கு அழைத்துச் சொல்லும்படி குடும்பம் கேட்க.. பாமாகோபாலன் மற்றவர்களை அழைத்துப்போனார்.  இவர் கதையில் மூழ்கினார்.

எங்கள் வீட்டு வாசலில் காம்பவுண்டுக்கும் வீட்டுக்கும் இடையே சுமார் ஒரு கிரவுண்டு பரப்பில் பிரமாதமான தோட்டம் ஒன்று உண்டு. என் மாமனாரின் உழைப்பில் உருவானது. அதில் சிமென்ட் பெஞ்ச் போட்டு ரெட் ஆக்ஸைடில் பளபளக்கும்.

மாமரத்தின் கீழே உட்கார்ந்து நான் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். அவர் வசதிக்காக இரட்டை சோபாவை வெளியே கொண்டு போட்டிருந்தோம். அதில் சாய்ந்து அமர்ந்து, அரைக் கண் மூடியவாறு கதையைக் கேட்டார்.

கிட்டத்தட்ட இரண்டரை மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். இயல்பாகவே சின்ன வயதிலிருந்து சினிமா பார்த்துவிட்டு வந்து கதை சொல்லும் பழக்கம் உண்டு என்பதாலும் பலமுறை படித்ததில் பொ. செ கிட்டத்தட்ட மனப்பாடம் என்பதாலும் சரளமாய்ச் சொன்னேன் என்றுதான் நினைவு.

நடு நடுவில் வேண்டுமென்றே சில சந்தேகங்கள் கேட்டுக்கொண்டார். குமரன் குன்றம் போய்விட்டு அவர்கள் வந்தபிறகும் ஐந்தாம் பாகம்தான் போய்க் கொண்டிருந்தது.

மொத்தம் கேட்டுவிட்டு, மறுபடியும் ஒரு ரவுண்டு காபி குடித்த பிறகு, “ஒரு உபகாரம் செய்யுங்களேன். பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கத்தை ஒரு பதினைந்து இருபது பக்கங்களுக்கு வர்றமாதிரி டைப் செய்து கோபாலன் கிட்ட குடுத்து அனுப்புங்களேன். நாளைக்குக் கிடைச்சா நல்லாயிருக்கும்” என்றார்.

அதன்படியே செய்தேன். அவருக்கு அபரிமித சந்தோஷம். ஏதோ காரணத்தால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் கமல் எடுக்கவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

எனினும் இந்தச் சாக்கில் அத்தனை பெரியவர் குடும்ப சகிதம் என் வீட்டுக்கு வந்ததும், அத்தனை பெரிய சரித்திர நாவலை நெரேட் செய்யும்படி கேட்டதும், பிறகு அதை வாயாரப் பாராட்டியதுடன் மறுநாள் குமுதம் ஆபீஸ்முழுவதற்கும் அதைச் சொல்லிப் பாராட்டி மகிழ்ந்ததும் நான் பெற்ற பெரும் பேறன்றி வேறென்ன?

நாங்கள் குமுதத்திற்காகப் பணியாற்றிய கால கட்டத்தில் எந்த விஷயம் காதில் விழுந்தாலும்.. அதை வைத்துப் பேட்டி காணலாமா.. கட்டுரை வடிவில் எழுதலாமா என்ற கோணத்தில்தான் மனம் யோசிக்கும்.

ஒவ்வொரு திங்களன்றும் ஐடியா லிஸ்ட்டை துணை/ இணை ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும்.

இதற்காகவே ஞாயிற்றுக் கிழமைகளில் நானும் என் கணவர் திரு பாமாகோபாலனும் மண்டையை உடைத்துக்கொண்டு யோசிப்போம். 

தினசரியில் வெளியான செய்திகளை ஊன்றிப்படிப்போம். அதில் இரண்டு வரிச் செய்தி வந்தால்கூட முக்கியத்துவம் அளித்து பேட்டியோ, கட்டுரையோ எழுதலாமா என்று  யோசிப்போம்.

அது போல் ஒரு குறிப்பிட்ட தினசரியில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

வட சென்னையில் பிராக்டீஸ் செய்யும் பெண் மருத்துவர் ஒருவர், இன்னும் பிராக்டீஸ் பிக் அப் ஆகாத நிலையில் கிளினிக்கில் தனியாக இருந்திருக்கிறார்.

அவரைப் பேஷன்ட் என்று சொல்லிப் பார்க்க வந்த ஒருவன், கத்தியைக் காட்டி மிரட்டி, நகைகளைக் கழற்றித் தரும்படி கேட்டிருக்கிறான். அந்த இளம் வயது டாக்டர் தன் சர்ஜிகல் கத்தியை சட்டென்று எடுத்து அவன் கையில் ஒரு கீறு கீறி, கைகளைப் பின்னால் வளைத்து பேண்டேஜ் வைத்து இணைத்துக் கட்டி, தாக்கித் தள்ளிவிட்டு வெளியே வந்து கூச்சல் போட்டு அனைவரையும் அழைத்து, போலீசுக்கு போன் செய்திருக்கிறார்.

செம்ம சுவாரஸ்யமாக இருந்தது. நாளிதழ் போட்டோவில் மிக அழகாக இருந்தார் என்பதால் அட்டைப்படமாக வரவும் வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது.

அடுத்த நாளே திங்கள் என்பதால் குமுதம் ஆபீசில் ஓகே வாங்கினார் இவர். (ஒரு வாரம் ரா கி ர தயாரிப்பார். ஒரு வாரம் ஜ ரா சு பொறுப்பில் குமுதம் வரும். மூன்றாம் வாரம் புனிதன் என்று ரொட்டேஷனில் பொறுப்பேற்பார்கள். பிறகு பிரியா கல்யாண ராமன் நான்காவது வாரம்.. ரவி என்கிற பிரசன்னா ஐந்தாம் வாரம் என்று ஒவ்வொருவராக ஜாயின் செய்தபோது களை கட்டியது.

அந்த முறை ரா கி ரங்கராஜன் சாரிடம் ஐடியா ஓகே ஆயிற்று.

பிறகே அந்தப் பத்திரிகை ஆபீசுக்குபோன் செய்தேன். பல கட்டங்கள் தாண்டி ஒரு வழியாய் அதை எழுதிய நிருபர் போனில் கிடைத்தார். அப்போதெல்லாம் லாண்ட் லைன்தான்.

“கிளினிக்கின் அட்ரஸ் எழுதிக்குங்க. இதோ போன் நம்பர்” என்று கொடுத்தார்.

சந்தோஷமாகிவிட்டது. “கிளினிக் நேரம் முடிந்துவிட்டது இப்போது போன் செய்யாதீர்கள்” என்றார். எனவே உடனேபோன் செய்யவில்லை.

ஆனால் பத்தே நிமிடத்தில் எங்கள் வீட்டுக்கு போன் வந்தது. பேசியவர் நாளிதழின் நிருபர்.

முதலில் மென்று விழுங்கினார். பிறகு “மேடம் தப்பாய் நினைக்காதீங்க. எங்க பத்திரிகை பேட்டில வந்த செய்தியை வெச்சுக்கிட்டு அவங்க கிட்ட பேட்டி காண வேண்டாம்..” என்றார். சத்தியமாய் எனக்கு எதுவும் புரியவில்லை.

ஏன் என்று கேட்டதற்கு “மேடம்.. அந்த டாக்டர் கிளினிக்குக்குத் திருடன் வந்தபோது இத்தனை பெரிய டிராமா எதுவும் நடக்கலை. அவங்க திருடனைப் பார்த்து பயந்து கூச்சல் போட்டிருக்காங்க. அக்கம் பக்கம் எல்லாம் ஓடி வந்து கிளினிக்கில் இருந்த பேண்டேஜால் கட்டிப்போட்டு, போலீசில் ஒப்படைச்சுட்டாங்க. அது நான் வசிக்கும் ஏரியா.. கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதிட்டேன். எழுதறதுக்கு முன்னாடியே அவங்க கிட்ட கேட்டுட்டேன். அந்த டாக்டரம்மாவும் இது ஒரு நல்ல பப்ளிசிட்டின்னு நான் எழுதறதுக்கு ஒப்புக்கிச்சு. அக்கம் பக்கம் கேட்டீங்கன்னா வேறு மாதிரிதான் பதில் வரும்..” என்றார். போதாக்குறைக்கு “இதே மாதிரியே நீங்களும் எழுதிட்டீங்கன்னா வில்லங்கம் வராது. வேறு மாதிரி எழுதிட்டீங்கன்னா எனக்கு வேலையே போயிடும் ..” என்றார்.

ரா கி ரங்கராஜனிடம் கேட்டபோது “அப்பிடியெல்லாம் பொய் எழுத வேண்டிய அளவுக்கு நமக்கு விஷயம் பஞ்சமாயில்லை. டிராப் இட்” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.

இதுபோன்று, பொழுது விடிந்து பொழுது போனால் சுவாரஸ்யங்கள் நிறைந்தது குமுதம் நிருபரின் வாழ்க்கை.

சுவாரஸ்யம் தொடரும்…