புத்தகம் : தளபதி வல்லபபாய் படேல்
எழுதியவர்: ரமணன்
கிழக்கு பதிப்பகம், 2026
பக்கங்கள் : 240
விலை : ரூ. 270

சில நாட்களுக்கு முன்பு திருவான்மியூரிலிருந்து ஒரு புக் பார்சல் வந்தது. அனுப்புநர் : ரமணன். எந்த ரமணன் என்று பார்த்தால், நம்முடைய ரமணன். குவிகத்தின் மிக நெருங்கிய நண்பர். பல்லாண்டுகளாக இயங்கி வரும் எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல், சமூகம், வரலாறு என்று பல விரிவான தளங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர். இவரது பயண நூல்கள், தொழில் முனைவோருக்கான நூல்கள் எல்லாம் பலரும் ரசித்து, வாசித்து பரிந்துரை செய்யப்பட்டவை. எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் அடக்கமான, அமைதியான, பாசாங்கில்லாத மனிதர்.

இத்தகைய சிறப்புகள் பெற்ற ரமணனிடமிருந்து “நண்பர் சதுர்புஜனுக்கு” என்று அன்புடன் கையெழுத்திடப்பட்ட “தளபதி வல்லபாய் படேல்” என்ற புத்தகம், “குவிகம் இதழின் விமர்சனத்துக்காக” என்று குறிப்பிடப்பட்டு வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

கிருபானந்தனும் படித்துப் பார்த்து குவிகத்தில் நான் தொடர்ந்து எழுதி வரும் இப்பகுதியில் இந்நூலினைப் பற்றிய அறிமுகம் ஒன்றை வழங்குங்கள் என்று சொன்னதும் இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

முன் அட்டையிலேயே வல்லபபாய் படேலைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக “தீரம், வலிமை, ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றின் அடையாளச் சின்னம்; நவீன இந்தியாவை உருவாக்கிய மகத்தான சிற்பியின் அரசியல் வாழ்க்கை” என்று இந்நூலை ஏன் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் பதிப்பாளர்கள்.
பின் அட்டையில் இடம்பெற்றுள்ள குறிப்பைக் கவனியுங்கள் : “இந்தியாவின் இரும்பு மனிதர் எனும் அடைமொழியைக் கொண்டிருக்கும் படேல் குறித்து நாம் கொண்டிருக்கும் மனச்சித்திரம் மிகவும் மேலோட்டமானது, மங்கலானது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் சரி, நவீன இந்திய வரலாற்றிலும் சரி, படேல் வகித்திருக்கும் பங்கு மிக முக்கியமானது என்றாலும், அவர் அரிதாகவே நினைவு கூறப்படுகிறார்.”

இந்தக் கூற்று முற்றிலும் உண்மைதானே ?

காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய தலைவர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கும் அளவு தளபதி வல்லபபாய் படேலைப் பற்றி நிச்சயமாக அறியவில்லை. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காகவே இந்நூலை ரமணன் அவர்கள் எழுதியிருக்கிறார்.

இந்நூலைப் பற்றி மாலன் அவர்கள் நூலின் அணிந்துரையில் குறிப்பிடும்போது “ஒரு தேசத்தின் வரலாறே தன்னுடைய வாழ்க்கையின் வரலாறாகக் கொண்டவர்கள் அபூர்வமானவர்கள். அவர்களில் ஒருவர் படேல். வரலாற்றை எப்போதும் சுவாரஸ்யமான நடையில் எழுதிச் செல்வதில் வல்லவரான ரமணன் இந்த நூலையும் அப்படியே எழுதி இருக்கிறார். படேலின் வாழ்க்கை நிறைவேறிய கனவுகளால் மட்டுமல்ல, முறிந்த கனவுகளையும் கொண்டது. அவர் அதை எதிர்கொண்டவிதம் அனைவருக்குமான வழிகாட்டிக் குறிப்பு” என்று விளக்குகிறார்.

இந்நூலுக்கு மாலன் அவர்கள் மூன்றே பக்கத்தில் ஒரு சூடான, சுவையான அறிமுகம் வழங்கி இருக்கிறார். “படேலைப் பற்றி நமக்கு என்ன தெரியும் ?” என்ற கேள்வியை அவர் மீண்டும் மீண்டும் எழுப்பி, நம்மையெல்லாம் உலுக்கி எடுக்கிறார். இந்த அறிமுகத்தைப் படித்த பிறகு, நாம் இந்நூலைப் படிக்காமல் கீழே வைக்க வாய்ப்பே இல்லை. வாழ்க்கை வரலாறுகளை படிக்கப் பிடிக்காதவர்கள் கூட இந்நூலைப் படிக்கத் தவற மாட்டார்கள். இந்நூலால் வாசகர் உள்ளங்களில் புதிய கதவுகள் திறக்கும் என்பதற்கு அவர் கியாரண்டியே அளிக்கிறார்.

இதைப் போன்றே நூலாசிரியர் ரமணனின் மூன்று பக்க என்னுரை இந்நூலை அவர் ஏன் எழுதினார், எப்படி எழுதினார், ஏன் இந்தியரான நாமெலாம் அவசியம் படிக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக விளக்கி வலியுறுத்துகிறது. படேலின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகச் சொல்லும் முதல் தமிழ் நூல் என்ற பெருமையைப் பெறுகிறது இந்நூல்.
இதைப் படிக்கப் படிக்க படேலின் பெருமையையும் அவர் குடும்பத்தின் தியாகத்தினையும் நாம் முழுவதுமாக உணர்வது சர்வ நிச்சயம்.


கேள்வி: கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?