அலாவுதீன் கில்ஜி

அமீர் குஸ்ரோவைச் சொல்லி முடித்தபின் மீண்டும் வழக்கம் போல அடி, தடி ,போர் என்று நாம் நமது சரித்திரத் தொழிலில் இறங்குவோம்.
அடிமை வம்சம் அழிந்தது. அதன் கடைசி மன்னன் கைக்குபாத். அவன் கீழ் பணியாற்றிய ‘ஜலாலுதீன் கில்ஜி’, ஒரு புரட்சி செய்து தில்லி’ சுல்தானாக மாறினான். (1290 -1296).
ஜலாலுதீனின் அண்ணன் சிகாபுதீன்மசூதின் மூத்த மகன் அலாவுதீன். 1266ல் பிறந்தான். அவனுடைய இயற்பெயர் அலி குர்ஷஸ்ப். அவனுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர்: அல்மசு பெக், குத்லுக் திகின் மற்றும் முகம்மது. சிகாபுதீனின் இறப்பிற்கு பிறகு அலாவுதீனை ஜலாலுதீன் வளர்த்தான். அலாவுதீன் மற்றும் அவன் தம்பி அல்மசு பெக் இருவருமே ஜலாலுதீனின் மகள்களை திருமணம் செய்து கொண்டனர். அலாவுதீன், ஜலாலுதீனின் மகளான மலிகா-இ-ஜகானை 1290ஆம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டிருந்தான். இந்தத் திருமணம் மகிழ்ச்சிகரமாக இருக்கவில்லை. இப்பெண், அலாவுதீன் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்தாள். அலாவுதீன் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அப்பெண்ணின் பெயர் ‘மகுரு’. தனது கணவன் இன்னொரு மனைவியை கொண்டான் என்ற தகவலால் மலிகா-இ-ஜகான் பெருமளவுக்குச் சினம் கொண்டாள்.
ஒரு காட்சி விரிகிறது: மலர்கள் பூத்துக்குலுங்கும் ஒரு தோட்டம். தென்றல் சுகமாக வீசிக்கொண்டிருந்தது. அலாவுதீனும், மகுருவும் ஒன்றாக இன்பமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே வந்த ஜலாலுதீனின் மகள், கோபத்தில் கொதித்தாள். மகுருவைச் செருப்பால் அடித்துத் தாக்கினாள். கோபம் கொண்ட அலாவுதீன், மலிகா-இ-ஜகானை வாளால் தாக்கி காயப்படுத்தினான். இந்நிகழ்வு ஜலாலுதீனிடம் புகார் செய்யப்பட்டது. ஜலாலுதீன் அதைப் பொருட்படுத்தவில்லை. அலாவுதீனுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் ஜலாலுதீன் எடுக்கவில்லை. ஆனால், ஜலாலுதீனின் மனைவி, ‘நாட்டின் ஒரு தொலை தூரப் பகுதியில் ஒரு சுதந்திரமான இராச்சியத்தை ஏற்படுத்த அலாவுதீன் சதித்திட்டமிடுவதாக’ ஜலாலுதீனுக்கு எச்சரிக்கை விடுத்தாள். அவள் அலாவுதீனை நெருக்கமாகக் கண்காணித்து வந்தாள்.
1291இல் ஜலாலுதீன், காராவின் புதிய ஆளுநராக அலாவுதீனை நியமித்தான். காராவில் இருந்த அமீர்கள் (துணை உயர் குடியினர்) தில்லியின் அரியணையை கைப்பற்ற அலாவுதீனைத் தூண்டினர். அந்த அமீர்கள் , ‘ஒரு பெரிய இராணுவத்தைத் திரட்டவும், ஒரு வெற்றிகரமான ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தவும்’ அலாவுதீனுக்கு நிறைய பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டனர். ஜலாலுதீனை அரியணையிலிருந்து கற்றும் தனது திட்டத்திற்கு நிதியளிக்க அலாவுதீன் அண்டை இந்து இராச்சியங்கள் மீது ஊடுருவல்களை நடத்த முடிவு செய்தான். (கொள்ளையடிக்காமல் வேறு எப்படிப் பணம் சேர்க்கமுடியும்?)
1293இல் தக்காணப்பகுதியில் இருந்த தெற்கு யாதவ ராஜ்யத்திலிருந்த பெரும் செல்வம் குறித்து பில்சாவில் இவர் அறிந்தான். அவர்களது தலைநகரான தேவகிரிக்குச் செல்லும் வழிகளைப் பற்றியும் அறிந்தான். தேவகிரியை எப்படியாவது வென்று அந்தச் செல்வங்களை அபகரிக்கவேண்டுமென்று திட்டமிட்டான். சாந்தேரிக்குப் படையெடுத்துச் செல்வதாக ஜலாலுதீனிடம் கூறிவிட்டு, 4000 குதிரைப்படை, 2000 காலாட்படையுடன், தேவகிரிக்குப் பயணம் மேற்கொண்டான். எல்லிச்பூர் சென்றடைந்தான். எல்லிச்பூர், யாதவ அரசின் வட எல்லைக் காவல் அரணாக இருந்தது. அங்கிருந்து தேவகிரிக்குப் புறப்பட்டான். அங்கிருந்த மக்களோ, மன்னர்களோ சந்தேகப்படாமலிருக்க, “டில்லி சுல்தானிடமிருந்து தப்பி ஓடி வந்து அடைக்கலம் தேடும் இளவரசன் நான்” என்று வதந்திகளைப் பரப்பினான். தேவகிரிக் கோட்டை வாசலை அடைந்தான், தேவகிரியை ராமசந்திர தேவா என்ற வயதானவர் சிறப்பாக ஆண்டு வந்தார். அவர் மகன் சிங்கன தேவா தீர்த்தயாத்திரைக்குப் போயிருந்தான். கோட்டையை முற்றுகையிட்ட அலாவுதீன், “நான் முன்னணிப் படையுடன் வந்துள்ளேன். எங்கள் சுல்தான் 20000 படையுடன் வந்து கொண்டிருக்கிறார்” என்று பொய்யுரைத்தான். ராமசந்திர தேவா சமாதானம் நாடினான்.
ஜலாலுதீனுடைய அனுமதியில்லாமல் போர் செய்து, ரகசியமாக தேவகிரி சென்று, வதந்திகளைப் பரப்பி, எளிதாக, அதிசயமாக தேவகிரியை வென்றான். 15 நாட்களுக்குள் தேவகிரியை விட்டுச் செல்வதாகக் கூறினான். போர் நஷ்ட ஈட்டுத் தொகை தர ராமசந்திர தேவா ஒப்புக்கொண்டான், இதற்கிடையில் மன்னனின் மகன் சிங்கன தேவா திரும்ப வந்தான். ஆத்திரம் கொண்டான். அலாவுதீன், தன் படையை இரண்டாகப் பிரித்து, ஒரு படை கோட்டையை முற்றுகையிட, மறு படை சிங்கன தேவாவுடன் போரிட்டது. தேவகிரிப்படைகள், ‘முன்பு அலாவுதீன் சொன்னதைப்போல சுல்தானின் பெரும்படை வந்ததுவோ’, என்று கிலிபிடித்து சிதறி ஓடியது நீண்ட முற்றுகைக்குப் பிறகு, ராமசந்திர தேவா சமாதானம் கோரினான். இப்பொழுது அலாவுதீன், தன் நிபந்தனைகளைக் கடுமையாக்கினான்.
‘எல்லிச்பூரைத் தரவேண்டும். 600 மணங்கு முத்துக்கள், 7 மணங்கு நவரத்தினங்கள், மேலும் ஆயிரக்கணக்கில் துணிமணிகள் அளிக்கப்படவேண்டும்’ என்றது அந்த நிபந்தனை. ஒப்புக்கொண்டு, ஆண்டுதோறும் கப்பம் கட்டவும் ராமசந்திர தேவா சம்மதித்தான். ராமசந்திர தேவாவின் மகளையும் அலாவுதீனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.
சுல்தான் ஜலாலுதீனின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, முன்பு பெற்ற கொள்ளைப் பொருட்கள் சிலவற்றை ஜலாலுதீனிடம் அலாவுதீன் கொடுத்தனுப்பினான். அதே நேரத்தில், யாதவ இராச்சியம் குறித்த தகவல்களை அவரிடம் வெளியிடவில்லை. மகிழ்ச்சியடைந்த ஜலாலுதீன் அலாவுதீனை அவத்தின் ஆளுநராகவும் ஆக்கினான்.
இப்படி, அலாவுதீன், தேவகிரியிலிருந்து ஒரு பெரும் அளவிலான செல்வத்துடன் திரும்பிச் சென்றான். இதில் விலை மதிப்புள்ள உலோகங்கள், ஆபரணங்கள், பட்டுப் பொருட்கள், யானைகள், குதிரைகள் மற்றும் அடிமைகளும் அடங்குவர். அலாவுதீனின் வெற்றி குறித்த செய்தியானது ஜலாலுதீனை அடைந்த போது சுல்தான் குவாலியருக்கு வந்திருந்தான். கொள்ளையிடப்பட்ட பொருட்களை தன்னிடம் அலாவுதீன் அங்கு வழங்குவான் என்று நம்பினான். அலாவுதீன் அனைத்து செல்வங்களுடன் காராவிற்கு நேரடியாகச் சென்றான். சந்தேரியில் அலாவுதீனை இடைமறிக்கலாம் என ஜலாலுதீனின் ஆலோசகர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால், ஜலாலுதீன் தனது அண்ணன் மகன் மீது நம்பிக்கை கொண்டிருந்தான். காராவிலிருந்து செல்வத்தை தில்லிக்கு அலாவுதீன் கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் தில்லிக்குத் திரும்பினான். காராவை அடைந்த பிறகு அலாவுதீன், சுல்தானுக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பினான். ‘தான் இல்லாத நேரத்தில் சுல்தானின் மனதில் தனக்கு எதிரான எண்ணங்களை தனது எதிரிகள் விதைத்திருக்கலாம்’ என்று கவலை தெரிவித்தான். ‘மன்னிப்பு வழங்கி விட்டதாக ஒரு கடிதத்தை சுல்தான் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தான். தன்னுடைய தூதுவர்கள் மூலம் சுல்தான் ஜலாலுதீன் இதை உடனடியாக அனுப்பினான்.
காராவில் அலாவுதீனின் இராணுவ வலிமை மற்றும் சுல்தானைப் பதவியிலிருந்து அகற்றும் அவருடைய திட்டங்கள் குறித்து ஜலாலுதீனின் தூதுவர்கள் அறிந்தனர். எனினும், அலாவுதீன் அவர்களைப் பிடித்து வைத்தான். சுல்தானுடன் தொடர்பு கொள்வதில் இருந்து அவர்களைத் தடுத்தான்.
ஜலாலுததீனுக்கு அலாவுதீன் ஒரு கடிதம் எழுதி அனுப்பினான்: “‘சுல்தான் நேராக வந்து என்னை மன்னிக்க வேண்டும். இல்லாவிட்டால் குற்ற உணர்ச்சி காரணமாக நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று எழுதினான்.
இதே நேரத்தில் அலாவுதீனின் தம்பி (ஜலாலுதீனின் இன்னொரு மகளைத் திருமணம் புரிந்தவன்) அல்மாசு பெக் அலாவுதீனின் விசுவாசம் குறித்து சுல்தானுக்கு உறுதி கொடுத்தான். காராவுக்கு வருகை புரியவும், அலாவுதீனைச் சந்திக்கவும் ஜலாலுதீனை இவன் இணங்க வைத்தான். ‘சுல்தான் நேராக வந்து மன்னிக்காவிட்டால் குற்ற உணர்ச்சி காரணமாக அலாவுதீன் தற்கொலை செய்து கொள்வான்’ என்று கூறினான். ஏமாற்றப்பட்ட ஜலாலுதீன், தன்னுடைய இராணுவத்துடன் காராவிற்குப் புறப்பட ஆரம்பித்தான்.
காராவை நெருங்கிய போது தன்னுடைய முதன்மையான இராணுவத்தை காராவுக்கு நிலம் வழியாகக் கொண்டு செல்ல ஆணையிட்டான். அதே நேரத்தில் சுல்தான் சுமார் 1,000 வீரர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் கங்கை ஆற்றைக் கடக்க முடிவு செய்தான். 20 சூலை 1296 அன்று சுல்தானுக்கு வரவேற்பு அளிப்பது போல நடித்து அலாவுதீன் ஜலாலுதீனைக் கொன்றான். தன்னைத் தானே புதிய மன்னனாக அறிவித்துக் கொண்டான். ஜலாலுதீனின் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர்.
அலாவுதீன் இதுவரை செய்தது தொடக்கம். இனிமேல் செய்யப்போவது அகில இந்தியாவை ஒரு உலுக்கி எடுத்தது. தென்னிந்தியாவில் ஆயிரங்காலம் ஆண்ட மற்றொரு சாம்ராஜ்யம் மறைந்து போனது.
அந்தக்கதைகளை சரித்திரம் விரைவில் சொல்லும்.
