கொலு – படி -1

Shop Dasavatharam Set-10 Inches-Navaratri Golu Dolls Online – Handmade Traditional Golu Dolls Collections

 

“ என்னடா பசங்களா காலங்காத்தால இங்க தாவாரத்தில ஒக்காண்டு என்ன பண்ணிண்டு இருக்கேள் “ என்று கேட்டுக்கொண்டே வந்து எட்டிப் பார்த்த எங்க பாட்டி, நானும் என் சகோதரன் கணேசனும் கைகளில் செங்கல் கட்டி, கரித்துண்டு  சகிதம் நிற்பதைப் பார்த்து

“இன்னும் நாள் இருக்கே இப்போதிலிருந்தே ஆரம்பிச்சாச்சா.. போங்கோ .காத்தால .. படிக்கற வேலய பாருங்கோ .. இதெல்லாம் அப்பறம் பணணிக்கலாம் ” என்றாள்

அப்போது நாங்கள் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். சென்னை தி. நகரில் நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு. ஒண்ணரை கிரவுண்டில் கட்டப்பட்ட பெரிய வீடு. பதிமூன்று அறைகள் ;முதல் மாடியில் ஓர் அறை. அதற்கு மேல் கட்டப்பட்ட வாட்டர் டாங். என்று இருந்ததால் “நவராத்திரி” பண்டிகையின் போது “கொலு” வைக்கவும் அலங்காரம் செய்யவும் ஒரு தனி அறையே ஒழித்து வைத்துவிடுவார்கள்.

மிகச் சிறு வயதிலிருந்தே நாங்கள் விளையாடும் பொம்மைகளை அந்த கொலுப் படிகளில் கொண்டு வைப்போம். எங்கள் தமக்கையும் மூத்த அண்ணனும்தான் நவராத்திரி கொலு வைப்பதில் அம்மாவுக்கு உதவியாளர்கள். அவர்கள் எங்கள் பொம்மைகளை கொலுப்படிகளில் வைக்க விடமாட்டார்கள்.

“நீங்க தினம் வெளையாடற பொம்மையெல்லாம் இதிலே வக்கக் கூடாது. புதுசா சிலது வாங்கித் தரேன்.  படிக்குப் பக்கத்துல வச்சுக்குங்க “ என்றாள் அம்மா.

 

அவள் கணக்குப்படி ஏழு படிக்கட்டுகளிலும் வைப்பதற்கு நிறைய சாமி பொம்மைகள், தசாவதார செட், சிவ பார்வதி கணபதி முருகன் செட் ராமர்,சீதை,லக்ஷ்மணன் அனுமார்  செட், கிருஷ்ணன் கோபி செட், முருகன், வள்ளி தேவயானை செட், மீனாட்சி கல்யாண செட் தவிர விநாயகர், முஞ்சூறு, புத்தர், விவேகானந்தர், சங்கரர், மீரா, ஆண்டாள், பாம்பாட்டி, போலீஸ்காரன், குறவன் குறத்தி என்று பல இருக்கு. தவிர ஏழாவது படியில் செட்டியார் தம்பதியரும் அவர்கள் கடைப் பொருளும் காய்கறிகளும் வைக்கவேண்டும்.

எங்கள் பொம்மைகளையெல்லாம் வெறும் தரையில் வைத்தால் எடுப்பாக இருக்காது. கொலுவின் ஒரு பகுதியாகவும் அமையாது. இதற்கான தீர்வாக அமைந்ததுதான் கொலுப்படிகளின் அருகே மணலை விரித்து அதில் காடு மலை பார்க் என்றெல்லாம் வைதது அதில் எங்கள் விளையாட்டு சாமான்களை வைப்பது.

இது ஒன்றும் புதிதல்ல. அக்காலங்களில் எல்லோர் வீடுகளிலும் “மெயின்” கொலு பக்கத்தில் இப்படி ஒரு “குட்டி கொலு” இருக்கும்.

இத்தனை விவரங்களை நான் பகிர்ந்து கொள்வதன் காரணம் அன்று பாட்டி கேட்ட போது எங்கள் கைககளில் இருந்த செங்கல் கட்டிக்கும் கரித்துண்டுக்கும் என்ன அவசியம் என்று நீங்கள் புரிந்து கொள்ளத்தான். !

எங்கள் வீட்டில் கொலுவுக்கான ஆயத்தங்கள் ஒருவாரம் முன்பே ஆரம்பித்துவிடும். வீட்டுப் பரணில் இருந்து ( ஓர் அறையின் மேற்பகுதி முழுவதும் பரண். மாடிக்குச் செல்லும் படித்திருப்பத்தில் அதன் உள்ளே நுழைய கதவு இருக்கும்.) ஏழு பெரிய மரத்தால் ஆன படிக்கட்டுகளைக் கீழே இறக்கிவைப்பது. துடைத்த பிறகு அதனை கொலுப்படிக்கட்டாக பக்கவாட்டுச் சட்டங்களை வைத்துப் பொருத்துவது..படிக்கட்டுகளின் மேல் விரிக்க வேண்டிய துணிகளையும் , ஜரிகை பாடர்களையும் சரி செய்வது ; கலர் காகிதங்கள் வாங்கி அவற்றில் சிறு சிறு பூக்கள் செய்து, பிறகு மாலையாகக் கட்டுவது ஆகியவை இதில் அடக்கம். . ( பெரிய பூப் பந்துகளாக இவற்றை கொலு முடிந்த பிறகு கட்டிச் சேமித்து வைத்து  அடுத்த ஆண்டுகளுக்கும் பயன் படுத்துவது வழக்கம் )

பிறகு, பத்து வித்தியாசமான அளவுகளில் உள்ள பொம்மைப் பெட்டிகளைப் பரணில் இருந்து எடுத்து வைக்க வேண்டும். அவற்றில் உள்ள பொம்மைகளை எடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

சில சமயம் தசாவதார செட்டில் “வாமனனைக்” காணாது; பிறகு தேடிப் பார்த்தால் வேறொரு பெட்டியில் அது கிடைக்கும். சில பொம்மைகளுக்குக் கை கால் உடைத்திருந்தால் அவற்றுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் உடைந்திருக்கும் பொம்மைகளின் உடைந்த பாகங்கள் பெட்டிக்குள்ளேயே கிடைக்கும். அது போன்ற நேரங்களில் அவற்றை மெல்ல, கவனமாக கோந்து போட்டு ஒட்டி மருத்துவம் பார்த்து கொலுப்படிக்குத் தயாராக்க வேண்டும்.

கொலுவின் முதல் இரண்டு படிகளை ஆக்ரமிக்கும் பெரிய சைஸ் பொம்மைகளை மிகக் கவனமாகக் கையாளவேண்டும். உடைந்தால் பெரு நஷ்டம். பொருட்செலவை விட்டுத் தள்ளுங்கள். அவை போன்ற பொம்மைகள் பின்னால் வரவே இல்லை. ராஜா ரவிவர்மா படம் போல அத்தனை அழகு முகங்கள்; உடல்வாகுகள்.. அதுமட்டுமல்ல. அவற்றைப் பொதிந்து வைக்கப் பயன்படும் தடிமனான துணிகளையும் ,அவற்றுக்கே உரித்தான பெட்டிகளையும் மறக்காமல் ஓரிடத்தில் தனியே வைக்க வேண்டும்.

எங்கள் வீட்டு முதல் படிக்கட்டு பொம்மைகள் , தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் சரஸ்வதி ,லக்ஷ்மி ஆகும். ஒன்று வலப்புறம் இன்னொன்று இடப்புறம். மிகப் பெரிய அளவு. கனமும் அதிகம். நடுவில் கம்பீரமான விநாயகர். அளவில் அவர் மற்ற இரண்டு பொம்மைகளை விடச் சிறியவர் என்றாலும், ஒன்பது நாட்களும் “தடைகள்” ஏதும் வாராதிருக்க அவரன்றோ காப்பு. அவருக்கு உரிய முதலிடத்தைக் கொடுக்கவில்லை என்றால் ஆபத்து அல்லவா?

ஒவ்வோர் ஆண்டும் சில புதிய “செட்” பொம்மைகள் வாங்கப்படும். பாம்பாட்டி செட்; கல்யாண ஊர்வலம், போன்றவை.

ஒருமுறை எங்கள் தந்தையார் டெல்லி சென்று வரும் போது அங்கே “காதி பவனில்” வாங்கிய காய்கறி , பழங்கள் பொம்மைகள் எங்கள் வீட்டு கொலுவின் பிரதான அம்சம். இன்னும் பாதிக்குப் பாதி உடையாமல் உள்ளன. சிலவற்றை உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டோம். அட்டகாசமான பொம்மைகள் மாம்பழங்களும், ஆப்பிள்களும் எடுத்துத் தின்றுவிடலாம் போலிருக்கும். ஒரு இலையோடு மாங்காய் ஒன்று  இருக்கும்.. இலைக்காம்பில் பால் வடிந்திருக்கும். தொட்டால் கையில் கறை படியும் என அச்சப்பட வைக்கும். .

எங்கள் செங்கல் பொடி , கரிப்பொடி மகாத்மியத்தைச் சொல்ல வந்தவன் எங்கேயோ சென்றுவிட்டேன்.

இப்போதெல்லாம் கடைக்குச் சென்றால் பலவித வண்ணப் பொடிகளை உடனே வாங்கிவிடலாம். “ரங்கோலி” என்று சொன்னால் ஏழு காம்பினேஷன் பொடி வகைகளை வாங்கி விடலாம். அந்தக் காலத்தில் அப்படிக் கிடையாது. அதுவும் சிறுவர்கள். விளையாட்டாகக் கட்டும் “குட்டி கொலு”வுக்கெல்லாம் காசு செலவழிக்க மாட்டார்கள். எனவே நாங்கள் தரையில் மணல் பரப்பி அதில் ரோடும் வீடும் கட்ட வேண்டுமென்றால் நாங்களேதான் கலர் பொடிகளைத் தயாரித்துக் கொள்ளவேண்டும். மெயின் ரோடுக்கு  கரிப்பொடி தூவப்படும்; சைட் ரோடுகளுக்கும் மலைப் பாதைகளுக்கும் செங்கல் பொடிகள் தூவப்படும். வெண்மை நிறத்துக்குக் கோல மாவு பயன்படுத்தப்படும்.

தனி அறையில் கொலுப்படிகளைத் தவிர்த்து அதன் அருகில் எஞ்சியிருக்கும் தரைப் பகுதி எல்லாம் எங்கள் ஆளுகைதான். எனவே எப்படியும் ஒரு சுவர் மூலை கிடைத்துவிடும். அதன் பின்னணியில் கைப்பிடி கைப்பிடியாகக் களிமண்ணைப் பிசைந்து உருட்டி ஒரு சிறு மலையை  உருவாக்கிவிடுவோம். அதிலிருந்து பாதைகள் பிரிந்து மிருகக்காட்சிசாலை, வீதிகள் ,வீடுகள், நூலகம், பூங்கா , ரயில் நிலையம் போன்ற பல இடங்கள் “பொம்மை வசதிக்கு ஏற்ப “ உருவாகும்.  ஒரு பிடி நவதானியங்களை தெளித்து நீரூற்றிவிட்டால் .இரண்டு நாட்களுக்குள் பூங்கா, காடு பகுதிகளை முளைவிடும் தாவரங்கள் பசுமையாக்கிவிடும்.  

எங்கள் தி. நகர் இல்லத்தின் பெயர் “சரவணபவா” காம்பவுண்டின் ஒரு தூணில் கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமல்லவா! எனவே எங்கள் குட்டி கொலுவில் இடம்பெறும் எல்லாவற்றிற்கும் அதே பெயர்தான். “சரவணபவா பூங்கா” சரவணபவா நூலகம்” இத்யாதி இத்யாதி.. ஆண்டு தோறும் இவற்றை வைப்பதால் பெயர் எழுதப்பட்ட சில அட்டைகள் கவனமாக பாதுகாக்கப்பட்டு அடுத்த ஆண்டும் பயன்படுத்தப்படும்.

பொம்மைகளின் கையிருப்புக்கு ஏற்ப. காடு, மலை, தெருக்கள், கடை கண்ணிகள் இட அளவு மாறுபடும். ரூப லாவண்யங்களும் மாறுபடும்.

“என்னடா இந்த வாட்டி” ஜூ “ பெரிசாயிடுத்து ! கரும்பு திங்கற யானை ரெண்டு வந்திருக்கு” என்று சில மாமிகளும்.

“ புது ஏரோபிளேன் பிரமாதம்” என்று நண்பர்களும்

“ இந்த முறை ஏரோபிளேனை தெருவில் வைக்காமல் மேலேயிருந்து நூல் கட்டித் தொங்கவிட்டது பலே “ என்று அத்தை ஒருத்தியும்

குறிப்பிடும் அளவுக்கு எங்கள் “உபரி கொலுவுக்கு” ஒரு மகத்துவம் உண்டு..

எனினும் சரவணபவா நூலாக வாயிலில் ஒரு புலி அமர்ந்திருப்பதை யாரும் கண்டு கொள்ளாமல் போன நிகழ்ச்சியும் உண்டு.

இதன் பிறகு கொலு அலங்கார வேலைகள் நிகழும்; கிருஷ்ணன் பொம்மை கையில் காகிதத்தில் செய்த ஒரு புல்லாங்குழலை வைக்க வேண்டும்; மீரா பாய் கையிலுள்ள தம்பூர் கீழே விழாமல் டேப் ஒட்டவேண்டும். தசாவதார செட் வரிசை சரிபார்க்க வேண்டும். செட்டியார் கடையில் உள்ள சிறு பாத்திரங்களில் உண்மையான அரிசி , பருப்பு, தானியங்கள் போட்டு வைக்கவேண்டும்;

கலர் காகிதப் பூக்களால்  தொடுத்த மாலைகளை கொலு அறையின் வாசலிலும், அறைக்குள் பின்னணி சுவற்றில் மேலிருந்து கீழாகவும் தொங்கவிட வேண்டும். சில காகிதப் பூப் பந்துகளை இடம் பார்த்துக் கட்டித் தொங்கவிடவேண்டும். 

இது முடிந்த பிறகு, எலக்டிரிக்கல் வேலை; தனியாகப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் “சீரியல் பல்புகளை” எடுத்து , கொலுவின் பின்னால் கட்டப்பட்டுள்ள திரைச் சீலையின் மேல் வளையம் வளையமாகக் கட்டவேண்டும். கொலுப் படிக்கட்டுகளின் இட வலப் பக்கங்களிலும் கட்டவேண்டும். இவையெல்லாம் அணைந்து அணைந்து எரியும் சீரியல் பல்புகள். இதை “ஆன்” பண்ணிவிட்டால் கொலுவுக்கே ஒரு தனி மவுசு வந்துவிடும். கொலு பார்க்க விருந்தினர்கள் கூட்டமாக வரும் போதுதான் இவை பயன்படுத்தப்படும்.

எங்கள் “குட்டி கொலுவுக்கென்று” ஒரு தனி பல்ப் உண்டு. அது  எங்கள் நண்பர்கள் வரும் போது மட்டும் போடப்படும்.

இப்பத்தான் “கொலு “ வைத்துக் கொண்டிருக்கிறோம். படிப்படியாகச் சொல்ல நிறைய இருக்கு.

(தொடரும்)

 


கேள்வி: கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?