
சுப்ரமண்ய ராஜுவின் இயற்பெயர் விஸ்வநாதன் – 39 வயதிலேயே மறைந்துவிட்டாலும், குறைவாகவே எழுதியிருந்தாலும் எல்லா எழுத்தாளர்களாலும் கொண்டாடப் பட்டவர். ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர். காலத்தைக் கடந்தும் வாசிக்கக்கூடிய கதைகளை எழுதியவர்.
‘இன்று நிஜம்’ சிறுகதைத் தொகுதி வெளியானபோது, ‘முதல் பிரதி மூர்த்திக்கு’ என்று எழுதிக்கொடுகிறார் தேவக்கோட்டை வா.மூர்த்திக்கு. ‘மோனை நயம் கருதியா’ என்று கேட்கிறார் மூர்த்தி. ‘இல்லை, மூர்த்தியின் நயம் கருதி’ என்று சொல்கிறார் ராஜு – அவர்தான் சுப்ரமண்ய ராஜு!
காலங்கடந்து நிற்பவை ராஜுவின் கதைகள் மட்டுமல்ல, வீடுகளில் மாமியார் மருமகள் ஒவ்வாமையும் கூட அப்படித்தான்! அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையில் இடிபடும் கணவன், எப்போதும் ‘நியாயங்களை மீறிய தர்மத்தைக்’ கடைபிடிக்க வேண்டியிருக்கும். இதனைத் தன் இயல்பான நடையில், நகைச்சுவையாகச் சொல்கிறார் “நடுவிலே நான்” சிறுகதையில்!
நடுவிலே நான்’ (சிறுகதை) – சுப்ரமண்ய ராஜு
(சுப்ரமண்ய ராஜு கதைகள் – முழுத் தொகுப்பு – கிழக்குப் பதிப்பகம்)
கணேசன் மனைவி சாந்திக்கு இடுப்புவலி – பிரசவ ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பதற்கே இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இரவு அவளுடன் தங்குவதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை. இரவில் தங்குவதற்கும், மறுநாளிலிருந்து சாப்பாடு கொண்டு தருவதற்கும் ஒரு ‘பெண்’ வேண்டும். சாந்தியின் அம்மாவால் முடியாது, அவளே நிரந்தர நோயாளி.
இருபது பைசா சிகரெட்டைக் கூடப் பாதியிலே வேஸ்ட் செய்ய முடியாத நிதி நெருக்கடி; காரணம், வீட்டில் கோபித்துக்கொண்டு, மனைவியுடன் வைத்த தனிக்குடித்தனம். ஒரு வருடம் ஆகிறது.
தன் அம்மாவிடம்தான் உதவி கேட்க வேண்டும். “அம்மாதான் சரி. அம்மாவிடம் அவமானங்கள் இல்லை. சிரித்துக்கொண்டே முகம் சுளிக்காமல் வருவாள்.” அம்மா என்னும் பிம்பம் நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது!
அம்மாவுக்கும், சாந்திக்கும் ஒத்துப் போகவில்லை. எப்போதும் சண்டை. அப்பா இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். அதனால் நூற்றி ஐம்பது ரூபாயில் தனிக் குடித்தனம். (70-80 களில் வீட்டு வாடகை, சிகரெட் விலை எல்லாம் வியக்க வைக்கின்றன).
“முப்பது வருட வாழ்க்கையில் முதலாவதாகக் ‘கத்தரிக்காய் என்ன விலை’ என்று தெரிந்து கொள்கிறான். ஹோட்டல், சினிமா எல்லாம் மறந்தாகிவிட்டது. சிகரெட் கூடப் பாதியாக குறைத்தாகி விட்டது” – தனிக்குடித்தனத்தில் நிதி நிலையை இப்படி விவரிக்கிறார்!
தனிக்குடித்தனம் வந்த பிறகும் தினமும் சாந்தியுடன் சண்டை. “சாந்திக்குச் சண்டை போட, அம்மாதான் வேண்டும் என்பதில்லை. யாராவது வேண்டும்”. “இல்லாமையும் இயலாமையும் சாந்திக்கு இருபது வருட அனுபவத்தைக் காட்டி விட்டது.” என்கிறார் ராஜு.
விபரம் கேட்டவுடன்,’தனியாவா அவளை விட்டுட்டு வந்தே?’ என்கிறாள் அம்மா. உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்பி விடுகிறாள். “இதுக்கு மட்டும் அம்மா வேண்டியிருக்கோ?” என்கிற பார்வை பார்க்கிறார் அப்பா! வரும் வழி முழுவதும் ஆட்டோவில் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே வருகிறாள் அம்மா. மத்தியதர குடும்பங்களின் அப்பா,அம்மா க்களை மிக அழகாகத் தன் எழுத்தில் கொண்டு வருகிறார் ராஜு. குழந்தை பிறந்த பிறகு (ஆண் குழந்தை) அம்மாவின் அரவணைப்பை – பத்தியச் சாப்பாடு, தாய் சேய் இரண்டையும் கரிசனத்தோடு கவனிப்பது – சிறப்பாகச் சொல்கிறார்.
“ஆட்டோ வேண்டாண்டா, பஸ்லேயே போய்க்கறேன்” என்பதிலும், “ஆத்துல அரிசி மட்டும்தான் பாக்கியிருக்கு. உப்பு, புளி எல்லாம் துடைச்சு வெச்ச மாதிரி ஆயிடுத்து” என்றும் அம்மா சொல்வதிலிருந்து அங்கும் நிதி நிலைமை சரியில்லை என்பதைச் சொல்கிறார்.
சாந்தியின் உடல் வலி, தேவையான உதவி எல்லாவற்றையும் யோசித்து, பிரசவத்திற்குப் பிறகு, அம்மாவின் வீட்டிற்கே திரும்பவும் போய்விடுகின்றான் கணேசன். இதில் அவனுடைய சுயநலமும் இருக்கிறது; “நிம்மதியாகத் தன் அறை, புத்தக வாசிப்பு, ரேஷன், காய்கறிக் கடைக்குப் போக வேண்டாம் என்னும் நிலை! அம்மா அப்பாவுடன் இருப்பதே சுகம்” என்று நினைக்கிறான்.
ஆனால் அங்கு நடப்பதோ வேறு – ஒரு மாதத்திற்குள்ளேயே மீண்டும் மாமியார் மருமகள் சண்டை தொடங்கி விடுகிறது. “பகலெல்லாம் நடந்த சண்டைக்கு, மாலையில் அம்மாவும், சாந்தியும் சாட்சிக் கூண்டில் ஏறி, இவன் முன்னால் கட்சி ஆடினார்கள்” – என்ன அழகான எழுத்து!
முடிவு, மீண்டும் தனிக்குடித்தனம். இம்முறை அம்மாவே தன் இயலாமையைச் சொல்கிறாள். “கணேசா, அம்மாவே இப்படிச் சொல்றேன்னு பார்க்காதே. உனக்கும் கஷ்டம், எனக்கும் முடியல…”. வயது, மனக் கஷ்டம் எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்; அம்மாவே சொல்வதால், அதற்கு வேறொரு பரிமாணம் கிடைக்கிறது.
இப்போது கதையின் போக்கில், ஓ ஹென்றி ஸ்டைலில் ஒரு முடிவைத் தருகிறார் ராஜு!
அம்மா சொல்லி முடித்தபின், குழந்தை, திடீரென்று தலையைத் திருப்பி கணேசனைப் பார்த்தது. சிரித்தது. ‘அம்மாவும், சாந்தியும் மறுபடியும் ஒன்றாகப் போக வேண்டுமென்றால், மறுபடியும் சாந்தி ……’
“வழி கண்டுபிடித்து விட்டேன்” என்கிறான் கணேசன், குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியபடி!
மனைவி, அம்மா, கணவன் ஆகியோரின் உளவியல் சார்ந்த வாழ்க்கையின் யதார்த்தங்களும், அதற்காக அவர்கள் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வதும், முடிவில் தம்முடைய ஆதார குணங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் அப்படியே வாழ்க்கையைத் தொடர்வதும் நடுத்தர வர்க்கத்தின் முகம் எனக் காட்டுவதில் சுப்ரமண்ய ராஜு வென்றிருக்கிறார் என்றே தோன்றுகின்றது. அவரது சின்னச் சின்ன உரையாடல்களில் தெறிக்கும் உணர்வுகளும், யதார்த்தங்களும் வாசகனை வியக்க வைக்கின்றன. நல்ல உயிரோட்டமான எழுத்து !
