———————————————————————————————————————————————————————————————————-
ஜனவரி 2026 மாதத்தின் சிறந்த கதையாக திரு இராய செல்லப்பா தேர்வு செய்த சிறுகதை
‘பற்றாக்குறை’ – பத்மினி பட்டாபிராமன் தினமலர் 18-1-2026)
———————————————————————————————————————————————————————————————————–
மாதந்தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் “குவிகம் சிவசங்கரி சிறுகதை தேர்வு“க்காக இந்த ஜனவரி 2026 மாதத்தில் வெளிவந்த சிறுகதைகளைப் படித்து சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எனக்கு வழங்கியதற்காக குவிகம் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனவரி மாதத்திய அச்சிதழ்களில் வெளியான 38 கதைகளும், மின்னிதழ்களில் வெளியான 79 கதைகளும் வாசிக்கப்பட்டன.
இவற்றில் இருந்து கீழ்க்கண்ட ஆறு சிறுகதைகள் முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன:
- ‘கூடு’ – ரிஷபன் (குங்குமம் 02-1-2026)
- ‘கொடி’ – வேலூர் டி சீனிவாசன் (கல்கி ஆன்லைன்)
- ‘காம்போ ஆஃபர்’ – பவித்ரா நந்தகுமார் (தினமணி கதிர்-11-1-2026)
- ‘சின்ன விஷயம்’ – எஸ் ஆர் சி (குவிகம் மின்னிதழ்)
- ‘பற்றாக்குறை’ – பத்மினி பட்டாபிராமன் தினமலர் 18-1-2026)
- ‘குற்றம் பார்க்கின்’ – பாரதி மணியன் (கலைமகள்)
‘கூடு’ என்று சிறுகதையில் எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள் எவ்வாறு சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிகிறது என்பதையும், பின்னர், அதில் ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்திற்குத் தகவல் சொல்லாமலே வீட்டைக் காலி செய்து விட்டுப் போகும்போது மற்றவர் எவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார் என்பதையும் அழகாகக் காட்டுகிறார் மிகப் பிரபலமான எழுத்தாளர் ரிஷபன். காலியான வீடு எப்போதும் காலியாகவே இருந்து விடுமா? வேறு யாராவது வருவார்களே, அவர்களோடு நட்பு தொடருமே என்று முடிக்கிறார்.
****
சென்னையில் பல இடங்களில் ஹோட்டல்களின் முன்னால் நின்று கொண்டு கையில் கொடி பிடித்து ஆட்டி, வாடிக்கையாளர்களைத் தங்களுடைய ஓட்டலுக்கு வரவழைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் முதியவர்களில் ஒருவரைப் பற்றிய கதைதான் ‘கொடி’.
அப்படி ஒரு கொடியேந்தியைச் சந்திக்கிறார், மும்பையில் இருந்து சென்னை வரும் கதைசொல்லி. அவருடைய அங்க அடையாளங்களைப் பார்க்கும் பொழுது, தன்னுடைய நண்பன் சேகரின் உறவினராக இருக்கலாமோ என்று சந்தேகம் எழுகிறது கதைசொல்லிக்கு. இவர் கொடுக்கும் டிப்ஸை ஏற்க மறுக்கிறார் அவர். வற்புறுத்தி அவரின் சட்டைப்பையில் அதை வைத்துச் செல்கிறார் கதைசொல்லி.
சேகரின் வீட்டுக்கு வந்த போது தான் உண்மை தெரிகிறது. சேகரின் தந்தை தான் அவர்! மருமகளின் இணக்கமற்ற தன்மையால் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுப் போய் விட்டவர். இப்போது கதைசொல்லி மூலம் அவரின் இருப்பிடம் தெரிந்தவுடன் அவரைத் தேடிக்கொண்டு போகிறான் மகன். முடிவை நம்மால் ஊகிக்க முடிகிறது: தந்தை இறந்து போய் மூன்று நாட்கள் ஆகிறது. இப்போது வேறொரு கொடியேந்தி முதியவர் அங்கே கொடியை அசைத்துக் கொண்டிருந்தார்!
இத்தகைய கொடியேந்திகளைப் பற்றிய கதைகள் அதிகம் எழுதப்படுவதில்லை. அதற்காகவே வேலூர் டி சீனிவாசனின் இந்தக் கதையைச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
****
பவித்ரா நந்தகுமாரின் ‘காம்போ ஆபர்’ சோகமாகத் தொடங்கினாலும் இறுதியில் ரொமாண்டிக் மெலோடிராமா ஆக முடிகிறது!
காவியா- தீபக் திருமணம் அமோகமாக நடந்த ஒன்று. திருமண போட்டோகிராபர் சரவணனிடம் பெண்ணின் தந்தை காம்போ ஆபர் எடுத்திருந்தார்- அதாவது திருமணம் பிளஸ் வளைகாப்பு இரண்டுக்கும் சேர்த்து சலுகை கட்டணத்தில்!
துரதிஷ்டவசமாக சரவணனுக்கு முழுத் தொகையும் கொடுத்து ஆல்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாகவே, அத் திருமணம் டைவர்ஸை நோக்கிப் போகிறது. ஆகவே பெண்ணின் தந்தை, ஒப்புக்கொண்டதில் பாதி தான் தர முடியும் என்றும் மீதியை மணமகன் வீட்டில் பெற்றுக் கொள்ளுமாறும் கூறுகிறார். மூன்று மாதங்கள் சரவணன் விடாமல் இவர்களை நெருக்கியதின் பேரில், காவியாவிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் கிடைக்கிறது. மீதி ஒரு லட்சத்தை தீபக்கிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக ஹோட்டலுக்கு வருகிறான் சரவணன். காவியாவும் அங்கு வந்து தான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட இருக்கிறாள்.
ஒப்புக்கொண்டபடி ஒரு லட்ச ரூபாய்க்கு செக் தருகிறான் தீபக். அதைப் பெற்றுக் கொண்டு ஆல்பங்களைக் கொடுத்துவிட்டு நகர்கிறான் சரவணன்.
ஆர்வம் மேலிட, தீபக்கும் காவியாவும் தனித்தனியாக ஆல்பங்களைப் புரட்டுகிறார்கள். திருமணத்துக்கு முன்பே மிக நெருக்கமான அசைவுகளை அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிய புகைப்படங்களைப் பார்க்கப் பார்க்க இருவருக்கும் மனம் நெகிழ்கிறது. எப்படி அன்பாக இருந்த நாம் ஏன் இப்படி வேகமாக டைவர்ஸ் வேண்டுமென்று ஒப்புக்கொண்டோம் என்று இருவருக்கும் கழிவிரக்கம் ஏற்படுகிறது. கண்களில் நீர் கசிகிறது.
இதற்குள் தீபக் கொடுத்த செக், சரவணன் பாக்கெட்டில் இருந்த ஜிப்பில் மாட்டிக் கிழிந்து விடுகிறது. எனவே வேறு செக் வாங்க நேரில் வரட்டுமா என்கிறான் சரவணன்.
அதற்குள் நிலைமை மாறிவிட்டது அவனுக்கு எப்படித் தெரியும்? “இப்போது வேண்டாம், ஆறு மாதங்கள் கழித்து வளைகாப்புக்கு வரும்போது வாங்கிக் கொள்ளுங்கள்” என்கிறான் தீபக்.
அழகான கதை. இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களும் படித்து ரசித்து அசை போடலாம்!
***
நுட்பமான அங்கதத்தோடு எழுதுபவர் எஸ்ஸார்சி. குவிகம் மின்னிதழில் அவர் எழுதிய ‘சின்ன விஷயம்’ கதை உண்மையில் ஒரு பெரிய விஷயத்தையே சொல்கிறது: அதாவது, வீட்டிலிருந்து வெளியே போனாலும் சரி, வெளியே கடை கண்ணிகளுக்குப் போய்விட்டு வீடு திரும்பினாலும் சரி, உங்கள் காலில் அணிந்திருக்கும் செருப்பு உங்களுடையது தானா என்று இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்!
கதைக்கரு சுருக்கமானது ஆனாலும் ஆசிரியரின் அனுபவமிக்க எழுத்து அதை மிகவும் சுவைபட விரித்துக் கூறுகிறது. ஜெராக்ஸ் கடையில் நின்றுகொண்டு படித்தால் இன்னும் ரசிக்கலாம்!
****
ஆனால் மாதத்தின் சிறந்த சிறுகதை என்று பார்க்கும்போது இரண்டு கதைகளுக்கு இடையேதான் ‘டை’ விழுகிறது:
கலைமகளில் பாரதி மணியன் எழுதிய ‘குற்றம் பார்க்கின்’ என்ற சிறுகதையும், தினமலரில் பத்மினி பட்டாபிராமன் எழுதிய ‘பற்றாக்குறை’ என்ற சிறுகதையும் தாம் அவை.
புதுமணத் தம்பதியான அபர்ணா அருண் பற்றியது பாரதிமணியனின் கதை. கணவனின் உடைகள் இருந்த அறையை ஒழுங்குபடுத்தும்போது தற்செயலாகக் கிடைத்த ஒரு சிறு பையில் இருந்து பெண்கள் பயன்படுத்தும் ஹேர் கிளிப், ஸ்டிக்கர் பொட்டு, ரிப்பன் முதலிய பொருள்களைப் பார்த்து திகைத்துப் போகிறாள் அபர்ணா. அவள் நெஞ்சம் குமுறுகிறது. திருமணத்திற்கு முன்பு கணவனின் வாழ்க்கையில் யாரோ ஒருத்தி இருந்திருப்பாளோ என்ற ஐயம் உண்டாகிறது. கணவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் பிரச்சினையைக் கிளப்புகிறாள். திடுக்கிட்டுப் போன அருண் ஏதேதோ சாக்கு சொல்கிறான். பெண் பார்த்த நாளிலிருந்து திருமணம் முடியும் வரை இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று முறை அவள் வீட்டிற்கு அவன் வந்திருந்த போது அவளுக்குத் தெரியாமல் எடுத்து வந்த பொருள்கள்தாம் அவை என்கிறான். அவள் நம்ப மறுக்கிறாள் ஏனெனில் அந்த ஹேர்கிளிப் அவளுடையது இல்லை. பிறகு அவன் அவளை வேறு விதமாக வசப்படுத்துகிறான். அவள் கண்டெடுத்த பையில் உலர்ந்து தூளாகிப் போன நிலையில் ஒரு ரோஜாப்பூ இருந்ததைச் சுட்டிக்காட்டி, அதுவும் அவள் தலையில் இருந்து விழுந்த பூ தான் என்று சாதிக்கிறான். என்னையா சந்தேகிக்கிறாய் என்கிறான்.
அபர்ணாவுக்கு அவன் அசடு வழிவது தெரிகிறது. அவனை மேலும் சோதிக்க விரும்பாமல், வயசுக் கோளாறால் எப்போதோ நடந்த விஷயம், நமது மண வாழ்வுக்குத் தடையாக இல்லாமல் இருந்தால் சரி என்று பெரிய மனது கொள்கிறாள். அதனால் அவளுடைய மனது சமாதானம் ஆகிறது என்று முடிக்கிறார் ஆசிரியர்.
எவ்வளவு இளம் பெண்களிடம் -அதுவும் திருமணம் ஆன புதிதில்- இத்தகைய மன முதிர்ச்சி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் அப்படி அவர்கள் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் வழிகாட்டுவதாகவே கொள்ளலாம்
***
பத்மினி பட்டாபிராமனின் கதையில் வரும் ஜனகம் மாமி, கணவனை இழந்தவர். ஓய்வூதியம் பெறுபவர். தனியாக வாடகை வீட்டில் வசித்துக்கொண்டிருந்தவரை அவருடைய ஒரே மகனும் மருமகளும் தங்கள் பிளாட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் கதை தான் இது.
மகன் மருமகள் இருவரும் அலுவலகம் போகிறவர்கள். பள்ளியில் படிக்கும் ஒரு பேரன் ஒரு பேத்தி.
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் அருகில் ஜனகத்தின் வீடு இருந்தது. சம்பளத் தேதியில் கோவிலை தரிசித்து விட்டு அருகில் இருந்த ஏடிஎம்மில் பணத்தை எடுத்துக் கொண்டு வருவாள் ஜனகம். இப்போது அவருடைய டெபிட் கார்டு இருப்பது மருமகளிடம்; ஆனால் இரண்டாம் தேதியே பணத்தை அவள் ஏடிஎம்மில் இருந்து எடுத்து வந்து மாமியாரிடம் கொடுத்து விடுகிறாள்.
ஆனால் அந்த பணம் ஜனகத்துக்குத் தெரியாமலேயே கரைந்து போய் விடுகிறது. பேத்தியின் பிறந்தநாளில் பேத்திக்கு மட்டுமின்றி பேரனுக்கும் புத்தாடை எடுக்க ஜனகம்தான் பணம் கொடுக்கிறாள். மருமகள் இல்லாத நேரத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆகிறது. அதற்கும் அவளேதான் பணம் கொடுக்கிறாள். இஸ்திரிக்காரர் பகலில் வந்து துணிகளை கொடுத்துவிட்டு ஜிபே அனுப்பப் சொல்கிறார். அடுத்தடுத்த நாட்களில் கேபிள்காரர், தண்ணீர் ‘கேன்’காரர், சர்குலேஷன் லைப்ரரிக்காரர் ஆகிய ஒவ்வொருவரும் மகனும் மருமகளும் இல்லாத நேரத்திலேயே வந்து இவளிடம் கேட்டுப் பணம் பெற்றுக் கொள்கிறார்கள்.
இவளுடைய அறையில் புதிய டிவி வாங்கி வைக்கிறார்கள்; அதற்கு இஎம்ஐ இவள்தான் கட்டுகிறாள். பேரனை கராத்தே கிளாசுக்கு ஏற்றிக்கொண்டு போகும் ஆட்டோக்காரருக்கு தினம் இவள்தான் பணம் கொடுக்க வேண்டும். எப்போதும் நாலு காசு இருக்கும் ஜனகத்தின் கையில் இப்போது ஐந்து விரல்கள் மட்டுமே இருக்கிறது.
பணம்தான் என்று இல்லை; விருந்தினர்கள் வந்தால் தங்குவதும் ஜனகத்தின் அறையில் தான். இட நெருக்கடி மூச்சு வாங்கும். வெளியே சென்று தனக்குப் பிடித்தமான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் அவளுக்கு உரிமை இல்லை. அங்கிருந்து டெங்கு காய்ச்சல் வந்தால் குழந்தைகளுக்குத் தொற்றிக் கொள்ளுமே என்று மருமகள் தடுக்கிறாள். ஜனகத்திற்கு சுதந்திரம் முற்றிலும் அற்றுப் போகிறது.
ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறை. 30 நாளைக்கு முன்பே பென்ஷன்தொகை செலவாகி விடுகிறது. இவர்கள் தெரிந்து செய்கிறார்களா அல்லது உரிமையோடு தன்னை செலவழிக்க விடுகிறார்களா? தான் வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?..
எனவே ஜனகம் ஒரு முடிவுக்கு வருகிறாள். தான் ஏற்கனவே குடியிருந்த வாடகை வீட்டுக்கே திரும்பிச் செல்கிறாள். அங்கு அவளுடைய தோழி வடகம் இட்டு தொழில் செய்கிறாள். இட்ட வடகத்தை அடுக்கி வைக்க இடமில்லாமல் தவிக்கிறாள். அவளுக்குத் தன்னுடைய அறையில் இடம் தருவதற்காகவும்தான் ஜனகம் இப்போது போகிறாள். தோழிக்கும் உதவி; தனக்கும் சுதந்திரம்!
கதை இப்படி முடிகிறது:
பெட்டி, பைகளுடன் ஆட்டோவில் ஏறுகிறாள் ஜனகம். “வேற ஒண்ணும் இல்லே. அம்மாவுக்கு கையில பென்ஷன் வருகிற தைரியம் தான்” என, பின்னால் பிரியாவின் குரல் கேட்கிறது.
‘அதை என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி செலவழிப்பேன்..’ என, நினைத்துக் கொள்கிறாள் ஜனகம்.
***
பத்மினி பட்டாபிராமன் காட்டும் ஜனகத்தைப் போன்று மனச்சிக்கலில் தவிக்கும் முதிய பெண்மணிகளில் ஒருவரையாவது நம் வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் யாருக்கும் ஜனகத்தைப்போல் தப்பிச் செல்வதற்கு வழி கிடைத்திருக்குமா என்றால் சந்தேகமே.
பெண் சமுதாயத்தை அதிகம் பாதிக்கும் கருத்தைக் கொண்ட இந்தப் ‘பற்றாக்குறை’ கதையையே இம்மாத சிறந்த சிறுகதையாக நான் தேர்ந்தெடுக்கிறேன்.
