
காதல், அன்பு, ஈரம், கருணை, சினேகம், நட்பு, நேசம், பரிவு, பற்று, பிரேமை, பக்தி என்று எத்தனை பெயர்கள் இருந்தாலும் கோவர்தனத்தில் உள்ள இந்த சிறுமியரின் அன்பிற்கு ஈடாகுமோ!
பாரதியார் கண்ணனே என் காதலன், தோழன், தாய் தந்தை, சேவகன், அரசன், சீடன், சத்குரு, குழந்தை, விளையாட்டுப் பிள்ளை, காதலன், காந்தன் என்றெல்லாம் பாவிக்கிறார். ஆனால் சக்தி என்ற இந்த மங்கையோ கண்ணனை ஒரு திருடனாக பார்த்துப் பரவசப்படுகிறாள்.
கண்ணன் கோகுலத்தில் வீடு வீடாகச் சென்று வெண்ணெயை திருடித் தின்றதை ஒரு மகான் கூற, கதையை கேட்ட சக்தி இன்று கண்ணனை நம் வீட்டில் வெண்ணெய் திருடுவதற்கு வரவழைக்க வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று யோசித்தாள்.
‘நானும் வெண்ணெய் எடுத்து வைக்கிறேன், கண்டிப்பா வருவான்’
பாலைத் தயிராக்கி, அதைக் கடைந்து ஒரு மண்பானை நிறைய வெண்ணெய் எடுத்து உரியில் தொங்கவிட்டாள். அப்பொழுது அவளுக்கு ஒரு சம்சயம் உண்டாயிற்று.
‘நான் என் வீட்டில் வெண்ணெய் எடுத்து வைத்து இருக்கிறேன் என்று கண்ணனுக்கு எப்படித் தெரியும்?’
உலக மாயையே அறிந்த கண்ணனுக்கு இது தெரியாதா என்ன என்று சக்தி சிறிது கூட நினைக்கவில்லை. கண்ணன் ஒரு வெண்ணெய் திருடன், தன் வீட்டிற்கு அவ்வாறே வர வேண்டும் என்ற தீராத வெறி மட்டும் அவளுக்கு இருந்தது. யோசித்து வெண்ணெய் தாழியை எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றாள், ஆனால் வெண்ணெயை சமர்ப்பிக்கவில்லை. கண்ணனுக்குப் பின்புறமாக சென்று ஜன்னல் வழியாக வெண்ணெயை காட்டி விட்டு,
‘நான் பாலிலிருந்து தயிர் எடுத்து, அந்தத் தயிர் கடைந்து வெண்ணெய் எடுத்துள்ளேன், உனக்கு இங்கே தரமாட்டேன், வெண்ணெய் சாப்பிட விருப்பமிருந்தால் கோகுலத்தில் திருடின மாதிரி என் வீட்டில் உரியில் தொங்கும் வெண்ணெய் சாப்பிட வா, மிகுந்த சுவை, மிகுந்த மணம் பொருந்திய இந்த வெண்ணெயை நீ சாப்பிட வேண்டும் என்றால் என் வீட்டிற்கு திருடன் போல் இரவு நேரத்தில் வர வேண்டும், உன்னுடைய கோவிலில் இருந்து நேரே வந்து வலது பக்கம் திரும்பி இடது புறம் திரும்பி மறுபடியும் வலது புறம் திரும்பினால் கடைக்கோடியில் இருப்பது தான் என்னுடைய வீடு, இரவில் எல்லோரும் உறங்கின பிறகு நீ வந்து யாரிடமும் பேசாமல் வெண்ணெய் திருடி தின்னலாம், காலையில் எழுந்து நான் பார்க்கும் போது அந்த வெண்ணெய் பானை காலியாய் இருக்க வேண்டும், அந்த காலி பானையை பார்த்தவுடன் நீ வந்திருப்பாய் என்று சந்தோஷப்படுவேன், உன்னைப் பிடிக்க வேண்டும், உன்னைப் பார்க்க வேண்டும் என்று எந்த விருப்பமும் இல்லை, கோகுலத்தில் திருடி சாப்பிட்ட மாதிரி சாப்பிட வேண்டும் என்ற ஆசை, அவ்வளவுதான்’
ஆனால் அந்த இரவு கண்ணன் வரவில்லை. மறுநாள் எழுந்து பார்த்தால் வெண்ணெய் பானை அப்படியே இருந்தது. ஏமாற்றத்துடன் ஆனால் சலிக்காமலும், உற்சாகம் குறையாமலும் மறுநாளும் புதிதாக வெண்ணெய் எடுத்து மறுபடியும் கோயிலுக்குச் சென்று அந்த வெண்ணெயை கண்ணனுக்கு ஜன்னலுக்குப் பின்புறம் இருந்து காட்டி விட்டு, கண்ணனுக்கு உற்சாகமூட்டுகிற மாதிரி ஆசை காட்டி விட்டு வீட்டுக்கு வந்தாள். ஆனால் வெண்ணெய் வைத்தது வைத்த மாதிரியே இருந்தது.
மறுநாளும் புதிதாக வெண்ணெய் எடுத்து மறுபடியும் கோவிலுக்கு சென்று,
‘கண்ணா இந்த மாதிரி புதிதான வாசனை மிகுந்த வெண்ணையை நீ சாப்பிட்டு இருக்க மாட்டாய், என் வீட்டிற்கு திருடி சாப்பிட வா, எல்லோரும் தூங்கின பிறகு வா’
அந்த நாளும் கண்ணன் வரவில்லை. தினந்தோறும் புதிதாக தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து கோயிலுக்கு சென்று அதை கண்ணனுக்கு காண்பித்து விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து உரியில் மாட்டி விடுவாள்
கோயிலில் கண்ணனுக்கு எதிரில் கும்பந்தாஸ் என்பவர் கீர்த்தனை பாடிக் கொண்டிருப்பார். அன்று கண்ணனுடைய வாயிலிருந்து உமிழ்நீர் சுரந்து கீழே விழுந்தது கண்டு பதைபதைத்தார்.
‘கண்ணா, என்னதிது, பிரசாதம் உனக்குப் படைக்கவில்லையா, இன்னும் பசியோடுதான் இருக்கிறாயா?’
‘கும்பண்ணா, ஒரு கோபிகாஸ்ரீ வந்து தினந்தோறும் வெண்ணெய் எடுத்து பின்புறமாக வந்து அதை காட்டிவிட்டு, இதைத் திருடி சாப்பிட என் வீட்டிற்கு வா என்று ஆசை காட்டி விட்டு செல்கிறாள், என்ன செய்வது?’
என்று ஒன்றும் தெரியாதது போல் தழுதழுத்த குரலில் வினவினான்.
‘கண்ணா, உனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, இது திரேதா யுகம் அல்ல, இது கலியுகம், இந்த நேரத்தில் நீயே போய் திருடினாலும் எல்லோரும் பிடித்து அடித்து விடுவார்கள், மடப்பள்ளியில் உனக்கு எல்லா விதமான பிரசாதங்களும் செய்து வைத்திருக்கிறார்கள், ஒரு தொழுவமே இருக்கிறது, அதிலிருந்து பாலும், தயிரும், வெண்ணையும், நெய்யும், தாராளமாகப் படைக்கப்படுகின்றன, பின் ஏன் அங்கு சென்று திருடிச் சாப்பிட வேண்டும், வேண்டாம் கண்ணா, எனக்கு இது சரியாகப்படவில்லை’
கண்ணன் மனதில் அந்த கோபிகையின் பிரேமை முழுவதும் பரவியிருந்தது.
‘அவள் என்னிடமிருந்து எதையுமே எதிர்பார்க்கவில்லை, என்னை தரிசனம் கொடுக்க வேண்டும் என்று கூட சொல்லவில்லை, அவள் மிகவும் அன்போடு திருடிச் சாப்பிட்டுவிட்டுச் செல் என்றுதான் சொல்கிறாள், உனக்குப் புரியாது, இத்தனை பேர் இங்கு எனக்கு பிரசாதம் படைக்கிறார்கள், எல்லாவற்றையும் அவர்கள் உள்ளன்போடுதான் செய்கிறார்களா என்று தெரியவில்லை’
‘சரி இப்போது என்ன செய்யப் போகிறாய்?’
‘போகிறாய் இல்லை, போகிறோம், நீயும் வா’
‘பிடிபட்டால் அடித்து விடுவார்கள், இது கலியுகம்’
‘இல்லை இல்லை, நாம் பிடிப்பட மாட்டோம், திருடுவதில் நான் சமர்த்தன், ஆனால் நான் தனியாக செய்ய மாட்டேன்’
‘நான் எப்படி வர முடியும்?’
‘நீ கோயிலுக்குப் பின்னாடி இருக்கிற ஜன்னலிடம் வந்துவிடு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’
எல்லோரும் சென்ற பிறகு கும்பந்தாஸ் கோயில் ஜன்னலைத் திறந்து வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு மெது மெதுவாக கண்ணன் வெளியே வந்தான். பிறந்தவுடன் ஜெயிலிலிருந்தே வந்தவனாயிற்றே! கும்பந்தாசின் இரண்டு தோள்கள் மீதும் காலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.
‘எப்படி செல்ல வேண்டும்?’
‘அந்தப் பெண் சொல்லிருக்கிறாள், நான் வழி சொல்கிறேன், நேர செல், வலது பக்கம் திரும்பி பிறகு இடது பக்கம், பிறகு வலது பக்கம், கடைக்கோடியில் அவளது வீடு’
‘இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருடைய வழியும் உனக்குத் தெரியாதா? இந்த பக்தையினுடைய வழியா உனக்குத் தெரியாமல் போகும்? அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம், நீ அவளுடைய வழி அறிந்திருக்கிறாய்’
சக்தியின் வீட்டிற்கு வந்தார்கள். உரியில் தொங்க விடப்பட்டுள்ள பானையிலிருந்து கண்ணன் வெண்ணெய் சாப்பிட ஆரம்பித்தான்.
‘நானும் தானே கூட வந்திருக்கிறேன், எனக்கும் கொஞ்சம் கொடேன்’
கும்பந்தாசின் மூக்கு மேலேயும் கன்னத்திலேயும் தடவி விட்டு வாயிலும் வெண்ணெய் போட்டான் அந்த மாயக் கண்ணன்.
அண்ட சராசரங்களுக்கும் அதிபதியினால் வாயில் வெண்ணெய் போட்டவுடன் கும்பந்தாசின் கைகால்கள் அன்பினால் நடுங்க ஆரம்பித்தன.
‘என்னை கெட்டியாகப் பிடித்துக் கொள்’
அப்பொழுது கண்ணனுடைய வஸ்திரம் சிறிது நெகிழ்ந்தது. இரு கைகளால் வஸ்திரத்தைப் பிடித்துக் கொண்டு இரு கைகளால் வெண்ணெய் திருடித் தின்ன ஆரம்பித்தான்.
‘நான்கு கைகளை உடைய சங்கு சக்கரதாரியைப் பார்த்திருக்கிறேன், இப்பொழுது வெண்ணெய் திருடும் இரண்டு கைகளையும், வஸ்திரத்தைப் பிடித்துள்ள இரு கைகளையும் பார்க்கிறேன்’
கும்பந்தாசின் கைகள் நெகிழிய கண்ணன் அந்த உரி கயிறைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் கயிறு அறுந்து வெண்ணெய் பானை உடைந்து கீழே விழுந்தது. எல்லோரும் இந்த சத்தத்தைக் கேட்டு,
‘திருடன் திருடன், வாருங்கள் எல்லோரும்’
என்று தடி, கழி எடுத்துக் கொண்டு ஓடி வந்தனர். மாயக் கண்ணனா சிக்குவான்? நினைவிழந்து கீழே விழுந்து கிடந்தார் கும்பந்தாஸ். அங்கே ஓடோடி வந்த சக்தி,
‘நீங்கள் கோயிலில் கீர்த்தனை பாடுபவர் அல்லவா? இப்படி வந்து திருடித் தின்கிறீர்களே, வெட்கமாக இல்லையா, நான் கண்ணனுக்காக எடுத்து வைத்த வெண்ணெய் அல்லவா அது?’
கும்பந்தாசின் கண்களிலிருந்து தாரை தாரஐயாய் ஆனந்தக் கண்ணீர்.
‘சக்தி நீ மிகவும் கொடுத்து வைத்தவள்
நந்தலாலா உன் வீட்டு வழி காட்டினான்
நீ எடுத்து வைத்த வெண்ணையை ஆனந்தத்தோடு
நேற்று இரவு சாப்பிட்டான்
உன்னிடம் எத்தனை அன்பு
நான் உன் சரணங்களில்
இதை நான் உலகத்திற்கு தெரியப்படுத்துவேன்’
அன்பிற்குரியவனை கள்ளனாக வரித்த சக்தியின் முகத்தின் வெட்கம், ஆனந்தம், சந்தோஷம், மகிழ்ச்சி, பேருவகை வெண்ணெய் போல பொங்கியது!
