ஹைக்கூ கவிஞர்களே…                     பங்கேற்கத் தயாராகுங்கள்…
தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு
வரும் மே 17 அன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது
புதுக்கோட்டை. பிப்.07. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்தும் ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு – 2026′ வரும் மே 17 அன்று புதுக்கோட்டையில் நடத்துவதாக  திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்குத் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையேற்றார். கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையேற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி பேசுகையில், “2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருச்சியில் ‘தமிழ் ஹைக்கூ: முதலாவது உலக மாநாடு’ நடைபெற்றது.  பிறகு, அந்தமான், மதுரை, இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்தடுத்த மாநாடுகள்  நடைபெற்றன. இந்த நான்கு மாநாடுகளிலும் கலந்துகொண்ட போது, ஹைக்கூ எனும்  மூவரி ஜப்பானிய ஹைக்கூ கவிதைக்கு இப்படியொரு வரவேற்பா என வியந்துபோனேன்.
இன்றைக்கு உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் பலரும் ஆர்வத்துடன் ஹைக்கூ கவிதைகளை எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஹைக்கூ பற்றிய தேடலைத் தூண்டும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்கிறார்கள்.
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரிலுள்ள மகாராஜ் மகாலில் வரும் மே 17-ஆம் தேதி  நடைபெறவுள்ள ஐந்தாவது உலக மாநாட்டில் கவியரங்கம், கருத்தரங்கம், நூல் வெளியீடு,  ஹைக்கூ கவிதைக் கண்காட்சி ஆகியன இடம்பெறவுள்ளன” என்றார்.
ஹைக்கூ மாநாட்டுக் வரவேற்புக் குழுவைக் கவிஞர் மு.முருகேஷ் முன்மொழிந்து பேசினார். 
மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக கவிஞர் தங்கம்மூர்த்தி, செயலாளராக கவிஞர் மகா.சுந்தர், பொருளாளராக சு.பீர்முகம்மது ஆகியோர் ஏகமனதாகத் தேர்வு   செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பேராசிரியர்கள் சா.விஸ்வநாதன், கணேசன், கவிஞர்கள் வம்பனார் அன்பழகன், முருகபாரதி, காசாவயல் கண்ணன், மலையப்பன், அரசு வழக்கறிஞர் மு.செந்தில்குமார், உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக, கவிஞர் மகா.சுந்தர் நன்றி கூறினார்.