“Stories From The Roots” ( வேர்களிலிருந்து தொடங்கும் கதைகள்) என்ற முழக்கத்துடன் பிட்ஸ் பிலானியில் இந்த வருட இலக்கியத் திருவிழா – பிட்ஸ் பிலானியில் படித்து வெளிவந்து பல துறைகளில் பரிமளித்துக் கொண்டு, அதனிடையே எழுத்துலகத்திலும் தடம் பதித்துள்ள முன்னாள் மாணவர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி – விமர்சையாக நடந்தேறியது.
பிட்ஸ் பிலானியில் மாணவர்களும் பேராசிரியர்களும் படித்துப் பயன்பெறுவதற்காக மிகவும் பிரம்மாண்டமான நூதன நூல் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அதைக் கண்டாலே எழுச்சி பொங்கும். மாணவர்களுக்கும் நூல்களைப் படித்துக் களிப்பவர்களுக்கும் கொண்டாட்ட மனநிலை ஓங்கும். டாக்டர் ரஞ்சன் சின்ஹா தாக்கூர் அவர்களால் தலைமை ஏற்று நடத்தப்படும் இந்த நூல் நிலையமும் ஹியூமேனிடீஸ் டிபார்ட்மென்ட்டும் இணைந்து நடத்திய இந்த இலக்கியத் திருவிழா நாட்டிலுள்ள பிற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு மேன்மையான முன்மாதிரியாக விளங்கியது என்றால் அது சற்றும் மிகை இல்லாத உண்மை.
2024 பிப்ரவரியில் பிட்ஸ் பிலானியில் முதன்முதலாக இத்தகைய இலக்கியத் திருவிழா நடத்தப்பட்டபோது, எழுத்தாளர்களாக தடம் பதித்த பிட்ஸ் பிலானியின் முன்னாள் மாணவர்கள் 12 நபர்களை வரவழைத்து கௌரவித்தனர். பிட்ஸ் பிலானியின் தற்போதைய மாணவர்கள் அவர்களை நேர்காணல் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஒரு எழுத்தாளராகவும் முன்னாள் மாணவராகவும் எனக்கும் அழைப்பு வந்திருந்தது. என் மனைவி கிரிஜாவு டன் பிட்ஸ் பிலானி கேம்பசிற்கு மீண்டும் சென்று வருவதற்கு இனிய வாய்ப்பாக இது அமைந்தது. பெருமையாகவும் இருந்தது.
இம்முறை 2026 ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது. பிலானி கேம்பஸில் திரும்பவும் கால் வைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் எனக்கு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.
என்னுடன் அழைக்கப்பட்ட பிற எழுத்தாளர்கள் (முன்னாள் பிட்ஸ் பிலானி மாணவர்கள் ) தாங்கள் பணி புரியும் துறைகளிலும் எழுத்தாளர்களாகவும் சிறந்த முத்திரை பதித்தவர்கள். இத்தகைய வெற்றியாளர்களிடையே நானும் இந்த இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டது எனது பெரும் பாக்கியமே .
விழாவிற்கு கல்லூரி பேராசிரியர்கள், இன்னாள் மாணவர்கள், பிலானியிலுள்ள பாலிகா வித்யா பீட் பள்ளி மாணவிகள் என்று பலவிதமான பிரிவினர்களும் ஆர்வத்துடன் வந்து பங்கு கொண்டார்கள். பிலானி, ஹைதராபாத், கோவா, துபாய், மும்பை என்ற அனைத்து பிட்ஸ் பிலானி கேம்பஸ்களுக்கும் மொத்த பொறுப்பேற்று வழிநடத்தும் வைஸ் சான்ஸிலர் பேராசிரியர் வி. ராமகோபால் ராவ் அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்டதும், விழாவில் பேசியதும், விழா தொடக்கத்திலிருந்து நிறைவு வரை அமர்ந்திருந்து வந்த எழுத்தாளர்களை நினைவுப் பரிசுகள் அளித்து கௌரவப்படுத்தியதும் என்றென்றும் என் நினைவில் பசுமையாக இருக்கக்கூடியவை.
நிகழ்வில் இணைந்த பிட்ஸ் பிலானி எழுத்தாளர்கள் (முன்னாள் மாணவர்கள்) வரிசையைப் பாருங்கள் : திரு ஹரீஷ் பட் (1985). “Doing The Right Thing” என்ற தன் நூலை வெளியிட்ட இவர் டாட்டா குழுமத்தின் பெருமைமிகு டைரக்டர்களில் ஒருவர். டாட்டா குழுமத்தின் முன்னாள் பிராண்ட் கஸ்டோடியன் என்ற சிறப்புப் பெற்றவர். டாக்டர் ரஞ்சன் குமார் மொஹாபாத்ரா (1984). “Plain Speak Management” என்ற நூலை வெளியிட்ட இவர் இந்தியன் ஆயில் கம்பெனியின் முன்னாள் மனித வள மேம்பாட்டு டைரக்டர். திருமதி நேஹா கோயல்(1991). “Defy Your Gravity” என்ற நூலை வெளியிட்ட இவர் ஒரு லைஃப் கோச் மற்றும் என் எல் பி எம்பவர்மன்ட் எக்ஸ்பெர்ட். திருமதி சௌம்யா பிரகாஷ் (2003).”Her Bold Startup” என்ற பெண் தொழில் தொடங்குவோருக்கான முக்கியமான நூலை வெளியிட்ட இவர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வெற்றியாளராக பரிமளிக்கிறார். மல்டிப்ளையர் ஏ ஐ என்ற நிறுவனம் இவர் தொடங்கியதே.
இப்படிப்பட்ட எழுத்தாள ரத்தினங்களுக்கிடையே நானும் ஒளிர்ந்து மகிழ்ந்தேன். என்னுடைய “அம்மா கை உணவு” மற்றும் “குதூகலம் தரும் குழந்தைகள் பாடல்கள்” என்ற குவிகம் பதிப்பகத்தின் இரு கவிதை நூல்களும் இந்த அரங்கில் வெளியிடப்பட்டன.
மற்றுமோர் விசேஷம். இந்த விழாவின்போது ஒவ்வொரு எழுத்தாளரையும் பிட்ஸ் பிலானி ஹுமானிட்டீஸ் டிபார்ட்மெண்டின் பேராசிரியர்கள் அழகாக நேர்காணல் செய்தார்கள். இந்த நேர்காணல்கள் மிகவும் சுவையாக அமைந்தன. பிட்ஸ் பிலானியில் மாணவ மாணவியராக வாழ்ந்த காலம் எப்படி இந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தெடுத்தது என்பதை அறிய அனைவரும் பேராவல் காட்டினர். இந்த உரையாடல்கள் அரங்கத்தினரின் கரவொலியை வரவழைத்தது.
பிட்ஸ் பிலானி நூலகத்தில் முதன்முதலாக எந்த இந்தியப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத ஒன்றாய், தங்கள் முன்னாள் மாணவர்கள் – இன்றைய எழுத்தாளர்களுக்காக நடு நாயகமாக ஒரு தனி இடத்தை உருவாக்கி, அங்கே அவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும் எங்களுக்கு?
புத்தகங்களையும், எழுத்தையும், முன்னாள் மாணவர்களையும் ஒருசேரக் கொண்டாடும் பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தை எத்தனை கொண்டாடினாலும் தகும்.


