பாகம் 2 – கழுதை கண்டெடுத்த பாதாள குழி
எங்களுடன் டூரில் வந்த வெங்கட் மாமாவைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டும். அவரும் ஜானகி மாமியும் போடும் சண்டைகள் வெளிப்படையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆனால், அதனுள் ஒரு அன்னியோன்யம் இழையோடுவதையும் கண்கூடாக உணர முடியும்.
மாமா ஒரு பிரைவேட் கம்பெனியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன் ரிட்டயர் ஆகி இருந்தார். மாமி அரசாங்க உத்யோகத்தில் பச்சைக் கையெழுத்து போடும் பதவியிலிருந்து சில மாதங்களுக்கு முன்தான் ஓய்வு பெற்றிருந்தார். இந்த ட்ரிப் அவருக்கு, ரிடையர்மெண்ட் கிஃப்ட் ஆக மாமா ஏற்பாடு செய்ததுதான்.
ஜானகி மாமியின் பொதுப்படையான அபிப்பிராயம், வெங்கட் மாமாவிற்கு சமர்த்து போதாது. அதற்கேற்ப மாமாவும் பல குட்டி, குட்டி சொதப்பல்களைச் செய்து மாமியிடம் திட்டு வாங்கிய வண்ணம் இருப்பார். மாமாவுக்கு எப்பொழுதாவது கோபம் வந்தால், சின்னதாகச் சொல்லி, பெரிதாக வாங்கிக் கட்டிக் கொள்வார்.
என் மனைவி அவருக்கு ஆதரவு கரம் கொடுத்து, “நம்ம ஜானு மாமிதானே, சொன்னா சொல்லிட்டு போகட்டுமே, விடுங்களேன்” என்றால் அதையும் சமர்த்தாக கேட்டுக் கொள்வார். இது போன்ற நபர்கள்தான் நம்முடைய குரூப் டூரை சுவாரஸ்யம் ஆக்குபவர்கள்.
கிசா பிரமிடு வளாகத்தில் ஒலியும் ஒளியும் :

எங்கள் பேருந்து கிசா பீடபூமியை (GIZA PLATEAU) நெருங்க, தூரத்திலேயே பிரமிட் முனையைப் பார்த்த நபர்கள் “நான்தான் முதலில் பார்த்தேன்!” என ஆளாளுக்கு உரிமை கொண்டாட, அப்போதே உற்சாகம் தொற்றிக்கொண்டது.
அந்த பிரம்மாண்டமான வளாகத்தை பஸ் அடைவதற்குள், மெல்லிய இருள் சூழ்ந்து கொண்டது. லைட் & சவுண்டு ஷோ..விற்காக பிரமிட் அருகில் இல்லாமல், தூரத்தில் இருந்து பார்க்கும் படியாகதான் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அனைவரும் அமர்ந்தோம்.
காலையில் அடித்த வெயிலை நம்பி ஏமாந்து, ஸ்வெட்டர், ஜாக்கெட் எதுவும் கொண்டு வராமல் வந்து விட்டோம். இரவு குளிர் ஆரம்பித்து விட்டது. மேலும் பாலைவனக் காற்றின் காரணமாக, குளிரை அதிகமாக உணர்ந்தோம். அதனால் தட்பவெட்ப நிலையைப் பார்த்து அதற்கு தேவையான உடைகளை அணிவது அவசியம்.
சுற்றி இருந்த விளக்குகளும் அணைந்துவிட இருளில் சற்று நேரம் பேரமைதி நிலவியது. அதை அவ்வப்போது அசைத்து பார்க்கும்வண்ணம், இருளைக் கண்டு அழும் குழந்தைகளின் ஒலி!
திடீரென லேசர் கதிர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்ச, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பிரமிடுகளும் பிரமிடுகள் உயிர் பெற்றன! ஆஹா!! அதன் அழகை என்னவென்று சொல்ல? அதைத் தொடர்ந்து மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட ஸ்பிங்ஸ் மீது ஒளிக்கற்றைகள் பாய்ந்தன.
பண்டைய எகிப்திய இசையுடன், வர்ணனையைக் கேட்க டிக்கெட்டுடன் கொடுத்த ஹெட் ஃபோன் போட்டுக் கொண்டோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து மொழிகளில், தேவையானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிரமிடுகளின் காலப்பயணம் பற்றிச் சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த கதை;
பேரோக்கள் (PHARAOHs) எனப்படும் எகிப்திய மன்னர்களின் வரலாற்றை சொல்கிறது இந்த வர்ணனை. இந்த பூமியில் இவ்வளவு பெரிய பிரமிட்களை எப்படி கட்டினார்கள்? என்னும் விளங்காத மர்மத்தை மேலும் சுவாரஸ்யமாக்கிய கதை! இந்த பிரமிடுகளைக் கட்டிய பழங்கால எகிப்திய மன்னர்கள், காஃபு, காப்ரே, மென்கௌர் ஆகியோரின் வரலாறு, அத்துடன் இந்த கிரேட் பிரமிடுகளுக்கு காவல் தெய்வமாக இருக்கும் பிரம்மாண்டமான ஸ்பிரிங்ஸ் கதையையும் கூறுகிறார்கள்.அவற்றை நாம் பின்னர் காண்போம்.
இரவு 8:30 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த ஷோ கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடிக்கிறது.
ஷோ முடித்துவிட்டு பேருந்தில் வரும்போது, ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மீ என்கிற 1977ஆம் ஆண்டு படத்தில், ஜேம்ஸ்பாண்ட் இந்த ஷோவை பார்க்க வருவார், அப்போது ஒரு கொலை நடக்கும் என்று வெங்கட் மாமா திரைபடக் கதையை சொன்னார். அதில் வரும் ஹீரோயின் பெயர் தெரியுமோ? பார்பரா பாக் (Barbara Bach) என்று சொல்ல, ஜானு மாமி.
“என் சித்தி பேரைக் கேட்டால் தெரியாது. வேண்டாததெல்லாம் நியாபகம் வைச்சுக்குங்கோ” என்று விலாவில் இடிக்க, எல்லோரும் சிரித்தோம்.
இரவு, வடஇந்திய ரெஸ்டாரண்ட்க்கு விஜயம் செய்தோம், குலாப்ஜாமுன், பாதாம்கீர் பிரமாதம்!
“நாளை காலை 7:00 மணிக்கு தயாராக விடுதி லாபிக்கு வந்து விடுங்கள். எகிப்தின் புராதனமான நகரமான அலெக்ஸாண்ரியாவிற்குப் போகப் போகிறோம்” என்றார் கைடு அமுன்.
நாள் – 2:
சரித்திரத்தைத் தேடி..
இரண்டாம் நாள் காலை 8.00 மணிக்கு கிளம்பி, குளிர்சாதன பேருந்தில் குழுவாக அலெக்ஸாண்ரியா நகரை நோக்கிப் பயணம் செய்தோம்.
எங்களுக்கு அருகில் இணை இருக்கையில் வெங்கட் மாமா, ஜானகி மாமி அமர பின்புறம் இருக்கைகளில் டாக்டர். ராமநாதன் அவர் மனைவி லட்சுமி அமர்ந்திருந்தார்கள். டாக்டர். ராமநாதன் இருக்கும் இடத்தையே கலகலப்பாக மாற்றக்கூடியவர். மேலும் எங்கள் குழுவில் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் ஆன இளம் ஜோடியான சாய் மற்றும் சந்தியா இருந்தார்கள். அலுவலகப் பணி சுமையிலிருந்து விலகி, இப்பொழுதுதான் முதல் ஹனிமூனை கொண்டாடுகிறார்கள். அதனால் எல்லோருக்கும் அவர்கள் மீது தனி ப்ரியம் இருந்தது.
கைடு அமுன், பயணிக்கும் பொழுது, பேருந்திலிருந்த மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார்.
“டூரின் முதல்நாளாகிய நேற்று காலையிலும், மாலையிலும் தொடர்ந்து பல இடங்களுக்குச் சென்றதால், உங்களுடன் சரிவர பேச இயலவில்லை. இப்போது நேரம் கிடைத்ததில் மகிழ்ச்சி!
ஒரு நாகரிக தொட்டிலிலிருந்து வந்த உங்களை வரவேற்பதில் நைல்நதி நாகரீகம் பெருமைப்படுகிறது. உலகின் பல நாடுகள் பனிகாடுகளாகவும், கட்டாந்தரைகளாகும் இருந்தபொழுது, நாம் வேளாண்மை செய்தோம், உணவை சமைத்து உண்டோம், உலோகங்களை உபயோகித்தோம், நகரங்களை மேலாண்மை செய்தோம்.
எகிப்தின் கொடையான நைல்நதி, பாலைவனப் பகுதியான இந்த நாட்டில் நுழைந்து, ‘கிமெட்’ என்னும் கருப்புநிற வண்டல் மண்ணைக் கொட்டி வளப்படுத்தி, பிறகு மத்தியத்தரைக் கடலில் சென்று கலக்கிறது.
குறைந்த பட்சம் கி.மு.ஆறாயிரத்திற்கு முந்திய காலமே இந்த நாட்டில் விவசாயம் துவங்கிவிட்டது. கோதுமை, பார்லி பயிரிட்டார்கள். கோதுமைதான் எத்தனை பழமையான தானியம்? நீங்கள் அதிர்ஷ்டகாரர்கள் உங்கள் நாட்டில், பெரும்பான்மையான இடம் மண்வளம் நிறைந்த பூமி. இங்கு நைல்நதி இருகரைகளையும் தவிர மற்றதெல்லாம் பாலைவனம்.
பல சாம்ராஜ்யங்கள் மாறிக் கொண்டு வந்தாலும் கிமு 3150 இல் மன்னர் நார்மர் வடக்கு மற்றும் தெற்கு எகிப்தை ஒன்றாக இணைத்தார்.
மாமன்னர் அலெக்சாண்டர் கி.மு.332 ஆம் ஆண்டு இந்தப் பகுதியை வெற்றி கொண்டார். அவர் நிறுவிய அலெக்ஸாண்ரியாவிற்குத்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோம். எகிப்தை ஆண்ட கிரேக்க சாம்ராஜ்யத்தின் கடைசி பேரரசி கிளியோபாட்ரா (CLEOPATRA VII) – அவருக்குப் பின் ரோமானியர்களின் ஆட்சி (30 BCE) துவங்கியது.
எகிப்தியர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நாம் பண்டைக்காலத்திலேயே கணிதம், வானசாஸ்திரம், மருத்துவம் அறிந்திருந்தோம். பலரால் ஆட்சி செய்யப்பட்டோம். மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தோம். இன்றும், பண்டைய நாகரிகம், கலாச்சாரம் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறோம்; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்”
கைடு அமுன் உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனார்..
“எனக்கு ஸ்கூல்ல படிச்ச ஹிஸ்டரி எல்லாம் ஞாபகத்துக்கு வர்றது” என்றார் வெங்கட் மாமா என்னைப் பார்த்து.
ஜானு மாமி குறுக்கிட்டு, “ஏன்ணா, நீங்க எஸ்.எஸ்.எல்.சி..ல வாங்கின, ஹிஸ்டரி, ஜாக்ரஃபி மார்க்கை சார் கிட்ட சொல்லவா?” என்று பயமுறுத்த, நாங்கள் எல்லோரும் சிரித்தோம்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து, அலெக்ஸாண்ரியாவுக்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேர பயண நிறைவில், எங்கள் வாகனம் கிளியோபாட்ரா பிறந்த அலெக்ஸாண்ரியா நகரை அடைந்தது.
அலெக்ஸாண்ரியா என்னும் அதிசய நகரம்
ஆப்பிரிக்காவின் வடகிழக்கு முனையில், கி.மு.பதிமூன்றாம் நூற்றாண்டில் ஒரு மீனவ கிராமமாக இருந்த இவ்விடம், மாவீரன் அலெக்சாண்டர் படையெடுப்பிற்கு பிறகு, ஒரு பெரிய வணிக நகரமாக உருமாறியது. அலெக்சாண்டர் மற்ற நாடுகளை நோக்கி நகர்ந்த பொழுது, இந்த பகுதியில் ஒரு வைஸ்ராயை நியமித்து, அவர் மூலம் கிரேக்க ஆட்சியை தொடர்ந்தார்.
மேற்கில் ஐரோப்பா, தெற்கில் அரேபியா, கிழக்கில் இந்தியா, என மூன்று பெரிய வணிக மையங்களுக்கு நடுவில் இந்த நகரம் இருந்ததால் பெரும் வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. சில காலங்களிலேயே ரோம் நகருக்கு அடுத்து பெரிய நகரமாக மாறியது. அலெக்ஸாண்ரியா நமது பாடலிபுத்திரம், காஞ்சிபுரம் போல் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கிய நகரம் ஆகும். அலெக்ஸாண்ரியாவின் நூலகம் மற்றும் கலங்கரை விளக்கம் உலகப் பிரசித்திப் பெற்றதாக இருந்தது.
கழுதையும், கல்லறையும்
அலெக்ஸாண்ரியாவை அடைந்ததும், நாங்கள் முதலில் பார்த்த இடம் நெக்ரோபொலிஸ் பகுதியில் உள்ள CATA COMBS என்னும் பாதாள குழி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த இடம் ரோமானிய கட்டுமானத்தை சார்ந்தது. தரைக்கு கீழ் மூன்று தளங்கள் கொண்ட கல்லறை கூடம். இந்த நிலவறை 1900ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது, என்றார் கைடு.
ஒரு கழுதை மேயும்பொழுது, குழிக்குள் விழுந்து விட, தேடிப் பார்க்கும்பொழுது இரண்டாம் நூற்றாண்டின் கல்லறை பெட்டகங்கள் வைக்கும் பல அடுக்குகள் கொண்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வட்ட வடிவ நெருக்கமான படிகளில் கீழே இறங்கி சென்றோம். கிரேக்க, ரோமானிய, எகிப்திய – என்று மூன்று கலாச்சார படிமங்களின் ஒருங்கிணைப்பை இங்கே பார்க்க முடிந்தது. கீழே, இறுதிச்சடங்கு செய்யும் மண்டபமும் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. சவபெட்டிகளை வைப்பதற்கு ஏதுவாக, அடுக்கடுக்கான மாடங்கள் உள்ளன.
ஒருவித அமானுஷ்யம் உள்ளே நிலவுவது போல பிரமை இருந்தது.
இது ஒரு குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கல்லறை கூடமாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஊருக்குப் பொதுவான கல்லறையாக இருந்தால் பிற்காலத்தில் விரிவுபடுத்தி பெரிதாக கட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்றார் அமுன்.
வெளியே வந்தோம். “அடுத்தது, பாம்பே தூணைப் பார்க்கலாம் கிளம்புங்கள்” என்றார் கைடு.
பாம்பே தூண்
கேயஸ் பாம்பியஸ் என்கிற ரோம் நாட்டு தளபதி பெயரில் கட்டப்பட்டதால் இந்த தூணுக்கு POMPEY’s Pillar என்று பெயர். ரோம் மன்னரான டையோக்லெஷியன் (Diocletion) போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கட்டிய தூண் இது (298-302 CE).
இதன் அடிப்பாகத்தையும் சேர்த்து சுமார் 88அடி உயரம் கொண்டது. எகிப்தின் அஸ்வான் பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட சிவப்பு கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. செராபியும் என்கிற கிரேக்க கடவுளின் கோயில் இடிபாடுகளுக்கு அருகே இந்த பகுதி உள்ளது. ரோமாபுரி நாகரிகத்தின் எச்சமாக பல நூற்றாண்டுகள் இந்த தூண் காலத்தை கடந்து நின்று கொண்டிருக்கிறது. அருகில் இரண்டு ஸ்பிங்ஸ் சிலைகள் காவலாக உள்ளன.
அங்கிருந்து காயிட்பே (QAITBAY CITADEL) கோட்டை நோக்கிச் சென்றோம்.
“ஓ அங்குதானே அலெக்ஸாண்ரியாவின் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது!” என்றார் வெங்கு மாமா ஆர்வத்துடன்!
