யுனைடெட் விஷுவல்ஸ் சார்பில் டி. வி. வரதராஜன் அரங்கேற்றிய சங்கீத மும்மூர்த்திகள் நாடகம், சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிக துணிச்சலான முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
சங்கீத மும்மூர்த்திகள் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களை பற்றி படித்திருக்கிறோம், அவர்கள் மூவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதும் தெரியும். மிகவும் ஆராய்ச்சி செய்து, அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதை உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அதில் ஒரு அழகான கற்பனையை கலந்து அவர்களும் அவர்கள் குடும்பத்தவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகுவதும், ஒருவர் வாரிசு மற்றவரிடம் சங்கீதம் பயிலச் செய்வதுமாக நாடகம் நெடுக சங்கீத மழை பொழிந்திருக்கிறார்கள்.
இதில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் தான் மூத்தவர் என்பதால் ஸ்ரீ தியாகராஜரின் பெண் சீதம்மா அவரை பெரியப்பா என்று உரிமையோடு அழைப்பதும், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் மகன் சுப்பராயன் ஸ்ரீ தியாகராஜரை சித்தப்பா என்றழைப்பதும் அந்த உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தி கேட்கவே இனிமையாக இருக்கிறது. கதையில் வரும் சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற்போல ஆங்காங்கே கீர்த்தனைகள் அவர்கள் பாடுவது போல அமைக்கப்பட்டுள்ளன. நாடகம் மற்றும் சங்கீதம் இரண்டிலும் பிரியமுள்ளவர்களுக்கு இந்த நாடகம் செவிக்கும் கண்களுக்கும் ஒருங்கே களிப்பூட்டுகிறது. சில கீர்த்தனைகள் மேடையில் பாடப்படும்போது, அவையோர்கள் குறிப்பாக மூத்த தலைமுறையினர் கூடவே கீர்த்தனை வரிகளை உணர்சி வசப்பட்டு பாடுவதையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக ஸ்ரீ தியாகராஜர் உஞ்சவிருத்தி எடுக்கும்போது பாடும் ‘ஸ்ரீ ராம ஸ்ரீ ராம ஸ்ரீ மனோகராம’. ‘கஞ்சதளாயதாக்ஷி, ‘மீனாக்ஷி மேமுதம்’ போன்ற கீர்த்தனைகளை நிறைய ரசிகர்கள் தாளம் போட்டுக் கொண்டு பரவசமாக பாடினார்கள். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் வாயாலேயே அவர் ஹிந்துஸ்தானி, மற்றும் மேற்கத்திய இசை பயில கற்றுக் கொண்ட சம்பவங்களை சொல்லியிருப்பதும், அவர் அந்த பாடல்களை பாடிக் காட்டுவதும் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது.
தஞ்சை நால்வர் என்று புகழ்பெற்ற சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரையும் கதைக்குள் கொண்டு வந்து, கண்ணுக்கினிய நாட்டியத்தையும் மேடையில் வழங்கியது பாராட்டத்தக்கது. கடைசியில் வித்யா கர்வம் கொண்ட வித்வான் கேசவலுவின் கர்வத்தை போட்டியில் சியாமா சாஸ்திரிகள் அடக்குவது போல கதை முடிகிறது. முத்துஸ்வாமி தீக்ஷிதர் அமிர்தவர்ஷிணி ராகம் பாடி மழை வரவழைப்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.
இந்த நாடகத்திற்கு அடித்தளமே பாம்பே ஜெயஸ்ரீயின் இசையமைப்பு, இசைக் கோர்ப்பு தான். எந்த இடத்திற்கு எந்த கீர்த்தனை, அது பாட்டா அல்லது வாத்தியமா என்று மிக அழகாக யோசித்து விஜய் சிவா, சந்தீப் நாராயணன், ஸ்ரீராம் பரசுராம், பாரதி சுந்தர், கீர்த்தனா, ஷ்ரவண், கடம் கிருஷ்ணா உட்பட பல முன்னணி கலைஞர்களை ஒரு கூட்டமாக திரட்டி பாட, வாசிக்க வைத்து ஒலிப்பதிவு செய்து ஜமாய்த்திருக்கிறார்.
சங்கீத மும்மூர்த்திகள் நாடகத்தின் கதையை எழுதியவர், நாடக, இசை விமர்சக ஜாம்பவான் திரு வீயெஸ்வீ என்றால், அந்த கால கட்டத்திற்கேற்ற உரையாடல்கள் சிறிதும் லயம் கெடாமல் ஆங்காங்கே நகைச்சுவை மிளிர திரு சந்திரமோகனும் திரு வரதராஜனும் அமர்க்களப்படுத்துகிறார்கள்.
கதாபாத்திரங்களுக்கு மிக பொருத்தமான நடிகர்கள் தேர்வை கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த நாடகத்தில், தான் சியாமா சாஸ்திரிகள் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்ட வரதராஜன், காலக்ஷேத்ரா நடன கலைஞர் பாலகுருநாதனை தியாகராஜராக அரங்கேற்றி அழகு பார்த்திருக்கிறார். ஸ்ரீ தியாகராஜரின் மகள் சீதம்மாவாக பாலகுருநாதனின் சொந்த மகள் மயூராவே நடித்திருப்பதும் ஒரு சிறப்பு. ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரை நாம் மனசில் எப்படி உருவகப்படுத்தி இருக்கிறோமோ அதே போல ஒருவரை, கல்கத்தா ரமேஷை, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள். மும்மூர்த்திகளுக்கும் மனைவிகளாக வருபவர்கள் மிக அருமையான தேர்வு.
இந்த அழகான கற்பனை, சிறந்த இசை விமர்சகர் திரு வீயெஸ்வீயின் எண்ணத்தில் உதித்து, சந்திரமோகனால் உரையாடல்கள் எழுதப்பெற்று டி. வி. வரதராஜனால் இயக்கப்பெற்று 09.01.26 அன்று அரங்கேற்றம் ஆயிற்று. 26.1.26 அன்று சென்னை இந்திராநகர் ஹம்ஸத்வனியில் ஏழாவது தடவையாக மேடையேறி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். ஏழாவது அல்ல, ஏழாயிரம் தடவை மேடை ஏறும் அளவுக்கு சத்தான விஷயங்கள் கொண்ட நாடகம் இது. அடுத்த தலைமுறையினருக்கு நம் கலாச்சாரத்தை பற்றிய அரிய தகவல்களை கொண்டு செல்லும் அரும் பணியை துணிச்சலாக மேற்கொண்டு டி. வி. வரதராஜன், தன் குழுவினருடன் அபரிமிதமான அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த நாடகத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.


