நிஜ மூளைக்கு எத்தனையோ சக்தி


கையில் காப்பியுடன் உட்கார்ந்திருந்தேன். (தொடரின் தலைப்பு கொஞ்சம் தேநீர் என்றாலும் என் விருப்பம் காப்பி தான்.) காப்பியின் கசப்புச் சுவை அடி நாக்கில் இறங்கி நரம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவியது. காப்பியின் குணமே அதுதான். சமீபத்தில் ரோட்டரி கருத்தரங்கத்திற்காக கூர்க் சென்றிருந்தேன். அப்போது ஒரு காப்பித் தோட்டத்தைப் பார்வையிட அழைத்துச் சென்றார்கள்.
காபிச் செடி, மரங்களுக்கிடையே அழைத்துச் சென்றபடி காபியின் வரலாற்றையும் அதன் விளைச்சல் தரம் இவற்றைப் பற்றியும் சுவையாக விளக்கினான் ஏழு மொழிகள் சரளமாக பேசும் அந்தப் பையன்.
இந்தியாவில் காபி என்றாலே நினைவுக்கு வருவது “இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்று அழைக்கப்படும் கூர்க் (Kodagu).இந்தப் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. அடர்ந்த காடுகள், அதிக மழை, குளிர்ந்த வானிலை இவை அனைத்தும் காபிச் செடிகள் வளமாக வளர சிறந்த சூழலை வழங்குகின்றன. காபி இந்தியாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது. 17ஆம் நூற்றாண்டில் பாபா புத்தான் என்ற சுஃபி யேமன் நாட்டில் இருந்து ஏழு காபி விதைகளை தாடியில் மறைத்துக் கொண்டு வந்து கர்நாடக மலைப்பகுதியில் நட்டதாகக் கூறப்படுகிறது. இதுவே இந்திய காபி வளர்ச்சியின் தொடக்கம்.
காலப்போக்கில் காபி விவசாயம் விரிந்து கூர்க், சிக்கமங்களூர் போன்ற பகுதிகளில் பெரிதும் பரவியது. மர நிழலில் காபிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. கிராம்பு,மிளகு, ஏலக்காய் போன்ற பல மசாலாப் பயிர்களுடன் இணைத்து காபிச் செடிகளைப் பயிரிடுகின்றனர். இதனால் இங்கு விளையும் காபி இயற்கை மணமும் தனித்துவ சுவையும் பெறுகிறது.
கூர்க் பகுதியில் முக்கியமாக இரண்டு வகைக் காபி பயிரிடப்படுகிறது:அரபிக்கா (Arabica) மணம் மற்றும் சுவை நுட்பமானது..விலை உயர்ந்தது.ரோபஸ்டா (Robusta) கஃபீன் அளவு அதிகம்.கூர்க் பகுதியில் அதிகம் காணப்படுகிறது.
ஒரு காபி கப் நம்மிடம் வருவதற்கு பல கட்டங்கள் கடக்க வேண்டும். காபிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.பிறகு சிவப்பு நிறம் கொண்ட காபிக் கனிகள் பறிக்கப்படுகின்றன.அதற்குப் பின் அவற்றை உலர வைத்து நீரில் கழுவி,உலர்த்தி,வறுத்துப் பொடியாக்கிக் காபிப் பொடி தயாரிக்கப்படுகிறது. இதில் ஏராளமான மனித உழைப்பு உள்ளது என்பது முக்கியமான செய்தி.
இந்த பயணத்தில் சிலருடன் பேசும்போது AI யின் தாக்கம் பற்றி நிறைய பேச்சு எழுந்தது. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது அந்த தொழில்நுட்பத்தின் பொதுப்பெயர். பல்வேறு துறைகளில் பல அப்ளிகேஷன்ஸ் பெயரில் அந்த தொழில்நுட்பம் வேகமாக நுழைந்து வருகிறது. அதன் வேகமும் அதி நவீன மூளையும் தான் சிறப்பு. நாம் பள்ளியில் ‘எட்டு ஆட்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால்……’ என்றெல்லாம் படிப்போமே அதையெல்லாம் உடைத்து, ஒரு AI அப்ளிகேஷன், ‘குறைந்தது 10 பேர் பல நாட்கள் செய்யும் வேலையை ஒற்றை ஆளாய் ஒரு நாளில் செய்கிறது’. இது எளிமையான புரிதல். உள்ளே போனால் நிறைய இருக்கிறது.
ஆனால் இது காலத்தின் கட்டாயம். ஃபேஸ்புக் வாட்ஸ்அப் வந்த காலத்தில், இன்று போல் அதை நாம் உபயோகிப்போம் என்று எண்ணிப் பார்த்து இருப்போமா? அப்படி, Chat GPT,Gemini யில் ஆரம்பித்து இன்னும் என்னவெல்லாமோ பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொத்துக்கொத்தான பேர் வேலை இழப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இன்னொரு பக்கம் வேறு விதமான வாய்ப்புகளும் தோன்றி வருகின்றன. இனி கம்ப்யூட்டரையும் வெளிநாட்டு வேலையையும் மட்டுமே ஆதர்சமாக நினைக்கும் நிலை மாறிவிடும்.
விவசாயம், இயந்திரம், தனித்திறமை சார்ந்த தொழில்கள் மேலோங்கும். சுய தொழில் அதிகமாகும். அதுவும் அங்கங்கே சிறு தொழில்கள் அதிகம் ஆகும். இப்போதே சோஷியல் மீடியா மூலமாக புடவையும் நகைகளும் பரிசு பொருட்களும் விற்பவர்கள் பலரைப் பார்க்கலாம். அதுவும் நீங்கள் பொருளை மட்டும் தேர்ந்தெடுத்து தயாரிக்க ஆரம்பித்து விட்டால் கல்லைக் கூட விற்றுத் தர இருக்கவே இருக்கிறது அமேசான்.
இப்படி சுய தொழில் ஆரம்பித்து வெற்றி கண்ட முன்னோடிகள் பலர். கோயம்புத்தூர் ஜிடி நாயுடுவும், ஷாம்புவின் தந்தை கடலூர் சின்னிகிருஷ்ணனும் பெரிய முன்னோடிகள். இவர்களின் சுயசரிதைகளைப் படிக்க வேண்டும்.
ஆராய்ச்சியாளர் சின்னி கிருஷ்ணன் அவர்களுக்கு ஆறு குழந்தைகள். நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள். டாக்டர் சி. கே. ராஜ்குமார் (Velvette Shampoo) டாக்டர் சி. கே. அசோக்குமார், சி. கே. ரங்கநாதன்(Cavin Care), சி கே. குமாரவேல் ( Naturals) என்ற நான்கு மகன்களும், டாக்டர் விஜயலட்சுமி, டாக்டர் ஆண்டாள் என்று இரண்டு மகள்களும். இளம் வயதில் சின்னி கிருஷ்ணன் மறைந்து விட அவர் மனைவி ஹேமா சின்னி கிருஷ்ணன் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கிறார். அவர் காலமானபோது டாக்டர் ராஜ்குமாருக்கு 26 வயது டாக்டர் அசோக் குமாருக்கு 23 வயது. “ஏழை மக்களுக்கு ₹1 விலையில் ஷாம்பூவை சேஷேவில் தர வேண்டும்”. இதுதான் தந்தையின் கனவு. அவர் இறந்த அன்று உடல் வீட்டில் இருக்க அவரது ஆராய்ச்சிச் சாலையில் படுத்திருந்த டாக்டர் சி கே ராஜ்குமாருக்கு அரூபமாய் தன் ஆராய்ச்சியின் முழு தகவல்கள் எழுதப்பட்ட பைலை. தந்தை அடையாளம் காட்டுகிறார். பிறகு சில நாட்களில் அதற்கு வடிவம் கொடுக்க ராஜ்குமாரும் அசோக்குமாரும் அடுத்தடுத்த காரியங்களில் இறங்கினர்.
ஷாம்பு அடைத்து வைக்க சாஷே தயாரிக்கும் இயந்திரம் அப்போது இல்லை. இயந்திரத்தின் வரைபடத்தை சின்னி கிருஷ்ணன் அந்த ஃபைலில் வரைந்து வைத்திருக்கிறார். இயந்திரத்திற்கு வடிவம் கொடுக்க சகோதரர்கள் எங்கெல்லாமோ அலைகிறார்கள். யாராலும் அதைச் செய்ய முடியவில்லை. கடைசியில் சென்னையில் GP ரோடில் ஒரு நிறுவனம் வெறும் ₹1000 க்கு அந்த இயந்திரத்தை வடிவமைத்து கொடுத்திருக்கிறது. அதன் மூலம் ஒரு நாளைக்கு 10,000 ஷாம்பு பாக்கெட்டுகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 1980ல் ஒரு நாளில் 10,000 ஷாம்பூ சாஷேக்களைத் தயார் செய்யும் எந்திரத்தை வடிவமைத்ததும் அதன்மூலம் ஷாம்பூ சாஷேக்களைத் தயார் செய்தும் ஒரு மிகப்பெரிய சாதனை. ( முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள “இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய சாஷே புரட்சியின் தந்தை சின்னிகிருஷ்ணன்” என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.கிடைக்குமிடம்: கீதம் பப்ளிகேஷன்ஸ் 9381033303 )
இன்று இதுபோலக் கண்டுபிடிப்பாளர்கள் தான் தேவை. மூளையைக் கசக்கிப் பிழிந்து உலகின் தேவைகளுக்கு பதிலைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் பெருகப் பெருகத் தொழில் வளரும்.மனித வாழ்க்கை மேலும் மலரும்.
மனிதனின் நிஜ மூளைக்கு எத்தனையோ சக்தி இருக்க ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் வந்தால் என்ன பயம் ?
