பரமன் வீட்டில் அன்று காலைப் பொழுது ஒரு போர்க்களம் போலவே காட்சியளித்தது. தன் மூக்குக் கண்ணாடியைக் காணாமல் பரமன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். அந்த பதற்றத்தில் இருந்தவரை மேலும் சீண்டுவது போல, அவர் மனைவி பக்கத்தில் வந்து, “தன் காது கேட்கும் மிஷினையும் கொஞ்சம் தேடித் தாருங்கள்” என்பது போல சைகை காட்டினார். பரமனுக்கு எரிச்சல் உச்சத்துக்கே போனது.
அப்போது குளித்து விட்டு வந்த அவரது தந்தை, “ஏம்பா ?. என் பல்செட்ட எங்கே வச்சேன்னு தெரியல, கொஞ்சம் பாருப்பா” என்று மெதுவாகச் சொல்ல, பரமனின் முகம் கோபத்தில் சிவந்தது.
அந்நேரம் அவர் மகன் பரமேஷ் அறையிலிருந்து வெளியே வந்து, “அப்பா, என் போனை நேத்துல இருந்து காணோம். சைலண்ட் மோட்ல இருக்கு. கிடைச்சா சொல்லுங்க, நான் ஆபிஸ் சீக்கிரம் கிளம்புறேன். அர்கெண்ட் மீட்டிங் ஒண்ணு இருக்கு.” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தான். கடைசியாக அவர் பேரன் வந்து வேஷ்டியைப் பிடித்து இழுத்தான். “தாத்தா, நீங்க வாங்கித் தந்த சிவப்பு பந்தை தங்கச்சி ஒளிச்சு வச்சுட்டா. அவளை அடிச்சி கேளுங்க !” என்று சிணுங்க, “இல்லை தாத்தா, இவன் தான் என் பச்சை கலர் பொம்மையை ஒளிச்சு வச்சிருக்கான். ரெண்டு போடு போட்டா எங்கிருக்கு சொல்லிடுவான்.” என்று பேத்தி குறுக்கே புகுந்தாள்.
பரமனுக்கு ரத்த அழுத்தம் எகிறியது. “எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து என்னை ஏன் இப்படிப் படுத்துறீங்க?. மண்டை வேடுசிடும் போல இருக்கு.” என்று கத்தத் தொடங்கிய போது, அங்கே அவர் மருமகள் (காவல்துறை கான்ஸ்டபிள் ) என்ட்ரி கொடுத்தாள்.
அவள் கலகலவென சிரித்துக்கொண்டே சத்தமாகச் சொன்னாள்: “மாமா, முதல்ல அமைதியா இருங்க. உங்க கண்ணாடி லென்ஸ் மாத்தக் கடையில கொடுத்திருக்கீங்க இன்னிக்கி அஞ்சி மணிக்கு மேல போய் வாங்கிட்டு வரணும் .. அத்தை, உங்க காது மிஷின் சர்வீஸ்க்குப் போயிருக்கு. இன்னும் ஒரு வாரம் ஆகுமாம். பரமேஷ், உன் போன் ஆபிஸ்லயே இருக்குன்னு அங்கிருந்து உன் ஃப்ரெண்ட் இப்ப தான் போன் பண்ணான். தாத்தா, உங்க பல்செட் பாத்ரூம்ல இருக்கு. குட்டீஸ், உங்க பந்து பொம்மை ரெண்டும் எதிர் வீட்டுல இருக்கு.”
அடுத்த நிமிடம், ஏறிய வேகத்திலேயே பரமனின் BP கடகட கிடுகிடுவெனக் குறைந்தது.
அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கிய போது, மருமகள் மெதுவாகப் பரமனிடம் வந்தாள். “மாமா… எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன். ஆனா, காலையில இருந்து என் கப்போர்டுல இருந்த துப்பாக்கி லாக்கர் சாவியை மட்டும் காணோம். அதை எங்கே வச்சேன்னு தெரியல. தொலைஞ்சி போச்சுன்னு சொன்னா நிறெய கேள்வி வரும். இப்போ நான் டியூட்டிக்குக் கிளம்பணுமே!” என்று சொல்லி அவள் தலையைப் பிய்த்துக் கொள்ள, “என்னது… துப்பாக்கி சாவியா?” எனப் பதறிய பரமனுக்கு மீண்டும் BP எகிறத் தொடங்கியது.
இன்றைய அவசர உலகில், நாம் பல நேரங்களில் தொலைப்பது பொருட்களை அல்ல; நம் நிதானத்தையும், தான். தேடப்படும் பொருள்கள் நம் கண் முன்னாலேயே இருந்தாலும், பதற்றம் நம் கண்களை மறைத்து விடுகிறது. அமைதியாகச் யோசித்தால், காணாமல் போன பல பிரச்சனைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்கும்.
